Monday, February 13, 2023

சாத்தானின் வீழ்ச்சி

ஆதவன் 🌞 750 🌻 பிப்ருவரி 16,  2023 வியாழக்கிழமை 

"அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!" ( ஏசாயா 14 : 12 )

சாத்தானின் வீழ்ச்சி குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. லூசிபர் தனது பெருமையால் விண்ணக மகிமையினை இழந்து நரகத்தில் தள்ளப்பட்டான். இந்த வீழ்ச்சிக்குக் காரணம், தேவனுக்கு நிகராக தன்னை அவன் உயர்த்தும் விதமாக முயன்றதே. ஆம், பெருமையே அவன் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. இதனை நாம் தொடர்ந்து வரும் வசனங்களில் பின்வருமாறு வாசிக்கின்றோம். 

"நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே." ( ஏசாயா 14 : 13, 14 )

ஆனால் பெருமையினால் லூசிபரும் அவனது ஆதரவு தூதர்களும் இழந்த விண்ணக மகிமையினை தேவன் தாழ்மையாய்த் தன்னைப் பின்பற்றும் மனிதர்களுக்குக்  கொடுக்க விரும்புகின்றார். எனவேதான் தான் ஆசைப்பட்டதும் இழந்துபோனதுமான  மகிமையினை மனிதர்கள் பெற்றுவிடக்கூடாது  எனும் எண்ணத்தில் சாத்தான் மனிதர்களைப் பாவத்தில் தள்ள முயலுகின்றான். 

சாத்தான் ஆசைப்பட்டதுபோல பிதாவானவரோடு நாமும் மகிமையில்  இருக்க முடியும். ஆனால் அது சாத்தான் பெருமையால் முயன்றதுபோல முயல்வதால் அல்ல; மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வதன் மூலம்.  இதனை இயேசு கிறிஸ்து பிதாவிடம் ஜெபித்தபோது கூறுகின்றார். நாம் ஒவ்வொருவரும் இந்த மகிமையை அடைந்திடவேண்டுமென்று நம் ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்து ஜெபித்துள்ளார். 

இயேசு கிறிஸ்துவிடம் இருந்த அதே அன்பை பிதா நமக்கும் தரும்படி இயேசு பின்வருமாறு வேண்டினார்:-

"நான் இவர்களுக்காக (தனது சீடர்களுக்காக) வேண்டிகொள்கிறதுமல்லாமல் இவர்களது வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் (அதாவது சீடர்களது வார்த்தையினை விசுவாசித்து அவரை விசுவாசிக்கும் நமக்காகவும்) வேண்டிக்கொள்கிறேன். ( யோவான் 17 : 20 )   "நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 23 )

"பிதாவே, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 )

அன்பானவர்களே, கிறிஸ்துவின் கிருபையின் மேன்மையைப் பாருங்கள். விண்ணகத்தின் மகிமையினை இழந்த சாத்தானது வீழ்ச்சிக்குக் காரணம் பெருமை. ஆனால் அந்த மகிமையினை நாம் கிறிஸ்துவை தேவனது குமாரன் என்று விசுவாசிப்பதனாலும்  நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தாழ்ச்சியுள்ள வாழ்க்கை வாழ்வதன் மூலமும் பெற முடியும்.  எனவே சாத்தானின் தந்திரங்களினால் நாம் மயங்கிவிடாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக் காட்டிய வழியில் நடந்து நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வோம். அப்போது சாத்தான் பார்த்து வெட்கப்படுமளவுக்கு நாம் அவரோடு ஆளுகைசெய்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: