அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும்

ஆதவன் 🌞 740 🌻 பிப்ருவரி 06,  2023 திங்கள்கிழமை 


"சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்." ( தீத்து 1 : 15 )

இந்த உலகத்தில் நாம் சிலரைக் கவனித்திருக்கலாம், அவர்கள் எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாக இருப்பார்கள். எந்த நல்ல காரியத்தையும் செய்யத் தடையாக இருப்பார்கள்.  எல்லோரையும் எல்லாவற்றையும் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பார்கள். 

இத்தகைய மனிதர்களை ஆலயக் கமிட்டிகளிலும்  நாம் காணலாம். இவர்களை வைத்துக்கொண்டு எதனையும் நாம் எளிதாகச் செய்யமுடியாது. ஆனால், நாம் ஆராய்ந்து பார்த்தால் இத்தகைய மனிதர்கள் உண்மையில் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள். தாங்கள் இருப்பதுபோலவே எல்லோரும் இருப்பார்கள் என எண்ணுவதால் இவர்கள் மற்றவர்களைச் சந்தேகப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதுதான் மனோதத்துவ உண்மை. இதனையே இன்றைய வசனம், அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும் என்று கூறுகின்றது. 

இத்தகைய மனச்சாட்சியில் அசுத்தமடைந்த  மனிதர்களிடம் எச்சரிக்கையாய் இருந்து அவர்கள் ஆரோக்கியமுள்ளவர்கள் ஆகும்படி கடித்துக்கொண்டு புத்திசொல்ல அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் தனது சீடனான தீத்துவுக்கு எழுதுகின்றார்.

ஆலய காரியங்களில் இவர்கள் ஈடுபட்டாலும் இத்தகைய மனிதர்கள் தேவனை அறிந்தவர்களல்ல. "அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்." ( தீத்து 1 : 16 ) எனத் தொடர்ந்து எழுதுகின்றார் பவுல் அடிகள்.

ஆம், இத்தகைய மனிதர்கள் எந்த நற்செயலுக்கும் ஆகாதவர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான வேளைகளில் இத்தகைய மனிதர்கள் தலைமைப் பொறுப்பில் வந்துவிடுகின்றனர். எனவே எந்த நல்ல செயல்களையும் இவர்கள் செய்ய விடுவதில்லை. ஆலய பணிகளில் உண்மையான ஆர்வமுள்ளவர்கள், நேர்மையாளர்கள், பக்தியுள்ளவர்கள்  புறம்தள்ளப்படுகின்றனர்.

எனவே பொறுப்பிலுள்ளவர்கள் தங்களைத்  தாங்களே ஆராய்ந்துபார்த்து இத்தகைய இழிவான குணமிருந்தால் தங்களைத் திருத்திக்கொள்வதே மேல்.  இல்லையானால் ஆடுகளின் பிரதான மேய்ப்பனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும்போது தக்க பலனை அடைவார்கள். நம்மிடம் இத்தகைய அவலட்சண குணமிருக்கின்றதா என்று எண்ணிப்பார்த்து திருத்திக்கொள்வோம். 

இன்று இத்தகைய மனிதர்களால்  சில பல  இடங்களில் சபைகள் கேவலமடைந்து பிற இன  மக்கள்முன் சாட்சி இழந்து அவமானப்பட்டு நிற்கின்றன.  தேவனை நோக்கி ஓடவேண்டிய சபைகள் கோர்ட் வாசலையும் வக்கீல்களையும் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் மனம் திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையால் மீட்பு அனுபவம் பெறும்படி  ஜெபிக்கவேண்டியது கிறிஸ்தவர்களது முக்கிய கடமை. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்