கிறிஸ்துவின் சீடர் என்று அழைக்கப்பட கனியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியம்

ஆதவன் 🌞 747 🌻 பிப்ருவரி 13,  2023 திங்கள்கிழமை 


"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்." ( மத்தேயு 28 : 19, 20 )

இயேசு கிறிஸ்து பாடுபட்டு  மரித்து உயிர்த்து நாற்பது நாட்களுக்குப்பின் தனது சீடர்களை கலிலேயாவிலுள்ள குறிப்பிட்ட மலைக்கு வரவழைத்து அவர்களுக்கு இறுதி அறிவுரையாகக் கூறியவையே இன்றைய தியானத்துக்குரிய வசனம்.  

இங்கு இயேசு கிறிஸ்து, அற்புதம் செய்யுங்கள், மாயாஜாலம் செய்யுங்கள், தீர்க்கதரிசனங்கள் சொல்லுங்கள், பில்லி சூனிய கட்டுகளை அவிழுங்கள், ஜெப பேனா விற்பனை செய்யுங்கள், ஜெப தைலம் விற்பனை செய்யுங்கள், தசமபாக காணிக்கையைச் சரியாகக் கணக்கிட்டு வாங்கி உங்களுக்கு கார், பங்களா வாங்குங்கள் என்றெல்லாம் கூறவில்லை. மாறாக, "சகல ஜாதி ஜனங்களையும் சீடராக்கி ஞானஸ்நானம் கொடுங்கள்" என்று கூறுகின்றார். 

ஒரு சீடத்துவ வாழ்க்கை வாழ்வே அவர் மக்களை அழைக்கின்றார். ஒருவர் கிறிஸ்துவின் சீடர் என்று அழைக்கப்பட அவர் கனியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். "நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்." ( யோவான் 15 : 8 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? எனவே, ஆவியின் கனிகள் உள்ளவனே கிறிஸ்துவின் சீடன். 

ஆவியின் கனி என்பது என்ன? "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 )

மேலும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று வேதம் கூறுகின்றது. 

அதாவது, கிறிஸ்து கூறிய இறுதி அறிவுரை இதுதான். இந்த உலகினில் சென்று அனைத்து இன மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்து அவர்களை கனியுள்ள சீடர்கள் ஆக்குங்கள் என்பதே. அப்படி அவர்கள் கனியுள்ளவர்களாக மாறவேண்டுமானால், "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்." 

அன்பானவர்களே, எனவேதான் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது. பவுல் அடிகள் கூறியுள்ள ஆவிக்குரிய கனிகள் ஒருவரிடம் உருவாக்க உழைப்பவனே உண்மையான சுவிசேஷகன். அத்தகைய நற்செய்தியாளர்களை மட்டுமே நாம் மதிக்கவேண்டும், கனம்பண்ணவேண்டும். மத வியாபாரிகளை புறக்கணிக்கவேண்டும் 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்