Monday, February 06, 2023

கர்த்தாரையும் அவரது கிருபையையும் துதிப்போம்

ஆதவன் 🌞 742 🌻 பிப்ருவரி 08,  2023 புதன்கிழமை 

"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136 : 23 )

சங்கீதம் 136 ஒரு துதியின் சங்கீதமாகும். வானம், சூரியன், சந்திரன், கடல் என கர்த்தரது ஒவ்வொரு படைப்பிற்காகவும் அவரைத் துதிக்கின்றது. மட்டுமல்ல, தனது பராக்கிரமத்தால் அவர் எகிப்தியரின் கையிலிருந்து இஸ்ரவேல் மக்களை மீட்டதையும் வல்லமைமிக்க ராஜாக்களை அழித்ததையும்  இஸ்ரவேல் மக்களுக்காக அவர் கிருபை செயல்பட்ட விதத்தையும் நினைத்துத் துதிக்கச் சொல்கின்றது.  

இந்த சங்கீதத்தின் 23 ஆம் வசனம் வித்தியாசமானது. தேவனது பெரிய மகத்துவங்களைக் கூறிவிட்டு,  "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." என்று கூறுகின்றது. மட்டுமல்ல, நம்முடைய தேவனுக்கு அருமையான ஒரு புதுப் பெயரையும் இந்த வசனம் குறிப்பிட்டுள்ளது. அது, "தாழ்வில் நம்மை நினைத்தவர்".  இரட்சிப்பு, அரண், கோட்டை, கேடகம் எனும் வல்லமையைக் குறிக்கும் பல பெயர்களில் வேதம் தேவனைக் குறிப்பிட்டுள்ளது. இங்கோ, "தாழ்வில் நம்மை நினைத்தவர்" என்று குறிப்பிட்டு அவரைத் துதியுங்கள் என்று கூறுகின்றது. 

ஒரு மிகப்பெரிய கம்பெனியில் பல்வேறுபட்ட நிலையிலுள்ள தொழிலாளர்கள் வேலைசெய்வார்கள். அந்த தொழிற்சாலையின் எம்.டி. பல்வேறு நிலையிலுள்ள அந்த கம்பெனியின் அதிகாரிகளை நினைவுகூர்ந்து அவர்களை அழைத்துப் பேசுவார். அவர்களோடு ஆலோசனை செய்வார். ஆனால் அங்கு வேலைசெய்யும் தரை துடைக்கும் துடைப்புத் தொழிலாளியை அவர் நினைவில் வைத்திருக்கமாட்டார்.  அது அவருக்கு முக்கியமுமல்ல. 

ஆனால் நமது கர்த்தர் அப்படியல்ல என்று வேதம் கூறுகின்றது. அவருக்கு எல்லோரும் ஒன்றுதான். மட்டுமல்ல, அவரைபொருத்தவரை தாழ்நிலையிலுள்ளவர்கள்  தான் முக்கியமானவர்கள். அவர்களையே அவர் நினைவில் கொண்டுள்ளார். 

பெரிய மலையிலிருந்து வழிந்து ஓடிவரும்  தண்ணீர் மேட்டுப்பகுதியை நோக்கிப் பாய்வதில்லை. மாறாக தாழ்விடங்களையே முதலில் நிரப்பும். அதுபோல உன்னததேவ பர்வதத்திலிருந்து கர்த்தரது கிருபையும் ஆசீரும் தாழ்ந்த குணமுள்ளவர்களை நோக்கியே வருகின்றது. காரணம் அவர் தாழ்மையுள்ளவர்களையே நோக்கிப் பார்க்கின்றார். 

இன்று வறுமை, புறக்கணிப்பு, அவமானம் போன்ற தாழ்ச்சியில் இருக்கின்றீர்களா? அந்த நிலையிலும் கர்த்தருக்கேற்ற வாழ்க்கை வாழ்கின்றீர்களென்றால்  கர்த்தர் உங்களை நினைத்திருக்கின்றார். கலங்கிடவேண்டாம். நமது கர்த்தர் பதவி, பகட்டு, அழகு, அந்தஸ்து பார்த்து மக்களை நேசிப்பவரல்ல. அவர் இதயத்தையே நோய்ப்பார்த்து மக்களை எடைபோடுகின்றார். அதன் அடிப்படையிலேயே கனிவுடன் அவர்களை நினைவுகூர்கின்றார். 

இந்தச் சத்தியத்தை அனுபவித்து உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." என்கின்றார். அப்போஸ்தலனாகிய பவுல் அடிகளும் இதனால்தான்  "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்." ( பிலிப்பியர் 4 : 11 ) என்கின்றார். நாம் எந்த தாழ்ச்சியில் இருந்தாலும் மன மகிழ்ச்சியோடு கர்த்தாரையும் அவரது கிருபையையும் துதிப்போம். ஆம், கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார்; அவர் விடுவிப்பார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: