இருதயத்தை மாற்றிடா வழிபாடுகள் அர்த்தமிழந்தவை

ஆதவன் 🌞 761🌻 பிப்ருவரி 27,  2023 திங்கள்கிழமை 

"என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்."  ( சகரியா 1 : 3 )

மனிதர்கள் பலரும் கடவுள் தங்கள் விண்ணப்பிக்கும் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆலயங்களில் பெரிய விண்ணப்பப் பட்டியலுடன் ஜெபிக்கின்றனர். தேவன் தனது அளவில்லா கிருபையினால் மனிதர்களது விண்ணப்பங்களை நிறைவேற்றிக்கொடுக்கின்றார். ஆனால் இத்துடன் நாம் திருப்தி அடைவோமென்றால் நாம் தேவனை அறியாதக் குருடர்களாகவே இருப்போம். கிறிஸ்தவம் காட்டும்  ஆன்மீகத்துக்கும் இந்தவித ஜெபங்களுக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும். 

நாம் பொதுவாக கடவுளை நம்மிடம் திருப்ப முயலுகின்றோம்  அனைத்து மத வழிபாடுகளும் இதனையே முயலுகின்றன. மனித அறிவால்  சிந்திக்கப்பட்ட இந்த வழிபாட்டு முறைமைகளும் இதனையே காட்டுகின்றன. இப்படிச் செய்தால் கடவுள் நம்மிடம் அன்பாய் இருப்பார் என எண்ணிக்கொண்டு சில காரியங்களை மனிதர்கள்  செய்கின்றனர்.  

மனிதர்கள்  மற்றவர்களது புகழ்ச்சியையும், பாராட்டையும் மாலை மரியாதையையும் எதிர்பார்த்து அவைகளால் மயங்குவார்கள். எனவே, தேவனும் இவற்றால் மயங்குவார் என எண்ணுவது மனித சிந்தனையே. மதச் சடங்குகள் இவற்றையே செய்கின்றன. ஆனால் நமது தேவன் இருதயத்தையே நோக்கிப்பார்க்கின்றார். எனவேதான் இயேசு கிறிஸ்து, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு - 5:8)  என்று கூறினார். 

அன்பானவர்களே, நாம் தேவனை நம்மிடம் திருப்ப உலக மனிதர்களைத் திருப்திப்படுத்த முயல்வதுபோன்ற முயற்சிகள் செய்வதைவிட நாம் அவரிடம் திரும்பவேண்டும். நமது இருதயம் அவருக்கு ஏற்புடையதாக மாறவேண்டியது  அவசியம். இருதயத்தை அழுக்கடைந்த சாக்கடையாக வைத்துக்கொண்டு நாம் செய்யும் வழிபாட்டு முயற்சிகள் அர்த்தமற்றவையே. "நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்." ( ஏசாயா 1 : 13 ) என்று ஏசாயா மூலம் கர்த்தர் கூறவில்லையா?

"உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்." ( ஏசாயா 1 : 16 ) என்கின்றார் பரிசுத்தர். 

நாம் உலக மனிதர்களைப்போல வழிபாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்துவிட்டு  நமது இருதயத்தை அவருக்கு ஏற்புடையதாக மாற்றிடாமல் இருப்போமானால் நமது வழிபாடுகள் அர்த்தமிழந்தவைகளாகவே இருக்கும். எனவேதான், "என்னிடத்தில் திரும்புங்கள் அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்."  ( சகரியா 1 : 3 ) என்று  கூறுகின்றார் கர்த்தராகிய ஆண்டவர்.

நமது இருதயங்களை அவருக்கு ஏற்புடையதாக மாற்றுவோம்; அப்போது மட்டுமே நாம் அவரை அறிய முடியும்; அவரது வழிகாட்டுதலையும் அவரது உடனிருப்பையும் நமது வாழ்வில் உணர முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்