ஆதவன் 🖋️ 575 ⛪ ஆகஸ்ட் 25, 2022 வியாழக்கிழமை
"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." ( 1 யோவான் 4 : 10 )
உலகத்திலுள்ள எல்லா மதத்தினரும் தங்கள் தங்கள் தெய்வத்தினை அன்பு செய்கின்றார்கள். அப்படி அன்பு செய்வதால்தான் அந்தத் தெய்வங்களுக்கு வழிபாடுகளும் பல்வேறு சடங்குகளும் செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் நாமும் இப்படியே இருப்போமானால் நமக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.
ஒருவரை நாம் முழுமையாக அன்பு செய்யவேண்டுமானால் முதலில் அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். அவர் நம்மை அன்புசெய்வது நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இந்த உலகத்திலேகூட காதல் உணர்வைப் பாருங்கள், காதலிக்கும் இருவரும் (உண்மையான காதலர்கள்) ஒருவரைப்பற்றி மற்றவர் நன்கு அறிந்திருப்பார்கள். தனது காதலன் அல்லது காதலி தன்னை அன்புசெய்வதை அறியாவிட்டால் அதில் அர்த்தமே இருக்காது. அந்தக் காதல் முழுமையானதாகவும் இருக்காது.
ஒருவர் தான் வணங்கும் தெய்வத்தை இந்த பரஸ்பர அன்புணர்வில்லாமல் வணங்கி வழிபடுவது அர்த்தமில்லாதது. எந்த அன்புணர்வும் இல்லாத ஒரு ஜடப்பொருளை ஒருவர் உண்மையாய் அன்புசெய்வது எப்படி சாத்தியமாகும்? நாமும் இதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உண்மையான அன்பு செலுத்தவேண்டுமானால் முதலில் அவர் நம்மை அன்பு செய்ததும், அவர் நமது பாவங்களை மன்னித்து மீட்டுக்கொண்டதும், அனுபவபூர்வமாக நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
கணிதத்தில் கூறப்படும் வெறும் வாய்ப்பாடுபோல, "கிறிஸ்து எனக்காக இரத்தம் சிந்தியுள்ளார், கிறிஸ்து எனது பாவங்களை மன்னித்துள்ளார்" என்று வெறுமனே கூறுவதல்ல. அனுபவப்பூர்வமாக அந்தப் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்றுகொள்ளும்போது மட்டுமே அவரது அன்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும்.
கிறிஸ்துவின்மேல் உண்மையான அன்பு ஏற்படும்போது நாம் பிற மதத்தினர் தங்கள் தெய்வத்திற்குச் செய்வதுபோல இயேசு கிறிஸ்துவின் படத்துக்கு மாலை, பூ, வாசனைத் திரவியங்கள் என மரியாதை செய்யமாட்டோம். அவரது அன்பு நமக்குள்ளே இருந்து நம்மை மனதளவில் அவர்மேல் அன்பு பெருக்கச்செய்யும். இந்த அனுபவம் இல்லையானால் நாம் இன்னும் இரட்சிப்பு அனுபவம் பெறவில்லை என்றே பொருள். காதலிக்கும் எவரும் தங்கள் காதலரின் படத்துக்கு மாலை, பூ அகர்பத்தி ஏற்றி அன்பை வெளிப்படுத்துவதில்லையே ?.
ஆம், அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிற மத்தினருக்கும் கிறிஸ்தவர்களுக்குமுள்ள வித்தியாசம் இதுதான். வேறு எந்த உலக தெய்வங்களும் தங்களை வழிபடும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவில்லை.
அன்பானவர்களே, நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு கிறிஸ்துவின் இந்த உன்னத மீட்பு அனுபவத்தை அவரிடம் வேண்டுவோம்.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால்தான் அன்பு உண்டாயிருக்கிறது. அவரது அன்புக்கு நாம் பிரதிபலன் காட்டவேண்டாமா? ஆம், "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான் 5 : 3 )
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment