Monday, February 13, 2023

கிறிஸ்துவின் கிருபையினை வீணாக்காமல் காத்துக்கொள்வோம்.

ஆதவன் 🌞 749 🌻 பிப்ருவரி 15,  2023 புதன்கிழமை 

"அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103 : 10 )

நாம் எல்லோருமே பாவம் செய்கின்றோம். அதாவது தேவனது சித்தத்துக்கு எதிராகப் பல வேளைகளில் செயல்படுகின்றோம்.  ஆனால் தேவன் உடனேயே அவற்றுக்கான தண்டனையை நமக்குத் தருவதில்லை. 

இதுவே தேவன் நம்மை அன்பு செய்கின்றார் என்பதற்கு ஒரு அடையாளம். இது நமது குடும்பங்களில் நாம் குழந்தைகளிடம் நடந்துகொள்வதற்கு ஒப்பாக இருக்கின்றது. நமது குழந்தைகள் எப்போதும் நமது சொல்படி கேட்டு நடப்பதில்லை. பலவேளைகளில் நமது அறிவுரைகளை அசட்டை செய்கின்றனர். உடனடியாக நாம் அவர்களைக் கடுமையாகத் தண்டித்துவிடுவதில்லை. காரணம் நாம் அவர்கள்மேல் கொண்டுள்ள அன்பு. இதுபோலவே தேவனும் இருக்கின்றார்.  

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவங்களுக்கு பலவிதத் தண்டனைகளை மோசே வழியாகத்  தேவன் கற்பித்திருந்தார். குறிப்பாகக் கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் பழிவாங்கவேண்டும் என்பதே தண்டனை. இவைதவிர, கல்லெறிந்து கொல்லுதல், சவுக்கடி, சிலுவையில் அறைதல், கழுவிலேற்றுதல்  போன்ற தண்டனைகளும் இருந்தன.  

ஆனால் இன்றைய புதிய ஏற்பாட்டுக்காலத்தில் இந்தத் தண்டனைகளை தேவன் கிருபையின் பிரமாணத்தால் மாற்றியுள்ளார். இதனை, "உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 20 : 44 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம், கிறிஸ்து இயேசுவின் கிருபையால் "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." காரணம் தண்டனைகொடுத்து அழிப்பதற்கல்ல, பாவிகளை நீதிமானாகவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். நமது மனம் திரும்புதலுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார். நாம் நித்திய ஜீவனை அடைந்திடவேண்டும் என்பதற்காகவே அவர் அப்படிச் செய்கின்றார். 

கிறிஸ்துவின் இந்தக் கிருபையைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது." ( ரோமர் 5 : 20, 21 ) என்று எழுதுகின்றார். 

கிறிஸ்து தனது உயிரைத் தியாகம் செய்து தனது இரத்ததால் உண்டாக்கிய இந்தக் கிருபையினை நாம் வீணாக்கிடக்கூடாது. நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டும் என்பதற்காகவே கிறிஸ்து இப்படிச் செய்கின்றார். பரிசுத்த வாழ்க்கைக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம்.  நமது தேவனை பரிசுத்தர் என்று வேதம் சொல்கின்றது. ஆனால் நாம் அதுபோல பரிசுத்தர்களாக இருக்கவேண்டுமென்றே தேவன் விரும்புகின்றார். எனவே உடனடி தண்டனை தந்து நம்மை அழிக்காமல் கிருபையால்  மனம் திரும்பிட வாய்ப்பளிக்கின்றார்.  கிறிஸ்துவின் கிருபையினை வீணாக்காமலும் அற்பமாக எண்ணாமல் காத்துக்கொண்டு நம்மையும் பரிசுத்தர்களாகக் காத்துக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: