Thursday, August 25, 2022

மக்களால் பாராட்டப்பட்டாலும் நமது ஆத்துமாவை இழந்தோமானால் பலனில்லை.

 ஆதவன் 🖋️ 577 ⛪ ஆகஸ்ட் 27, 2022 சனிக்கிழமை















"கர்த்தராகிய இயேசுவின் உயிர்தெழுதலைகுறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்கள் எல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது". (அப்போஸ்தலர் 4:33)

நாம் கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்கவேண்டுமானால், கர்த்தரது பூரண கிருபையால் நாம் நிரம்பியிருக்கவேண்டியது அவசியம். கிருபையோடு நாம் கிறிஸ்துவை அறிவிக்கும்போதுதான் அது மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

பூரண கிருபை என்பது அற்புதங்கள் செய்யக்கூடிய சக்தி என்று பலரும் எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அது முற்றிலும் சரியல்ல. பூரணகிருபை என்பது நாம் பரிசுத்தமாக வாழ உதவும் தேவனது அன்பு உதவி. மட்டுமல்ல, பூரண கிருபை மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டும். அது, நமது பேச்சு, செயல்களில் தேவன் நம்மை வித்தியாசப்படுத்தியிருப்பதை  மற்றவர்கள் உணரச்செய்யும்.   

இப்படிப் பூரண கிருபையோடு அந்தியோகியாவில் பிரசாங்கம் செய்த சீடர்களை அங்கிருந்த மக்கள்  வித்தியாசமாகக் கண்டதால் அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர். அதாவது கிறிஸ்தவர்கள்  பெயர் கிறிஸ்துவின் உபதேசத்தின்படி வாழ்ந்த மக்களுக்கு மற்றவர்கள் அளித்தப் பெயர். "அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று". ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 11 : 26 )

இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால் தேவனது பூரண கிருபை அவர்கள்மேல் இருந்ததால்தான். 

இன்று நாம் வொவொருவரும் வேதாகமத்தைத் தூக்கிக்கொண்டு கிறிஸ்துவை அலைந்துதான் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. நாம் இருக்கும் இடத்தில, வாழும் ஊரில், சமுதாயத்தில் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவர்களாக வாழ்ந்தாலே போதும். 

அனால் பல கிறிஸ்தவ சபைகளில் சில ஊழியர்கள் சமூக பணியாற்றுவதே கிறிஸ்துவின் பணி எனத் தவறான போதனைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். முதலில் நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். சமூக பணியை ஊழல் அரசியல்வாதியும் செய்யலாம், ஊழல் தொண்டு நிறுவனங்களும் செய்யலாம். 

சமுதாயப் பணி  செய்து ஆயிரக்கணக்கான மக்களால் பாராட்டப்பட்டாலும் நமது சொந்த ஆத்துமாவை இழந்தோமானால் அதனால் பலனில்லை.  ஆம், ஒருவன் உலகமனைத்தையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தனது சொந்த ஆத்துமாவை இழந்தால் அதனால் பயனென்ன? என்று இயேசு கிறிஸ்து கேட்கவில்லையா? 

"மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 )

ஆம் அன்பானவர்களே, அப்போஸ்தலர்கள்போல மிகுந்த பலமான சாட்சிகளாக நாம் வாழ தேவனதுகிருபையினை வேண்டுவோம். தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடும்போம். அப்போது கர்த்தர் நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Wednesday, August 24, 2022

நமது தாழ்ந்த நிலையே நாம் உயர்த்தப்படுவதற்கான முதல் நிலை.

 ஆதவன் 🖋️ 576 ⛪ ஆகஸ்ட் 26, 2022 வெள்ளிக்கிழமை

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்." ( சங்கீதம் 113 : 7 )

பொதுவாக இந்த உலகத்தில் அரசாங்கமோ அல்லது பெரிய பெரிய தொழில் நிறுவனங்களோ தங்களுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது மிகத் திறமையானவர்களையே தேர்வுசெய்வார்கள். ஆனால் நமது தேவன் திறமையில்லாதவர்களையும், எதுவும் இல்லாதவர்களையும், அற்பமும் குப்பையுமானவர்களையும் தேர்ந்தெடுத்து தனக்கு ஏற்றவர்களாக மாற்றி பயன்படுத்துகின்றனர்.  

"உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். இப்படி அற்பமானவராக இருந்து உயர்த்தப்பட்டவர்தான் தாவீது. "தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்." ( சங்கீதம் 78 : 70 )

"கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்." ( சங்கீதம் 78 : 71 )

அன்பானவர்களே, இன்று இதனை வாசிக்கும் பலர் தங்களை இந்த உலகம் அற்பமாக எண்ணுவதாக எண்ணிக் கலங்கலாம். ஆனால், இன்றைய தியானத்துக்குரிய வசனம்  நாம் அப்படி எண்ணிக் கலங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றது. 

மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுரு, யோவான், யாக்கோபு இவர்களைத்தான் இயேசு கிறிஸ்து தெரிந்துகொண்டு  வல்லமையாகப் பயன்படுத்தினாரேத்  தவிர, அந்தக்காலத்தில் இருந்த செல்வந்தர்களையோ, படிப்பறிந்த அறிஞர்களையோ அல்ல. 

இப்படி தேவன் பயன்படுத்துவதற்குக் காரணங்கள்  உண்டு. ஒன்று, இல்லாமையில், நொறுக்குதலில் வாழ்ந்து பழகியவர்களுக்கு இயல்பிலேயே தாழ்மைக்குணம் இருக்கும். தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபை அளிக்கின்றார்.  மேலும்,  "பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1 : 52 ) என்று வாசிக்கின்றோம். தாழ்மைக்குணமே  தேவன் விரும்புவது.

இரண்டாவது காரணம், திறமையானவர்கள் திறமையாய்ச் செயல்படுவது இயற்கை. ஆனால் ஒன்றுக்கும் உதவாத திறமையற்றவர்கள் சிறப்பாகச்  செயல்படுவதில்தான் தேவனது வல்லமை வெளிப்படுகின்றது. 

அன்பானவர்களே, நாம் நம்மில் பெருமை வந்துவிடாமல் காத்துக்கொள்வோம்.  பெருமை என்பது பிசாசின் குணம். அந்தக் குணமுள்ளவர்களை தேவன் பயன்படுத்தவோ உயர்த்தவோ முடியாது. எனவே, தாழ்மை குணத்தை மட்டும் நம்மைவிட்டு விலகிடாமல் காத்துகொண்டு வாழ்வோம். கர்த்தர் நம்மை நிச்சயமாக பயன்படுத்துவார்; ஆட்டுத் தொழுவதிலிருந்த தாவீதை அரியணையிலேற்றி அழகுபார்த்ததுபோல நம்மையும் உயர்த்தி அழகுபடுத்துவார்.  தற்போதைய நமது தாழ்ந்த நிலையே நாம் உயர்த்தப்படுவதற்கான முதல் நிலை. 

ஆம், நமது தேவன் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் தேவன் கூறிய வார்த்தைகள் பொய்க்காது. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Tuesday, August 23, 2022

அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால்தான் அன்பு உண்டாயிருக்கிறது.

 ஆதவன் 🖋️ 575 ⛪ ஆகஸ்ட் 25, 2022 வியாழக்கிழமை

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." ( 1 யோவான்  4 : 10 )

உலகத்திலுள்ள எல்லா மதத்தினரும் தங்கள் தங்கள் தெய்வத்தினை அன்பு செய்கின்றார்கள். அப்படி அன்பு செய்வதால்தான் அந்தத் தெய்வங்களுக்கு வழிபாடுகளும் பல்வேறு சடங்குகளும் செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் நாமும் இப்படியே இருப்போமானால் நமக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

ஒருவரை நாம் முழுமையாக அன்பு செய்யவேண்டுமானால் முதலில் அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். அவர் நம்மை அன்புசெய்வது நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இந்த உலகத்திலேகூட காதல் உணர்வைப் பாருங்கள், காதலிக்கும் இருவரும் (உண்மையான காதலர்கள்) ஒருவரைப்பற்றி மற்றவர் நன்கு அறிந்திருப்பார்கள். தனது காதலன் அல்லது காதலி தன்னை அன்புசெய்வதை அறியாவிட்டால் அதில் அர்த்தமே இருக்காது. அந்தக்  காதல் முழுமையானதாகவும்  இருக்காது. 

ஒருவர் தான் வணங்கும் தெய்வத்தை இந்த பரஸ்பர அன்புணர்வில்லாமல் வணங்கி வழிபடுவது அர்த்தமில்லாதது. எந்த அன்புணர்வும் இல்லாத ஒரு ஜடப்பொருளை ஒருவர் உண்மையாய் அன்புசெய்வது எப்படி சாத்தியமாகும்?  நாமும் இதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உண்மையான அன்பு செலுத்தவேண்டுமானால் முதலில் அவர் நம்மை அன்பு செய்ததும், அவர் நமது பாவங்களை மன்னித்து மீட்டுக்கொண்டதும், அனுபவபூர்வமாக நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

கணிதத்தில் கூறப்படும் வெறும் வாய்ப்பாடுபோல, "கிறிஸ்து எனக்காக இரத்தம் சிந்தியுள்ளார், கிறிஸ்து எனது பாவங்களை மன்னித்துள்ளார்"  என்று வெறுமனே கூறுவதல்ல. அனுபவப்பூர்வமாக அந்தப் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்றுகொள்ளும்போது மட்டுமே அவரது அன்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும்.  

கிறிஸ்துவின்மேல் உண்மையான அன்பு ஏற்படும்போது நாம் பிற மதத்தினர் தங்கள் தெய்வத்திற்குச் செய்வதுபோல இயேசு கிறிஸ்துவின் படத்துக்கு மாலை, பூ, வாசனைத் திரவியங்கள் என  மரியாதை செய்யமாட்டோம். அவரது அன்பு நமக்குள்ளே  இருந்து நம்மை மனதளவில் அவர்மேல் அன்பு பெருக்கச்செய்யும். இந்த அனுபவம் இல்லையானால் நாம் இன்னும் இரட்சிப்பு அனுபவம் பெறவில்லை என்றே பொருள். காதலிக்கும் எவரும் தங்கள் காதலரின் படத்துக்கு மாலை, பூ அகர்பத்தி ஏற்றி அன்பை வெளிப்படுத்துவதில்லையே ?. 

ஆம், அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிற மத்தினருக்கும் கிறிஸ்தவர்களுக்குமுள்ள வித்தியாசம் இதுதான். வேறு எந்த உலக தெய்வங்களும் தங்களை வழிபடும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவில்லை.

அன்பானவர்களே, நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு கிறிஸ்துவின் இந்த உன்னத மீட்பு அனுபவத்தை அவரிடம் வேண்டுவோம். 

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால்தான்  அன்பு உண்டாயிருக்கிறது. அவரது அன்புக்கு நாம் பிரதிபலன் காட்டவேண்டாமா?  ஆம், "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான்  5 : 3 ) 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                  

Monday, August 22, 2022

கிறிஸ்துவே நமது ஆவிக்குரிய வாழ்வின் அஸ்திபாரம்.

 ஆதவன் 🖋️ 574 ⛪ ஆகஸ்ட் 24, 2022 புதன்கிழமை

"என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்." ( லுூக்கா 6 : 49 )

எந்த ஒரு கட்டிடத்துக்கும் அஸ்திவாரம்தான் பிரதானம். கட்டிடத்தின் உயரம் , அதாவது எத்தனை மாடி கட்டப்போகின்றோம் என்பதன் அடிப்படையிலேயே அஸ்திபாரம் போடுகின்றோம். பலமாடி கட்டிடங்களுக்கு மிக ஆழமான அஸ்திபாரம் இடப்படுகின்றது. வேர் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல அஸ்திபாரங்கள்   கட்டிடத்தைத் தாங்கிப்பிடிக்கின்றன. 

இதுபோலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கின்றது. நாம் எவ்வளவு ஆழமாக கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு பலப்படுகின்றோமோ அவ்வளவு சிறப்பாக நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கும். ஆம், கிறிஸ்துவே நமது ஆவிக்குரிய வாழ்வின் அஸ்திபாரம்.

"என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. அதாவது அவரது வார்த்தைகளைக் கேட்கவேண்டும்; அவற்றின்படி செய்யவேண்டும். அப்படி இல்லையானால் நாம் மணல்மேல் வீடு கட்டுபவர்களாக இருப்போம்.

அஸ்திபாரமில்லாமல் மணல்மேல் வீடு கட்டுவது அறிவுகெட்டத் தனமல்லவா? கிறிஸ்துவை உண்மையாய் அறிவிக்கும் ஊழியர்கள்தான் சரியான அஸ்திபாரம் போடுபவர்கள். இப்படிப்   "போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது." ( 1 கொரிந்தியர் 3 : 11 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல் அடிகள். 

மேலும் அவர் கூறுகின்றார், "எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 3 : 10 )

அதாவது கிறிஸ்துவை அஸ்திபாரமாகக்கொண்டு ஒவ்வொருவரும் கட்டலாம். அவரவருக்குத்  தேவன் அளித்தக் கிருபையின்படி நமது ஆவிக்குரிய வாழ்வை நாம் கட்டவேண்டும். ஆனால் எக்காரணம்கொண்டும் நமது அஸ்திபாரத்தைவிட்டு விலகிடாமல் கட்டவேண்டும். சிலர் தங்கள் ஆவிக்குரிய வாழ்வின் ஒருபகுதியைச் சிறப்பாகக் கட்டுவார்கள்; மறுபகுதி அஸ்திபாரமில்லாத பகுதியாக இருக்கும்.

ஒரு வீட்டின் ஒருசில அறைகள்மட்டும் பலமான அஸ்திபாரத்துடனும் மற்றப்பகுதிகள் அஸ்திபாரமில்லாமலும் இருந்தால் ஆபத்தல்லவா?

எனவே அன்பானவர்களே,  கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை விட்டு விலகிடாமல் உறுதியாக அவர்மேல் நமது ஆவிக்குரிய வாழ்வைக் காட்டுவோம். அப்போதுதான் தேவன் அதனைப் பரிசோதித்துப் பார்க்கும்போது நமக்கு ஏற்ற கைமாறு கிடைக்கும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Sunday, August 21, 2022

மக்களுக்கு கிறிஸ்துவின் புளிப்பினை அளித்துச் சுவையூட்டுவோம்

 ஆதவன் 🖋️ 573 ⛪ ஆகஸ்ட் 23, 2022 செவ்வாய்க்கிழமை

"வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்." ( மத்தேயு 13 : 33 )

நமக்கு மோர் புளிக்கவைப்பதைப்பற்றி நன்கு தெரியும்.  பாலைக் காய்ச்சி அப்படியே ஆறவைத்தால் அது கெட்டுப்போகும். எதற்கும் பயன்படாமல் நாற்றமெடுத்துவிடும். மாறாக அதனோடு சிறிது உறைமோரை (புளித்த மோர்) விட்டுவைத்தால் அது மறுநாளில் நல்ல தயிராகக்கிடைக்கும்.  இதுபோலவே ஆப்பம் சுடுவதற்கும் நாம் முந்தின நாளிலேயே அது புளிப்பதற்கு சிறிது சோறு, பழம் இவற்றைச் சேர்க்கின்றோம். இதுபோல ஏற்கெனவே புளித்த மாவினை புதுமாவுடன் சேர்ந்து புளிக்கவைக்கலாம்.   

மாவானது புளிக்கவைக்கும்போதுதான் ஏற்ற பலனைத் தரும். இட்லி, தோசை மாவை நாம் முந்தின நாளே ஆட்டி புளிக்கவைத்து பயன்படுத்துகின்றோம். இங்கு இயேசு கிறிஸ்து பரலோக ராஜ்யத்தை புளித்த மாவுக்கு ஒப்பிடுகின்றார். 

நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் நம்மிடம் புளிப்புத் தன்மை இருக்கவேண்டும். அதாவது, தேவ சுபாவங்கள் இருக்கவேண்டும். அப்படி  நம்மிடம் இருக்கும் புளிப்பு நம்மைமட்டும் சுவையூட்டுவதாக இல்லாமல், எப்படி புளித்த மாவு தன்னோடு இருக்கும் மற்ற மாவினையும்  புளிப்புள்ளதாக மாற்றுகின்றதோ அதுபோல நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் புளிப்புள்ளவர்களாக மாற்றும். இதுவே கிறிஸ்துவின் ராஜ்யத்தை அறிவித்தல். 

வேதாகமத்தில் புளிப்பு பாவத்துக்கு உவமையாகவும் கூறப்பட்டுள்ளது. "ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." ( 1 கொரிந்தியர் 5 : 8 ) என்கின்றார் பவுல் அடிகள்.

அப்போஸ்தலரான பவுல் புளிப்பைத் தவறான உபதேசத்துக்கும் ஒப்பிட்டுள்ளார். தவறான கிறிஸ்தவ உபதேசம் மொத்த சபையினையும் பாழாக்கிவிடும். "புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்." ( கலாத்தியர் 5 : 9 ) என்கின்றார் அவர். 

நல்ல புளிப்பு ஆப்பமாவு, உறைமோர் போல நன்மை தரும். கெட்ட புளிப்பு பனங் கள் போல கேடுண்டாக்கும். 

அன்பானவர்களே, கிறிஸ்தவர்கள் நாம்  இந்த நாட்டில் குறைவான எண்ணிக்கையில்  இருந்தாலும்,  சரியான புளிப்புள்ளவர்களாக இருப்போமானால், கிறிஸ்து கூறுவதுபோல நாம் மற்றவர்களையும் நம்மைப்போல புளிப்புள்ளவர்களாக மாற்றி பரலோக ராஜ்யத்துக்கு உரிமையானவர்களாக மாற்று முடியும். ஆனால், பாவம், தவறான போதனை எனும் புளிப்பு இருக்குமானால் நமது ஆன்மாவையே இழந்துவிடுவோம்.

இந்திய நாட்டிற்கு வந்த மிஷனெரிகள் நல்ல புளிப்பைக் கொண்டு வந்ததால் நமது நாடு அதனைப்பெற்று இன்றும் அதன் பலனை அனுபவித்துவருகின்றது. நாமெல்லோரும் கிறிஸ்தவர்களாக இன்று இருப்பது அவர்கள் கொண்டுவந்த நல்ல புளிப்பினால்தான். நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு கிறிஸ்துவின் புளிப்பினை அளித்துச் சுவையூட்டுவோம் 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Friday, August 19, 2022

தேவனைத் தேடாத வாழ்க்கை அமைதியும் ஆறுதலும் தருவதாக இருக்காது.

 ஆதவன் 🖋️ 572 ⛪ ஆகஸ்ட் 22, 2022 திங்கள்கிழமை


"அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்." ( எரேமியா 13 : 16 )

தேவனில்லாத வாழ்க்கை,  தேவனைத் தேடாத வாழ்க்கை எப்போதும் அமைதியும் ஆறுதலும் தருவதாக இருக்காது. காரணம், அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும்போதே வாழ்வில் அந்தகார இருள் ஏற்படலாம். நல்ல ஒரு காரியம் நடக்கும் என எண்ணி எதிர்பாத்திருக்கும்போது அந்தகார இருள் ஏற்பட்டு வாழ்க்கையின் மகிழ்ச்சி போய்விடலாம். ஆனால், கர்த்தருக்குக் காத்திருப்பவர்களுக்குத் திட நம்பிக்கை உண்டு. 

இன்றைய வசனம் தேவனைத்  தேடி அவருக்கேற்ற ஒரு வாழ்க்கை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.  

நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன்,  இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன் நாம் நம்  தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம். 

ஒரு பேரிடர் வருவதற்குமுன் மக்களைக் காப்பாற்ற இந்த உலகில் அரசாங்கம் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்கின்றது. மட்டுமல்ல, தனது நாட்டு மக்களுக்கு அவர்கள்  என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. கடந்த கொரோனா காலத்தில் அரசாங்கம் அறிவித்த அறிவிப்புகளை நாம் அறிவோம்; அரசு செய்த முன்னேற்பாடுகளை நாம் அறிவோம். மருத்துவ மனைகளில் அதிக அளவில் படுக்கைகளும், மருந்துகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. 

இதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் சில தயாரிப்புகளைச் செய்யவேண்டியது அவசியம். பெரிய இடர்பாடாக நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன்,  இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன் நாம் நம்  தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம். நமது வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஒரு மகிமையான வாழ்வு வாழவேண்டியது அவசியம்.

கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது வாழ்வில் துன்பமே வராது என்று அர்த்தமல்ல, ஆனால் துன்பத்தோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் தேவன் உண்டாக்குவார் என்று வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 10:13)

ஆனால், துன்மார்க்கமாய் வாழ்ந்து, தேவனை மறந்த்து அவருக்கு மகிமைச் செலுத்தாமல் வாழும்போது  எரேமியா கூறுவதுபோல பல்வேறு இடர்கள் நம்மை நெருக்கித் துன்புறுத்தும்.  

அன்பானவர்களே, தேவ வசனத்துக்கு நடுங்குவோம். கேடான சம்பவங்கள் வாழ்வை வருத்துமுன் கர்த்தருகேற்ற மகிமையை அவருக்குச் செலுத்தி பரிசுத்தமான வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

தேவனுக்கு ஏற்பில்லாத காரியங்களைச் செய்யும்போது நாம் ஆலயத்தைக் கள்ளர்குகை ஆக்குகின்றோம்.

 ஆதவன் 🖋️ 571 ⛪ ஆகஸ்ட் 21, 2022 ஞாயிற்றுக்கிழமை

"என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்". ( மத்தேயு 21 : 13 )

ஏசாயா மற்றும் எரேமியா தீர்க்கதரிசிகளின்கூற்றுக்களை இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் மேற்கோள் காட்டிப்  பேசுகின்றார். என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்பது ஏசாயா கூறியது.  ( ஏசாயா 56 : 7 ) 

ஆனால், இந்த ஆலயத்தில் தேவனுக்கேற்ற பரிசுத்த வாழ்க்கை வாழாதவர்களும் வெறும் பகட்டுக்காகவும், மற்றவர்கள்முன் தங்களை நீதிமான்கள் என்று காட்டுவதற்காகவும் வந்து தங்களது பொல்லாப்புகளுக்கு மனம் வருந்தாமல்  வழிபாடுசெய்கின்றனர். இதனையே எரேமியா கூறினார்:- 

"நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று...........................என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? " ( எரேமியா 7 : 9 - 11 )

திருடர்கள் தாங்கள் கொள்ளையடித்தப் பொருட்களை குகைகளில் பதுக்கி வைப்பதுபோல தங்களது பொல்லாப்புக்களை மக்களது பார்வையில் படாமல் மறைத்துவைக்க கோவிலை ஒரு பதுங்கு பாசறையாகக் கொண்டுள்ளனர் பலர்.

நீதியற்ற செயல்கள், ஏமாற்று, பித்தலாட்டம், போன்ற செயல்களைச் செய்துவிட்டு ஆலயங்களில் முன்னுரிமைபெறுவதும் பெறுவதற்குத் துடிப்பதும் கோவிலைக் கள்ளர்குகை ஆக்குவதுதான். 

இந்த வசனம் நமது உடலான ஆலயத்துக்கும் பொருந்தும். புதிய ஏற்பாட்டில் நாமே ஆலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமது உடலே பரிசுத்த ஆவியின் ஆலயமாய் இருக்கின்றது. (1 கொரிந்தியர் 3:16 மற்றும் 6:19) இந்த உடலான ஆலயத்தை பரிசுத்தமாய்க் காத்திடவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

நமது உடலால் நாம் தேவனுக்கு ஏற்பில்லாத அவலட்சணமான காரியங்களைச்  செய்யும்போது நாம் ஆலயத்தைக் கள்ளர்குகை ஆக்குகின்றோம். விபச்சாரம், வேசித்தனம், தேவனுக்கு ஏற்பில்லாத சிற்றின்ப காரியங்களில் மூழ்கிவிடும்போது நாம் நமது உடலான ஆலயத்தைக் கள்ளர் குகை ஆக்குகின்றோம்.  

பரிசுத்த ஆவியானவர் வந்து தங்கவேண்டிய ஆலயத்தில் பிசாசின் செயல்பாடுகள் நிறையும்போது, பொய்யனும் பொய்க்குப்  பிதாவுமாகிய பிசாசின் பொக்கிஷங்களால் நமது உடலான ஆலயத்தை நிரப்புகின்றோம்.

இன்றைய வசனம் இதனைத்தான் கூறுகின்றது. எரேமியா கூறுவதுபோல, திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, நான் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று கூறிட முடியாது.

அன்பானவர்களே, ஆலயத்துக்குப் போகும்போது நமது நிலைமையை எண்ணிப்பார்ப்போம். நமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். முதலில் நமது உடலான ஆலயத்தை தேவனுக்கு ஏற்புடையதாக மாற்றுவோம். வெளிவேடமான ஆலய ஆராதனை தேவனுக்கு ஏற்புடையதல்ல. நமது உடலும் நாம் செல்லும் ஆலயமும் கள்ளர் குகை அல்ல எனும் உண்மை எப்போதும் நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வாழ முடியும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

தேவனைத்தவிர வேறு எதனுக்கும் அவருக்கு இணையான இடத்தைக் கொடாதே

 ஆதவன் 🖋️ 570 ⛪ ஆகஸ்ட் 20, 2022 சனிக்கிழமை

"....................உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்." ( லுூக்கா 4 : 8 )

கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைச்செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம், அவரே நம்மை உண்டாக்கியவர். அவரே நமக்காகத் தனது இரத்தத்தைச் சிந்தி இரட்சிப்பை ஏற்படுத்தியவர். எனவே, "அவர் ஒருவருக்கே" என்பது அவரைத்தவிர வேறு எதனுக்கும் உன் உள்ளத்தில் அவருக்கு இணையான இடத்தைக் கொடாதே என்பதாகும்.

இன்றைய வசனத்தை இயேசு கிறிஸ்து சாத்தானை நோக்கிக் கூறினார். "நீர் என்னைப் பணிந்துகொண்டால் இந்த உலகத்தின் மேலுள்ள அதிகாரம், மாட்சிமை எல்லாவற்றையும் உமக்குத் தருவேன்" என்று பிசாசு இயேசு கிறிஸ்துவிடம் கூறியபோது அதற்கு இயேசு கிறிஸ்து பதிலாக இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார். 

சாத்தானை இயேசு இந்த உலகத்தின் அதிபதி என்றும் கூறியுள்ளார். (யோவான் 14:30) இன்று பெரும்பாலான மக்கள் உலக ஆசீர்வாதங்களைத் தேடி ஓடுகின்றனர். அவை கிடைக்கும்போது கர்த்தர் தந்ததாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் எப்போதுமே இது சரியல்ல. சாத்தானும் நம்மை செல்வத்தினால் நிரப்பமுடியும். 

நாம் கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யவேண்டும் என்று கூறுவது வெறுமனே கோவிலுக்குச் சென்று தேவனை ஆராதிப்தையல்ல. மாறாக,  நமது செயல்பாடுகள் கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்று பொருள். பணம், பதவி, பகட்டு இவைகளுக்காக தேவனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கர்த்தரை புறக்கணித்து சாத்தானை ஆராதிப்பதாகும். 

வெளிப்பார்வைக்கு நாம் கர்த்தரை ஆராதிப்பதுபோலத் தெரியலாம், ஆலயங்களுச்  சென்று ஆராதனைகளில் கலந்துகொள்ளலாம். ஆனாலும் நமது செயல்பாடுகளும் நமது இருதயமும் தேவனுக்கு நேராக இல்லையானால், நாம் சாத்தானை வழிபடுபவர்கள் தான்.   

இன்று அரசியலிலும் தொழில்களிலும் பல கிறிஸ்தவர்கள் முன்னிலையில் உள்ளனர். ஆனால் எல்லோரும் தேவனை மட்டுமே ஆராதிப்பவராங்களோ, அவருக்கு மட்டுமே மகிமைச் செலுத்துபவர்களோ அல்ல. 

ஆனால் செல்வமுள்ள பலர் கர்த்தரை உண்மையாய் ஆராதித்துள்ளனர். அவர்களது செல்வம் அவர்களது ஆராதனைப் பொருளாக  இல்லாமல் கர்த்தரே அவர்களது ஆராதனைக்குரியவராக  இருந்தார்.  ஆபிரகாம், செல்வந்தனான யோபு, அரசனான தாவீது, எசேக்கியா போன்றார்கள் தங்கள் செல்வத்தையும் பதவியையும் ஆராதிக்காமல் தேவனையே ஆராதித்தவர்கள். அதாவது, பதவி, செல்வம் இருந்தாலும் முதல் முன்னுரிமையை தேவனுக்கே கொடுத்து வாழ்ந்தனர். 

செல்வத்தைத் தேடி, புகழ் பெருமையைத் தேடி நாள் முழுவதும்  ஓடி  பெயருக்கு ஆலையம் சென்று ஆராதிப்பது அவர் ஒருவருக்கே ஆராதனை செலுத்துவதல்ல. மாறாக, செல்வம் புகழ் இருக்கிறதோ இல்லையோ, "அவர் என்னைக்



கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்" என்று யோபு கூறியதுபோல விசுவாசத்துடன் அவருக்கு உத்தமமான ஒரு வாழ்க்கை வாழ்வது.  

இத்தகைய ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது வாழ்வில் எல்லாவற்றிலும் முன்னுரிமையைக் கர்த்தருக்கு கொடுப்போம். இதுவே அவரை மகிமைப்படுத்துவது. நம் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்து வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Wednesday, August 17, 2022

கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் ஜீவனுள்ளவர்கள் ஆகின்றோம்.

 ஆதவன் 🖋️ 569 ⛪ ஆகஸ்ட் 19, 2022 வெள்ளிக்கிழமை

"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 )

இந்த உலகத்தில் உயிருள்ள பொருட்கள் உயிரில்லாத பொருட்கள் என பல்வேறு பொருட்கள் உள்ளன. உயிருள்ள பொருட்கள் உணவு உட்கொள்ளும், வளரும்,  தனது இனத்தைப் பெருக்கச்செய்யும், பலன்தரும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஆனால், உயிரில்லாதவை எதனையும் செய்யாது. கிடந்த இடத்தில கிடக்கும்.

ஒரு கல், வீட்டிலுள்ள மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள் ஒரு இடத்தில எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் மற்றவர்கள் அதனை மாற்றினாலொழிய அதே இடத்தில்தான் கிடக்கும்.

இன்றைய வசனத்தில் தேவன் குமாரன் இல்லாத வாழ்க்கை உயிரில்லாத வாழ்க்கை என்பதனைக்  கூறுகின்றார். அதாவது குமாரனான இயேசு கிறிஸ்து ஒருவனுக்குள் இல்லையானால் அவன் உயிரில்லாத பொருளுக்குச் சமம் என்கின்றார். 

கிறிஸ்து இல்லாத மனிதன் வெளிப்பார்வைக்கு வளர்ச்சியடைந்தவன் போலவே தெரிவான். பொருளாதாரத்திலும், பதவியிலும் கிறிஸ்து இல்லாத மனிதன் செழிப்படைந்தவன்போலத் தெரிவான். ஆனால், கிறிஸ்துவின் ஜீவன் உள்ளவன் வெளிப்பார்வைக்கு வளர்ச்சியில்லாதவன் போலத் தெரிந்தாலும்   உள்ளான தேவனுக்கேற்ற வளர்ச்சி பெற்றவனாக வாழ்வான். 

குமாரனில்லாத மனிதன் உயிரற்ற பொருள்போல, வளர்ச்சியற்றவனாக, தன்னைக்கொண்டு மற்றவர்களுக்கு பலனில்லாமல், கனிகொடுக்கும் ஒரு வாழ்க்கை இல்லாமல், பாவ உணர்வில்லாதவனாக இருப்பான்.  

இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கும்போது அவர் நமக்குள் வருகின்றார். நமது பாவங்களை மன்னித்து நம்மைத் தனக்கு ஏற்புடையவன் (ள் ) ஆக்குகின்றார். இப்படி தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் ஜீவனுள்ளவர்கள் ஆகின்றோம். 

உயிரில்லாத பொருட்கள் ஒரே இடத்தில கிடக்கும்போது அவை துரு ஏறி கெட்டுப்போகலாம், மரப் பொருட்கள் என்றால் உளுத்துப் போகலாம். ஆனால், நமக்குள் குமாரனான கிறிஸ்து வரும்போது நாம் பெலனுள்ளவர்கள் ஆகின்றோம். அந்த பலத்தால் இந்த உலகத்தை ஜெயித்தவர்களாக மாறுகின்றோம். "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" ( 1 யோவான்  5 : 5 ) என்று கேள்வி எழுப்புகின்றார் யோவான். 

அன்பானவர்களே, நாம் ஜீவனுள்ளவர்களாக உலகத்தில் வாழ்ந்து கனிகொடுப்பவர்களாக, மற்றவர்களுக்கு பயன்தருபவர்களாக வாழவே அழைக்கப்பட்டுளோம். இப்படி வாழும்போது நாம் உலக மக்களின் பார்வைக்கு அற்பமாகத் தெரிந்தாலும், தேவனது பார்வையில் வலுவானவர்களாக, இந்த உலகத்தை ஜெயிப்பவர்களாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

Tuesday, August 16, 2022

நாம் அறிவில்லாமலும், தேவனைப்பற்றிய உணர்வில்லாமலும் இருக்கலாமா?

 ஆதவன் 🖋️ 568 ⛪ ஆகஸ்ட் 18, 2022 வியாழக்கிழமை

"மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்." ( ஏசாயா 1 : 3 )

இன்றைய மனிதர்களது நிலைமையை உணர்ந்து தேவன் கூறிய வார்த்தைகளைப்போல இன்றைய தியான வசனம் இருக்கின்றது. அதாவது, ஏசாயா காலத்தில் வாழ்ந்த மக்களைப்போலவே இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் மனிதர்கள் இருக்கின்றனர் என்பது புரிகின்றது.

தான் உருவாக்கிய மாடு, கழுதை போன்ற மிருகங்களைவிட மனிதன் தரம்தாழ்ந்து விட்டதை தேவன் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார். மாட்டுக்கும் கழுதைக்கும் கூட தனது எஜமான் யார் என்பதும் அவனது விருப்பம் என்ன என்பதும் தெரிந்திருக்கிற்றது. ஆனால் இந்த மக்கள் எந்த உணர்வுமில்லாமல் இருக்கின்றனர் என்கின்றார் தேவன். 

முதலில், இந்த ஜனத்துக்கு அறிவில்லை என்றும் பின்னர் உணர்வுமில்லை என்கின்றார் தேவன். அறிவு இருக்குமானால் தேவனை அறிந்திருப்பான். ஐந்தறிவு உள்ள மாடு, கழுதைகளுக்கே தங்கள் எஜமானனைத் தெரிந்திருக்கின்றது. இந்த மக்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், இந்த உலகத்தில் பலரும் ஒவ்வொரு கடவுளை வழிபடுகின்றனர். ஆனால் அவர்கள் வழிபடும் கடவுளைப்பற்றியே அவர்களுக்குத் தெரியவில்லை.  

வண்டி மாடுகளைக் கவனித்துப்பார்த்தால் ஒனறு புரியும். அந்த மாடுகள் வண்டியில் பூட்டுவதற்கு வண்டியோட்டி வண்டியைத் தூக்கியவுடன் தானாகத் தலையைத் தாழ்த்தி வண்டியில் பூட்டிட உதவிடும். ஆம், அந்த மாடுகளுக்கு வண்டியோட்டியையும் அவன் தன்னை என்ன செய்ய விரும்புகின்றான் என்பதும் தெரிந்திருக்கின்றது.  இதுபோல நாம் தேவனையும் அவர்  நம்மை என்னக்  காரியத்துக்கு பயன்படுத்த விரும்புகின்றார் என்பதையும் அறிந்திருக்கவேண்டும்.

வண்டி மாடுகளைப்பற்றி இன்னும் ஒரு குறிப்பு. வண்டியோட்டி வெளியூர்களுக்கு வண்டியைக் கொண்டு சென்று, திரும்பி வீட்டிற்கு வரும்போது வண்டியோட்டி வண்டியில் படுத்துத் தூங்குவான். ஆனால் அந்த மாடுகள் சரியான பாதையில் நடந்து வண்டியோட்டியின் வீட்டினைச் சென்று சேரும். ஆம், மாடுகள் தன் எஜமானனை அறிந்துள்ளன.

அன்பானவர்களே, மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறிந்திருக்கும்போது அறிவுள்ள நாம் அறிவில்லாமலும், தேவனைப்பற்றிய உணர்வில்லாமலும் இருக்கலாமா? 

இன்று உலகத்தில் மக்கள் சகலவித அநியாயங்களினால் நிறைந்து வாழ்வதற்குக் காரணம் தேவனை அறியாமலும் அவரைப்பற்றிய உணர்வும் இல்லாமல் வாழ்வதால்தான். இதனை, "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்" (ரோமர் 1:28) எனக் கூறுகின்றார் பவுல். 

மாடுபோலவும் கழுதைபோலவும் வாழாமல் கர்த்தரை அறியும் அறிவில் வளர்ந்து பரிசுத்தமானவர்களாக வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                             

 

இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்

 ஆதவன் 🖋️ 567 ⛪ ஆகஸ்ட் 17, 2022 புதன்கிழமை


"புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 24 )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவங்களைப் போக்கிட பாவ நிவாரணப்பலி செலுத்தவேண்டியிருந்தது. மிருகங்களைக் கொன்று அவற்றின் இரத்தத்தினால் மக்கள் பாவ நிவாரணம் பெற்றனர். அனால் இன்று புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்து தனது சுய இரத்தத்தைச் சிந்தி  பாவ நிவாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இன்றைய வசனம்,  இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை, "ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தம்" என்று கூறுகின்றது.  ஆபேலினுடைய இரத்தம் தன்னைக் கொலை செய்த தனது சகோதரனுக்காக தேவனைநோக்கி மண்ணிலிருந்து முறையிடுகிற இரத்தம். இதனை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கின்றோம். காயீனிடம் தேவன் பேசும்போது, "...என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது."( ஆதியாகமம் 4 : 10 ) என்றார். 

ஆபேலினுடைய இரத்தம் பூமியிலிருந்து தேவனைநோக்கிக் கூப்பிட்டு தனது சகோதரன் செய்த துரோகத்துக்காக முறையிட்டது. ஆனால் இயேசு  கிறிஸ்துவின் இரத்தம் அதனைவிட நன்மையானவைகளைப் பேசுகின்ற இரத்தம். அது தன்னை ஏற்றுக்கொண்டு தனக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் மக்களுக்காக பரிந்து பேசுகின்ற இரத்தம். 

ஆபேலினுடைய இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டது. ஆனால், இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தைச் சிந்தி நேரடியாக பிதாவின் சந்நிதியில் நுழைந்து நமக்காகப் பரிந்துபேசுகின்றார். "வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்."( எபிரெயர் 9 : 12 ) எனவேதான் இது ஆபேலினுடைய இரத்தம்  பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாக இருக்கின்றது.  

"என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்." ( 1 யோவான்  2 : 1 ) என்று யோவான் குறிப்பிடும் இந்த மேலான நிலையை இயேசு கிறிஸ்துதத் தனது இரத்தத்தைச் சிந்தி அடைந்தார். 

ஆம் அன்பானவர்களே, நாம் இன்று ஆபேலினுடைய இரத்தம் பேசியத்தைவிட மேலான இடத்திலிருந்து மேலானவைகளைப் பேசும் கிறிஸ்துவின் இரத்தத்தினிடம் வந்து சேர்ந்துள்ளோம். அந்த இரத்தத்தால் நம்மைக்  கழுவி பூரணப்படுத்த அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கின்றார். அவருக்கே நம்மை ஒப்புக்கொடுத்து மேலான ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்று மகிழ்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

இணையத்தளம்:- www.aathavanmonthly.blogspot.com 

Monday, August 15, 2022

இடுக்கமான வழிதான் நல்ல வழி.

 ஆதவன் 🖋️ 566 ⛪ ஆகஸ்ட் 16, 2022 செவ்வாய்க்கிழமை

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 )

கிறிஸ்து காட்டும் மீட்பின் வழி குறுகிய வழி. அதாவது அது சிலுவை சுமக்கும் வழி. செழிப்பு, பகட்டு, ஆடம்பரம் என இவற்றையே விரும்பி வாழ்ந்துகொண்டே கிறிஸ்துவின் ராஜ்யத்திலும் நுழைய விரும்புகின்றனர் பலர். எனவேதான் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். கிறிஸ்துவின் குறுகிய வழியில் நுழையவேண்டுமானால் நாம் சில ஒறுத்தல்கள், தியாகங்கள் செய்யவேண்டியதும்   சிலுவைகள் சுமக்கத் தயாராக இருக்கவேண்டியதும்  அவசியம். 

கிறிஸ்துவே வழி என்றும், நமது பாவங்களை நிவர்த்திசெய்யும் கிருபாதார பலி கிறிஸ்துவே என்றும், பிதா ஒருவரே பிதாவுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே, அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் பல வசனங்கள் கிறிஸ்துவே நித்திய ஜீவனுக்கான வழியென்பதை வேதத்தில் உறுதிப்படக் கூறுகின்றன. இதனை விசுவாசித்து எந்த துன்பம் வந்தாலும் அவரையே பற்றிக்கொண்டு வாழ்வதே இடுக்கமான வழியில் பிரவேசிக்க பிரயாசைப்படுதல்.

ஆனால் இன்று பலரும் கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றோம் என்று கூறிக்கொண்டாலும், குறுகிய வாசல் வழியாய் நுழைய விரும்பாமல் வேதம் கூறும் வழியினைவிட்டு வேறு விசாலமான வழியாக நுழைய முயலுகின்றனர். தங்களுக்கு என  கிறிஸ்துவைவிட்டு வேறு மத்தியஸ்தர்களை உருவாக்கி அவர்களைத்  தேடி ஜெபிக்கின்றனர்; கிறிஸ்துவின் போதனையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி தங்கள் தவறை நியாயப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர்.

 எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்." ( யோவான் 10 : 1 ) கிறிஸ்துவை நமது தகப்பனாக எண்ணினோமானால் அவரிடம் நேரடியாக நம்மால் நெருங்கிட முடியும். அவர் கூறும் போதனைகளின்படியும் அவர் காட்டும் வழிகளிலும்  வாழ முடியும். 

இன்று மக்களது மனநிலையினை அறிந்த பல ஊழியர்கள் இடுக்கமான வாசலை விசாலமானதாக மாற்றிட முயலுகின்றனர். எனவே, கிறிஸ்து கூறாத உபதேசங்களைக் கூறி மக்களைக் கவருகின்றனர். கவர்ச்சிகர ஆசீர்வாத திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றனர். கிறிஸ்து கூறிய சிலுவை சுமக்கும் வலியைவிட இது எளிதாக இருப்பதால் மக்கள் இந்த ஊழியர்கள் காட்டும் விசாலமான வழியில் நுழைகின்றனர்.

மேலும் சில சபைகள், கிறிஸ்து கூறாத; வேதாகமம் கூறாத,  வேறு மத்தியஸ்தர்களை மக்களுக்கு அறிமுகம்செய்து அவர்களிடம் பரிந்துபேசி ஜெபிக்க மக்களை பழக்கியுள்ளனர் ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் என்று இயேசு தெளிவாகக் கூறியிருந்தும் இந்தக் கள்ளவழி பலருக்கும் பிடித்தமானதாகஇருக்கின்றது. ஆனால் அது அழிவுக்கான வழி என்பதனை அறியாதிருக்கின்றனர். 

"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." ( யோவான் 10 : 9 )

அன்பானவர்களே, செழிப்பான மேய்ச்சலைக் கண்டடைய வேண்டுமானால் நாம் கிறிஸ்துவையே பின்பற்றி இடுக்கமான வாயில் வழியாய் நுழைந்திட பிரயாசைப்படவேண்டும். 

புனிதர்கள், பரிசுத்தவான்கள் என நாம் போற்றக்கூடிய அனைவரும் இப்படி இடுக்கமான வழியில் நுழைந்தவர்கள்தான். அவர்களது வாழ்க்கை வரலாறுகள் அவர்கள் எப்படி கிறிஸ்துவை நேசித்தார்கள் என்பதை நமக்கு விளக்கும். அதைப்போல நாம் வாழ அழைக்கப்படுகிறோமேத் தவிர அவர்களை பரிந்துரையாளர்களாக கொள்வதற்கல்ல. 

கிறிஸ்துவையே நேசிப்போம்; அவரையே பின்பற்றுவோம்; இடுக்கமான அந்த வழிதான் இரட்சிப்படையவும் நல்ல மேய்ச்சலைக் கண்டடையவும் வழி. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712