Friday, February 17, 2023

வசனத்தை உறுதிப்படுத்தும் அடையாளங்களைக் கிறிஸ்துச் செய்யுமாறு ஜெபிப்போம்.

ஆதவன் 🌞 752 🌻 பிப்ருவரி 18,  2023 சனிக்கிழமை 

"அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்." ( மாற்கு 16 : 20 )

இன்று நாம் அனைவருமே நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை ஆய்வு செய்து பார்க்கவேண்டியதும், ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்படவேண்டியதும், ஜெபிக்கவேண்டியதுமான முக்கிய காரியத்தை இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது ஆதி அப்போஸ்தலர்களது அனுபவம் நமக்கு வேண்டும் என்பதே அது. 

இன்றைய வசனம் கூறுகின்றது, அவர்கள் பிரசங்கம் பண்ணும்போது, கர்த்தர் அவர்களோடுகூட கிரியை நடப்பித்து அவர்களால் பல அற்புத அடையாளங்களை நடப்பித்து தனது வசனத்தை உறுதிப்படுத்தினார் என்று. அதாவது, அவர்கள் பிரசங்கம் மட்டும்செய்யவில்லை கிறிஸ்து செய்ததுபோல பல அதிசயங்களைச்  செய்தார்கள். 

இயேசு கிறிஸ்து அற்புதம் செய்ய ஒரு முக்கிய காரணம், தான் சொல்வதை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே. இயேசு கிறிஸ்து மக்கள்மேல்கொண்ட தனது மன உருக்கத்தினாலும் சில வேளைகளில் அதிசயங்கள் செய்தார். தீராத  நோய்களைக் குணமாக்கினார். இது தவிர, வெற்று வாய்ச்சவடால் பேசிக்கொண்டிருந்தால் எவரும் தான் சொல்வதை நம்பமாட்டார்கள் என்றும்  இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். இதுவும் இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்திட ஒரு காரணம். இதனையே  இயேசு கிறிஸ்து, " என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." ( யோவான் 14 : 11 ) என்று தெரிவித்தார். 
  
பிதா தன்னை அனுப்பினார் என்று மக்களை நம்பவைத்திட இயேசு கிறிஸ்துவுக்கு அற்புதங்கள் செய்யவேண்டியிருந்தது. அதுபோல, கிறிஸ்துவே நம்மை அனுப்பினார் என்று மக்களுக்கு  வெளிப்டையாகத் தெரியவைத்திட நம்மைக்கொண்டும் அற்புதங்கள் நடைபெறவேண்டியது அவசியம் என்பது தெளிவு.  நாம் பேசக்கூடிய,  எழுதக்கூடிய வார்த்தைகள் கிறிஸ்துவை அறியாத மக்களிடம் செயல்புரியவேண்டும்.  அதற்கு நம்மைக்கொண்டு அடையாளங்கள் நடைபெறவேண்டும். 

நாம் கிறிஸ்தவர்களாக இருந்து பிரசங்கம்  செய்துதான் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும் என்று அவசியமில்லை. நமது வாழ்க்கை கிறிஸ்துவை அறிவிக்கும் நிருபமாக மாறினாலே போதும்; மாறிடவேண்டியதும் அவசியம்.  அப்படி மாறும்போது நாம் போதிக்காமல் நமது செயல்களைக்கண்டே மற்றவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள், பிரமிக்கத்தக்க அற்புதங்களும்  நடைபெறும். அண்மையில் வடஇந்தியாவில்  மிஷனெரியாகப்  பணியாற்றும் ஒரு சகோதரனைச் சந்தித்தேன். அவரது பணியின்மூலமும் அவர்மூலம்  கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்கள்மூலமும் அங்கு நடைபெறும் பல அதிசயங்களைக் கூறினார். அவற்றைப்பார்த்து பலர் கிறிஸ்துவிடம் திரும்புகின்றனர் என்றார்.

அன்பானவர்களே, நமது வாழ்க்கையிலும் நமது இடங்களிலும் கிறிஸ்து இப்படி அவரது வசனத்தை உறுதிப்படுத்தும் அடையாளங்களைச் செய்யுமாறு ஜெபிப்போம். முதலில் நாமும் நமது வாழ்க்கையினையும் அதற்கேற்ப மாற்றிட நம்மை கிறிஸ்துவுக்கு  ஒப்புக்கொடும்போம். நம்மைக்கொண்டு அற்புதங்கள் நடைபெறும்போது கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் தானாகவே கிறிஸ்துவின் பக்கம் வருவார்கள். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

No comments: