ஆதவன் 🌞 739 🌻 பிப்ருவரி 05, 2023 ஞாயிற்றுக்கிழமை
"உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்." ( சங்கீதம் 84 : 5 )
இன்று மருத்துவர்களும் உடல் பயிற்சி சிறப்பு பயிற்றுனர்களும் மனிதர்கள் உடலளவில் எப்படி பலவான்களாக மாறுவது என்பது குறித்து விளக்குகின்றனர். ஆனால் இது எப்போதும் வெற்றி பெறுவதில்லை. உடற்பயிற்சியே சிலரது உயிருக்கு உலைவைத்துள்ள செய்திகளை சமீபகாலங்களில் நாம் பத்திரிகைகளில் வாசிக்கின்றோம்.
உடற்பயிற்சிகளும் உடலைப் பேணி பாதுகாப்பதும் அவசியமானதே. ஆனால் நாம் முதலில் தேவனில் பெலன்கொள்ள வேண்டும். தேவனை அறிவதிலும் அவரின்மேல் கட்டப்படுவதற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும். உடல் பலத்தை கொண்டவனல்ல, மாறாக, தேவனில் பெலன்கொள்ளுகிற மனிதனே பாக்கியவான் என்று இன்றைய வசனம் கூறுகின்றது.
தேவனில் நாம் பெலன்கொள்ளும்போது உலக பலவீனங்கள் நம்மை மேற்கொள்ள மாட்டாது. அதாவது நாம் தேவனில் பெலன் கொள்ளும்போது நாம் பாவங்களையும் உலக இச்சைகளையும் மேற்கொண்டு அவற்றிலிருந்து விடுதலைபெற முடியும். இப்படி தேவனில் பெலன்கொள்ளும் மனிதர்கள் "பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்." ( சங்கீதம் 84 : 7 )
ஆம், கர்த்தரது சன்னதியில் நாம் சென்று சேரவேண்டுமானால் தேவனில் பெலனடையவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. எனவேதான் இன்றைய வசனம் இப்படி பெலனடையும் மனிதனை பாக்கியவான் என்று கூறுகின்றது.
தேவனோடு நமது தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும்போதே நாம் தேவனில் பெலனடைய முடியும். வெறுமனே ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருப்போமானால் பெலனற்றவர்களாகவே இருப்போம். ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டாலும் நமது தனிப்பட்ட வாழ்வில் தேவனை அறியும் அறிவில் நாம் மேம்பட்டவர்களாகவேண்டும்.
மேலும், நாம் தேவனில் பெலன்கொள்ளும்போது உலக ஆசீர்வாதங்களும் நமக்கு உண்டு. உலகில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், பாடுகள், பிரச்னைகளைத் தங்கி அதனை உருவக்கடந்து செல்லும் பெலன் நமக்குக் கிடைக்கின்றது. எனவேதான் இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனம் கூறுகின்றது, "அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்." ( சங்கீதம் 84 : 6 ) அதாவது, துன்பம் எனும் அழுகையின் பள்ளத்தாக்கினைக் கடந்து தேவ ஆசீர்வாதம் எனும் மழை வறண்டுபோன அவர்களது வாழ்க்கையினை நிரப்பும்.
உடல் பெலத்தால் மட்டுமே சாதனைகள் புரியமுடியும் என்று பலரும் தவறான எண்ணம் கொண்டுள்ளனர். உலகத்துக்கு வேண்டுமானால் இது உண்மையாக இருக்கலாம், ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் நாம் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவர்களாக இருக்கமுடியும். எனவேதான் "நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;" ( 2 கொரிந்தியர் 12 : 10 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள்.
உடல் பெலத்துக்கும், உடல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நமது ஆத்துமா தேவனில் பெலன்கொள்ள வேண்டியதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம். அதற்கு நமது இருதயம் செம்மையான வழிகளைப் பின்பற்றுமாறு செய்வோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment