ஆதவன் 🖋️ 568 ⛪ ஆகஸ்ட் 18, 2022 வியாழக்கிழமை
"மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்." ( ஏசாயா 1 : 3 )
இன்றைய மனிதர்களது நிலைமையை உணர்ந்து தேவன் கூறிய வார்த்தைகளைப்போல இன்றைய தியான வசனம் இருக்கின்றது. அதாவது, ஏசாயா காலத்தில் வாழ்ந்த மக்களைப்போலவே இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் மனிதர்கள் இருக்கின்றனர் என்பது புரிகின்றது.
தான் உருவாக்கிய மாடு, கழுதை போன்ற மிருகங்களைவிட மனிதன் தரம்தாழ்ந்து விட்டதை தேவன் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார். மாட்டுக்கும் கழுதைக்கும் கூட தனது எஜமான் யார் என்பதும் அவனது விருப்பம் என்ன என்பதும் தெரிந்திருக்கிற்றது. ஆனால் இந்த மக்கள் எந்த உணர்வுமில்லாமல் இருக்கின்றனர் என்கின்றார் தேவன்.
முதலில், இந்த ஜனத்துக்கு அறிவில்லை என்றும் பின்னர் உணர்வுமில்லை என்கின்றார் தேவன். அறிவு இருக்குமானால் தேவனை அறிந்திருப்பான். ஐந்தறிவு உள்ள மாடு, கழுதைகளுக்கே தங்கள் எஜமானனைத் தெரிந்திருக்கின்றது. இந்த மக்களுக்குத் தெரியவில்லை.
ஆனால், இந்த உலகத்தில் பலரும் ஒவ்வொரு கடவுளை வழிபடுகின்றனர். ஆனால் அவர்கள் வழிபடும் கடவுளைப்பற்றியே அவர்களுக்குத் தெரியவில்லை.
வண்டி மாடுகளைக் கவனித்துப்பார்த்தால் ஒனறு புரியும். அந்த மாடுகள் வண்டியில் பூட்டுவதற்கு வண்டியோட்டி வண்டியைத் தூக்கியவுடன் தானாகத் தலையைத் தாழ்த்தி வண்டியில் பூட்டிட உதவிடும். ஆம், அந்த மாடுகளுக்கு வண்டியோட்டியையும் அவன் தன்னை என்ன செய்ய விரும்புகின்றான் என்பதும் தெரிந்திருக்கின்றது. இதுபோல நாம் தேவனையும் அவர் நம்மை என்னக் காரியத்துக்கு பயன்படுத்த விரும்புகின்றார் என்பதையும் அறிந்திருக்கவேண்டும்.
வண்டி மாடுகளைப்பற்றி இன்னும் ஒரு குறிப்பு. வண்டியோட்டி வெளியூர்களுக்கு வண்டியைக் கொண்டு சென்று, திரும்பி வீட்டிற்கு வரும்போது வண்டியோட்டி வண்டியில் படுத்துத் தூங்குவான். ஆனால் அந்த மாடுகள் சரியான பாதையில் நடந்து வண்டியோட்டியின் வீட்டினைச் சென்று சேரும். ஆம், மாடுகள் தன் எஜமானனை அறிந்துள்ளன.
அன்பானவர்களே, மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறிந்திருக்கும்போது அறிவுள்ள நாம் அறிவில்லாமலும், தேவனைப்பற்றிய உணர்வில்லாமலும் இருக்கலாமா?
இன்று உலகத்தில் மக்கள் சகலவித அநியாயங்களினால் நிறைந்து வாழ்வதற்குக் காரணம் தேவனை அறியாமலும் அவரைப்பற்றிய உணர்வும் இல்லாமல் வாழ்வதால்தான். இதனை, "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்" (ரோமர் 1:28) எனக் கூறுகின்றார் பவுல்.
மாடுபோலவும் கழுதைபோலவும் வாழாமல் கர்த்தரை அறியும் அறிவில் வளர்ந்து பரிசுத்தமானவர்களாக வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment