அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார்?

ஆதவன் 🌞 744 🌻 பிப்ருவரி 10,  2023 வெள்ளிக்கிழமை 

"காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்".  யோவான் 9 : 39 )

இயேசு கிறிஸ்து பிறவிக் குருடன் ஒருவனை குணமாக்கியது குறித்து யூதர்கள் நம்பாமல் குணமாக்கப்பட்டக் குருடனை அழைத்து மீண்டும் மீண்டும் விசாரித்தனர். பாவியாகிய ஒரு மனிதன் எப்படி இந்தக் காரியத்தைச் செய்யமுடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.  அவர்கள் பார்வையில் இயேசு கிறிஸ்து ஒரு பாவ மனிதன்.  இதனை அவர்கள் குணமாக்கப்பட்டக் குருடனிடம் கூறியபோது அவன் அவர்களிடம்:-

"அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்." ( யோவான் 9 : 25 ) என்றான். ஆனாலும் யூதர்கள் இவன் ஒரு பாவி எங்கே இருந்து வந்தவன் என்று எங்களுக்குத் தெரியாது என்றனர். அதற்குப் பார்வையடைந்த குருடன்,  "அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்." ( யோவான் 9 : 30 ) "அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்." ( யோவான் 9 : 33 )
 
யூதர்கள் அவனைத் திட்டி அனுப்பிவிட்டனர். பிற்பாடு அவனை இயேசு கிறிஸ்து கண்டு அவனிடம் பேசும்போது தன்னை வெளிப்படுத்தி இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றார். இயேசு குணமாக்கப்பட்டக்  குருடனிடம், "தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாய் இருக்கின்றாயா?" என்று கேட்டபோது அவன்,  " ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்." ( யோவான் 9 : 36 ) இப்படிக் கேட்டபோதுதான் அவனது ஆன்மீகக் குருடு நீங்கியது. 

கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் இன்னும் அவரை மெய்யாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் "நாங்கள் காண்கிறோம்" என்று கூறிக்கொண்ட யூதர்களைப்போல  கூறிக்கொண்டிருக்கிறார்கள். நாம் இயேசு கிறிஸ்துவைக் காண்கின்றவர்கள் என்றால் வெறுமனே அவரை விசுவாசிக்கிறேன் என்று கூறுவதல்ல; அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார், அவருக்கு உகந்தது என்ன என்பதனை நாம் அறிய ஆர்வமுள்ளவர்களாக வேண்டும். அவரைப் புகழும்  புகழ்ச்சி நமது வாயில் இருந்தால் போதாது மாறாக நமது இருதயம் அவருக்கு நெருக்கமாக இருக்கவேண்டியது அவசியம். 

"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது." ( ஏசாயா 29 : 13 ) என்ற வசனத்தின்படி இருந்தோமானால் நாமும் அவரைக் காண்கிறோம், அவரை அறிந்திருக்கின்றோம் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் குருடர்களே.  

இப்படித் தேவனைத் தேடும்  உண்மையான மனமிருந்தும் இதுவரை அவரைக்    காணாதவர்கள் காணும்படியாகவும், அவரைக் காண்கின்றோம் என்று கூறிக்கொண்டு தாறுமாறான வாழ்க்கை வாழ்பவர்களை குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்கின்றேன் என இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்