"உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14 : 17 )
பரிசுத்த ஆவியானவரை நாம் வாழ்வில் பெறவேண்டுமானால் முதலில் அவரைப்பற்றி அறிந்தும் கேட்டும் இருக்கவேண்டும், அவரை வாழ்வில் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஆர்வமும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம். பொதுவாக கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் பலரும் ஆவியானவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் பலருக்கும் அவரை வாழ்வில் பெற்று அனுபவிக்கவேண்டும் எனும் ஆர்வம் இல்லாமலே இருக்கின்றது.
இதனையே இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார். "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது" என்று. நாம் கிறிஸ்துவை அறிந்து நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது ஆவியானவர் நமக்குள் வருகின்றார். சீடர்கள் அப்படி இருந்ததால் அவர்கள் உள்ளே ஆவியானவர் இருந்தார். எனவேதான், "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." என்று இயேசு கூறுகின்றார்.
கிறிஸ்துவை அறிந்த எபேசு நகர சீடர்கள் பரிசுத்த ஆவியானவரை அறியாமலேயே இருந்தனர். அப்போது அங்கு வந்த பவுல் அவர்களிடம் ஆவியானவரைப்பற்றி கேட்டு அவர்கள் பரித்த ஆவியைப் பெறுவதற்கு உதவியதை நாம் பார்க்கின்றோம். "அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 19 : 1, 2 )
உலக மக்கள் ஆவியானவரை அறியாமல் இருந்தாலும் ஆவிக்குரிய அனுபவம் பெற்றவர்கள் அவரை அறிந்துகொள்வார்கள். ஆவியானவர் நமக்குள் இருப்பதை நாமே அறிந்துகொள்வோம் என்பதையே "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.
ஒருவர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுள்ளார் என்பதற்கு பெரிதான வெளி அடையாளங்கள் தேவையில்லை. ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர் உள்ளத்தில் அவர் இருப்பதை பெற்றுக்கொண்டவர்கள் அறிவார்கள்.
ஆனால் இன்று ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளில் தங்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார் என்பதனை வெளிக்காட்டிக்கொள்ள பல்வேறு உபாயங்களைக் கையாளுகின்றனர். ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் இந்தச் சபைகளின் ஊழியர்களும் தங்களிடம் ஆவியானவர் இருக்கின்றார் என்பதனை தங்கள் சபை விசுவாசிகள் அறிந்தால்தான் தங்களை மேன்மையாகக் கருதுவார்கள் என எண்ணி பல்வேறு உபாயங்களைக் கையாள்வதுடன் தங்களது பெயருக்குப்பின் பல்வேறு அடைமொழிகளையும் சேர்த்துக்கொள்கின்றனர்.
நாம் பரிசுத்த வாழ்வு வாழத் துணைபுரிபவரே பரிசுத்த ஆவியானவர். சத்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம்பண்ணி நமக்குள்ளேயே இருப்பதால், நாம் அவரை அறிவதுடன் பரிசுத்த வாழ்வும் வாழ முடிகின்றது. காரணம், "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) நமக்குள்ளே பாவத்தைக்குறித்தும் நீதியைக்குறித்தும் உணர்வும், பரிசுத்தமாக வாழவேண்டுமெனும் எண்ணமும் இருக்குமானால் நமக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார் என்பது நிச்சயம்.
இந்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வர வாஞ்சையாய் மன்றாடுவோம். நிச்சயம் தேவன் நம்மை ஆவியினால் நிரப்பி பரிசுத்தமாய் வாழ உதவிடுவார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,232 💚 ஜூன் 23, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்." ( 1 யோவான் 5 : 11 )
நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வைச் சுதந்தரித்துக்கொள்வதே கிறிஸ்தவ வாழ்வின் இலக்காகும். நாம் இந்த உலகத்தில் அனைத்துச் செல்வங்களையும் உடையவர்களாக வாழ்ந்தாலும் நித்திய ஜீவனை இழந்துவிட்டோமானால் அதனால் எந்த பயனும் இல்லை.
இந்த நித்திய ஜீவன் தேவனுடைய ஒரே குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றது. எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்று. ஆம் அன்பானவர்களே, பிதாவோடு இணைந்துகொள்வதே நித்தியஜீவன். அதற்கு ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
எனவேதான் இன்றைய தியான வசனத்தை எழுதிய அப்போஸ்தலரான யோவான் தொடர்ந்து அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான் 5 : 12 ) எனவேதான் நாம் இயேசு கிறிஸ்துவை அறியவேண்டியது அவசியமாய் இருக்கின்றது; கிறிஸ்து நமது உள்ளத்தில் வரவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
நாம் பாலை காய்ச்சும்போது சரியாக கழுவாத அழுக்கான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சுவோமானால் அது உடனேயே திரிந்துபோய்விடும். அதனால் எந்த பயனுமின்றி வெளியே கொட்டப்படவேண்டும். அதுபோலவே பரிசுத்தரான இயேசு கிறிஸ்து நமது உள்ளத்தில் வரவேண்டுமானால் நமது உள்ளம் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம்.
ஆனால் மனிதர்கள் இயல்பிலே பரிசுத்தர்கள் அல்ல என்பதாலும் மனிதர்களால் தானாக பரிசுத்தமாக முடியாது என்பதாலும் இயேசு கிறிஸ்து தன்னாலேதானே சுத்திகரிப்பை உண்டாக்கினார்; இரட்சிப்பு அல்லது மீட்பு அனுபவத்தை ஏற்படுத்தினார். அதற்காகவே அவர் தனது இரத்தத்தைச் சிந்தினார். இதனை நாம், "எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13 : 11, 12 ) என்று வாசிக்கின்றோம்.
எனவே, ஆத்தும மீட்பு என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே சாத்தியமாகின்றது. அவரே தனது சுய இரத்தத்தைச் சிந்தி நமக்காக மரித்து பரிசுத்த பலிபொருளானார். எனவேதான், "தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
எனவே அன்பானவர்களே, நமது பாவங்கள் அனைத்தையும் கிறிஸ்து இயேசுவிடம் அறிக்கையிடுவோம். அவரே நமது பாவங்களைக் கழுவி பரிசுத்தமாக்கி நமக்கு முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவனைத் தந்து பிதாவோடு இணைந்திருக்கச் செய்வார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,233 💚 ஜூன் 24, 2024 💚 திங்கள்கிழமை 💚
"உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." ( சங்கீதம் 119 : 120 )
இந்த உலகவாழ்க்கைக்குப்பின் தேவனால் அளிக்கப்படும் நியாயத்தீர்ப்பு ஒன்று உள்ளது. அப்போது நாம் செய்யும் நன்மை தீமைக்கேற்ப நாம் பலனடைவோம். இதுவே வேதம் கூறும் உண்மை. ஆனால் இன்று கிறிஸ்தவர்களிலேயேகூடப் பலர் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. சொர்க்கமும் நரகமும் இந்த உலகிலேயேதான் இருக்கின்றன. இங்கு துன்பம் அனுபவிப்பவர்கள் நரகத்தையும் செலவச் செழிப்பில் வாழ்பவர்கள் சொர்க்கத்தையும் அனுபவிக்கின்றனர் என்கின்றனர் அவர்கள்.
கிறிஸ்தவர்களில் பலர் கூறும் விடுதலை இறையியல் இந்த நம்பிக்கையில் உருவானதுதான். எனவேதான் பல குருக்கள் சமூக பொருளாதார விடுதலை பற்றி அதிகம் பேசுகின்றனர். பல கிறிஸ்தவர்களை இவர்கள் இப்படி வஞ்சித்து வைத்துள்ளனர். அன்பானவர்களே, செல்வச் செழிப்பு ஆத்தும சாமாதானத்தை ஒருபோதும் தராது எனும் உண்மையினை இவர்கள் அறியாதவர்கள்.
இன்றைய தியான வசனம், "உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." என்று கூறுகின்றது. அதாவது கடவுளுக்குப் பாயப்படும் பயம் இருப்பதால் அவரது நியாயத்தீர்ப்புக்கும் பயப்படுகின்றோம் என்று பொருள். எனவே, இந்த பயமில்லாதவன் உண்மையில் கடவுள் நம்பிக்கையற்றவன். இப்படி நியாயத்தீர்ப்புக்குப் பயப்படும் பயம் இருந்தால் மட்டுமே நாம் இந்த உலகினில் தேவனுக்கேற்ற ஒரு வாழ்வு வாழ முடியும். ஆம், "கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்." ( சங்கீதம் 119 : 137 )
வெளிப்படுத்தின விசேஷத்தில் நாம் வாசிக்கின்றோம், "இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 1 ) என்று. ஆம், தேவன் சாத்தியத்தின்படியும் நீதியின்படியும் இந்த உலகத்தை நியாயம் தீர்ப்பார்.
"கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். ( ஏசாயா 11 : 3, 4 ) என்று கூறப்பட்டுள்ளது.
நியாயத்தீர்ப்பைக்குறித்து நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தெளிவாகப் பல முறைக் கூறியுள்ளார். மட்டுமல்ல இந்த உலகை நியாயம்தீர்க்கும் அதிகாரமும் இயேசு கிறிஸ்துவிடம்தான் உள்ளது. இதனையே அவர், "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 ) என்று கூறினார்.
அன்பானவர்களே, எனவே விடுதலை இறையியல் போதனைகளோ இதர போதனைகளோ, இதர தெய்வ வழிபாட்டு முறைமைகளோ நம்மை நியாயத்தீர்ப்புக்குத் தப்புவிக்கமாட்டாது. "உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அஞ்சி அவருக்கேற்ற ஒரு வாழ்வு வாழும்போது மட்டுமே நாம் நியாயத்தீர்ப்பில் நிலைநிற்கமுடியும்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,234 💚 ஜூன் 25, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚
"என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்." ( சங்கீதம் 35 : 28 )
இன்றைய தியான சங்கீத வசனத்தில் தாவீது மேலான ஒரு ஆவிக்குரிய அனுபவத்தைக் கூறுகின்றார். அதாவது, ஆவிக்குரிய வாழ்வு வாழ்பவர்கள் தங்களை அறியாமல் தங்களது வாழ்வின் அனைத்து நன்மை தீமைகளுக்காகவும் தேவனை ஸ்தோத்தரித்து மகிமைப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
"இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்." ( கொலோசெயர் 4 : 2 )
"இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 17 )
என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. இடைவிடாமல் எப்படி ஜெபிக்கமுடியும்? நாக்கு வேறு உலக வேலைகளும் கடமைகளும் இல்லையா என்று நாம் எண்ணலாம். ஆனால் ஜெபம் எப்போதும் நீண்டதாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. தேவனுக்கு நன்றி சொல்வதும் ஸ்தோத்திரம் சொல்வதும் ஜெபம்தான். மேலும் ஜெபம் என்பது வாயினால் நாம் சொல்வது மட்டுமல்ல; மாறாக, அது இருதயம் சம்பந்தப்பட்டது.
நாம் எந்த உலக வேலை செய்துகொண்டிருந்தாலும் நமது இருதயம் ஜெபசிந்தனையோடு இருக்க முடியும். நாம் மர வேலைசெய்யும் ஒரு ஆசாரியாக இருக்கலாம், கொத்தனாராக இருக்கலாம், வங்கியில் பணிபுரிபவராக, மருத்துவராக, கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம். எந்த வேலையில் நாம் இருந்தாலும் நமது இருதயம் தேவனுக்கு நேராக இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ளமுடியும். அப்படி நாம் இருப்போமானால், நாம் செய்யும் பணியையும் சிறப்பானதாகச் செய்யமுடியும்.
மட்டுமல்ல, வாழ்வில் நெருக்கடியான சூழ்நிலை வரும்போதும் நாம் தேவனைத் துதிக்க முடியும். அப்போஸ்தலரான பவுலும் சீலாவும் தங்கள் கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்ட நிலையிலும் நாடு இரவில் தேவனைத் துதித்துப் பாடவில்லையா? ஆம், அப்படி நாம் தேவனைத் துதிப்பது மிகப்பெரிய விடுதலையை நமது வாழ்வில் கொண்டுவரும்.
"என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்." என்று எழுதிய தாவீது சாதாரண மனிதனல்ல; அவர் ஒரு அரசர். அரசாங்கப் பணிகள் அவருக்கு அதிகம் இருந்திருக்கும். அந்தப் பணிகளினூடே தேவனைத் துதித்தார். அரசர் ஆவதற்குமுன் அவர் மிகவும் நெருக்கப்பட்ட ஒருவாழ்வு வாழ்ந்தார்; அப்போதும் தேவனைத் துதித்தார். அதனையே இன்றைய தியான வசனத்தில் அவர் கூறுகின்றார்.
துதிப்பதும் ஜெபிப்பதும் மட்டுமல்ல, என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் சொல்லிக்கொண்டிருக்கும் என்கின்றார். அதாவது நாம் தேவனைப்பற்றியும் அவரது வல்லமையைப்பற்றியும் நமது சொல்லாலும் வாழ்வாலும் அறிக்கையிடவேண்டியது அவசியம்.
அன்பானவர்களே, இதுவரை நாம் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தேவனை ஆராதிப்பவர்களாக வாழ்ந்திருந்தாலும் இனி இந்த வழியைக் கைக்கொள்வோம். இஸ்லாமியர்கள் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தேவனைத் தொழுவார்கள். ஆனால் தேவன் நமக்குள்ளே இருந்து கிரியைசெய்யும்போது அவரது அன்பு நம்மை நெருக்குவதால் நாம் இப்படி குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஜெபிப்பவர்களாக இருக்கமாட்டோம். மாறாக, தாவீது கூறுவதுபோல நமது நாவு அவரது நீதியையும், நாள்முழுவதும் அவரது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,235 💚 ஜூன் 26, 2024 💚 புதன்கிழமை 💚
"கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்.." ( எரேமியா 2 : 8 )
இன்றைய தியான வசனம் கூறும் எரேமியா காலத்தில் இருந்த நிலைமைதான் இன்றும் நிலவுகின்றது. வேதத்தைப் போதித்து மக்களை நேர்வழியில் நடத்தவேண்டிய ஆசாரியர்கள் தேவனை அறியாமல் இருந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது போலவே இன்றும் தேவனை அறியாதவர்கள்தான் பெரும்பாலும் போதகர்களாக இருக்கின்றனர். ஆம் அன்பானவர்களே, தேவனை அறிவது மேலான ஒரு அனுபவம். அது வேதாகமக் கல்லூரிப்படிப்பால் ஒருவருக்கு ஏற்படாது.
ஒருவர் தேவனை அறியும்போதுதான் அவர் மேலான ஆவிக்குரிய அனுபவங்களையும், வேத வசனங்களுக்கான மெய்யான பொருளையும் அறிந்துகொள்ளமுடியும். அப்படி அறிந்த ஒருவர்தான் மற்றவர்களுக்கு தேவனைப்பற்றித் தெளிவுபடுத்த முடியும். சார்ள்ஸ் ஸ்பர்ஜன் எனும் தேவ மனிதன் இதுகுறித்து கூறும்போது, "தேவனை அறியாத ஒருவன் மக்களுக்கு தேவனைப்பற்றிப் போதிப்பது, பறக்க இயலாத குள்ளவாத்து கழுகுக் குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக்கொடுக்க முயல்வதுபோன்றது" என்று கூறுகின்றார்.
இன்று விசுவாசிகள் பலரும் கழுக்குக் குஞ்சுபோன்று துடிப்பாக உள்ளனர். பல விசுவாசிகள் அவர்களை வழிநடத்தும் போதகர்களையும் குருக்களையும்விட தேவ அனுபவமும் தேவனைப்பற்றிய அறிவும் கொண்டுள்ளனர். ஆனால் விசுவாசிகளை வழிநடத்தும் குருக்கள், போதகர்கள், பாஸ்டர்கள் எந்த வித ஆன்மீக அனுபவமுமின்றி குள்ள வாத்துக்களைப்போன்று இருக்கின்றனர்.
இப்படிக் கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் தேவனை அறியாமலுமிருந்து, தேவனுக்குத் துரோகம்பண்ணினபடியினால் இதற்கு மாற்றாக தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். ஆம், போதகர்களும் குருக்களும் தேவனை அறியாமலிருந்தாலும் ஆவியானவர் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் நடத்த முடியும். எனவேதான், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து.
நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவம் பெறும்போது ஆவியானவர் தனது ஆளுகைக்குள் நம்மை எடுத்துக்கொள்கின்றார். எனவே நம்மை வழிநடத்தும் உலக போதகர்களும் குருக்களும் நம்மைச் சரியான பாதையில் நடத்தத் தவறினாலும் ஆவியானவர் நம்மை நேர்மையான பாதையில் நடத்துவார். ஆனால், நாம் ஆவியானவர் நம்மை வழிநடத்த நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்.
ஆம் அன்பானவர்களே, இதுவே உண்மையாகும். எனது முப்பது ஆண்டுகால ஆவிக்குரிய அனுபவத்தில் ஆலய மறையுரைகளில் போதகர்கள் மூலம் கேட்டு உணர்ந்துகொண்ட சத்தியங்களைவிட ஆவியானவர் தெளிவுபடுத்தியவை அதிகம். பொதுவாக நான் எந்த ஊழியர்களது போதனைகளையும் அதிகம் கேட்பதில்லை; போதகர்களது ஆவிக்குரிய நூல்களையும் அதிகம் வாசிப்பதில்லை. ஆனால் எனக்கு ஆவியானவர் உணர்த்துவதையே எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எழுதுபவை வேதத்துக்கு முரணாக இருப்பதாக யாரும் கூறியதில்லை.
ஆம், தேவனைத் தனிப்பட்ட முறையில் நாம் அறிந்துகொள்ளும்போது ஆவியானவர் நம்மைச் சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்துவார். எனவேதான் நாம் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டியது அவசியம். தேவ ஆவியானவரின் துணையுடன் வேதாகமத்தை வாசிப்போம். சத்திய ஆவியானவர் சத்தியத்தை நாம் உணரச்செய்து நம்மைச் சத்திய வழியில் நடத்துவார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,236 💚 ஜூன் 27, 2024 💚 வியாழக்கிழமை 💚
"என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15 : 2 )
நாம் கனி கொடுக்கின்ற ஓர் வாழ்க்கை வாழவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். அவரை ஆராதிப்பவர்களாக, அவரை ஸ்தோத்தரிப்பவர்களாக மட்டுமல்ல, அப்படி அவரை ஆராதிக்கும் நாம் கனிகொடுக்கின்ற வாழ்க்கை வாழவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார்.
ஒரு சிறந்த தோட்டக்காரன் எப்படித் தன் தோட்டத்திலுள்ள மரங்களை பராமரிப்பானோ அதுபோலவே தேவன் தனது மக்களைப் பராமரிக்கின்றார். இதற்காக அவர் இரண்டு காரியங்களைச் செய்கின்றார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
முதலில், "கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. செடியோடு இணைக்கப்பட்டிருக்கும் கொடிகள் உலர்ந்துபோய்விட்டது என்றால் அதில் கனிகள் உருவாக முடியாது. அத்தகைய கொடிகளை அவர் அறுத்துப்போடுகின்றார். காரணம் அந்தக் கொடிகளால் யாருக்கும் பலனில்லை. மேலும் அவை தேவையற்று இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். தேவையற்ற கொடிகள் என்று தேவன் நம்மை அறுத்துப் போட்டுவிடாதபடி நமது வாழ்க்கையை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ளது, "கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." விவசாயிகளுக்குத் தெரியும் மரங்களை கவ்வாத்து (Pruning) செய்துவிட்டால் அவை அதிகக் கனிகளைக்கொடுக்கும் என்று. கவ்வாத்து செய்வதால் மரங்களின் தேவையற்ற வளர்ச்சிக் கட்டுப்படுத்தப்படும், தளிர்களும் மொட்டுகளும் பூக்களும் அதிகம் வந்து அதிக கனிகளை உற்பத்திசெய்யும். பழையன கழிந்து புதியன தோன்றும்.
இப்படி மரங்களை வெட்டி கவ்வாத்துச் செய்வது மரங்களுக்கு வேதனைதரும் ஒரு செயல்தான். ஆனால் அது அவைகளின் நன்மைக்கே. இதுபோலவே தேவன் ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்கும் மக்களுக்கும் சில துன்பங்களைக் கொடுக்கின்றார். இந்தத் துன்பங்கள் நம்மில் தேவையற்ற உலகப்பிரகாரமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றது. மட்டுமல்ல ஆவிக்குரிய வாழ்வில் நம்மில் புதிய தளிர்களும் மொட்டுகளும் பூக்களும் அதிகம் தோன்றி அதிகக் கனிகளை உற்பத்திசெய்யும் மனிதர்களாக நாம் மாறுகின்றோம்.
எனவே, ஆவிக்குரிய வாழ்வில் நமக்குத் துன்பங்கள் ஏற்படும்போது நாம் தயங்கவோ கலங்கவோ வேண்டியதில்லை. தேவன் நம்மைப் பண்படுத்துகின்றார் என்று உணர்ந்து அவரது பலத்தக் கரங்களுக்குள் அடங்கி இருக்கவேண்டியது தான் நாம் செய்யவேண்டியது.
"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது துன்பங்கள் நம்மைச் சூழ்ந்தால் நாம் தேவனுக்குமுன் பாக்கியவான்கள் என எண்ணிக்கொள்வோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,237 💚 ஜூன் 28, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚
"ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 7 )
ஒரு மகனுக்குத் தகப்பனுடைய அனைத்துச் சொத்து சுகங்களின்மேலும் முழு அதிகாரம் உண்டு. இதுபோலவே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து அவருக்குக் குமாரனாகும் தகுதிபெறும்போது அந்தத் தகப்பனுக்குள்ள அதிகாரங்கள் நமக்குக் கிடைக்கின்றது. அதற்கு நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனையே "ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
வேதாகமத்தில் லேவியராகமம் முதல் பல்வேறு இடங்களில் நாம் "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." ( லேவியராகமம் 26 : 12 ) எனும் வசனத்தைக் காணலாம்.
தேவன் எப்போதும் நம்மோடு தங்கி நம்மோடு இருக்கவே விரும்புகின்றார். அதற்குத் தகுகியுள்ளவர்களாக நாம் வாழ வேண்டியதே முக்கியம். இன்றைய தியான வசனம் கூறும் வார்த்தைகளைப்போன்று வேதத்தில் பல்வேறு இடங்களிலும் நாம் வாசிக்கலாம். (உதாரணமாக, எரேமியா- 7:23, 11:3, 30:22, 31:1, 32:38 இன்னும் பல)
ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இந்த வசனங்கள் அனைத்திலும், "நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவனை நாம் தகப்பனாக அறிந்து அவரோடு சேர்வதால், "நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும் அனைவருமே அவரது குமாரனும் குமாரத்திகளும்தான்.
இப்படி நாம் அவரது குமாரனும் குமாரத்திகளுமாக இருக்கவேண்டுமானால் முதலில் அவரது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. "என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்." ( எரேமியா 7 : 23 )
மேலும் இன்றைய தியான வசனத்தினைத் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 8 )
அதாவது, தேவன் காட்டிய வழிகளில் நடவாதவர்கள் மேற்படி வசனம் கூறுவதுபோல பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யருமாக இருக்கின்றனர். அத்தகையவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே அன்பானவர்களே, நாம் ஜெயம்கொள்ளும் ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதற்கான வழிகளை நமக்குத் திறந்து வைத்துள்ளார். அந்த வழியாகிய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியில் வாழும்போது மட்டுமே நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். அப்போது, இன்றைய வசனம் கூறுவதுபோல நாம் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவோம். அவர் நமது தேவனாயிருப்பார்; நாம் அவர் குமாரனாக குமாரத்திகளாக இருப்போம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,238 💚 ஜூன் 29, 2024 💚 சனிக்கிழமை 💚
"அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." ( யோபு 23 : 12 )
நாம் நமது வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய நல்ல ஒரு பாடத்தை யோபு இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். யோபுவைப் போல துன்பத்தை அனுபவித்தவர்கள் நம்மில் யாரும் இருக்கமுடியாது. ஆனால் அத்தகைய துன்பத்தை வாழ்வில் அனுபவித்த யோபு கூறுகின்றார், "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை" என்று. அதாவது தேவனது கற்பனைகளை நான் கைக்கொள்ளாமல் போனதில்லை, இனியும் போவதில்லை என்கின்றார்.
நல்ல ஒரு வாழ்க்கைத் தனக்கு அமைந்ததால் தேவனது கற்பனைகளைவிட்டு நான் பின்வாங்கமாட்டேன் என்று அவர் கூறவில்லை. மாறாக, வாழ்வில் அனைத்தும் எதிர்மறையாக நடைபெற்றபோதுதான் இப்படிக் கூறுகின்றார். மட்டுமல்ல, "அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்" என்கின்றார். நாம் இப்போது ஆகாரத்தைப் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவது போல யோபு தனது இருதயத்தை ஒரு குளிர்சாதன பெட்டிபோல தேவ வார்த்தைகளை பாதுகாக்க பயன்படுத்துவதாகக் கூறுகின்றார்.
இன்று நமக்கு தேவ வார்த்தைகளை நினைக்கும்போதெல்லாம் படித்து அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதுபோல அந்தக்காலத்தில் இல்லை. அந்தக்காலத்தில் வேதாகம தோல் சுருள்கள் எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் அவர் அவற்றை விரும்பி உள்ளத்தில் பாதுகாத்தார். அன்பானவர்களே, நாம் நம்மையே சீர்தூக்கிப்பார்ப்போம். தேவ வார்தைகளை விட்டுப் பின்வாங்காமல் அந்த வார்த்தைகளை நமக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொள்கின்றோமா?
பல கிறிஸ்தவ வீடுகளில் வேதாகமம் மறக்கப்பட்ட ஒரு புத்தகமாக இருக்கின்றது. ஒருமுறை ஒரு வீட்டில் சென்றிருந்தபோது அங்கிருந்த வேதாகமத்தை எடுத்துப்பார்த்தேன். அது சாதாரண வேதாகமத்தைவிடப் பலமடங்கு தடிமனாக இருந்தது. திறந்து பார்த்தபோது, அதில் அவர்களுக்கு வந்திருந்த பல திருமண அழைப்பிதழ்கள், நீத்தார் நினைவு அட்டைகள், வீட்டுவரி, தொலைபேசி ரெசீதுகள், மளிகை சாமான்கள் வாங்கிய துண்டுச் சீட்டுகள் போன்றவைகளால் நிறைந்திருந்தது. ஆம், அவர்கள் தேவ வசனத்தால் இருதயங்களை நிறைப்பதற்குப் பதிலாக வேதாகமத்தை உலக காரியங்களால் நிறைத்துவிட்டனர்.
இது அவர்கள் வேதாகமத்தை எந்த அளவுக்கு மதிக்கின்றார்கள், அதனை எப்படிப் பயன்படுத்துகின்றார்கள் என்பதனை நமக்கு வெளிக்காட்டுகின்றது. இத்தகைய மனிதர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது தேவ ஆலோசனை பெறவும், தேவனது பதிலை அறியவும் குருட்டுத்தனமாக கண்களை மூடி வேதாகமத்தைத் திறந்து பார்த்து அங்கு எழுதப்பட்டுள்ள வசனங்களை தேவன் தங்களுக்குத் தந்த வார்த்தையாக எண்ணிக்கொள்கின்றனர்.
அன்பானவர்களே, நாம் அன்பு செய்பவர்கள் நமைக்குறித்துக் கூறுவதனை அறிய நாம் விரும்புவதில்லையா? அதுபோல நாம் உண்மையாகவே தேவனிடம் அன்புள்ளவர்களாக இருப்போமானால் அவரது வார்த்தைகளைப் பெறுவதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருப்போம். இல்லாவிட்டால் ஏனோதானோ மனநிலையில்தான் நாம் வாழ்வோம்.
"அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்" என்று யோபுவைபோல தேவ வார்த்தைகளைக் காத்துக்கொள்ளும் ஆர்வமும் அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டுப் பின்வாங்காத நிலைமையும் நமக்கு இருக்குமானால் யோபுவைபோல நாமும் துன்பங்களைச் சகித்து வாழ முடியும்.
மட்டுமல்ல, நியாயத்தீர்ப்பு நாளில் தேவன் தனது வசனத்தின்படியே நம்மை நியாயம்தீர்ப்பேன் என்கின்றார். எனவே அவரது வசனங்களை நாம் படிப்பதும், தியானிப்பதும் அவற்றை இருதயத்திலே உணவைப்போல பாதுகாத்து வைக்கவேண்டியதும் அவசியம். "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,239 💚 ஜூன் 30, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"அவன் (பிலாத்து) நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்." ( மத்தேயு 27 : 19 )
நல்லவர்கள், தீயோர், தேவனை அறிந்தவர்கள், அறியாதவர்கள் அனைவர்க்கும் தேவன் சிலவேளைகளில் கனவுகள் மூலம் வழிகாட்டுகின்றார். அதுதேவனது அளப்பரிய அன்பினால்தான். தவறான முடிவெடுத்து தங்கள் வாழ்க்கையையும் ஆன்மாவையும் மனிதர்கள் அழித்துவிடக்கூடாது என்பதற்காக தேவன் இப்படிச் செய்கின்றார்.
ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்பவர்கள் கனவுகளின் பொருளை அறிந்துகொண்டு தங்களைத் திருத்திக்கொள்கின்றனர். மற்றவர்களோ அவற்றின் மறைபொருளை உணர்ந்துகொள்வதில்லை. இயேசுவின் தந்தை யோசேப்பை தேவன் கனவுமூலம் வழிநடத்தியதை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். அவர் தேவனது கட்டளைகளை அதன்மூலம் அறிந்து அதற்கேற்றபடி நடந்து தேவ சித்தத்தை நிறைவேற்றினார்.
"தேவனை அறியேன்" என்று கூறிய பார்வோனுக்கும் தேவன் கனவுமூலம் தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவனால் அதன் பொருளை உணர்ந்துகொள்ளமுடியவில்லை. எனவே யோசேப்பு அதற்கான பொருளை உணர்த்திக்கொடுத்து எகிப்தின் அழிவைத் தடுத்து நிறுத்தினார். இதுபோலவே, தானியேல் கனவுக்குப் பொருள்கூறும் வரம் பெற்றவராக இருந்தார்.
இப்படித் தேவன் ஏன் கனவுமூலம் சில காரியங்களை உணர்த்துகின்றார் என்பதற்கு யோபு புத்தகத்தில் பதில் உள்ளது. "அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு, மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்." ( யோபு 33 : 16, 17 ) என்று வாசிக்கின்றோம். இங்கு, மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதுபோலவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நியாயம் விசாரிக்கப்படுவதற்கு முந்தினநாள் பிலாத்துவின் மனைவிக்குத் தேவன் கனவுமூலம் சில உணர்த்துதலைக் கொடுத்தார். எனவே, அவளால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எனவே அவள் "அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்."
ஆனால் பிலாத்து தனது மனைவிமூலம் தேவன் கொடுத்த எச்சரிக்கையினைப் புறக்கணித்தான். இதுபோலவே நாமும் பலவேளைகளில் இருக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, தேவன் அளிக்கும் கனவு தெளிவான கனவாக இருக்கும். அதன்மூலம் நாம் ஒரு செய்தியினை உணர்ந்துகொள்ளமுடியும். அப்போது நாம் அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நடப்போமானால் இக்கட்டுகளுக்கு நீங்கலாகிவிடுவோம்.
எல்லா கனவுகளும் அர்த்தமுள்ளவையல்ல. "தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல...." ( பிரசங்கி 5 : 3 ) என்று நாம் வாசிக்கின்றோம். அதாவது நாம் பல்வேறு தொல்லைகளால் நெருக்கப்படும்போது சரியான உறக்கமில்லாமல் கனவுகள் தோன்றும். ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது கனவுமூலம் தேவன் நம்மோடு பேசுவதை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். தேவன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களோடு பேசுகின்றார். கனவு அவற்றில் ஒன்றாகும்.
எனவே, கனவுகளை நாம் அற்பமாக எண்ணாமல் அவைகூறும் கருத்துக்களை நிதானித்துப் பார்த்து நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும். நமது குடும்பத்து உறுப்பினர்களது செயல்பாடுகளையும் அவற்றைத் திருத்திக்கொள்ளவும் தேவன் இப்படி வழிகாட்டலாம். பிலாத்துவின் மனைவிக்குத் தேவன் இப்படித்தான் தவறுக்கு நீங்கலாக்க வழி காட்டினார். எனவே கனவுகள் நமக்குத் தோன்றும்போது தேவனிடம் அதன் விளக்கத்தைக் கேட்டு அறிவோம்; நம்மைத் திருத்திக்கொள்வோம்.