ஆதவன் 🖋️ 574 ⛪ ஆகஸ்ட் 24, 2022 புதன்கிழமை
"என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்." ( லுூக்கா 6 : 49 )
எந்த ஒரு கட்டிடத்துக்கும் அஸ்திவாரம்தான் பிரதானம். கட்டிடத்தின் உயரம் , அதாவது எத்தனை மாடி கட்டப்போகின்றோம் என்பதன் அடிப்படையிலேயே அஸ்திபாரம் போடுகின்றோம். பலமாடி கட்டிடங்களுக்கு மிக ஆழமான அஸ்திபாரம் இடப்படுகின்றது. வேர் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல அஸ்திபாரங்கள் கட்டிடத்தைத் தாங்கிப்பிடிக்கின்றன.
இதுபோலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கின்றது. நாம் எவ்வளவு ஆழமாக கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு பலப்படுகின்றோமோ அவ்வளவு சிறப்பாக நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கும். ஆம், கிறிஸ்துவே நமது ஆவிக்குரிய வாழ்வின் அஸ்திபாரம்.
"என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. அதாவது அவரது வார்த்தைகளைக் கேட்கவேண்டும்; அவற்றின்படி செய்யவேண்டும். அப்படி இல்லையானால் நாம் மணல்மேல் வீடு கட்டுபவர்களாக இருப்போம்.
அஸ்திபாரமில்லாமல் மணல்மேல் வீடு கட்டுவது அறிவுகெட்டத் தனமல்லவா? கிறிஸ்துவை உண்மையாய் அறிவிக்கும் ஊழியர்கள்தான் சரியான அஸ்திபாரம் போடுபவர்கள். இப்படிப் "போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது." ( 1 கொரிந்தியர் 3 : 11 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல் அடிகள்.
மேலும் அவர் கூறுகின்றார், "எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 3 : 10 )
அதாவது கிறிஸ்துவை அஸ்திபாரமாகக்கொண்டு ஒவ்வொருவரும் கட்டலாம். அவரவருக்குத் தேவன் அளித்தக் கிருபையின்படி நமது ஆவிக்குரிய வாழ்வை நாம் கட்டவேண்டும். ஆனால் எக்காரணம்கொண்டும் நமது அஸ்திபாரத்தைவிட்டு விலகிடாமல் கட்டவேண்டும். சிலர் தங்கள் ஆவிக்குரிய வாழ்வின் ஒருபகுதியைச் சிறப்பாகக் கட்டுவார்கள்; மறுபகுதி அஸ்திபாரமில்லாத பகுதியாக இருக்கும்.
ஒரு வீட்டின் ஒருசில அறைகள்மட்டும் பலமான அஸ்திபாரத்துடனும் மற்றப்பகுதிகள் அஸ்திபாரமில்லாமலும் இருந்தால் ஆபத்தல்லவா?
எனவே அன்பானவர்களே, கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை விட்டு விலகிடாமல் உறுதியாக அவர்மேல் நமது ஆவிக்குரிய வாழ்வைக் காட்டுவோம். அப்போதுதான் தேவன் அதனைப் பரிசோதித்துப் பார்க்கும்போது நமக்கு ஏற்ற கைமாறு கிடைக்கும்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment