Saturday, February 11, 2023

தேவன் தீமையை வெறுக்கின்றாரே தவிர தீமை செய்பவர்களை வெறுப்பதில்லை.

ஆதவன் 🌞 748 🌻 பிப்ருவரி 14,  2023 செவ்வாய்க்கிழமை

"தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின் துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?" ( ஆபகூக் 1 : 13 )


இன்றைய வசனத்தில் ஆபகூக் தீர்க்கதரிசி கூறும் வார்த்தைகள் சாதாரண மனிதர்களது மனநிலையில் இருந்து அவர் கூறுவது.  தேவன் தீமையைப் பார்க்காதவர். எனவே அவர் தீமை செய்பவர்களையும் அழித்து ஒழித்துவிடவேண்டும் என்று ஆபகூக் எண்ணுகின்றார்.  எனவேதான்  "துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?" என்று தேவனை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றார். 

நமது தேவன் தீமையைப் பார்க்காத சுத்தக்கண்ணன் என்று வேதம் கூறினாலும்  அவர் தீயோரை அழித்து ஒழிக்க வரவில்லை.  தேவன் தீமையை வெறுக்கின்றாரே தவிர தீமை செய்பவர்களை வெறுப்பதில்லை. இயேசு கிறிஸ்து கூறிய ஊதாரி மைந்தன் உவமை, காணாமல் போன ஆடு உவமை இவை எல்லாமே பாவிகள் மனம் திரும்பி தேவனிடம் வரவேண்டும் எனும் தேவனது எண்ணத்தைக் குறிப்பனவாகும். எனவேதான், "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் " ( லுூக்கா 19 : 10) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்று துன்மார்க்கர்களது வாழ்க்கைச் செழிப்பதைக் காணும்போது நாமும் ஆபகூக் தீர்க்கத்தரிசியைப்போல எண்ணலாம். ஏன் தேவன் இவைகளை அனுமதிக்கின்றார் எனும் கேள்வி நமக்குள் எழலாம். 

அன்பானவர்களே, நித்திய நரக  அக்கினி என்பது நினைத்துப்பார்க்க முடியாத கொடுமையானது. அத்தகைய கொடுமையை யாரும் அனுபவிப்பதை தேவன் விரும்புவதில்லை. எனவே, அவர்கள் மனம்திரும்பிட வாய்ப்பளித்து நீடிய பொறுமையோடே அவர்களது மனம்திரும்புதலுக்குக் காத்திருக்கின்றார். 

இதற்காகவே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். "நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன்'( மாற்கு 2 : 17 ) "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது." ( 1 தீமோத்தேயு 1 : 15 ) எனும் வசனங்கள் துன்மார்க்கரை உடனடியாக தேவன் ஏன் அழிப்பதில்லை என்பதற்குப் பதிலாக அமைந்துள்ளன.  

ஆனால் மதிகெட்ட துன்மார்க்கர்கள் தங்களது துன்மார்க்கச் செயல்களுக்குத் தண்டனை உடனே கிடைக்காததால் கடவுளை நம்புவதில்லை. "தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்." ( சங்கீதம் 53 : 1 )

ஆனால் எத்தகைய துன்மார்க்கரையும், பாவிகளையும்  மன்னித்து அணைத்துக்கொள்ள தேவன் ஆர்வமாகவே இருக்கின்றார். ஆம், "நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(எபிரெயர் 8:12)

இன்றைய வசனத்தின் இறுதியில் ஆபகூக், "துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?" எனும் கேள்வியை எழுப்புகின்றார்.  இதற்கான பதில், நீதிமானை அவர் துன்மார்க்கனைக் கொண்டு சோதித்துப் புடமிடுகின்றார் என்பதே பதில்.  ஆம் அன்பானவர்களே, இந்தக் கிருபையின் காலத்தில் வாழும் நாம் ஆபகூக் தீர்க்கதரிசி கூறுவதுபோல துன்மார்க்கரும் பாவிகளும் அழியவேண்டும் எனும் எண்ணக்கூடாது. அவர்களது மனம் திரும்புதலுக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம்.   

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: