Friday, February 24, 2023

எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி

ஆதவன் 🌞 760🌻 பிப்ருவரி 26,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." ( யோவான் 1 : 4 )

இயேசு கிறிஸ்துவுக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெயர் "மெய்யான ஒளி". கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னைக் குறித்துப் பேசும்போதும் இதனைத் தெளிவுபடுத்தி, "நான் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன்" (யோவான் 8:12) என்று கூறினார். இதுபோல, "நானே, வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்றார்.   (யோவான் 14:6)

ஆம், அவருக்குள் இருந்த ஜீவன்தான் மனிதருக்கு ஒளியாக இருந்தது. 

மத்தேயு நற்செய்தியாளரும், "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது.." (மத்தேயு 4:15) என்று எழுதுகின்றார். ஆம், பாவ இருளில் மூழ்கி இருந்த மக்கள் இயேசு கிறிஸ்துவின் மூலம் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். நித்திய ஜீவனான அவரே மனிதர்களுக்கு ஒளியாக இருக்கின்றார். 

மனித இருதயங்கள் பாவ இருளில் மூழ்கி இருந்தன. இருளான அந்த இருதயங்களைப் பிரகாசிக்கச் செய்யவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனானார். ஆதியில் உலகத்தின்மேல் இருள் இருந்தது.(ஆதியாகமம் 1:2) தேவன் ஒளி உண்டாகுக என்று கூறவே ஒளி உண்டாயிற்று. இதுபோலவே மனித மனங்களிலுள்ள இருளைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நீக்குகின்றார். இதனை,  "இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." (2 கொரிந்தியர் 4:6) என்கின்றார் பவுல் அடிகள். 

இப்படி ஒளியாக வந்த இயேசு கிறிஸ்து குறிப்பிட்டச் சிலருக்கு மட்டும் ஒளி கொடுப்பவரல்ல. அவரால் எந்த மனிதனையும் பிரகாசிக்கச் செய்ய முடியும். "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 )

எல்லாவிதத்திலும் நம்மை அவர் ஒளிர்விக்க முடியும். அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை பல்வேறு பாவப் பழக்கவழக்கங்கள்,  துன்பங்கள், நோய்கள், கடன் தொல்லைகள், பிரச்சனைகளால் சிக்குண்டு தவிக்கக்கூடும். ஆனால், எந்த விதத் துன்பம் இருந்தாலும் மெய்யான ஒளியாகிய அவரிடம் சரணடைந்துகொள்ளுங்கள்.  "ஆண்டவரே, இருளான எனது வாழ்வை ஒளிமிக்கதாக மாற்றிட உம்மால் கூடும் என நான் நம்புகின்றேன். என்மேல் உமது ஒளிக்கதிர்களை வீசி என்னை ஒளிரவிடும் என்று அவரை அண்டிக்கொள்ளுங்கள். 

கிறிஸ்தவத்தில் நாம் பரிசுத்தர்களாக, புனிதர்களாக மதிக்கும் பலரும் பாவ இருளில் வாழ்ந்தவர்களே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளியால் இன்று அவர்கள் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள்.  நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் நமது இருதயங்களிலே பிரகாசிக்கச்செய்வார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: