Monday, February 27, 2023

நமது பாவங்களை, முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுகின்றார்.

ஆதவன் 🌞 763🌻 மார்ச் 01,  2023 புதன்கிழமை 

"உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 20 : 44 )

தேவன் நமது பாவங்களை நினைப்பாரானால் நம்மில் ஒருவருமே அவர்முன் நிற்க  முடியாது. ஏனெனில்  மனிதர்கள் நாம் அனைவருமே பாவம்செய்து தேவ மகிமையை இழந்தவர்கள்தான். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் பாவங்கள் கழுவப்பட்டு மீட்பு அனுபவத்தைப் பெறுகின்றோம். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,  இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்" ( ரோமர் 3 : 23, 24 ) என்று குறிப்பிடுகின்றார். 

இன்றைய தியானத்துக்குரிய வசனமும்  இதனையே, "உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." என்று குறிப்பிடுகின்றது. அதாவது நமது பாவங்கள்மன்னிக்கப்படும்போதுதான் நாம் கர்த்தரை அறிய முடியும்.  

இந்த உலகத்தில் நமக்கு  ஒருவரது தவறோ கெட்ட குணமோ தெரிய வருமானால் அதனையே பிறரிடம் கூறிக்கொண்டிருப்போம். மட்டுமல்ல அந்த மனிதனைப் பார்க்கும்போது நாம் கேள்விப்பட்ட அவரது பாவ காரியமே நமக்கு நினைவில் வரும். ஆனால் நமது தேவன் பாவத்தை மன்னிக்கிறவர் மட்டுமல்ல அவற்றை மறந்துவிடுகின்றவர்.   நாம் மனம்திரும்பி அவரிடம் வந்தபின்பு மீண்டும் மீண்டும் அதனை நினைவுகூரமாட்டார். "நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்." ( எரேமியா 31 : 34 ) என்கின்றார்.

தேவன் நமது பாவங்களை மன்னிக்கும்போது, "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்குகின்றார். ( சங்கீதம் 103 : 12 ) நமது பாவங்களை, "முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுகின்றார்."( ஏசாயா 38 : 17 )

தேவன் நமது பாவங்களை மன்னிக்கும்போது நாம் அவரை அறிந்துகொள்கின்றோம். அவர் நமது பாவங்களை மறந்துவிடுகின்றார். ஆனால் பாவியாகிய நமக்கு நமது பழைய வாழ்க்கை நினைவில் இருக்கும். நமது பாவங்கள் நினைவில் இருக்கும். "ஐயோ,, நான் எவ்வளவு பெரிய பாவியாக இருந்திருக்கிறேன் என்று உணரும்போதும் இவ்வளவு பெரிய பாவியாகிய என்னை மன்னித்துத் தன்னை எனக்கு வெளிப்படுத்தியுள்ளாரே  என்று எண்ணும்போது அவரிடம் நமது அன்பு அதிகரிக்கும். அப்போது நாம் கர்த்தரையும் அவரது அன்பையும் அதிகமாக அறிந்துகொள்ள முடியும். 

நமது பாவங்களுக்கு உடனுக்குடன் தண்டனை கிடைக்குமானால் நாம் அவரை அறிய  முடியாது. எனவேதான் நாம் இந்த உலகத்தில் பாவ வாழ்க்கை வாழும் பலரும் தண்டனை அடையாமல் இருப்பதைப் பார்க்கின்றோம். நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவை அறிந்துகொண்டதுபோல அவர்களும் ஒருநாளில் கிறிஸ்துவை அறியலாம். 

"பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்". ( மத்தேயு 9 : 13 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712


No comments: