இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, February 02, 2023

தெளிவான வார்த்தைகளையேப் பேசுவோம்.

ஆதவன் 🌞 738 🌻 பிப்ருவரி 04,  2023 சனிக்கிழமை 

"ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?"  ( 1 கொரிந்தியர் 14 : 23 )

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அந்நியபாஷை இன்று பெரும்பாலும் கிறிஸ்தவ ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளில் அதிகமாக பேசப்படுவதைக்காணலாம். இதுகுறித்து பலருக்கும் பலவித சந்தேகங்கள் உள்ளன. அந்நியபாஷை என்பது  உண்மையா? என்றும் அதுகுறித்து விளக்கம் தாருங்கள் என்றும் சிலர் கேட்கின்றனர். அந்நியபாஷை என்பது பொய்யல்ல. வேதத்தில் கூறப்பட்டுள்ள எதுவுமே பொய்யல்ல. ஆனால் இன்று சபைகளில் பேசப்படும் அந்நியபாஷைகள் உண்மையானவையா  என்பதுதான் கேள்வி. 

அந்நியபாஷையினை ஒரு வரம் என்று வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 12;10).  ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் எந்தச் சாட்சியும் இல்லாதவர்கள், ஏன், ஆவிக்குரிய வாழ்வே வாழாதவர்கள், வெளியரங்கமாக மக்களுக்குத் தெரியும் பொய்யரும், ஏமாற்றுக்காரரும் ஆவிக்குரிய சபைகளில் அந்நியபாஷையில் பேசுவதே இன்று  சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கின்றது. அது எப்படி தேவன் இந்த வரத்தைமட்டும் எல்லோருக்கும் பரவலாகக் கொடுத்துவிடுகின்றார் என்பதும் சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கின்றது.

பல ஊழியர்கள் தங்களை வல்லமையுள்ளவர்கள் என்று மக்கள் எண்ணவேண்டும் என்பதற்காக அந்நியபாஷை பேசுகின்றனர்.  "அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்." ( 1 கொரிந்தியர் 14 : 28 ) என்று வேதம் தெளிவாகக் கூறுகின்றது. அதாவது, சபையில் அந்நியபாஷை பேசவேண்டுமானால் அந்த சபையில் அதற்கு அர்த்தம் சொல்கின்ற வரம் பெற்றவர்கள் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேசக்கூடாது. 

மேலும், "யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்." ( 1 கொரிந்தியர் 14 : 27 )

ஆனால், இன்று "லாப லாப"  என சத்தம் எழுப்பும் மக்கள் சபைகளில் இருக்கின்றார்களே தவிர அர்த்தம்கூறுபவர்களைக் காண முடியவில்லை. எனவேதான் இவர்களது அந்நியபாஷையில் சந்தேகம் எழுகின்றது.  

திருச்சபையின் ஆரம்ப நாட்களிலேயே  இந்த வரம் சிறிதளவு தான் தேவைப்பட்டது. எனவேதான் பவுல் அடிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்றும் இப்படி அந்நியபாஷை பேசுகிறேன் என்று கூச்சலெழுப்பிக்கொண்டிருந்தால் பவுல் அடிகள் கூறுவதுபோல நம்மைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்றுதான் பிறர் கூறுவார்கள். கிறிஸ்துவை அறியாதவர்கள் மத்தியில் அந்நியபாஷையால் எந்த நன்மையும்  ஏற்படப்போவதில்லை. இந்த தினசரி தியானம் முழுவதையும் நான் அந்நியபாஷையில் "லாப லாப ...ரீகாபாப ரீஎகாபா" என எழுதினால் யாருக்குப் பயன்படப்போகிறது? 

"நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்." ( 1 கொரிந்தியர் 14 : 19 ) எனும் பவுல் அடிகளின் வார்த்தைகளின்படி மற்றவர்களை உணர்த்தும்படித் தெளிவான வார்த்தைகளையேப்  பேசுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: