Monday, February 06, 2023

ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை தேடிப் பொறுக்கிக்கொண்டிருக்கின்றனர்.

ஆதவன் 🌞 741 🌻 பிப்ருவரி 07,  2023 செவ்வாய்க்கிழமை 

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன."  ( யோவான் 20 : 31 )

இன்று பல கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ ஊழியர்களும் சுவிசேஷம் என்று ஏதேதோ அறிவிக்கின்றார்கள். இயேசு கிறிஸ்துவிடம் வந்தால் உனக்கு வாழ்வில் ஆசீர்வாதம் வரும், நல்ல வேலை கிடைக்கும். மனை, வீடு, பணம், கார், மதிப்பு இவை எல்லாம் வரும் என்கின்றார்கள். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் வருமானத்தில் பத்தில் ஒன்று கொடுக்கவேண்டும். நீ ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பத்தாயிரமாக திருப்பிக்கிடைக்கும்.  எவ்வளவு கொடுக்கிறாயோ அவ்வளவுக்கு உனக்குத் திருப்பிக்கொடுக்கப்படும் என்கின்றனர்.

இன்னும் சிலர் உன் நோய்களெல்லாம் குணமாகும், சாபங்கள் மாறும், பில்லிசூனிய கட்டுகள் அறுபடும் இன்னும் என்னென்னவோ கூறி பணம் சம்பாதிக்கிறார்ளே தவிர மனம் திரும்பிய வாழ்க்கை வாழ்வதுபற்றியோ, மறுபடி பிறக்கும் அனுபவமே கிறிஸ்தவத்தின் முதல் படி என்பதுபற்றியோ பேசி மக்களை வழி நடத்துவதில்லை. இந்த சத்தியங்கள் ஒரு சில ஏழை எளிய ஊழியர்களால் மட்டுமே பிரசங்கிக்கப்படுகின்றன.  . 

இதனால் இன்று கிறிஸ்துவை அறியாத பிற மக்கள் கிறிஸ்தவம் என்றால் ஏதோ மாயாஜாலம் என எண்ணிக்கிக்கொள்கின்றனர். சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியர்களும் மாயாஜாலம் காட்டும் மந்திரவாதி அணிவதைப்போன்று கோட்டு சூட்டு அணிந்துகொள்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.   

இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லாத நித்திய ஜீவன் ஒன்று  உள்ளது. அந்த நித்திய ஜீவனை அடையவேண்டுமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவேண்டும். நமது பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவத்தைப் பெறவேண்டும்.

இந்த நித்திய ஜீவனை அடைந்திட கிறிஸ்துவே வழி என்பதை மக்களுக்கு விளக்கிடவே சுவிசேஷம் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவ நிவாரணத்துக்காக மிருகங்கள் பலியிடப்பட்டன. ஆனால் அந்த மிருகங்களின் இரத்தம் மனிதர்களது பாவங்களை அறுத்து மீட்பளிக்க முடியவில்லை. எனவே பாவமில்லாத தனது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனுக்கான வழியை ஏற்படுத்தினார்.   

"வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." ( எபிரெயர் 9 : 12 )

ஏனெனில், "இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." ( எபிரெயர் 9 : 22 )

அன்பானவர்களே, இவையே கிறிஸ்தவத்தின் அடிப்படை. இந்தச் சத்தியங்களை அறிவிக்காத அல்லது இதன் அடிப்படையில் சுவிசேஷம் அறிவிக்காதவன் எல்லோருமே கள்ளரும் பொய்யரும், வாசல் வழியாக நுழையாமல் சுவர் ஏறிக்  குதிக்கும் எத்தருமாய் இருக்கிறார்கள். (வாசிக்க:- யோவான் 10:1)  

இந்த மீட்பின் சத்தியங்களை மக்களுக்குத் தெரிவிக்கவே சுவிசேஷம் எழுதப்பட்டது என்கின்றார் அப்போஸ்தலனாகிய யோவான்.  இவற்றை ஏற்றுக்கொள்ளும்போதுதான் நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். எனவேதான்  "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன."  ( யோவான் 20 : 31 ) என்று இன்றைய  தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது.. ஆனால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் விசுவாசிகளும் ஊழியர்களும் ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை சுவிசேஷத்தில் தேடி பொறுக்கிக்கொண்டிருக்கின்றனர். பரிதாபம்.!!!

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: