Tuesday, August 16, 2022

இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்

 ஆதவன் 🖋️ 567 ⛪ ஆகஸ்ட் 17, 2022 புதன்கிழமை


"புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 24 )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவங்களைப் போக்கிட பாவ நிவாரணப்பலி செலுத்தவேண்டியிருந்தது. மிருகங்களைக் கொன்று அவற்றின் இரத்தத்தினால் மக்கள் பாவ நிவாரணம் பெற்றனர். அனால் இன்று புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்து தனது சுய இரத்தத்தைச் சிந்தி  பாவ நிவாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இன்றைய வசனம்,  இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை, "ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தம்" என்று கூறுகின்றது.  ஆபேலினுடைய இரத்தம் தன்னைக் கொலை செய்த தனது சகோதரனுக்காக தேவனைநோக்கி மண்ணிலிருந்து முறையிடுகிற இரத்தம். இதனை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கின்றோம். காயீனிடம் தேவன் பேசும்போது, "...என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது."( ஆதியாகமம் 4 : 10 ) என்றார். 

ஆபேலினுடைய இரத்தம் பூமியிலிருந்து தேவனைநோக்கிக் கூப்பிட்டு தனது சகோதரன் செய்த துரோகத்துக்காக முறையிட்டது. ஆனால் இயேசு  கிறிஸ்துவின் இரத்தம் அதனைவிட நன்மையானவைகளைப் பேசுகின்ற இரத்தம். அது தன்னை ஏற்றுக்கொண்டு தனக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் மக்களுக்காக பரிந்து பேசுகின்ற இரத்தம். 

ஆபேலினுடைய இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டது. ஆனால், இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தைச் சிந்தி நேரடியாக பிதாவின் சந்நிதியில் நுழைந்து நமக்காகப் பரிந்துபேசுகின்றார். "வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்."( எபிரெயர் 9 : 12 ) எனவேதான் இது ஆபேலினுடைய இரத்தம்  பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாக இருக்கின்றது.  

"என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்." ( 1 யோவான்  2 : 1 ) என்று யோவான் குறிப்பிடும் இந்த மேலான நிலையை இயேசு கிறிஸ்துதத் தனது இரத்தத்தைச் சிந்தி அடைந்தார். 

ஆம் அன்பானவர்களே, நாம் இன்று ஆபேலினுடைய இரத்தம் பேசியத்தைவிட மேலான இடத்திலிருந்து மேலானவைகளைப் பேசும் கிறிஸ்துவின் இரத்தத்தினிடம் வந்து சேர்ந்துள்ளோம். அந்த இரத்தத்தால் நம்மைக்  கழுவி பூரணப்படுத்த அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கின்றார். அவருக்கே நம்மை ஒப்புக்கொடுத்து மேலான ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்று மகிழ்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

இணையத்தளம்:- www.aathavanmonthly.blogspot.com 

No comments: