Monday, June 19, 2023

அப்போஸ்தலரான யூதா கூறும் அறிவுரை

ஆதவன் 🔥 874🌻 ஜூன் 20, 2023 செவ்வாய்க்கிழமை



"நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1 : 20, 21 )

அப்போஸ்தலரான யூதா தனது நிரூபத்தை பிதாவாகிய தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவினால் காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கும் எழுதுவதாக ஆரம்பிக்கின்றார்.  அதாவது கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுக்கு என்று பொருள். 

நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வினைச் சுதந்தரித்துக்கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறவேண்டும்; அதற்கு நாம் காத்திருக்கவேண்டும் என்கின்றார். எப்படி காத்திருப்பது என்பதற்கு மூன்று காரியங்களைக் கூறுகின்றார். 

1. விசுவாசத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் 
2. பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணவேண்டும்.
3. தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.

இங்கு, விசுவாசம் என்று வெறுமனே கூறாமல், மகா பரிசுத்தமான விசுவாசம் என்று கூறுகின்றார். அதாவது அசைக்கமுடியாத, கொஞ்சமும் குறைவில்லாத விசுவாசமுள்ளவர்களாய் நாம் இருக்கவேண்டும். உதாரணமாக, ஆபிரகாமைப் போன்ற விசுவாசம்  என்று கூறலாம். 

இரண்டாவது பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணவேண்டும். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நாம் பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணும்போது உலக ஆசைத் தேவைகளை மட்டுமே வேண்டி நாம் ஜெபிக்கமாட்டோம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளிருந்து ஜெபங்களைத் தூண்டுவார். அப்படி ஆவிக்குரிய ஜெபம் செய்பவர்களாக நாம் இருக்கவேண்டும். 

மூன்றாவதாக, தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். தேவனுக்குச் சித்தமில்லாத காரியங்களை நம்மைவிட்டு அகற்றி அவரது மனம் மகிழும்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்; அப்படி வாழவேண்டும். இப்படி நாம் வாழும்போது நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தால் அவர்  வாக்களித்த நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வுக்குத் தகுதியாகின்றோம். அவரது அந்த இரக்கத்தைப் பெறுவதற்கு நாம் காத்திருக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, இந்த மூன்று காரியங்களிலும் நாம் எப்படி இருக்கின்றோம்? நமது விசுவாசம், நமது ஜெபம், நமது ஆவிக்குரிய அன்றாட வாழ்க்கை இவை எப்படி இருக்கின்றன? வெறும் உலக காரியங்களையே நமது ஜெபங்களில் கேட்டு அவை கிடைக்குமென்று விசுவாசித்து வாழ்வதல்ல ஆவிக்குரிய வாழ்க்கை. 

அப்போஸ்தலரான யூதா கூறும் அறிவுரையின்படி நாம் வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். விசுவாசம், ஜெபம், தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொண்டு வாழும் ஆவிக்குரிய வாழ்க்கை இவைகளை நாம் கடைபிடித்துக் காத்திருக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாக்களித்த நித்தியஜீவனை அவர் நமக்குத் தந்தருள்வார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, June 18, 2023

தேவ சத்தத்தைக் கேட்க முடியும்.

 ஆதவன் 🔥 873🌻 ஜூன் 19, 2023 திங்கள்கிழமை

"சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்". ( யோவான் 18 : 37 )


தான் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறக்க ஒரு காரணத்தை இன்றைய வசனத்தில்  இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது, உண்மைக்குச் சான்றுபகரவே நான் வந்தேன் என்கின்றார். 

வழியும் சத்தியமும் ஜீவனும் நானே என்று கூறியவர் தான் கூறியபடி சத்தியத்துக்குச் சான்று கூற இந்த உலகினில் வந்தார்.  சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்". ( யோவான் 18 : 37 ) என்று இயேசு கிறிஸ்து கூறியபோது, பிலாத்து அவரிடம் ," சத்தியம் என்றால் என்ன?" என்று கேட்டான். அவனுக்கு இயேசு கிறிஸ்து பதில் கூறவில்லை. 

சில காரியங்களை  வளர்ந்த மனிதர்களுக்கு ஒன்றுமறியாத சிறு பிள்ளைகளுக்கு விளக்குவதுபோல விளக்கம் கூறிக்கொண்டிருக்கமுடியாது. உதாரணமாக, ஒரு அறுபது வயது மனிதன் "பசும்பால் என்றால் என்ன?" என்றோ "எண்ணெய் எப்படி இருக்கும்?"  என்றோ கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவனுக்கு விளக்கம்கூற முடியுமா?  அவன் பொய்யன் அல்லது அறிவிலி என்று அவனுக்குப் பதில் பேசாமல் இருப்பதே மேல். எனவேதான் உண்மை என்றால் என்ன என்பதை பொய்யிலேயே பிறந்து வளர்ந்த பிலாத்துவுக்கு இயேசு விளக்கவில்லை.  

ஆனால், தனது சீடர்களோடு அமர்ந்திருந்து ஜெபிக்கும்போது "உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 ) அதாவது, தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்று கூறி ஜெபித்தார். ஆம், உண்மையான அந்த தேவ வார்த்தைகளுக்குச் சான்றுகூற நான் வந்தேன் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, "சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்" என்று. அதாவது, நாம் உண்மையுள்ளவர்களாக வாழ்வோமானால் தேவ சத்தத்தைக் கேட்க முடியும். ஆம், உண்மையுள்ள எவனும் கேட்கமுடியும் என்கின்றார் இயேசு கிறிஸ்து.

அன்பானவர்களே, நமது தேவன் ஊமையான ஒரு விக்கிரகமல்ல. இன்றும் பல்வேறு விதங்களில் தேவன் தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் மனிதர்களிடம் பேசுகின்றார். கனவுமூலமும் தரிசனங்கள் மூலமும், சிலவேளைகளில் மனிதர்கள் பேசுவதுபோல குரல்மூலமாகவும்  பேசுகின்றார். பலவேளைகளில் நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது வசனங்களின்மூலம் பேசுகின்றார்.  ஆனால், அதனைக் கேட்கும் அறிவு நமக்கு வேண்டியது அவசியம். 

தேவன் நம்மோடு பேசி நம்மை நடத்தும் விதம் அதிசயமானது. ஆவிக்குரிய அனுபவமில்லாதவர்கள் இதனை நம்புவது அரிது. காரணம் ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவர்களால்தான் புரிந்துகொள்ளமுடியும்.    

"ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 14 ) ஆம், அன்று அப்போஸ்தலரான பவுல் அடிகளிடம் கிறிஸ்து பேசினார் என்பதை யூதர்கள் மட்டுமல்ல கொரிந்து சபை மக்களே நம்பவில்லை. எனவேதான் அவர் கூறுகின்றார், "கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்." ( 2 கொரிந்தியர் 13 : 3 )

அன்பானவர்களே, பிலாத்துவைப்போல இல்லாமல் இன்றைய வசனம் கூறுவதன்படி சத்தியத்தைக்குறித்து சாட்சிகொடுக்க உலகினில் வந்த கிறிஸ்துவை அறிய முயலுவோம். சத்தியத்தின்படி வாழ்வோம்; சத்தியவான்களாக வாழ்வோம். அப்போது கிறிஸ்து கூறியதுபோல அவரது சத்தத்தை நம்மால் கேட்க முடியும். மேலான ஆவிக்குரிய அனுபவங்களைப் பெறமுடியும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, June 17, 2023

தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்

ஆதவன் 🔥 872🌻 ஜூன் 18, 2023 ஞாயிற்றுக்கிழமை


"தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்." ( யோவான் 4 : 24 )

இன்றைய வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் பேசும்போது குறிப்பிட்ட வசனமாகும்.  தேவனை ஆராதிக்க சடங்காச்சாரங்கள் தேவையில்லை.  வெறுமனே கூச்சலும் கூப்பாடும் தேவையில்லை.

வேதாகம அடிப்படையில் ஆவிக்குரிய ஆராதனை என்பது என்ன என்று முதலில் புரிந்துகொள்ளவேண்டும்; ஆவிக்குரிய ஆராதனை செய்யும் சபைகளுக்குச் செல்கின்றோம் என்று கூறிக்கொள்பவர்கள் பிற சபைகளைக் குறைகூறுவதற்குமுன் தாங்கள் உண்மையிலேயே ஆவிக்குரிய  ஆராதனை செய்கின்றோமா என்று எண்ணிப்பார்த்திடவேண்டும்.

ஆவியான தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். இதில் ஆவியோடு என்பதற்கு நாம் இரண்டு பொருள்கள் கொள்ளலாம். ஒன்று, நமது முழு ஆவியோடு தேவனை ஆராதிக்கவேண்டும் என்று பொருள்.  "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" ( மத்தேயு 22 : 37 ) என்று நியாதிபதி ஒருவனுக்கு இயேசு பதில் கூறினார். இப்படி அன்புகூர்ந்து தேவனை ஆராதிக்கவேண்டும். 

ஆவியோடும் என்பதற்கு  பரிசுத்த ஆவியோடு என்றும்  பொருள் உண்டு. அதாவது நாம் தேவனை பரிசுத்த ஆவியோடு தொழுது கொள்ளவேண்டும். இங்குதான் பலரும் தவறுகின்றனர்.  துள்ளிக்குதித்து ஆராதிப்பதுதான் பரிசுத்த ஆவியோடு ஆராதிப்பது எனப் பலரும் புரிந்துகொண்டுள்ளனர்.  ஒருவரிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதற்கு அலறுவது அடையாளமல்ல மாறாக, ஆவியின் கனிகள் அவரிடம் இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியின் கனிகள் உள்ளவனே பரிசுத்த ஆவியை உடையவன். அத்தகைய கனிகளுடன் தேவனை ஆராதிக்கவேண்டும். 

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கனிகளை உடையவனே பரிசுத்த ஆவியை உடையவன்.  

ஆண்டவர் இயேசு மேலும்  கூறினார், உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்.  அதாவது, நமது வாழ்க்கையில் உண்மையாக நடந்து நாம் தேவனை ஆராதிக்கவேண்டும்.   உண்மை,  நேர்மையற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஆராதிப்பது ஆவிக்குரிய ஆராதனையல்ல. மேலும், உண்மை என்பது தேவனது வார்த்தைகளைக் குறிக்கின்றது. "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 ) என்றார் இயேசு கிறிஸ்து. எனவே தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்ந்து அவரை ஆராதிக்கவேண்டும். 

அன்பானவர்களே, தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க குறிப்பிட்ட சபைகளில் சென்றால்தான் முடியுமென்று எண்ணிவிடவேண்டாம். ஆவிக்குரிய ஆராதனைக்கு இதுவரைத் தவறான பொருள்கொண்டு தவறான வழிகளில் நடந்திருப்போமென்றால் நம்மைத் திருத்திக்கொள்வோம். ஆவியோடும் உண்மையோடும் தேவனை எங்கும் ஆராதிக்கலாம்.  

"நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது." ( யோவான் 4 : 21 ) என்று கர்த்தராகிய இயேசு கூறவில்லையா? தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்து ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, June 15, 2023

எப்சிபா , பியூலா

ஆதவன் 🔥 871🌻 ஜூன் 17, 2023 சனிக்கிழமை

"நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்." ( ஏசாயா 62 : 4 )

அன்பானவர்களே, ஒருவேளை இதுவரை நாம் நமது வாழ்க்கையில் நமக்கு உண்மையாக உதவிபுரிவதற்கு யாருமில்லாத  கைவிடப்பட்ட பெண் போல இருந்திருக்கலாம். எனக்கு உதவிட இந்த உலகினில்  யார் இருக்கின்றார்? என எண்ணிக் கலங்கியிருக்கலாம். கலங்கிடவேண்டாம்; இப்போது ஏற்றத்  துணையாளன் கிடைத்துவிட்டார். எனவே நாம் கைவிடப்பட்டவர்களல்ல.  அதுபோல  நமது குடியிருப்பு (வாழ்க்கை) பாழானதாக, இனி நமக்கு ஒரு நல்ல வாழ்வு உண்டுமா? என ஏங்கவைப்பதாக இருந்திருக்கலாம். கவலைவேண்டாம், இனி அப்படியல்ல,செழிப்பான வாழ்க்கை நமக்கு அமையப்போகின்றது. 

கர்த்தருக்குள் மனம்திரும்பிய ஒரு வாழ்க்கை வாழும்போது கர்த்தர் தரும் மேலான இந்த ஆசீர்வாதத்தையே  இன்றைய வசனம் விளக்குகின்றது. 

"நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்." என்று இன்றைய வசனம் தொடர்ந்து சொல்கின்றது. எப்சிபா என்பதற்கு, "அவளில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்" என்றும் பியூலா என்பதற்கு, "மணமுடித்தவள்" என்றும் பொருள்.

அதாவது, ஒரு மணமகன் மணமகளிடம் மகிழ்சியாய் இருப்பதுபோல கர்த்தர் நம்மேல் மகிழ்ச்சியாய் இருக்கிறார்; அவரே நம்மை மணமுடித்துள்ளார்  என்று பொருள். எனவே நாம் இனி கைவிடப்பட்டவர்களல்ல; கர்த்தரே நம்மை மணமுடித்துள்ளதால் நமது வாழ்க்கை இனி வறண்ட வாழ்க்கையல்ல; செழிப்பான ஒரு வாழ்க்கை. 

அன்பானவர்களே, நமக்கு எவ்வளவு செல்வம், சொத்துக்கள் இருந்தாலும் கிறிஸ்து இல்லாவிட்டால் நமது வாழ்க்கை கைவிடப்பட்ட வாழ்க்கைதான்; வறண்ட வாழ்கைதான். காரணம், நமது செல்வங்களும் சொத்துசுகங்களும் எப்போதும்  நமக்கு உதவிக்கு வராது. கோடி கோடியாக சொத்துச் சேர்த்துள்ள பலர் மன அமைதியின்றி தற்கொலை செய்வதை நாம் பலவேளைகளில் செய்திகளில் பார்க்கின்றோம். காரணம் வெளிப்பார்வைக்கு அழகுறத்தோன்றும் அவர்களது வாழ்க்கை உண்மையில் கைவிடப்பட்ட, பாழான வாழ்க்கை. 

எனவேதான் நாம் கர்த்தரோடு இணைத்து வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

"நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்" ( யோவான் 15 : 5, 6 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? 

எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொண்டு அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்வோம். அப்போது, இன்றைய வசனம் கூறுவதுபோல, நாம் இனிக் கைவிடப்பட்டவர்கள் எனப்படாமலும், நமது வாழ்க்கை இனிப் பாழான வாழ்க்கை என்று சொல்லப்படாமலும்  இருக்கும். நம்மில் அவர் மகிழ்ச்சியாயிருப்பார்; நம்மை அவர் மெய்யான மணமகளாக சேர்த்துக்கொண்டு நம்மேல் பிரியமாக இருப்பார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

நீதிமான் கைவிடப்பட்டதை நான் காணவில்லை.

ஆதவன் 🔥 870🌻 ஜூன் 16, 2023  வெள்ளிக்கிழமை


"நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."(  சங்கீதம் 34 : 19 )

இந்த உலகத்தில் ஒருவருக்கு நல்ல வேலை கிடைத்திடவேண்டுமென்றால் அதற்கான  படிப்பு அவசியம்.  ஒவ்வொரு   வகுப்பாக தேர்வு   எழுதி  வெற்றிபெற்றுபல  கட்டங்களைத் தாண்டவேண்டும். படிப்புகளையும் படித்து முடித்தபின்னர் போட்டித் தேர்வுகள், நேர்முகத்தேர்வுகள் எனப் பல படிகளைக் கடக்கவேண்டும்.  ஒருவர்  மருத்துவராகவோபொறியாளராகவோ கல்லூரிப் பேராசிரியராகவோ ஆகவேண்டுமென்றால் உடனடியாக அப்படி ஆகிட முடியாது. அதற்கு அவர்கள் பல ஆண்டுகள் படித்துப்  பலத் தேர்வுகளைச் சந்திக்கவேண்டும். 

ஆவிக்குரிய சிறந்த மனிதனாக மாறிட,  இந்தத் தேர்வுகளைப்  போலவே நமது வாழ்க்கையிலும் நாம் பல கட்டங்களைத் தாண்டவேண்டியுள்ளதுஇந்தத் தேர்வுகளைப் போன்றவையே துன்பங்கள்

ஒருவன் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்டவனாகநீதிமானாக  இருப்பதால் அவனுக்குத் துன்பங்கள் வராது என வேதம் கூறவில்லைமாறாக நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும் என்றே கூறுகிறதுதுன்பங்களும் பாடுகளும் உலகத்தில் பிறந்த ஒவொருவருக்கும் உண்டுநீதிமானுக்கு அதிகம் உண்டு.  ஆனால் கிறிஸ்து அதனைத் தாங்கக்கூடிய பலத்தினை அவரை விசுவாசிப்போருக்குத் தருகின்றார்இயேசு கிறிஸ்து கூறியுள்ளார் , "உலகத்தில் உங்களுக்கு  உபத்திரவம் உண்டுஆயினும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் - 16:33) 

நீதிமானுக்கு ஏன் அதிக துன்பம் என்று நாம் பார்ப்போமானால் , உலகத்திலிருந்து நீதிமான்களை தேவன் தனியே   பிரித்தெடுத்து   நடத்துவதால்தான்இயேசு கிறிஸ்துக் கூறினார், " நீங்கள் உலகத்தாராயிருந்தால்உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்நீங்கள் உலகத்தாரா யிராதபடியினாலும்நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும்உலகம் உங்களைப் பகைக்கிறது." (  யோவான் 15 : 19 ) அப்படி உலகம்  பகைப்பதால் தான் நீதிமானுக்குத் துன்பங்கள் அதிகம். 

நான் இவ்வளவு ஜெபித்தும் , தேவனிடம் பற்றுதலாயிருந்தும் ஏன் எனக்கு இதனைத் துன்பங்கள் எனக் கலங்கிடவேண்டாம்.   உபாத்திரவத்தின் வழியே சென்று ஒரு ஜெயம் உள்ள வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்தேவன் நமது உபத்திரவத்தை நாம் மேற்கொள்ள உதவாமல் கைவிட்டுவிடுவதில்லை. 1 கொரிந்தியர் -10:13 கூறுகிறதுஉங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு இடம்கொடாமல் சோதனையைத் தாங்கத்  தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார்

ஆம்,"நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டுஅவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்." (  சங்கீதம் 34 : 17 ) மேலும் வேதம் கூறுகிறது,  "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறதுஅவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது."  சங்கீதம் 34 : 15 )

தாவீது சிறு வயது துவங்கி தேவனால் நடத்தப்பட்டவர்ஆரம்பம் முதல் பல சோதனைகளைக் கடந்து வந்தவர்சவுல் பல முறை அவரைக் கொல்ல முயன்றும் தேவன் அவரை சவுலின் கைகளுக்கு ஒப்புக்கொடுக்கவில்லைமேலும் அவர் ராஜாவாக இருந்து பல பொருளாதார நிலையிலிருந்த மக்களைக் கண்டிருக்கிறார்அவரது அனுபவத்தால் துணிந்து பின்வருமாறு கூறுகின்றார்...

"நான் இளைஞனாயிருந்தேன்முதிர்வயதுள்ளவனுமானேன்ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும்அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை." (  சங்கீதம் 37 : 25 )

ஆம்தேவன் நீதிமான்களை சோதித்தாலும் ஒரேயடியாக கைவிட்டுவிடமாட்டார். முதிர்வயதுவரை நமது அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவிராது. நமது சந்ததியினையும் தேவன்  ஆசீர்வதிப்பார்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 


Tuesday, June 13, 2023

யோசேப்பின் எலும்புகள்

ஆதவன் 🔥 869🌻 ஜூன் 15, 2023  வியாழக்கிழமை


"விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்." ( எபிரெயர் 11 : 22 )

இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தது தேவனது மிகப்பெரிய திட்டத்தினால்தான். அந்தத் திட்டத்தை அவர் ஆபிரகாமுக்குத் தெரிவித்திருந்தார். "உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்." ( ஆதியாகமம் 15 : 13, 14 )

ஆபிரகாம் இதனைத் தனது மகன் ஈசாக்குக்கு அறிவித்திருந்தார். ஈசாக்கு தனது மகன் யாக்கோபுக்கும்  அவர் தனது மகன் யோசேப்புக்கும் தெரிவித்திருந்தனர். தேவனது வார்த்தைகளை அவர்கள் முழுவதுமாக நம்பியிருந்தனர். அந்த விசுவாசத்தினால்தான் யோசேப்பு தான் மரணமடையுமுன் தனது எலும்புகளைக்குறித்து பேசினார். "தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்." ( ஆதியாகமம் 50 : 25 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அதாவது தான் உயிரோடிருந்த நாளில் கானான் தேசத்தைச் சுதந்தரிக்க முடியவில்லை என்றாலும் நிச்சயமாக தேவன் குறித்த காலத்தில் தனது மக்களைச்  சந்தித்து கானானுக்குக் கொண்டு செல்வார் என்று யோசேப்பு முழு நிச்சயமாக நம்பினார். எனவேதான் தனது எலும்புகளைக்குறித்து இப்படி ஒரு கட்டளையினைக் கொடுத்தார்.  

தேவன் சொன்னபடி இஸ்ரவேலரை விடுவித்தார். ஆம், "இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்." ( யாத்திராகமம் 12 : 40 ) நானூற்று முப்பது ஆண்டுகள் முடிவடைந்த அந்த நாளில்தான் இஸ்ரவேல் மக்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டனர். 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) ஆம் யோசேப்பு இப்படி தனது முன்னோர்களுக்குத் தேவன் கூறிய வார்த்தைகளின்மேல் உறுதியான விசுவாசமுள்ளவராய் இருந்தார். அதனால் அவரது பெயர் விசுவாச வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  

அன்பானவர்களே, யோசேப்பு தனது முன்னோர்களுக்குத் தேவன் கூறியதை விசுவாசித்தார். இன்று நமக்குத் தேவன் தனது குமாரனான இயேசு கிறிஸ்துமூலம் பல வாக்குறுதிகளைத் தந்துள்ளார். அதனை அவரோடு இருந்த சீடர்கள் நமக்காக எழுதி வைத்துள்ளனர். அவற்றை நாம் விசுவாசிக்கவேண்டியது எவ்வளவு முக்கியம்!! பாவ மன்னிப்பு, பாவத்திலிருந்து விடுதலை, உடலின் உயிர்ப்பு, நித்தியஜீவன் இவையெல்லாம் நமது கர்த்தரான இயேசு கிறிஸ்து வாக்களித்தவை. 

இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளை நாம் விசுவாசிக்கும்போது நாம் பரம கானானுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். கானான் தேசத்துக்கு மோசே யோசேப்பின் எலும்புகளைத் தூக்கிச் சென்றார்.  (யாத்திராகமம் 13:19)  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவர் நம்மையே தன்னுடன் சேர்த்துக்கொள்வார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

உபத்திரவத்திலே பொறுமை

ஆதவன் 🔥 868🌻 ஜூன் 14, 2023  புதன்கிழமை


"இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 )

இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள பொறுமை என்பது சாதாரணமாக நாம் கூறும் பொறுமையையல்ல; மாறாக தேவன்மேலுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருந்து தேவன் எனது காரியங்களை நலமாக முடித்துவைப்பார் என்று பொறுமையோடு காத்திருந்து நம்புவது, துன்பங்களைப் பொறுமையாகச் சகிப்பது, இவைகளையே பொறுமை என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஒருவர் தான் நல்ல நிலையில் இருக்கும்போது பொறுமையாக இருப்பது பெரிய காரியமல்ல.  மாறாக, வாழ்வில் எதிர்மறையான காரியங்கள் நிகழும்போதும் அமைதியாக, பொறுமையாக இருப்பது மகத்தான காரியமாகும். பக்தனான யோபு அப்படிதான் இருந்தார். தனது பிள்ளைகள், சொத்துக்கள், உடல்நலம் அனைத்தும் பாதிக்கப்பட்டபின்னரும் அவர் தேவன்மேல் வைத்திருந்த விசுவாசத்தில் தளர்வடையவில்லை.  எல்லாத் துன்பத்துக்கும்  மேலாக அவரது உயிரான மனைவியே அவரை அவமதித்துப் பேசும்போதும் யோபு பொறுமையாகப் பேசுகின்றார். 

யோபு இரண்டாம் அதிகாரத்தில் வாசிக்கும்போது, "அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்." ( யோபு 2 : 9 ) யோபின் மனைவி கூறுவதை தற்போதைய வார்த்தைகளில் கூறவேண்டுமானால், "நீர் இன்னுமா கடவுளை நம்புகிறீர்? அவரை தூஷித்துவிட்டு செத்துத் தொலையும் "  என்பதுதான். 

அதற்கு யோபு கூறும் பதில், "நீ பைத்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ" ( யோபு 2 : 10 ). 

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளது, "கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே". அதாவது, கர்த்தர் மிகுந்த  உருக்கமும் இரக்கமுமுள்ளவராய் இருப்பதால் யோபுவுக்கு வந்ததுபோன்ற ஆசீர்வாத முடிவு பொறுமையாக இருக்கும்போது நமக்கும்  வரும் என்று பொருள். 

ஆம், "கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்." ( யோபு 42 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பொறுமை இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தின் வழி. 

அன்பானவர்களே, நாம் எல்லோரும் யோபுவைபோல வாழ்வது சிரமமான காரியம்தான். மனித பலத்தால் இது முடியாதுதான். ஆனால், இத்தகைய விசுவாசம் நமக்கு வேண்டுமென்று நாம் விரும்பி ஜெபிக்கலாமல்லவா? அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல நம்பிக்கையிலே சந்தோஷமும்; உபத்திரவத்திலே பொறுமையும்; ஜெபத்திலே உறுதியும் நமக்கு வேண்டுமென்று வேண்டுவோம். ஆவியானவர் அதனை நமக்குத் தந்தருள்வார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, June 12, 2023

நீ திரும்பினால் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்

ஆதவன் 🔥 867🌻 ஜூன் 13, 2023  செவ்வாய்க்கிழமை


"நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று  விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்."(எரேமியா 15:19)

ஒரு சிலரது வாழ்க்கை எந்தவிதச் சிக்கல்களுமின்றி நன்றாகச் சென்றுகொண்டிருக்கும். ஆனால் திடீரென்று வாழ்க்கையில் பெரிய சறுக்குதல் ஏற்பட்டு அவர்கள் நிலைகுலைந்துபோவதுண்டு. இந்தச் சறுக்குதலுக்குக் காரணம் என்னவென்று அவர்கள் குழம்பிச் சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுண்டு. வாஸ்து வல்லுனர்களையும் ஜோசியர்களையும்  நாடி பரிகாரங்கள் செய்வதும், மற்றவர்களால்தான் தங்களுக்கு இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என எண்ணி மேலும் மேலும் தங்களுக்குத் துன்பத்தை வருவித்துக்கொள்வதுமுண்டு. "பொறாமைக் கண்கள்" "கண்திருஷ்டி",  "என் வளர்ச்சியைப்பார்த்து யாரோ எனக்குச் செய்வினை வைத்துவிட்டார்கள்'  இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்வின் சறுக்குதலுக்குக் காரணம் கண்டுபிடிக்கிறார்கள். 

அன்பானவர்களே, சிலவேளைகளில் தேவன் நாம் அவரிடம் திரும்பி வரவேண்டும் என்பதற்காகச் சில துன்பங்களையும் சறுக்குதல்களையும் நமது வாழ்வில் ஏற்படுத்துகின்றார். நமது துன்பங்களுக்குப் பிறரைக் குற்றம் சாட்டுவதைவிட்டுவிட்டு நாம் மனம்திரும்பி கர்த்தரிடம் வரவேண்டுமென்று இன்றைய வசனம் மூலம் கர்த்தர் பேசுகின்றார். 

நமது தவறான வழிகளைவிட்டு மனம்திரும்பி கர்த்தரிடம் வந்தோமென்றால் நம்மைத் திரும்பவும் சீர்படுத்துவேன் என்று இன்றைய வசனத்தில் கர்த்தர் நமக்கு நல்ல செய்தியைத் தருகின்றார்.  "நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். நீ எந்த இடத்திலிருந்து வீழ்ச்சியைச் சந்தித்தாயோ அதே இடத்துக்கு வரும்படி திரும்பச் சீர்படுத்துவேன் என்கிறார் கர்த்தர்.

மட்டுமல்ல, "நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, தீழ்ப்பான (அருவருப்பான) காரியங்களிலிருந்து விலகி விலையேறப்பெற்ற கர்த்தரது வார்த்தைகளைப் பிரித்தெடுத்து  அதன்படி வாழ்வாயானால் நீ கர்த்தரது வாய்போல இருப்பாய்; உன்னை வெறுப்பவர்களிடம் அல்லது உனக்குக் கெடுதல் செய்தவர்களிடம் நீ செல்லாமல் அவர்கள் உன்னைத்தேடி வருவார்கள் என்கிறார் கர்த்தர்.  

மேலும் இன்றைய வசனத்துக்கு அடுத்த வசனமாக, "உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா 15:20) என்று கூறப்பட்டுள்ளது.

நமது தோல்விகள், சறுக்குதல்கள்,பிரச்சனைகள், துன்பங்கள் எல்லாவற்றுக்கும் பிறரைக் காரணமாக எண்ணாமல் நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். அப்படி "நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்" என வாக்களிக்கும் கர்த்தர், உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்றும் உறுதிகூறுகின்றார்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, June 11, 2023

நம்மேல் கர்த்தர் உதிப்பார்

ஆதவன் 🔥 866🌻 ஜூன் 12, 2023  திங்கள்கிழமை

"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )

கர்த்தரால் வேறுபிரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையினை இன்றைய வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. கர்த்தரால் வரும் ஆசீர்வாதம் இதுதான். இருளான வாழ்க்கை ஒளியாக மாறுகின்றது; அவரை ஏற்றுக்கொள்ளும்போது எந்த மனிதனையும் அவர் இருளிலிருந்து  ஒளிக்குள் கொண்டுவருவார். இதனையே அப்போஸ்தலரான யோவான், "உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிபிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான் 1:9) என்று கூறுகின்றார். 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கானானை நோக்கிப் பயணித்த தனது மக்களை தேவன் ஒளியால் வழிநடத்தியது,   இன்றைய புதிய ஏற்பாட்டுக்காலத்தில் பரம கானானை நோக்கி நம்மை வழிநடத்தும் ஆவிக்குரிய ஒளியாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாய் இருக்கின்றன. முதன்முதலில் எகிப்து நாட்டில் தேவன் தனது ஒளியால் மக்களை வேறுபிரித்துக்காட்டும் அதிசயத்தைச் செய்தார். பார்வோன் மனது கடினப்பட்டு இஸ்ரவேலரை விடுவிக்க மறுத்தபோது மோசே மூலம் அதிசயம் செய்து தனது மக்களை வேறுபிரித்துக் காட்டினார்.  

"மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது." ( யாத்திராகமம் 10 : 23 ) என்று வாசிக்கின்றோம்.

மேலும், இஸ்ரவேல் மக்களை விடுவித்து அனுப்பியபின்னர் பார்வோன் மனம் கடினப்பட்டு அவர்களை அழித்து ஒழிக்க மீண்டும் தனது படைகளோடு பின்தொடர்ந்தான். அப்போது இஸ்ரவேலர் முன்னால்  சென்ற கர்த்தரது தூதனானவர் விலகி அவர்களுக்குப் பின்னால் பாதுகாப்பாக வந்தார். மேகஸ்தம்பமும் விலகி அவர்களுக்குப் பின் வந்தது.  "எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தன; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று." ( யாத்திராகமம் 14 : 20 )

அன்பானவர்களே, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படியே இருளான மக்கள் மத்தியில் ஒளியாக வந்தார். "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" ( மத்தேயு 4 : 15 ) என்று வாசிக்கின்றோம். உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிபிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளியான அவரிடம் நாம் சேரும்போது பாவ இருளைவிட்டு நாம் மெய்யான ஒளியினிடம் சேர்ந்து அவரைப்போல ஒளிருவோம். 

அன்று இஸ்ரவேல் மக்களை எப்படி எகிப்தியரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அவர்களை கானானுக்கு நேராக வழி நடத்தினாரோ அதுபோல அவரை ஏற்றுக்கொள்ளும்போது  பிற மக்களிடமிருந்து நம்மையும்   வேறுபடுத்தி நடத்துவார். 

எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று என்று கூறப்பட்டுள்ளதுபோல, பிற மக்களிடமிருந்து அவர் நம்மை வேறுபிரிக்கும்போது  நமக்கு அவரே  வெளிச்சமாக இருப்பார். அந்த வெளிச்சத்தை எகிப்தியர் கண்டு ஆச்சரியப்பட்டதுபோல நம்மை அற்பமாகவும் அலட்சியமுமாக நடத்தியவர்கள் கண்முன் நமது ஒளி ஆச்சரியப்படத்தக்கதாக விளங்கும். 

கானானை நோக்கிப் பயணித்த இஸ்ரவேலர்மேல் உதித்த கர்த்தரின் ஒளி, பரம கானானை  நோக்கிப் பயணிக்கும் பயணிகளாக நாம் விளங்குவோமென்றால்  நம்மேலும் உதிக்கும்.  ஆம்,  நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மேல்  காணப்படும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 


Saturday, June 10, 2023

தேவன் பொல்லாங்கினால் ஒருவனையும் சோதிக்கிறவரல்ல.

ஆதவன் 🔥 865🌻 ஜூன் 11, 2023  ஞாயிற்றுக்கிழமை

"ஆனால் கர்த்தரால் சுமரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்." ( எரேமியா 23 : 36 )


ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளில் ஊழியர்களும் சரி விசுவாசிகளும் சரி துன்பங்கள் பிரச்னைகள் ஏற்படும்போது, "கர்த்தர் தண்டித்துவிட்டார்", "கர்த்தருக்கு விரோதமாய் என்ன செய்தீர்கள் என்று எண்ணிப்பாருங்கள், மன்னிப்புக் கேளுங்கள்" என்று கூறுவதுண்டு. இது தேவனை சாதாரண மனிதனைப்போல எண்ணி பேசுவதாகும். ஒரு பள்ளி ஆசிரியரைப்போல கையில் பிரம்புடன் தேவன் காத்து நிற்பதுபோலவும் தவறு செய்தவுடன் நம்மை அடித்துவிடுவார் என்று கூறுவதுபோலவும்  உள்ளது. 

"கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 34 ) என்கிறார் எரேமியா. 

ஆனால், நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமது சிறு தவறுகள், குற்றங்களுக்குத் தேவன் சிறிய தண்டனை தருவார். அது தாய் தகப்பன் பிள்ளைகளைத் திருத்துவதற்குத் தரும் சிறு தண்டனைகள் போன்றவை.  இவை பாரமல்ல, மாறாக தேவ அன்பின் தண்டனை. "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.  நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 6, 7 ) என்கின்றார் பவுல் அடிகள். 

மனிதர்களது இயல்பான குணம் தனது தவறை உணராமல் இருப்பது. நெருப்பு சுடும் என்பது தெரிந்தும் நெருப்பில் கையை வைத்துவிட்டு சுட்டவுடன் கடவுள் தண்டித்துவிட்டார் என்று கூறமுடியுமா? நமது தவறான செயல்களே பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமாகிவிடுகின்றது.  

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்." ( யாக்கோபு 1 : 13, 14 ) என்று கூறுகின்றார். 

இதனை உணராமல் மக்கள் பேசுவதால்தான், "கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".

அன்பானவர்களே, நமது வழிகளை ஆவியானவருக்கு ஒப்புவித்து நாம் வாழவேண்டும். அவர் நம்மை நடத்துவதற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். ஒரு பிரச்சனை, துன்பம் ஏற்படும்போது தேவனைக் குற்றம் சொல்வதைவிட்டு நாம் செல்லும் வழி தவறானால் திருத்திக்கொண்டு வாழ்வதே அறிவுடைமை. 

ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதுதான் நமக்குத் தேவன் தரும் அன்புத் தண்டனைக்கும் நமது தவறான செயல்பாடுகளால் உண்டான பாரமான பிரச்சனைகளுக்கும் வித்தியாசம் தெரியும். அன்புத் தண்டனைகளை ஏற்றுக்கொண்டு நம்மைத் திருத்திக்கொள்வோம். பாரமான பிரச்சனைகளுக்கு முடிவு வேண்டுமானால் நமது மொத்த வாழ்வின் வழியினையும் மாற்றி தேவனுக்கேற்ற  வழிக்குத் திரும்பிடவேண்டும். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com