ஆதவன் 🖋️ 573 ⛪ ஆகஸ்ட் 23, 2022 செவ்வாய்க்கிழமை
"வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்." ( மத்தேயு 13 : 33 )
நமக்கு மோர் புளிக்கவைப்பதைப்பற்றி நன்கு தெரியும். பாலைக் காய்ச்சி அப்படியே ஆறவைத்தால் அது கெட்டுப்போகும். எதற்கும் பயன்படாமல் நாற்றமெடுத்துவிடும். மாறாக அதனோடு சிறிது உறைமோரை (புளித்த மோர்) விட்டுவைத்தால் அது மறுநாளில் நல்ல தயிராகக்கிடைக்கும். இதுபோலவே ஆப்பம் சுடுவதற்கும் நாம் முந்தின நாளிலேயே அது புளிப்பதற்கு சிறிது சோறு, பழம் இவற்றைச் சேர்க்கின்றோம். இதுபோல ஏற்கெனவே புளித்த மாவினை புதுமாவுடன் சேர்ந்து புளிக்கவைக்கலாம்.
மாவானது புளிக்கவைக்கும்போதுதான் ஏற்ற பலனைத் தரும். இட்லி, தோசை மாவை நாம் முந்தின நாளே ஆட்டி புளிக்கவைத்து பயன்படுத்துகின்றோம். இங்கு இயேசு கிறிஸ்து பரலோக ராஜ்யத்தை புளித்த மாவுக்கு ஒப்பிடுகின்றார்.
நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் நம்மிடம் புளிப்புத் தன்மை இருக்கவேண்டும். அதாவது, தேவ சுபாவங்கள் இருக்கவேண்டும். அப்படி நம்மிடம் இருக்கும் புளிப்பு நம்மைமட்டும் சுவையூட்டுவதாக இல்லாமல், எப்படி புளித்த மாவு தன்னோடு இருக்கும் மற்ற மாவினையும் புளிப்புள்ளதாக மாற்றுகின்றதோ அதுபோல நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் புளிப்புள்ளவர்களாக மாற்றும். இதுவே கிறிஸ்துவின் ராஜ்யத்தை அறிவித்தல்.
வேதாகமத்தில் புளிப்பு பாவத்துக்கு உவமையாகவும் கூறப்பட்டுள்ளது. "ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." ( 1 கொரிந்தியர் 5 : 8 ) என்கின்றார் பவுல் அடிகள்.
அப்போஸ்தலரான பவுல் புளிப்பைத் தவறான உபதேசத்துக்கும் ஒப்பிட்டுள்ளார். தவறான கிறிஸ்தவ உபதேசம் மொத்த சபையினையும் பாழாக்கிவிடும். "புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்." ( கலாத்தியர் 5 : 9 ) என்கின்றார் அவர்.
நல்ல புளிப்பு ஆப்பமாவு, உறைமோர் போல நன்மை தரும். கெட்ட புளிப்பு பனங் கள் போல கேடுண்டாக்கும்.
அன்பானவர்களே, கிறிஸ்தவர்கள் நாம் இந்த நாட்டில் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், சரியான புளிப்புள்ளவர்களாக இருப்போமானால், கிறிஸ்து கூறுவதுபோல நாம் மற்றவர்களையும் நம்மைப்போல புளிப்புள்ளவர்களாக மாற்றி பரலோக ராஜ்யத்துக்கு உரிமையானவர்களாக மாற்று முடியும். ஆனால், பாவம், தவறான போதனை எனும் புளிப்பு இருக்குமானால் நமது ஆன்மாவையே இழந்துவிடுவோம்.
இந்திய நாட்டிற்கு வந்த மிஷனெரிகள் நல்ல புளிப்பைக் கொண்டு வந்ததால் நமது நாடு அதனைப்பெற்று இன்றும் அதன் பலனை அனுபவித்துவருகின்றது. நாமெல்லோரும் கிறிஸ்தவர்களாக இன்று இருப்பது அவர்கள் கொண்டுவந்த நல்ல புளிப்பினால்தான். நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு கிறிஸ்துவின் புளிப்பினை அளித்துச் சுவையூட்டுவோம்
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment