நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.

ஆதவன் 🌞 754 🌻 பிப்ருவரி 20,  2023 திங்கள்கிழமை 

"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 12 )

ஒருமுறை கடவுள் நம்பிக்கை இல்லாத எனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் மேன்மை பற்றிக் கூறியபோது அவர், "அது என்ன கடவுளுக்கு அவ்வளவு சுயநலமா? தன்னைத்தவிர வேறு  எவரையும் வணங்கக்கூடாது; தன்னால் மட்டுமே இரட்சிப்பு என்று எப்படி ஒருவர் கூற  முடியும்? அப்படிக் கூறுவதே அவர் ஒரு சுயநலம் பிடித்தவர் என்றுதானே  பொருள்" என்றார். 

நான் அவருக்குக் கூறினேன், "அது சுய நலம் அல்ல; இதுவே உண்மை. நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லாம் விஞ்ஞானபூர்வமாக எல்லாவற்றையும் நிரூபிக்கவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்.  அப்படியே ஏற்றுக்கொண்டாலும், நீங்கள் கூறும் விஞ்ஞான விதிகள் அனைத்தும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கின்றன. உதாரணமாக தண்ணீரைப் பெறவேண்டுமென்றால் ஆக்சிஜனும் நைட்ரஜனும் குறிப்பிட்ட விகிதத்தில் (H2O) ஒனறு சேர்க்கப்படவேண்டும். இதுதான் விஞ்ஞானவிதி இதற்கு மாறுபட்டுச் செயல்பட்டுக்கொண்டு தண்ணீரைப் பெற முடியாது.

இதுபோலவே தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உபத்திரவத்தை பாதையில் நடத்தி, அவரை இரத்தம் சிந்தவைத்து நித்திய மீட்பினை உண்டுபண்ணியிருக்கின்றார். எனவே மீட்பு பெறவேண்டுமென்றால் அவரைத்தான் அண்டிக்கொள்ளவேண்டும். வேறு எவரும் மக்களது பாவங்களைப் போக்குவதற்கு தனது இரத்தத்தைச் சிந்தவில்லை. மேலும் நீங்கள் மீட்பு என்றால் என்ன என்பது தெரியாமல் பேசுகின்றிர்கள். எப்படி தண்ணீரைப் பெறுவதற்கு விஞ்ஞானம் விதி வைத்துள்ளதோ அதுபோல இரட்சிப்பு பெறுவதற்கும் விதி உள்ளது. 

முதலில் நமது மனச்சாட்சியில் நாம் செய்யும் குறிப்பிட்டத் தவறான  செயல் பாவம் என்று தெரியவேண்டும். மனசாட்சியே இல்லாதவன் இப்படித் தனது பாவத்தை உணரவும் முடியாது; அதற்காக வருந்தவும் முடியாது. "நான் என்ன பாவம் செய்தேன்?" என்று நீங்கள்  கூறிக்கொள்கின்றீர்கள். நான் கேட்கின்றேன், "பின் ஏன் உங்களுக்கு மன நிம்மதி இல்லை? ஏன் கடவுளோடு தொடர்பு இல்லை.? நீங்கள் உண்மையிலேயே பாவம் செய்யாதவர்கள் என்றால் கடவுள் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பார் அல்லவா?  "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்று வேதம் கூறுகின்றதே? என்றேன். 

"நான் கடவுளே இல்லை என்கிறேன், நீங்கள் அவரைத் தரிசிப்பார்கள் என்கிறீர்களே என்றார்." அவர். கடவுள் நம்பிக்கை உள்ள பலரும்கூட (கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் கூட) இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசிப்பதும் நம்புவதும் இல்லை. எனவேதான் எல்லா மதங்களும் ஒரே கடலைச் சேரும்  தண்ணீர்போல ஒரே கடவுளைச் சேர்கின்றன என்று கூறிக்கொண்டு இருக்கின்றனர். 

"அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை." எனும் வசனத்தை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே இரட்சிப்பு அனுபவத்தைப் பெறமுடியும்; அவரை அறியமுடியும். "நான் என்ன பாவம் செய்தேன்" என்று எவரும் கூறிக்கொள்ளமுடியாது. 

"ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை." ( பிரசங்கி 7 : 20 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்