Wednesday, February 22, 2023

அவருக்குமுன் தைரியமாக நிற்கத்தக்கதாக....

ஆதவன் 🌞 758 🌻 பிப்ருவரி 24,  2023 வெள்ளிக்கிழமை 

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே." ( எபிரெயர் 3 : 15 )

தேவன் தனது  அடியார்களிடம் பல்வேறு வழிகளில் இடைபடுகின்றார், பேசுகின்றார். நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது, நல்ல ஒரு பிரசங்கத்தைக் கேட்கும்போது, அல்லது சில மனிதர்கள் பேசும் பேச்சுகள்மூலம் நம்மிடம் பேசுகின்றார். இதனைக் கேட்குமளவு நமது இருதயம் பக்குவப்படவேண்டும். இவற்றுக்கும் மேலான வழிகளிலும் தேவன் மனிதர்களிடம் பேசுகின்றார். கனவுகள்மூலம், தரிசனங்கள்மூலம், மனிதர்கள் பேசுவதுபோல தெளிவான குரல்மூலம் தேவன் பேசுகின்றார். 

இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் பேசும் தேவன்  பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தீர்க்கதரிசிகள்மூலம்  பல்வேறு வகைகளில் பேசினார்.   இதனை நாம், "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்." ( எபிரெயர் 1 : 1, 2 ) என்று வாசிக்கின்றோம். 

ஆனால், இப்படி தேவன் பேசியும், மோசேமூலம் பல்வேறு அதிசயங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்தியும் தேவனது குரலை மக்கள் கேட்டுக் கீழ்ப்படியவில்லை. இதனையே சங்கீதம் 95 இல் நாம் வாசிக்கின்றோம். அதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனமாக நாம் எபிரெயர் நிருபத்தில் வாசிக்கின்றோம். நாற்பது வருடங்கள் தேவன் அவர்களை பல்வேறு முறைகளில் தண்டித்து திருத்த முயன்றும் அவர்கள் திருந்தவில்லை. அப்படிக் கீழ்படியாததினால் தேவ கோபத்தினால் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனர். 

"கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா?மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே." ( எபிரெயர் 3 : 16, 17 )

அன்பானவர்களே, இதனையே எபிரெய நிறுத்து ஆசிரியர் நமக்கு இன்று ஒரு எச்சரிக்கையாக எழுதுகின்றார், "கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப் படுத்தாதிருங்கள்"  என்று. எனவே நாம் தேவ குரலைக் கேட்கும் அனுபவமும் அதற்குக் கீழ்ப்படிந்து வாழும் தன்மையும் நமக்கு வேண்டும். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையும் இரக்கமும் அன்பும் உள்ளவர்தான். ஆனால், நியாயத் தீர்ப்பு நாளில் அவர் உண்மையுள்ள நியாயாதிபதியாக வந்து நியாயம் தீர்ப்பார். அந்த நியாயத் தீர்ப்பில் அவருக்குமுன் தைரியமாக நிற்கத்தக்கதாக நமது வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள முயலுவோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: