Sunday, February 26, 2023

நாம் மெய்யாகவே கிறிஸ்தவர்களா?

ஆதவன் 🌞 762🌻 பிப்ருவரி 28,  2023 செவ்வாய்க்கிழமை 

"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )


இன்றைய தியானத்துக்குரிய வசனம் என்னை அதிகமாய்ச் சிந்திக்கவைத்தது. கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்ததினாலும் ஆலயங்களுக்குச் செல்வதாலும், கிறிஸ்தவ சடங்குகளைப் பின்பற்றுவதாலும் நம்மை நாம் கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றோம். கிறிஸ்தவர்களில் தங்களை ஒருபடி மேலானவர்களாக எண்ணிக்கொள்ளும் ஆவிக்குரிய சபை எனும் சபைகளுக்குச் செல்பவர்கள்  தாங்களே மெய்யான கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக பெந்தெகொஸ்தே சபை அனுதாபிகள் தங்கள் சபை மக்களைத்தவிர மற்றவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆனால் இன்றைய வசனம் "கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."  என்று அதிரடியாக அறிவிக்கின்றது. மத வழிபாடுகளைப் பின்பற்றுவதாலோ, ஆராதனைகளில் கலந்துகொள்வதாலோ, மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பதாலேயோ மட்டுமே ஒருவன் கிறிஸ்தவன் ஆகிவிடுவதில்லை. மாறாக, கிறிஸ்துவின் ஆவி ஒருவனில் செயல்படவேண்டும். அவனே கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள். 

மனதில் நூறு சதவிகித உலக ஆசைகளை வைத்துக்கொண்டு அந்த ஆசைகளை நிறைவேற்றவேண்டி மன்றாடவே ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொண்டு, தான் செல்லும் ஆலய வழிபாடே மெய்யானது மற்றவர்களது வழிபாட்டு முறைகள் பொய்யானவை என்று தர்க்கம்செய்துகொண்டு வாழும் மனிதர்கள் சிந்திக்கவேண்டிய வசனம் இது. 

"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள்." என்று தெளிவாகக் கூறுகின்றது இன்றைய வசனம். அதாவது நமது உள்ளத்தில் கிறிஸ்துவின் ஆவி இருக்குமானால் நமது சிந்தனை, செயல்கள் ஆவிக்குரிய செயல்பாடாக மாறும். அதாவது உலக ஆசைகள் குறைத்து கிறிஸ்துவின்மேலுள்ள ஆசைகள் அதிகரிக்கும். கிறிஸ்து விரும்பும் செயல்பாடுகளை செய்யவேண்டும் எனும் ஆர்வம் நமக்குள் ஏற்படும். அப்படியானால்மட்டுமே நமக்குள் தேவனுடைய ஆவியானவர் இருக்கின்றார் என்று பொருள். 

அன்பானவர்களே, நாம் இந்த நிலைக்கு உடனடியாக வந்துவிடமுடியாது. ஆனால், இந்த நிலைக்கு வரவேண்டும் எனும்ஆர்வம் நமக்குள் இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது அதனைச் செயல்படுத்த கிறிஸ்து  உதவுவார்.  "பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று கூறியுள்ளாரே? (2 கொரிந்தியர் 12:9) இந்த விஷயத்தில் நமது பலவீனத்தை நாம் ஒத்துக்கொண்டு அவரது துணையை  வேண்டும்போது தேவன் நமக்கு உதவிசெய்வார்.  

ஆண்டவரே, நான் மாம்சத்துட்பட்டவனாய் இராமல் ஆவிக்குட்பட்டவனாக வாழ விரும்புகின்றேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. எனக்கு உதவும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள்." எனும் வார்த்தைகள் என்னில் செயல்பட உதவிசெய்யும் என வேண்டுவோம். 

"கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." எனும் வார்த்தைகள் நம்மை பயமுறுத்தத் துவங்கிவிட்டால் நாம் இன்னும் கிறிஸ்தவர்கள் ஆகவில்லை என்று உணருவோம். அப்படி உணரும்போது நாம் ஆவிக்குரிய வாழ்வின் முதல்படியை அடைந்துவிட்டோம் என்று பொருள். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: