Wednesday, May 31, 2023

ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை

ஆதவன் 🌞 855🌻 ஜூன் 01, 2023  வியாழக்கிழமை       

 "நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 18 : 10 )


ஒரு உலக அரசாங்கம் ஒருவரைப் பதவியில் வைத்துள்ளது என்றால் அந்தப் பணியாளருக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் சந்திப்பது மட்டுமல்ல, அவர்களது பாதுகாப்புக்கும்  அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.  பதவியில் இருக்கும் ஆட்சித் தலைவர்கள்,  வருவாய்த்துறை அதிகாரிகள், நீதிபதிகள், போன்றோருக்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிப்பதை நீங்கள்  பார்த்திருக்கலாம். இந்த பாதுகாப்பு அவர்கள் தங்கள் பணியைத் தடையில்லாமல் செய்ய உதவுகின்றது.   

இதுபோலவே தேவன் தனது பிள்ளைகள் உலகத்தில் தங்கள் பணிகளைச் செய்யவும் பாவமில்லாத வாழ்க்கைவாழவும் வேண்டிய உதவிகளைச் செய்கின்றார். பவுல் அப்போஸ்தலர் ஊழியத்தில் பயமில்லாமல் தொடர்ந்திட தேவன் அவரைத் திடப்படுத்துகின்றார். பவுலே , "நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.")

ஊழியம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல கர்த்தருடைய பிள்ளைகள் அனைவருக்குமே கர்த்தர் இப்படிக்  கூடவே இருந்து பாதுகாப்பளிக்கின்றார்; உதவுகின்றார். கர்த்தர் இப்படி நம்மோடு இருந்துச்செய்யும் காரியம் சிலவேளைகளில் நாமே கண்டு வியக்கத்தக்கதாகவும் நமக்கு எதிராக செயல்படுபவர்களுக்குப் பார்க்கவே பயங்கரமானதாகவும் இருக்கும்.  மோசே அற்பமான மனிதனாகவே காணப்பட்டார். அவரைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு பெரியதாகத் தெரியவில்லை. எனவேதான் சொந்த இஸ்ரவேலரே அவருக்கு எதிராக செயல்பட முயன்றனர். ஆனால் மோசேக்கு தேவன் வாக்களித்திருந்தார். "உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்." ( யாத்திராகமம் 34 : 10 ) என்று. 

அப்படியே எகிப்தியரும் அவருக்கு எதிராக முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களும் கண்டு பயப்படத்தக்கக் காரியங்களை தேவன் மோசே மூலம் செய்தார்.  

இதுபோல மோசேக்குப்பின் யோசுவாவுக்கு தேவன் வாக்களித்தார். "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 ) அப்படியே கைவிடாமலிருந்து காப்பாற்றினார். இந்த யோசுவா மூலமே இஸ்ரவேல் கோத்திரங்கள் கானான் தேசத்தில் தங்கள் தங்கள் உடைமைகளைப் பெற்றார்கள்.

அன்பானவர்களே, எனவே நாம் சூழ்நிலைகளைப்  பார்த்துக் கலங்கிடாமல் கர்த்தர்மேல் விசுவாசம்கொண்டு வாழ்வோம்.  பவுலுக்கு வாக்களித்து நடத்தியவர்,  மோசேயுடனிருந்து பயங்கரமான காரியங்களைச்  செய்தவர், யோசுவாவை எவரும் எதிர்க்கமுடியாதவாறு பலப்படுத்தியவர் நம்மோடும் இருக்கின்றார்.  தேவன் ஆள் பார்த்துச் செயல்படுபவரல்ல. எனவே அவர் மேல் விசுவாசம்கொண்டு வாழும் நம்மையும் அதுபோல காத்து, பலப்படுத்தி நடத்திடுவார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Tuesday, May 30, 2023

வேதாகம முத்துக்கள் - மே 2023

            

                   - எம். ஜியோ பிரகாஷ் 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                

ஆதவன் 🌞 824🌻 மே 01, 2023 திங்கள்கிழமை 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                

"சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )


நமது உடல் உழைப்பு, சுய முயற்சி எதுவானாலும் அது தேவனைச் சார்ந்ததாக இருக்கவேண்டும். இந்த உலகத்தில் நாம் நன்றாக வாழும்போது நம்மை அறியாமலேயே "நான்" எனும் எண்ண"ம் நமக்குள் வந்துவிடுகின்றது. "நான் நன்றாக படித்ததால் இந்த வேலை எனக்குக்  கிடைத்தது,  நான் கடினமாக உழைத்ததால் இந்தச் செல்வம் எனக்குக் கிடைத்தது" எனப் பலரும் எண்ணிக்கொள்கின்றனர்; சிலர் வெளிப்டையாகக் கூறவும் செய்கின்றனர். ஆனால் இது முற்றிலும் சரி என்று கூறிட முடியாது. தேவன் நினைத்தால் ஒரே நொடியில் எல்லாவற்றையும் அழித்து ஒழிக்க அவரால் முடியும். 

எண்ணிப்பாருங்கள்...., நம்மைவிட நன்றாகப்  படித்தவர்கள் நல்ல வேலை இல்லாமல் இருப்பதையும் படிப்பில் மட்டமாக இருந்தவர்கள் நல்ல வேலையில் இருப்பதையும் பல வேளைகளில் நாம்  பார்க்கலாம். இதுபோலவே, அதிகம்  உழைத்தும் கொஞ்சமாகச் சேர்ந்தவர்களும் உண்டு, கடின உழைப்பு  உழைக்காமல் அதிகம் சம்பாதிப்பவர்களும் உண்டு.   இவைகளே சரீர முயற்சி அற்பப் பிரயோஜனமுள்ளது  என்பதற்குச் சாட்சிகள். 

ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆம், தேவனுக்குப் பயந்த ஒரு உண்மையான பக்தியுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அது இந்த உலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல,  இதற்குப் பின்வரும் வாழ்க்கைக்கும் உபயோகமானதாக இருக்கும்.

"நான்" எனும் எண்ணம் அல்லது அகந்தை நமக்குள் வந்துவிடக் கூடாது என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு உணர்த்தவே, "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 ) என்று கூறுகின்றார். அதாவது நம்மால் எதுவுமில்லை. நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதும் தேவன் தான். தேவனது கிருபை இல்லையானால் நாம் எதனையுமே செய்யத் தகுதியற்றவர்களே.

"கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்." ( 1 சாமுவேல் 2 : 7 ) ஆம், நமது சுய பலமல்ல, தேவனே  நம்மை உயர்த்துகிறவராகவும் தாழ்த்துகிறவராகவும் இருக்கின்றார். 

அன்பானவர்களே, நாம் உழைக்கவேண்டியதுஅவசியம். அது தேவ கட்டளை. ஆனால், வெறும் உழைப்பு மட்டும் நம்மை உயர்த்திவிடாது. தேவனது கிருபை நமக்கு வேண்டும். எவ்வளவு சம்பாதித்தாலும் அது நிரந்தரமல்ல. எனவேதான் இன்றைய வசனம், "சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது"  என்று கூறுகின்றது. 

தேவன் நமக்குத் தந்துள்ள வேலைக்கு, படிப்புக்கு, உடல் பலத்துக்கு  நன்றி சொல்வோம். அவற்றைப் பெருமையாகக் கருதாமல் தேவனைச் சார்ந்து அவருக்கேற்ற வாழ்க்கை  வாழ்வோம். தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.


✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                   ஆதவன் 🌞 825🌻 மே 02, 2023 செவ்வாய்க்கிழமை                                    ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்." ( உன்னதப்பாட்டு 5 : 3 )

வஸ்திரம் அல்லது ஆடை என்பது வேதாகமத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள கழற்றிப்போடப்பட்ட ஆடை பாவ ஆடையினைக் குறிக்கின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெறும்போது நமக்கு இரட்சிப்பின் ஆடை உடுத்தப்படுகின்றது. ஆம், நாம் நமது பாவ ஆடைகளைக் களைந்துவிட்டு புதிய ஆடைகளை உடுத்துகின்றோம். 

புதிய ஆடை என்பது "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 8 ) எனவேதான் என் பழைய பாவ  வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன்? என்று கூறப்பட்டுள்ளது.

ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் திருமண ஆடையில்லாதவன் வெளியேற்றப்படுவதை இயேசு உவமைமூலம் நமக்கு விளக்கினார். "சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்." ( மத்தேயு 22 : 12 ) அவனை வெளியேற்றி தண்டனைக்கு நேராக அனுப்பினார்கள்.

இன்றைய தியான வசனத்தின் தொடர்ச்சியாக நாம் "என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன்" என்றும் வாசிக்கின்றோம். இதுவும் பாவங்கள் கழுவப்படுவதன் அடையாளம்தான். தனது  இறுதி உணவின்போது இயேசு கிறிஸ்து சீடர்களின் பாதங்களைக் கழுவினார். அப்போது "பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது என்றார். இயேசு அவருக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்." ( யோவான் 13 : 8 ) ஆம், பாதங்களைக் கழுவுவது பாவங்கள் கழுவப்படுவதன் அடையாளமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்படிப் பாவங்கள் கழுவப்பட்டு சுத்தமாக்கப்பட்ட நான் எப்படி என் பாதங்களை மீண்டும் அழுக்காக்குவேன்? எனக் கேட்கின்றது இன்றைய வசனம். 

அன்பானவர்களே, இன்றைய வசனத்தின் தொடர்ச்சியான அடுத்த வசனம் கூறுகின்றது, "என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது." ( உன்னதப்பாட்டு 5 : 4 ). ஆடை அழுக்கடையாமல், பாதங்கள் அழுக்காகாமல் காத்துக்கொள்ளும்போது  "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்" ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என இதயக் கதவுகளைத் தட்டும் இயேசு நாம் கதவைத் திறக்குமுன்பே கதவுத் துவாரத்தின் வழியாய்க் கையைநீட்டி நம்மை அணைக்கத் தயாராக இருக்கின்றார். அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

பாவம் செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது "என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன்" எனக் கேட்டு பாவத்துக்கு விலகி நம்மைக் காத்துக்கொள்வோம்.  


✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 826🌻 மே 03, 2023 புதன்கிழமை                                     ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 )

நமது தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமும் நிறைந்தவர். மனிதர்கள் தங்களது பலவீனங்களால் பாவத்தில் விழுந்தாலும் உடனேயே அவர்களைத் தண்டித்துவிடுவதில்லை. 

குழந்தைகள் தவறு செய்யும்போது பெற்றோர்கள் கோபப்படுவது இயல்பு. ஆனால் உடனேயே பெரிய தண்டனையைக் கொடுப்பதில்லை. கோபத்தில் கொஞ்சநேரம் பேசாமல் இருந்தாலும் மீண்டும் குழந்தைகளை அணைத்துக்கொள்வர். காரணம் தவறு செய்யும் குழந்தைகளிடம் தொடர்ந்து கோபத்தில் இருப்போமானால் அந்தக் குழந்தை மனமடிவடைந்திடும். 

இதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார். "நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." என்று. 

மனிதனை உருவாக்கிய ஆரம்பத்திலேயே தேவன் கூறுகின்றார், "என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்." ( ஆதியாகமம் 6 : 3 )

அதாவது மனிதன் வெறும் இரத்தமும் சதையுமுள்ள மாம்சமானவன். அந்த மாம்ச இயல்பு அவனைத் தொடர்ந்து பாவம் செய்யத் தூண்டுகின்றது. கூடிப்போனால் அவன் 120 ஆண்டுகள் பூமியில் வாழ்வான்.  இது தேவனுக்குத் தெரியும். எனவே தொடர்ந்து அவர் மனிதனோடு போராடிக்கொண்டிருக்கமாட்டார்.

இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் அடிகளும், "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை." ( ரோமர் 7 : 18 ) என எழுதுகின்றார். 

அதற்காக நாம் பாவம் செய்வது நியாயமென்று எண்ணிவிடக்கூடாது. பாவத்துக்கு எதிராக நாம் போராடும் போராட்டங்களைத் தேவன் பார்க்கின்றார். உண்மையிலேயே நமது பாவங்களுக்காக நாம் ஆத்துமாவில் வருத்தப்படுவோமானால் தேவனது ஆவியானவர் நமக்கு உதவுவார். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திட ஒப்புக்கொடுக்கவேண்டும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர் களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன்  அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

கிறிஸ்துவின் ஆவியைப் பெற வேண்டுவோம். அப்போதுதான் அவர் பாவத்தைக்குறித்து உணர்த்துவதை நாம் அறிய முடியும். அப்படி ஆத்துமாவில் பாவ உணர்வுள்ளவர்களாக வாழ்வோமானால் அவர் எப்போதும் நம்மோடு வழக்காடமாட்டார்; நம்மீது என்றைக்கும் கோபமாயிருக்கவுமாட்டார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 827🌻 மே 04, 2023 வியாழக்கிழமை                                     ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )

இன்று கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை சபை பாகுபாடுகள் மட்டுமல்ல, தாங்கள் சார்ந்திருக்கும் சபையும் அதன் போதனைகளும்தான் சரியானவை என்பதனை நிரூபிக்க நடைபெறும்  தேவையில்லாத வாக்குவாதங்கள். நியாயப்பிரமாண கட்டளைகள் குறித்து வெவ்வேறுசபைகளும் கூறும் விளக்கங்கள். இவைகளையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் புத்தியீன தர்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றார். 

இத்தகைய தர்க்கங்களும் சண்டைகளும் நம்மை ஒரு மதவாதியாக காட்டுமேதவிர ஆவிக்குரிய மக்களாக அடையாளம் காட்டாது. எனவே இத்தகைய தர்க்கங்களைவிட்டு நாம் விலகி இருக்கவேண்டும் என்று கூறுகின்றார் பவுல் அடிகள்.  கிறிஸ்துவை வாழ்வில் ருசித்தவன் கிறிஸ்துவை மட்டுமே விசுவாசிப்பான், போதிப்பான் அவர் நடந்தபடியே நடப்பான். 

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூதர்களுக்கு சரியான மேசியா யார் என்பதை அடையாளம் காண்பிக்கவேண்டியிருந்தது. அந்தக் காலத்திலேயேகூட இயேசு கிறிஸ்து வீண் தர்க்கங்கள் செய்துகொண்டு இருக்கவில்லை. சத்தியத்தைச் சொல்லிவிட்டு, "கேட்க செவியுள்ளவன் கேட்கக்கடவன்" என்று கூறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். ஏனெனில் தர்க்கம் செய்வது அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். 

சபைகள் நம்மை இரட்சிக்கமுடியாது; கிறிஸ்து ஒருவரே நம்மை இரட்சிக்கமுடியும். ஆனால், முதல்கால கிறிஸ்தவர்களிடையேகூட பிரிவினையும், குறிப்பிட்ட ஊழியர்களைச் சார்ந்து வாழும் அவலமும் இருந்தது. எனவேதான் பவுல் அடிகள், "உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்"  ( 1 கொரிந்தியர் 1 : 12 ) என்று எழுதுகின்றார்.

புத்தியீனமான தர்க்கங்கள், வம்சவரலாறுகள், சண்டைகள், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்கள் இவைகள் எந்த உபயோகமும் இல்லாதவை. உண்மையில் அவைகள் வீண். எனவே, நாம் எந்தச்சபைப் பிரிவைச் சார்ந்தவர்களாக  இருந்தாலும் கிறிஸ்து ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி பேசவேண்டும்.  வீண் தர்க்கங்கள், சபை போதனைகளின் விளக்கங்கள் இவை தேவையில்லாதவை. 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்." ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்று கூறுகின்றார். தர்க்கம் செய்பவன் கிறிஸ்துவை இன்னும் சரியாக அறியவில்லை என்று பொருள். சபை வெறிகொண்ட சில பாரம்பரிய சபைகளைச் சார்ந்தவர்களுக்கு எனது தினசரி தியானம் பிடிக்கவில்லை.  அவர்கள் என்னோடு தர்க்கம் செய்வதில்லையென்றாலும் மனதளவில் வெறுக்கிறார்கள். ஆம், இவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சபைகளை அறிந்தவர்களேதவிர கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. 

சபைகளைச் சார்ந்திருப்பது தவறல்ல; காரணம் நாம் கட்டாயமாக ஒரு சபையோடு இணைந்திருக்கவேண்டும். அதேவேளையில் கிறிஸ்துவை யார் போதித்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனமும் வேண்டும். அத்தகைய குணமுள்ளவர்களே மேலான ஆவிக்குரிய வளர்ச்சி அடையமுடியும். தர்க்கங்களைவிட்டு விலகுவோம் ;கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோம்.


✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 828🌻 மே 05, 2023 வெள்ளிக்கிழமை                                    ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து....." ( 1 தெசலோனிக்கேயர் 3 : 12 )

தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கச்சொன்ன இயேசு கிறிஸ்துவின் போதனையை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் விரிவாக விளக்குகின்றார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் அப்படி வரும்போது நாம் தேவனுக்குமுன் பிழையற்றவர்களும், பரிசுத்தமானவர்கலாகவும் இருக்கவேண்டியது அவசியம். 

இன்றைய வசனத்தின் தொடர்ச்சியினை வாசித்தால் இதனைப் புரிந்துகொள்ளலாம். இங்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக." ( 1 தெசலோனிக்கேயர் 3 : 13 ) என்று எழுதுகின்றார். 

அதாவது, நாம் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்புச்செய்தால்  மட்டும் போதாது  மற்ற எல்லோரிடமும், எல்லா மத இன மக்களுக்கும் அன்புசெலுத்தவேண்டும் என்கின்றார். இதனை, "நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும்.." எனக் கூறுகின்றார். இப்படி அன்பு  செலுத்தினால் மட்டுமே நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்த முள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை தேவன் ஸ்திரப்படுத்துவார் என்கின்றார். 

அப்போஸ்தலரான பவுல் இதனை வெறும் அறிவுரையாகக் கூறாமல், தானும் இதனைக் கடைபிடிப்பதால் கூறுகின்றார். அதனைத்தான், நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், என்று எழுதுகின்றார்.

ஆம், நாம் தேவனுக்கேற்ற பரிசுத்தமுள்ளவர்களாய் மாற முதல்படி எல்லோரையும் அன்புசெய்வதுதான். ஜாதி,  மத இனம் பார்க்காமல் அன்பு செய்வது. ஏனெனில் இதுவே தேவனது குணம். இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் எல்லோரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தேவன் எல்லோரையும் ஒன்றுபோலப் பார்ப்பதால் எல்லோரும் தேவ நன்மைகளைப் பெறுகின்றனர். 

ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் நம்மைப் பெருகச்செய்ய வேண்டுவோம். அப்போது  நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி நமது இருதயங்களை தேவன்  ஸ்திரப்படுத்துவார்" ( 1 தெசலோனிக்கேயர் 3 : 13 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 829🌻 மே 06, 2023 சனிக்கிழமை                                      ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." ( 1 சாமுவேல் 15 : 22 )

வெற்று ஆராதனைக் கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் கூறும் அறிவுரைதான் மேற்படி வசனம். இன்று பலரும் தேவனை  அரசியல் தலைவனைப்போலவே எண்ணிச் செயல்படுகின்றனர். அரசியல் தலைவனுக்கு  அவன் வரும்போது அவனைப் புகழ்ந்து ஆரவாரக்  குரலெழுப்பினாலே போதும், அவன் உள்ளம்  மகிழுவான்ஆனால் நமது தேவன் அப்படிப்பட்டவரல்ல; அவர் உள்ளான மனித மனங்களைப்  பார்கின்றவர். வெற்றுப் புகழ்ச்சிக் கீதங்களும் அல்லேலூயா எனும் அலறல்களும் அவரை மகிழ்ச்சியடையச்  செய்யாது

தேவன் தனது வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பார். நடுங்குகிறவன் என்றால் குளிரால் நடுங்குவதுபோல நடுங்குவதல்லகட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியவேண்டுமெனும் அச்ச் உணர்வுடன் செயல்படுவதுபாவம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்போது  தேவனுக்கு அஞ்சி அவற்றில் ஈடுபடாமல் இருப்பது.

சின்னக் கற்பனையோ  பெரிய கற்பனையோ என்று பார்க்காமல், தேவன் விரும்பாத எந்தச் செயலையும்  செய்யாமல் தவிர்ப்பதையே தேவன் விரும்புகின்றார்

சவுல் அமெலேக்கியரை எதிர்த்துப் போரிடச் சென்றான். அப்படிச் செல்லும்போதுஅமெலேக்கியரை வெற்றிகொள்ளும்போது அவர்களையும் அவர்களது கால்நடைகளையும் அழித்துவிடுமாறு தேவன் சாமுவேல் தீர்க்கத்தரிசி மூலம் சவுலுக்குச் சொல்லியிருந்தார். ஆனால் சவுல் போரில் வெற்றிபெற்றபோது தேவனது வார்த்தைகளுக்குச்  செவிகொடுக்கவில்லை. அவன் தரமான  ஆடு மாடுகளை தனக்கென்று   உயிரோடு வைத்துக்கொண்டு அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்துப்போட்டான்

சாமுவேல் அதுபற்றி சவுலிடம் கேட்டபோது  சவுல், ஆடுமாடுகளில் நலமானவைகளை தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்ததாகக் கூறினான். (  1 சாமுவேல் 15 : 15 ) அதற்கு மறுமொழியாகவே சாமுவேல்,  இன்றைய வசனத்தைக் கூறுகின்றார்.

பலர் இன்று சவுலைப்போலவே இருக்கின்றனர். காணிக்கைகளையும், ஆலய காரியங்களுக்கும் ஊழியங்களுக்குஊழியர்களுக்கு, மிஷனரி பணிகளுக்கு  அள்ளி வழங்குவதையும் தாராளமாக, பெருமையாகச் செய்கின்றனர். ஆனால் தேவனது வார்த்தை இவர்களது வாழ்வில் செயலாவதில்லை. தாழ்மை, பொறுமை, அன்பு, விட்டுக்கொடுத்தல் என்று எந்த கிறிஸ்தவ பண்புகளும் இவர்களுக்கு இருப்பதில்லை

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? தேவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் ஊழலிலும் லஞ்சத்திலும், அடிதடி அரசியலிலும், கணவன் மனைவி சண்டையிலும் ஈடுபட்டுக்கொண்டு ஞாயிறு ஆராதனையில் உருக்கமுடன் வேண்டுதல் செய்வது, பாடுவது கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?

ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளிலும்கூட பல விசுவாசிகள் இத்தகைய தேவனுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் காண  முடிகின்றது. வாழ்க்கை இத்தகைய மாற்றமில்லாத ஆராதனைகள் தேவனுக்கு ஏற்புடைய ஆராதனைகளல்ல.

"நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிரகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண்காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்...........உங்கள் சபைக் கூட்டத்தையும் நான் சகிக்கமாட்டேன்." (ஏசாயா - 1 : 12, 13 ) என்கின்றார் கர்த்தராகிய பரிசுத்தர். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 830🌻 மே 07, 2023  ஞாயிற்றுக்கிழமை                                    ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️


"இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ!" ( மத்தேயு 18 : 7 )

இடறல் என்பது ஒருவர் செல்லும்  சரியான வழியைவிட்டு அவரை  வழி விலகச்செய்வது. இந்த இடறல் ஆவிக்குரிய காரியத்திலும் உலகக் காரியங்களிலும் நமக்கு ஏற்படலாம். சில வேளைகளில் நாம் எடுக்கும் முடிவுகளைச் சிலர் சந்தேகத்துக்குரிய கேள்விகளை எழுப்பி நம்மைக் குழப்பமடையச் செய்வார்கள். இதுவே இடறல்.

ஆனால் இங்கு இயேசு கிறிஸ்து கூறும் இடறல் ஆவிக்குரிய காரியங்களில் ஒருவரை இடறலடையச் செய்வது. சரியான ஆவிக்குரிய வழியையும் சத்தியத்தையும்விட்டு ஒருவரை வழிவிலகச் செய்வது. அல்லது ஒருவரைப்  பாவத்தில் விழச்செய்வது; விழக்கூடிய சூழலை உருவாக்குவது. இப்படிச் செய்பவர்களுக்கு ஐயோ கேடு.

இன்றைய வசனத்தில், இடறல்கள் வருவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது இடறல்கள் ஏன் அவசியமென்றால் அவை ஆவிக்குரிய வாழ்வில் ஒரு தேர்வுபோல இருக்கின்றது. இடறலான காரியங்களை நாம் மேற்கொள்ளும்போது ஆவிக்குரிய வாழ்வில் ஒருபடி முன் செல்கின்றோம். இத்தகைய ஒரு இடறலைத்தான் சாத்தான் ஆதாம் ஏவாளுக்குக் கொண்டுவந்தான். ஆனால் அவர்கள் அந்தத் தேர்வில் தோல்வியடைந்தார்கள். 

இயேசு கிறிஸ்துவையும்  சாத்தான் இடறலடையச் செய்யப்பார்த்தான். (லூக்கா 4 : 3-12 ) ஆனால் அவர் இடறலை வெற்றிகொண்டார். இவைதவிர பல்வேறு இடங்களில் யூதர்களாலும், பரிசேயர் சதுசேயர்களாலும் இயேசு கிறிஸ்து இடறல்களைச் சந்தித்தார். ஆனால் அவற்றில்  வெற்றிகொண்டார்.  

ஒருவரை இடறலடையச் செய்வது மிகக்கடுமையான பாவம். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி, முத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்."  (மாற்கு 9:42)

இதுபோல ஊழியங்களில் ஈடுபடுபவர்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் தவறான போதனைகள், வழிகாட்டுதல்கள் பலரை நரகத்துக்கு நேராக இழுத்துச் சென்றுவிடும். அப்போஸ்தலரான பவுல் இதில் தான் கவனமாக இருப்பதாகக் கூறுகின்றார். "இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்". (2 கொரிந்தியர் 6:3) என  எழுதுகின்றார் அவர். 

எனவே நாம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சாட்சியற்ற கிறிஸ்தவ வாழ்வும் மற்றவர்களுக்கு இடறல்தான்.  ஏனெனில் கிறிஸ்துவை அறியாத மக்கள், கிறிஸ்தவர்கள் எனும் பெயர் பெற்றிருக்கும் நம்மைத்தான் மாதிரியாகப்   பார்ப்பார்கள்.  நமது வாழ்வே சாட்சியற்று இருக்குமானால் அவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள நாம் இடறலாக இருக்கின்றோம் என்று பொருள். 

சாட்சியுள்ள,  மற்றவர்களுக்கு இடறல் ஏற்படுத்தாத வாழ்க்கை வாழ்வோம்; அதன்மூலம் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிப்போம். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 831🌻 மே 08, 2023  திங்கள்கிழமை                                  ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ( ரோமர் 12 : 2 )

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவம் பெறும்போது நாம் புதிய மனிதனாகின்றோம்; நமது மனமும் புதிதாகின்றது. இப்படி நாம் மாற்றப்படுவதால் நம்மால் இந்த உலகத்தோடு பல விஷயங்களில் ஒத்துபோகமுடிவதில்லை. 

ஆனால், ஆவிக்குரிய அனுபவங்களைச் சுவைத்தபின்னரும் சிலர் உலக நன்மைகளுக்காக இந்த உலக மனிதர்களுக்கு ஒப்பாக தங்களை மாற்றிக்கொள்கின்றனர். அதாவது தங்களது சுய லாபத்துக்காக சாதாரண மனிதர்களைப்போல நடந்துகொள்கின்றனர். கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பெற்ற அனுபவங்களை துணிந்து மறந்துவிடுகின்றனர். இதனையே இன்றைய வசனம் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் என்று  கூறுகின்றது. 

ஆவிக்குரிய மனிதர்களாகிய நாம் இப்படி வேடம்தாரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக வாழவேண்டும். நமது மனம் கிறிஸ்துவினால் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் இப்படி நாம் வாழும்போது ஆவிக்குரிய வாழ்வில் மறுரூபமடைந்து மேலும் மேலும் வளர்ச்சியடைவோம். 

இப்படி வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்று இதற்கு முந்தின வசனத்தில் பவுல் அடிகள் விளக்குகின்றார்.  அதாவது நாம் வீண் ஆராதனை செய்யாமல் புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக இருக்கவேண்டும். அது என்ன புத்தியுள்ள ஆராதனை? நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். ( ரோமர் 12 : 1 ) இதுவே நாம் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.

அன்பானவர்களே, நாம் நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து வாழ்வோமானால் உலகத் தேவைகளுக்காக பிற மனிதர்களைப்போல வேஷம் தரிக்கமாட்டோம்.

பரிசுத்தவான்கள் எல்லோருமே இப்படி வாழ்ந்தவர்கள்தான். தங்களது உயிரே போகக்கூடிய நிலையிலும் அவர்கள் உலகத்தோடு ஒத்துப்போகாமல் கிறிஸ்துவுக்காகத் தங்களது உயிரையும் கொடுத்தனர். இன்று நமக்கு அப்படி உயிரைக் கொடுக்கத்தக்க இக்கட்டுகள் ஏற்படவில்லை. விசுவாசத்தை லேசாக அசைக்கும்  சிறிய சிறிய நெருக்கடிகள், துன்பங்கள்தான் நமக்கு ஏற்படுகின்றன. எனவே கபட வேடம் தரிக்காமல், உலக மனிதர்கள் எல்லோரும் இப்படிச் செய்கிறார்களே நாமும் செய்தால் என்ன என எண்ணாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து வாழ்ந்து நமது மனங்களை மறுரூபமாக்குவோம்  

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 832🌻 மே 09, 2023  செவ்வாய்க்கிழமை                                ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 )

இயேசு கிறிஸ்து இங்கு ஆவிக்குரிய வாழ்வில் தேவ ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான குணத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இது ஊழியர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையாக இருந்தாலும் நாம் அனைவருமே வாழ்வில் பின்பற்றவேண்டிய ஒரு பண்பு. அதாவது சில சின்னச் செயல்களைச் செய்துவிட்டு பலரும் அதனைப் பெரிதாக விளம்பரப்படுத்துவதுண்டு. ஆனால் அப்படிச் செய்வது தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல என்று கிறிஸ்து குறிப்பிடுகின்றார்.

வேலைக்காரனின்  பணி தனது எஜமான் கட்டளையிட்டப் பணிகளை செய்து முடிப்பது. எஜமான் எப்போதும் தனது வேலைக்காரனை வேலைக்காரனாகத்தான் பார்ப்பானேத் தவிர அவன் தனக்கு உதவுவதால் அவனைத் தனியாக சிறப்பாகக் கவனிக்கமாட்டான். அதனைத்தான் இயேசு கிறிஸ்து"உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?" ( லுூக்கா 17 : 7 ) என்று கூறுகின்றார்.

மேலும், "தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே." (  லுூக்கா 17 : 9 ) ஆம் வேலைகாரனது வேலை தனது எஜமான் கட்டளையிட்டவைகளைச் செய்து முடிப்பது. "அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 ) அதாவது நாம் தேவனது ஊழியங்களுக்காகச் செய்யும் செயல்கள் குறித்து நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. அது நமது கடமை. அதற்காகவே தேவன் நம்மை நியமித்துள்ளார்.

இதில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அதாவது வேலைக்காரன் செய்த செயல்களுக்குக் கைமாறாக எஜமான் ஒன்றும் கொடுக்காமல் விட்டுவிடமாட்டான். மாறாக, அவனுக்கென்று நியமிக்கபட்டக் கூலியைக் கொடுப்பான். அதாவது நியமிக்கப்பட்ட பணியை வேலைக்காரன் செய்வது அவனது கடமை. அதற்கானக் கூலியைக் கொடுப்பது எஜமான்.

ஆனால் நமது பரலோக எஜமான் தனது ஊழியர்களை மதிப்போடு நடத்துகின்றார். "ஒருவன் எனக்கு ஊழியம்செய்தால் பிதாவானவர் அவனைக் கனம்  பண்ணுவார்" (யோவான் 12:26) என்று கூறியுள்ளார். ஆனால் ஊழியக்காரர்கள் நிலைமை இன்று வேறாக இருக்கின்றது. எஜமான் குறிப்பிட்டப் பணியைச் சரியாகச் செய்யாமல் இருந்துகொண்டு வலுக்கட்டாயமாக எஜமானிடம் கூலியைப் பெற முயலுகின்றனர். ஆம், இன்று எஜமான் கூலியைக் கொடுப்பான் எனும் நம்பிக்கையும் இல்லை; எஜமான் விரும்பும் சித்தப்படியான வேலையும் பலர் செய்வதில்லை.

அன்பானவர்களே, ஊழியம் செய்பவர்கள் மட்டுமல்ல, நாம் இன்று வேறு உலக வேலைகள் செய்தாலும் இந்த நல்ல குணம் நமக்கு வேண்டும். செய்யக்கூடிய வேலையை நாம் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சனையில்லாமல், நம்மைப் பணியில் அமர்த்தியவருக்கு  உண்மையாக செய்யவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலரான கூறுகின்றார், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்."( கொலோசெயர் 3 : 24 )

இப்படி உண்மையாய் பணி செய்யும்போது நிச்சயமாக தேவனது பார்வையிலும் மனிதர்களது பார்வையிலும் நாம் மதிப்புமிக்கவர்களாக விளங்குவோம்.


✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 833🌻 மே 10, 2023  புதன்கிழமை                              ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." ( எரேமியா 13 : 23 )

மனிதர்கள் பொதுவாக இயற்கையில் நற்குணங்கள் உள்ளவர்களாக இருப்பதில்லை. சிறு வயது குழந்தைகளைக் கவனித்துப்பார்த்தாலே இது புரியும். இரண்டு சிறு குழந்தைகளிடம் ஒரு பொருளைக்கொடுத்தால் இரண்டு குழந்தைகளும் ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்வதும், சண்டையிடுவதையும் அந்தப் பொருள் தனக்குத்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதையும் நாம் பார்க்கலாம். இந்த மனித குணமே அவர்கள் வளரும்போது போட்டி, பொறாமை, வஞ்சகம், தந்திரம் போன்ற குணங்களாக மாறுகின்றன. 

எனவேதான் தாவீது, "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்." ( சங்கீதம் 51 : 5 ) என்று கூறுகின்றார். இந்த மோசமான மனித குணம் எவ்வளவு நற்போதனைகள் செய்தாலும் முற்றிலுமாக மாறிவிடுவதில்லை. ஓரளவு மாறினாலும் தேவைக்கேற்ப மனிதன் தனது துர்க்குணத்தைக் காட்டிவிடுகின்றான். இதனையே இன்றைய வசனம், "எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." ( எரேமியா 13 : 23 ) என்று கூறுகின்றது. 

எத்தியோப்பியனான நீக்ரோ மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றமுடியாது, சிவிங்கி, சிறுத்தை போன்ற மிருகங்கள் தங்கள் உடலிலுள்ள புள்ளிகளை மாற்றமுடியாது. அப்படி அவைகள் மாற்றக் கூடுமானால் நீங்களும் நம்மை செய்யக்கூடும் என்கிறார் கர்த்தர். அதாவது, மனிதர்கள் தாங்களாக நன்மை செய்ய முடியாது என்கின்றது இந்த வசனம்.    

இப்படித் தன்னால் நன்மைசெய்ய முடியாத மனிதர்களை நன்மைசெய்ய வைக்கவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். ஆம், அவரே இதற்கு வழி. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "..........ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 )

ஆம் அன்பானவர்களே, நாம் நீதி போதனைகளைக் கேட்பதாலோ, நீதி நூல்களைக் கற்பத்தாலோ, பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்பதாலோ தேவனுக்கேற்றவர்களாக மாறிட முடியாது. அதற்கு ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொள்வதுதான். தேவனுக்கேற்ற கனி கொடுப்பவர்களாக நாம் மாறவேண்டுமானால், கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட வேண்டியது அவசியம். 

எனவேதான், ".......கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இதுவரை நாம் செய்த பாவங்களை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது, இரத்தத்தால் கழுவப்பட்டு, பாவ மன்னிப்பு பெற்று அவரோடு நம்மை இணைத்துக்கொள்வோம். அப்போது மட்டுமே தீமை செய்யப் பழகிய நம்மாலும் நன்மை செய்ய முடியும். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 834🌻 மே 11, 2023  வியாழக்கிழமை                            ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்." (  1 பேதுரு 5 : 8 )

அப்போஸ்தலனாகிய பேதுரு பிசாசின் குணத்தைப்பற்றி தெளிவாக விளக்குகின்றார். ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளைக் கவிழ்த்துப்போட்ட பிசாசு தனது தந்திரங்களை இன்னும் நிறுத்தவில்லை. பெருமையினால் தான் இழந்துபோன பரலோக இன்பத்தை மனிதர்கள் அனுபவித்து விடக்கூடாது என்பதில்  அவன் வைராக்கியமாக இருக்கின்றான். இதனால்தான் கர்ஜிக்கிற சிங்கம் போல சுற்றித்திரிகின்றான்.

இயேசு கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டு மரித்து உயிர்த்தபோது பிசாசின் தலையை நசுக்கினார்அதனால்  தலை நசுக்கப்பட்ட ஆதி சர்ப்பம் இப்போது வலு இழந்தவனாக இருக்கிறான்.  தேவனுக்கு கீழ்ப்படிந்த  ஒரு வாழ்க்கை வாழும்போது சிங்கம் போன்ற பிசாசு நம்மைவிட்டு ஓடிப் போவான்

"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." யாக்கோபு 4 : 7 )

ஆனால் மனிதர்கள் நாம் பெரும்பாலான வேளைகளில் இந்த வசனத்துக்கு மாறி நிற்கின்றோம். பிசாசைக்  கண்டு பயந்து ஓடுகின்றோம் ஆனால் பாவத்துக்கு எதிர்த்து நிற்க முயன்று தோல்வியடைந்து பாவத்தில் விழுகின்றோம்.  காரணம் நாம் பல பாவ காரியங்களைப் பாவம் என்று எண்ணுவதில்லை. பிசாசு நமது மனதை மயக்கி வைத்துள்ளான். "இதெல்லாம் பெரிய பாவமா?" எனும் எண்ணத்தை நம்மில் விதைப்பதே பிசாசுதான்

எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்". (  யோவான் 8 : 44 )

இந்தப் பிசாசை எதிர்த்து நிற்கக்கூடிய வல்லமையையும் அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்துள்ளார். போர் செய்பவன் எப்படித்  தன்னைப் பாதுகாத்திட சில கவசங்களையும் எதிரியைத் தாக்கிட சில ஆயுதங்களையும் வைத்திருப்பானோ அதுபோல நமக்கும் தேவன் சில பாதுகாப்புக் கவசங்களையும் ஆயுதங்களையும் தந்துள்ளார். இதனைப் பவுல் அடிகள்

"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்". (  எபேசியர் 6 : 11 ) "ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" (  எபேசியர் 6 : 13 ) என்று கூறுகின்றார். அவை என்ன கவசங்கள், ஆயுதங்கள் ?

சத்தியம் என்னும் கச்சைநீதியென்னும் மார்க்கவசம்சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம் , இரட்சணியமென்னும் தலைச்சீராய்தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்எபேசியர் 6 : 14-17 )

மேற்குறிப்பிட்ட பாதுகாப்புக் கவசங்களையும், போர் ஆயுதங்களையும் நாம் கையாண்டால் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரியம் பிசாசு நம்மை விட்டு ஓடுவான்.

இந்தக் கவசங்களும் ஆயுதங்களும் நம்மிடம் எப்போதும் இருக்கின்றதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ளவேண்டும். அன்பானவர்களே பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் பலத்துடன் வாழ்ந்து ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி பெறுவோம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 835🌻 மே 12, 2023  வெள்ளிக்கிழமை                          ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்." ( ஏசாயா 59 : 19 )

அநேகம் மக்கள் தங்களது வாழ்க்கையில் வரும் துன்பங்கள், நோய்கள், பிரச்சனைகளுக்கு சாத்தான் அல்லது சத்துருவானவன்தான் காரணம்  என்று எண்ணிக்கொள்கின்றனர். "பிரதர், ஒரே சத்துரு போராட்டமாய் இருக்கிறது, எனக்காகவும் எனது குடும்பத்துக்காகவும்  ஜெபித்துக்கொள்ளுங்கள்" என்று சிலர் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு. 

சத்துருவானவன் அல்லது சாத்தான் மனிதர்களது ஆத்துமாவை அழித்து ஒழித்திட அதாவது நம்மை தேவனை விட்டுப் பிரித்து நமது விசுவாச வாழ்வைச்  சீர்குலைத்திட, ஆதிகாலமுதல் போராடிக்கொண்டிருக்கிறான். கோடிக்கணக்கான ஆத்துமாக்களையும்   அழித்துக்கொண்டிருக்கிறான்.  சாத்தான் என்றால் கருப்பு உடலமைப்பு, கோரமான பற்கள், பார்க்கவே பயங்கரமானதும் அருவெறுப்புமான தோற்றம் இவைகளே நமது கண்களுக்குமுன் வரும். ஆனால் இவை மனிதர்களால் கற்பனைசெய்யப்பட்டத்  தோற்றமே. 

ஆதியில் ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளை வஞ்சித்த சாத்தான், ஞானத்தால் நிறைந்தவன்,  பூரண அழகுள்ளவன், என வேதாகமத்தில் சாத்தானைக் குறித்து பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"....கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது........" ( எசேக்கியேல் 28 : 12, 13 )

இப்படி ஞானமும் அழகும் நிறைந்தவன்தான் சாத்தான். மனிதர்களை எப்படி வஞ்சிக்கவேண்டுமென்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இந்தச் சாத்தான் பெரு வெள்ளம் மக்களை அழித்தொழிக்க வருவதுபோல ஆக்ரோஷமாக போராடிவருகின்றான். ஆனால் நாம் ஆவிக்குரிய பலமுள்ளவர்களாக வாழும்போது அவனால் நம்மை நெருங்க முடிவதில்லை.   ஆவியானவர் அவனுக்கு எதிராகக் கொடியேற்றுவார் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

கொடியேற்றுவது வெற்றியின் அடையாளம். அன்று தமிழ் மன்னன் சேரன் இமயத்தில் கொடி  ஏற்றினான் என்று படிக்கின்றோம். நிலவில் கால்பதித்த மனிதன் அங்கு அமெரிக்க நாட்டின் கொடியைப் பறக்கவிட்டான். அதாவது கொடியேற்றுவது அந்த இடத்தை வெற்றிகொள்வதைக் குறிகின்றது. அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது. சாத்தான் வெள்ளம்போல எதிர்த்து வந்தாலும் கர்த்தர் அவனுக்கு விரோதமாய்ப் போராடி வெற்றிக்கொடி ஏற்றுவார். 

மேலும், "தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்." ( சங்கீதம் 74 : 13 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே,  தேவனுக்கேற்ற ஆவிக்குரிய வாழ்க்கை நாம் வாழும்போது சத்துருவான வலுசர்ப்பம்  நமது வாழ்வில் எத்தகைய வெறித்தனமான தாக்குதல் நடத்தினாலும் கர்த்தருடைய ஆவியின் வல்லமையால் அவனை வெற்றிகொண்டு நாம் வெற்றிகொடியேற்ற முடியும். 

எனவே, சத்துருவான சாத்தானின் செயல்பாடுகளைக்கண்டு நாம் அஞ்சிடவேண்டாம். நமது ஆவிக்குரிய வாழ்வைப் பலமுள்ளதாக்குவோம். "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்." ( ரோமர் 16 : 20 ) 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                 ஆதவன் 🌞 836🌻 மே 13, 2023  சனிக்கிழமை                        ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை." ( சங்கீதம் 44 : 6 )

நமது சுய பலத்தை நம்புவதைவிட கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பதை இன்றைய வசனம் நமக்கு உணர்த்துகின்றது. வில், பட்டயம் (வாள்) இவை நமது சுய பலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள். என்னிடம் இந்த உலகத்தில் வெற்றி வாழ்க்கை வாழ்ந்திட, வில், வாள் போல பல தகுதிகள் உள்ளன. நல்ல படிப்பு, பதவி, பொருளாதார வசதிகள் இவை எனக்கு இருக்கின்றன என எண்ணி இவைகளை நம்பி நாம் வாழக்கூடாது என்கின்றது இந்த வசனம். 

இத்தகைய உலக சிறப்பம்சங்கள் நம்மை எப்போதும் வெற்றியடையச் செய்திடாது. எனவேதான் இவைகளை நான் நம்பமாட்டேன் கர்த்தரையே நம்புவேன் என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். இதனை இன்றைய தியான வசனத்தின் தொடர்ச்சியான அடுத்த வசனத்தில், "நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்." ( சங்கீதம் 44 : 7 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, நமக்கு இத்தகைய உலக காரியங்களே பலம் என்று நாம் வாழ்வோமானால் சிலவேளைகளில் அவையே நமக்கு எதிராகத் திரும்பிவிடும்.  அல்லது அவைகளை நம்மால் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். தங்களது பதவி, புகழ், செல்வாக்கு இவைகளையே நம்பி இந்த உலகத்தில் வாழ்ந்த பல தலைவர்கள் தங்களது பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர்.  அதாவது இந்தத் தலைவர்களுக்கு வாளாகவும் வில்லாகவும் இருந்து பாதுகாப்புக் கொடுப்பார்கள் என நம்பியவர்களே அந்தத் தலைவர்களைக் கொன்றுள்ளனர். 

தேவனைத தவிர இந்த உலகத்திலுள்ள அனைத்துமே நம்ப முடியாதவை. ஏனெனில் அனைத்து வசதிகளும் இருந்தும் அவற்றை நாம் அனுபவிக்க கர்த்தரது கிருபை அவசியம். உலகப்புகழ்பெற்ற பெண் டிசைனர்.( Crisda Rodriguez) செப்டம்பர் 9, 1987 அன்று கேன்சரால் இறந்தார்.  அவர் இறப்பதற்குமுன் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் எழுதிய வார்த்தைகள்..  

"மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்துச்  செல்லப் படுகிறேன்.!  இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.!  என் வங்கிக்  கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!  என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். 

இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஒரு லேபிலிருந்து (lab) மற்றொரு லேபிற்க்கு மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!  அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை... உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு மட்டுமே உணவு!  தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்....  எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை... எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை..."

ஆம், "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்." ( சங்கீதம் 44 : 6, 7 ) உலகச் செல்வங்கள், பதவிகளையல்ல, கர்த்தரையே நம்பி வாழ்வோம்; மெய்யான ஆசீர்வாதம் பெறுவோம். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 837🌻 மே 14, 2023  ஞாயிற்றுக்கிழமை                      ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்." ( சங்கீதம் 18 : 19, 20 )

தாவீது ராஜா தனது வாழ்வின் ஆரம்பகாலமுதல் பல்வேறு பிரச்சனைகளையும் சோதனைகளையும் சந்தித்துவந்தார். உயிரே போகக்கூடிய நிலைமையையும் அவர் பல வேளைகளில் சந்தித்தார்.  தாவீதை எப்படியாவது கொலைசெய்திட வேண்டுமென்று சவுல் வெறிகொண்டு அலைந்தான். ஆனால் தாவீது கர்த்தருக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழத் தீர்மானித்து வாழ்ந்ததால் தேவன் தாவீதைத் தப்புவித்தார். மட்டுமல்ல, தேவனது இருதயத்துக்குப் பிரியமானவன் என்று தாவீது பெயர் பெற்றார். 

ராஜாவாயிருந்த சவுலைத் தள்ளிவிட்டு, "....தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்." என்று வாசிக்கின்றோம்.
( அப்போஸ்தலருடைய நடபடிகள் 13 : 22 ) ஆம்;  தாவீது கர்த்தருக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்தார். 

எனவே தேவன் தாவீதோடு இருந்து அவரைக் காப்பாற்றி மொத்த இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார். இதனைத்தான் தாவீது இன்றைய தியானத்துக்குரிய  வசனத்தில் குறிப்பிடுகின்றார்:  "என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்." என்று. 

அன்பானவர்களே, நமது தேவன் நீதியைச் சரிக்கட்டக்கூடிய தேவன். அவர் யாருக்கும்  கடனாளியாவதில்லை. நாம் செய்யும் நீதிக்குத் தக்கதாகவும் அதற்குமேலும் அவர் நமக்குச் செய்ய ஆர்வமாயிருக்கிறார். 

நாம் நமக்கு தேவன் என்னென்ன செய்யவேண்டுமென்று பட்டியலிட்டு வேண்டுதல் செய்கின்றோம். ஆனால் அவற்றை நிறைவேற்ற தேவன் விரும்புவது ஒன்றே. அது நீதியுள்ள வாழ்க்கை; பாவமற்ற, கைகள் தூய்மையான ஒரு வாழ்க்கை.  இப்படி வாழ்ந்ததால், என்  நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார் என்கின்றார் தாவீது.    

நமது தேவன் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவதில்லை. தாவீதுக்குச் செய்தாரென்றால் நிச்சயமாக நமக்கும் செய்வார். நாம் பலவேளைகளில் ஜெபங்களுக்கும் இதர ஆவிக்குரிய காரியங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துவிட்டுத்  தாவீது கூறும் நீதி, நேர்மை, தூய்மை போன்ற காரியங்களில் தவறிவிடுகின்றோம்.  

தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ நம்மை  ஒப்புக்கொடுப்போம். அப்போது, நம்மேல் அவர் பிரியமாயிருந்து, விசாலமான இடத்திலே நம்மைக் கொண்டுவந்து, நம்மைத் தப்புவிப்பார். நமது கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டுவார்."

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 838🌻 மே 15, 2023  திங்கள்கிழமை                    ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"......கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே". ( யாக்கோபு 5 : 7, 8 ) 

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தை நியாயம்தீர்க்க்கும் நியாயாதிபதியாய் பூமிக்கு வரவிருக்கின்றார். அப்படி அவர் வரும்போது அவரோடு நாமும் சேர்த்துக்கொள்ளப்படத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. 

ஒரு விவசாயி பயிற்செய்யும்முன் மழைக்காகக் காத்திருக்கின்றான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் மாதம் பருவமழை துவங்குமென்பதால்  விவசாயிகள் அதற்குமுன்பே கடலை, நெல்  அல்லது இதர பயிர்களுக்கான விதைகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு எப்போது மழை பொழியுமென்று காத்திருக்கின்றனர். முன்மாரி எனும் முதல் மழை பெய்தவுடனேயே விதைகளை விதைக்கின்றனர். அந்த நீர்ப்பதத்தில் விதைகள் முளைத்து எழும்பும். 

ஆனால் தொடர்ந்து அடுத்த பின்மாரி மழை பெய்திடவேண்டும். அப்போதுதான் முளைத்த பயிர்கள் மேற்கொண்டு வளரும். இவை ஒரேநாளில் நடைபெறுவதில்லை; அந்த விவாசாயிகள் காத்திருக்கின்றனர். இதனையே, இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

இந்த விவசாயிகளைப்போல நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே என்று அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார். 

அதாவது விவசாயிகள் மழைக்காக காத்திருப்பது மட்டுமல்ல, முதலில் பயிர்ச்செய்வதற்காக நிலத்தைப் பண்படுத்தி பல்வேறு முன்னேற்பாடுகளைச்  செய்கின்றனர். அதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவதற்குமுன் நாம் நமது இருதயங்களை அவருக்கு ஏற்புடையதாக பண்படுத்திதயார் நிலையில் இருக்கவேண்டும். அதனையே, கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே என்று நம்மை  உணர்வூட்டுகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

நாம் நமது இருதயங்களை நாமாக ஸ்திரப்படுத்த முடியாது. நமது இருதயத்தை தேவன்தான் பலப்படுத்தமுடியும். ஏனெனில் நாம் இந்த உலகத்தில் பல்வேறு துன்பங்கள், சோதனைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றோம். நம்மைக்கொண்டு எதுவும் செய்திடமுடியாது. எனவே அவருக்கு நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். 
 
எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார், "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" ( 1 பேதுரு 5 : 10 ) என்று. தேவனையே சார்ந்துகொண்டு நமது இருதயங்களை ஸ்திரப்படுத்தி கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 839🌻 மே 16 2023  செவ்வாய்க்கிழமை                  ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 : 41, 42 )

இன்று கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும்  பலரும் வேதாகமக் கல்லூரிகளில் படிப்பதையும், பல்வேறு பட்டங்களையும் திருச்சபைப் பதவிகளை அடைவதையும் பெருமையாக  எண்ணிக்கொள்கின்றனர். வேதாகமத்தில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்று தங்கள் பெயருக்குமுன் அதனைப் பதிவுசெய்வதிலும்  ஆர்வமாக இருக்கின்றனர். வேத அறிஞர், தீர்க்கத்தரிசன வரம் பெற்றவர் எனது தங்களை அழைத்துக்கொள்வதில் மனதளவில் இன்பம் காணுகின்றனர்.   

ஆரம்ப கால கிறிஸ்தவ ஊழியம் செய்த அப்போஸ்தலர்கள் இதற்கு மாறாக, கிறிஸ்துவின் பெயருக்காக தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷப்பட்டார்கள் என்று இன்றைய வசனத்தில் வாசிக்கின்றோம். ஆம், உலக மனிதர்களால் அற்பமாக எண்ணப்படுபவர்களையே தேவன் உயர்த்தி ஆசீர்வதித்து அவர்கள்மூலம் பல ஆவிக்குரிய ரகசியங்களை வெளிப்படுத்துகின்றார். 

வேதாகம கல்லூரி படிப்பு படிக்காத பலர்தான் ஆவிக்குரிய மேலான அனுபவம் உள்ளவர்களாக இருப்பதை அனுபவபூர்வமாக அறிந்துள்ளேன். என்னை ஆவிக்குரிய வாழ்வில் ஆரம்பத்தில் வழிநடத்திய இந்தியன் பெந்தெகொஸ்தே சபை (IPC) பாஸ்டர் பெரியவர் ஜாண்சன் டேவிட் அவர்கள் வேதாகம கல்லூரியில் படித்தவரல்ல. ஆனால் அவரைப்போல தேவ அனுபவமும் வழிநடத்துதலும் வெளிப்பாடுகளும் பெற்ற ஊழியர்களை இதுவரை நான் பார்க்கவில்லை. ஆனால் பலரும் அவரை அற்பமான மனிதராகவே கருதினர்.   

"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." (1 கொரிந்தியர் - 1:27, 28)

அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போன அப்போஸ்தலர்களால் ;  அவர்களது பிரசாங்கத்தால் ஐயாயிரம், மூவாயிரம் என மக்கள் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்வர்களாக மாறினர்.  ஆனால் அப்போதிருந்த ஞானிகள் கிறிஸ்துவை அறியவில்லை.

அன்பானவர்களே, கிறிஸ்துவை நாம் அறிவிப்பதால் நமது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள்  நம்மைப்பற்றி என்ன எண்ணுகின்றார்கள் என்று நாம் கவலைப்படவேண்டியதில்லை. புகழ் பெற்ற ஊழியர்களைப்போல நாம் இல்லை என்பதால்  நம்மைக்குறித்துச் சிலர்  அற்பமாக எண்ணலாம்;  பணத்துக்காக ஊழியம்செய்ய வந்ததாக பலர் எண்ணலாம். ஆனால் நமது உண்மையான எண்ணமும் நாம் செய்யும் பணிகளும் இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். 

சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியேறி இயேசுவே கிறிஸ்து என்று அறிவித்த அப்போஸ்தலர்களைப்போல பிறரால் அற்பமாக எண்ணப்படும் நாமும் கிறிஸ்துவை அறிவிப்போம்.  கர்த்தர் நம்மைக்கொண்டும் பலரை தனதுபக்கமாகத் திரும்புவார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 840🌻 மே 17 2023  புதன்கிழமை                ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே" ( கலாத்தியர் 4 : 10 )

நாம் நமது நாட்டின் கலாச்சாரத் தாக்கத்தால் பல்வேறு காரியங்களை விடமுடியாமலிருகின்றோம். அதில் ஒன்றுதான் நல்ல நாள், நல்ல நேரம்  பார்த்தல். இது அவிசுவாசத்தால் மனிதர்கள் செய்யும் காரியம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புவித்துவிட்டோமென்றால் அவரே நம்மை நடத்துவார் எனும் உறுதியான நம்பிக்கை நமக்கு ஏற்படும். அப்படி இல்லாததால் நல்ல நாள் நல்ல நேரம் பாகின்றனர் பலர். காலங்கள் தேவனது  கரத்தில் இருக்கின்றன. நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்போமானால் நமக்கு ஏற்றபடி அனைத்தையும் நலமாக நமக்கு நடத்தித் தருவார்.   

இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும்கூட காலங்களையும், நாட்களையும், மாதங்களையும்,  வருஷங்களையும் பார்த்துச் செயல்படுவது நாம் அறிந்ததுதான். சில கிறிஸ்தவர்கள் இதற்குமேலும் பல காரியங்களைச்  செய்கின்றனர். பிற மதத்தினர் செய்வதுபோல ஜாதகம்ஜோசியம், குறிகேட்டல் போன்றகாரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.  

இஸ்ரவேல் மக்கள் கானானை நோக்கிப் பயணித்தபோது எதிர்ப்பட்ட பல்வேறு இன மக்களை அழித்து வெற்றிகொண்டனர். அப்படி அந்த மக்கள் இஸ்ரவேல் மக்களால் அழிக்கப்பட அவர்களது இத்தகைய தேவன் வெறுக்கும் செயல்பாடுகளே காரணமாய் இருந்தன. எனவேதான் தேவன் அவர்களை இஸ்ரவேல் மக்கள் மூலம் அழித்தார். எனவே, நீங்கள் அந்த மக்கள் செய்ததுபோல செய்யாதிருங்கள் என்று தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார் 

"........ குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை (கானானியரை) உன் முன்னின்று துரத்திவிடுகிறார்."( உபாகமம் 18 : 11, 12 )

கலாத்திய சபையினரும்  இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அப்போஸ்தலரான பவுல் அறிவுறுத்தவே இதனை எழுதினார். இன்றைய வசனத்துக்கு முந்தின வசனங்களில் பவுல் கூறுகின்றார், "நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?" ( கலாத்தியர் 4 : 8, 9 ) அதாவது தேவனை அறிந்த நீங்கள் எப்படி இந்தச் செயல்களில் ஈடுபடலாம் என்கின்றார்.

கிறிஸ்துவை அறியாதகாலங்களில் இப்படி இருந்திருந்தாலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன் என்று கூறுபவர்கள் இத்தகைய அவிசுவாச செயல்களில் ஈடுபடுவது முறையல்ல. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக உறுதியாக ஏற்றுக்கொள்வோமானால் அவர் நமக்கு தீங்கான எந்தச் செயலையும் செய்யமாட்டார்; நமக்கு எதிராக வரும் சத்துருக்களின் வல்லமைகளையும் நம்மைவிட்டு அகற்றுவார். 

நம்மருகினில் வசிக்கும் மக்கள் செய்கிறாரகளே என்று நாம் இவைகளைச் செய்யும்போது கிறிஸ்துவை அவமதிக்கின்றோம்; கிறிஸ்துவை பிறர் ஏற்றுக்கொள்ளத் தடையாக இருக்கின்றோம் என்று பொருள்.  கிறிஸ்துவுக்குள் வாழும் நமக்கு எல்லா நாளும் எல்லா நேரமும் நல்லவையே.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 841🌻 மே 18, 2023  வியாழக்கிழமை              ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு." ( சங்கீதம் 130 : 3, 4 )

நமது தேவன் மன்னிக்கிறதற்கு தயை நிறைந்தவர். மனிதர்கள் பலவீனமானவர்கள் என்பது அவருக்குத் தெரியும். மனிதர்களது பாவங்கள் அக்கிரமங்களை அவர் மன்னியாதிருப்பாரானால் இந்த உலகத்தில் எவருமே நிலைநிற்க முடியாது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

"துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." ( ஏசாயா 55 : 7 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைத் தண்டிப்பதற்கல்ல, மாறாக பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கவே உலகினில் வந்தார். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 9 ) என்று கூறுகின்றார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தன்னைப்பற்றிக் கூறும்போது,  "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்." ( யோவான் 3 : 17 ) என்று கூறினார். 

கிறிஸ்தவத்தின் அடிப்படையே மன்னிப்புதான். வேண்டாதவர்களை அழித்து ஒழிப்பது தெய்வீகமல்ல, மாறாக வேண்டாத துன்மார்க்கரையும் மனிதனாக மாற்றி  கிறிஸ்துவின் அன்பில் பங்குகொள்ள வைப்பதுதான் தெய்வீகத்தின் உட்சம். துன்மார்க்கரும், பாவிகளும் மனம்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு நேராகத் திரும்பிய சாட்சிகளை கிறிஸ்தவத்தில் மட்டுமே நாம் காண முடியும்.  

தேவன் நமது தகப்பன் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம். நமது பிள்ளைகள் தவறுசெய்யும்போது நாம் அவர்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கிறோமே, அன்பே உருவான நமது விண்ணகத் தகப்பன் எப்படி நம்மை மன்னியாதிருப்பார்? 

எந்த அக்கிரமம் நம்மிடம் இருந்தாலும் இயேசு கிறிஸ்து மன்னிக்கத் தயாராக இருக்கிறார். அவரது இரத்தத்தால் கழுவப்படும் மேலான அனுபவத்தை வேண்டுவோம். நமக்காக அவர் ஆவலோடுக் காத்திருக்கின்றார். ஆம், கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. என்னை மன்னியும் என உண்மையான இருதயத்தோடு வேண்டுவோம். கர்த்தர் நம்மை மன்னித்து மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 842🌻 மே 19, 2023  வெள்ளிக்கிழமை            ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?" ( 2 நாளாகமம் 6 : 18 )

தேவனுக்கென்று ஆலயம் எழுப்பிய சாலமோன் அதன் பிரதிஷ்டையின்போது ஜெபித்த ஜெபத்தின் ஒரு பகுதிதான் இன்றைய தியான வசனம். இந்த வசனத்தில் சாலமோன்,  தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? என்று கேள்வி எழுப்புகின்றார்.  இந்தக் கேள்வியின் உண்மையான பொருள், தேவன்  அப்படி மனிதர்களோடு வாசம்பண்ண மாட்டார் என்பதே. ஆனால்,  இந்தக் கேள்விக்கு மாறாகக்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகினில் மனிதனாக வந்து மனிதர்களோடு வாழ்ந்தார். வானங்களும், வானாதி வானங்களும்  தாங்க முடியாத தேவன் சாதாரண மனிதனைப்போல ஆனார்.  

அப்போஸ்தலரான யோவான் இதனைக்குறித்து, "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 ) என்று எழுதுகின்றார். 

மேலும் ஆச்சரியமான காரியம் என்னவென்றால்,  பூமியில் தேவன் வாசம்பண்ணுவாரோ என்றும் வானங்களும் வானாதி வானங்களும் தாங்கக்கொள்ளாதே என்றும் கூறப்பட்ட வல்லவரான தேவன் மனிதர்களது சின்ன இதயத்துக்குள்ளே வந்து தங்குகின்றார்.  இது ஆச்சரியமல்லவா?

இப்படி தேவன் வந்து தங்கும் இடமாக மனிதர்களது இருதயம் இருப்பதால் தான் நாமே தேவனது ஆலயமாக இருக்கின்றோம்.  

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"
( 1 கொரிந்தியர் 3 : 16 )

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல வென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 )

பூமியிலே மனிதர்களோடு தங்குவாரோ என சந்தேகத்தோடு சாலமோன் விண்ணப்பம் பண்ணினார். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதர்களோடு மட்டுமல்ல, மனிதர்களுக்குளேயே வந்து தங்கிவிட்டார். அன்பானவர்களே, அப்படியானால் நாம் எவ்வளவு பேறுபெற்றோர் என்று எண்ணிப்பாருங்கள். இத்தகைய தேவன் வந்து தங்கும் நமது உடலாகிய ஆலயத்தை நாம் எவ்வளவு தூய்மையாக பாதுகாக்கவேண்டும்!!!

எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள், "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) எனக் கூறுகின்றார். 

நமது உடலாகிய ஆலயத்தைக் கெடுக்காமல்  தேவன் விரும்பும்வண்ணம் பரிசுத்தமாகக்  காத்துக்கொள்வோம். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 843🌻 மே 20, 2023  சனிக்கிழமை          ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்." ( 1 கொரிந்தியர் 8 : 3 )

ஒருமுறை இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை வேதாகமத்தில் வாசித்துவிட்டு என்னிடம், "கடவுள்தான் உலகத்திலுள்ள எல்லோரையும் அறிந்திருக்கின்றாரே? பின்னர் எப்படி நாம் , தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் என்று கூறமுடியும்? இந்த உலகத்திலுள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், வேறு தெய்வ வழிபாடுகளைச் செய்பவர்கள் அவர்களைக் கடவுள் அறியவில்லையா?" என்று கேட்டார். அவருக்கு நான் கூறிய பதிலினை விளக்கமாக இன்றைய தியானமாகத் தருகின்றேன்.

இங்கு தேவனால் அறியப்படுதல் என்பது, தேவனால் தனி அக்கறையோடு நடத்தப்படும் அனுபவத்தைக் குறிக்கின்றது.  கோடிக்கணக்கான மக்கள் உலகத்தில் வாழ்ந்தாலும் குறிப்பிட்டச் சிலரை மட்டும் தேவன் தனிப்பட்ட முறையில் உயர்த்துகின்றாரே அது அவர்களை அவர் அறிந்திருப்பதால்தான்.  அப்போஸ்தலரான யோவான், பேதுரு, பவுல் போன்றவர்கள், ஏன்..... சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் மற்றும் இன்று நம்மிடையே வாழும் பலர் இவர்களைத் தேவன் தனி அக்கறையோடு நடத்துவதற்கு காரணம் அவர்கள் இப்படி தேவனால் அறியப்பட்டவர்களாக வாழ்வதால்தான்.  

ஒரு தகப்பனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த மகன்  குடித்து, எந்த பொறுப்புமற்று ஊதாரியாகத் திரிகின்றான். மற்றவன் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து அவர் துவங்கிய தொழிலையும்  சிறப்பாக நடத்துகின்றான். தகப்பன் இரண்டு மகன்களையும் நேசித்தாலும் எந்த குடும்ப சம்பந்தமான முடிவுகளையும் தொழில் முடிவுகளையும் இளைய மகனிடம் பேசியே எடுக்கின்றான். காரணம் தகப்பன் இளைய மகனை அறிந்திருக்கின்றான். இப்படியே தேவனில் அன்புகூருகிறவன் தேவனால் அறியப்பட்டிருக்கின்றான் 

தேவனால் அறியப்பட்டவர்களது வாழ்க்கை வித்தியாசமானதாக இருக்கும். வெளிப்பார்வைக்கு அவர்கள் மற்றவர்களைப்போலவும் அல்லது மற்ற மனிதர்களைவிட தாழ்ந்தவர்களாகவும் தெரியலாம். ஆனால் தேவனது பார்வையில் அவர்கள் உயர்ந்தவர்கள். அது உடனே தெரியாது, ஆனால் வெளியே தெரியும்போது பலரை ஆச்சரியப்படவைக்கும். 

இன்றைய வசனம் கூறும் , "தேவனில் அன்புகூருதல்" என்பதன் பொருளை அப்போஸ்தலரான யோவான் பின்வருமாறு கூறுகின்றார், "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 )

அவருடைய கற்பனைகள் பாரமானவைகள் அல்ல என்கின்றார் யோவான். காரணம்,  எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதும், தன்னைத்தான் நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசிப்பதும் தான் அவரது கட்டளை 

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்." ( 1 யோவான்  5 : 2 ) ஆம், நாம் மற்றவர்களிடம் காண்பிக்கும் அன்புச்  செயல்களே நாம் அவரையும் அன்புசெய்வதற்கு அடையாளம். கிறிஸ்து இயேசுவை வாழ்வில் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போதுதான் நமது இருதயம் மாறுதல் அடைந்து எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும். 

எனவேதான் வசனம் சொல்கிறது, "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 ) குமாரனாகிய கிறிஸ்துவை இருதயத்தில் வரும்படி அழைப்போம். அப்போதுதான் நாம் அவரதுக் கட்டளைகளைக் கடைபிடிக்கமுடியும். அப்போது அவர் நம்மை அறிந்துள்ளதை அன்றாட தனிப்பட்ட அனுபவங்களால்  நாம் அனுபவபூர்வமாக உணர முடியும். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 844🌻 மே 21, 2023  ஞாயிற்றுக்கிழமை        ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

".... கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?"  ( மீகா 2 : 7 )

பொதுவாக மனிதர்களாகிய நாம் பலவேளைகளில் கர்த்தரது வல்லமையையும் பராக்கிரமத்தையும் உணர மறந்துவிடுகின்றோம். குறிப்பாக நமக்கு ஒரு மாபெரும் இக்கட்டு நேரும்போது நமக்கு அவிசுவாசம் வந்துவிடுகின்றது. கர்த்தரது ஆவியின் வல்லமையினை நாம் உணர மறந்துவிடுகின்றோம். 

இன்றைய வசனத்தின் பிற்பகுதி, "செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமென்றால் நிச்சயமாக அதிசயமான வழிகளில்  நமது இக்கட்டு, பிரச்சனைகளிலிருந்து அவர் நம்மை விடுவித்து நடத்துவார் என்றுபொருள். 

இஸ்ரவேல் மக்களை கானானுக்கு வழிநடத்திய மோசேக்கு எதிராக அந்த மக்கள் கிளர்ச்சி செய்தனர்.  மன்னாவைத்தவிர உண்பதற்கு வேறு எதுவும் இல்லை. எங்களுக்கு உண்பதற்கு இறைச்சி வேண்டுமென்று கூப்பாடுபோட்டனர். அந்த மக்களின் எண்ணிக்கை இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் 6,03,550. அப்படியானால் அதற்கு குறைந்த வயதுள்ள ஆண்கள், மொத்தப் பெண்கள் எவ்வளவு இருந்திருக்கவேண்டும்!!! ஆனால் மோசே தேவனை நோக்கி முறையிட்டபோது தேவன் அந்த மக்களின் விருப்பப்படி இறைச்சி தருவதாக வாக்களித்தார். 

ஒருநாள் இரண்டுநாள் மட்டுமல்ல, ஒரு மாதமளவும் இறைச்சியை உண்பீர்கள்  என்றார் தேவன். இதனைப் பெரிய மக்கள் கூட்டத்துக்கு ஒருமாதமளவு இறைச்சி எப்படிக் கொடுக்கமுடியுமென்று  மோசே கேட்க, "அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்." ( எண்ணாகமம் 11 : 23 ) அப்படியே இஸ்ரவேல் மக்கள் இறைச்சியை உண்டார்கள். 

புதிய ஏற்பாட்டிலும்கூட, இயேசு கிறிஸ்து போதனை செய்துமுடித்து அங்கிருந்த மக்களுக்கு உணவு அளிக்க விரும்பினார். இந்த மக்களுக்கு சாப்பிடக்கொடுக்க அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று பிலிப்புவிடம் கேட்டார். ஒவ்வொருவனும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டாலும் இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் போதாதே என்று கைவிரித்த பிலிப்பு கூறுவதைப் பாருங்கள், "இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்" ( யோவான் 6 : 9 ) எம்மாத்திரம் என்று கூறப்பட்ட அந்த ஐந்து வாற்கோதுமை அப்பத்தையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம் பேர் உண்ணவும் மிச்சமாக 12 கூடைகள் நிறையும்படியும் செய்தார் இயேசு கிறிஸ்து.

அன்பானவர்களே,  "கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" என்று வேதம் நம்மைத் திடப்படுத்தும் வசனத்தைத் தருகின்றது. நாம் நேர்மையான, தேவன் விரும்பும் வழியில் நடக்கிறவர்களென்றால் கர்த்தரின் ஆவி குறுக்கிடாமல் நமது வாழ்விலும் மாபெரும் அதிசயங்களைச் செய்யும். கலங்காதிருங்கள். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 845🌻 மே 22, 2023  திங்கள்கிழமை      ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 14 )

இன்று நாம் அரசியலில் பல விசித்திரங்களைக்காண  முடியும்.  பதவிக்காக கொள்கைகளையும் தலைவர்களையும் மாற்றும் மனிதர்கள் அதிகம். எனவே சிலர் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்தில் மந்திரிப்பதவி பெற்றுவிடுகின்றனர். அரசியல் தலைவர்களும் எதிர்காலத்தில் குறிப்பிட்ட  ஜாதி மக்களது  ஓட்டுக் கிடைக்கவேண்டும் என்பதற்காக  இத்தகைய கட்சிமாறிகளை ஆதரிக்கின்றனர். மொத்தத்தில், அரசியல் தலைவர்களும் கட்சிமாறிகளும்  மக்களது நன்மையினையல்ல, மாறாகத் தங்களது சுய நலனையே நாடுவதால் இப்படிச் செய்கின்றனர். 

ஆனால் இத்தகைய தகிடுதத்தம் தேவனிடம் எடுபடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொண்டவர்களாக இருப்போமானால் அந்த விசுவாசத்தில் இறுதிவரை நிலைத்து நிற்கவேண்டும். அங்கே  கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்பது தேவனுக்குப் பிரியமில்லாதது. தேவனைப் பொறுத்தவரை ஒரே எஜமானுக்குத்தான் நாம் ஊழியம்செய்ய முடியும். அரசியல்வாதிகளைப்போல சுய லாபம் கருதி மாறிமாறித் தலைவனை மாற்ற முடியாது. 

இயேசு கிறிஸ்துக்  கூறினார்,  "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." ( மத்தேயு 6 : 24 )

ஒரே வழி, ஒரே தலைவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவர்மேல் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். இதற்கு மாறாக, பதவி, பணம், புகழ் இவற்றுக்காக கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் குறைவுபடுவோமானால் அவரோடு நமக்கு எந்தப் பங்கும் இருக்காது. 

இன்றைய வசனம், ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில் என்று கூறுகின்றது. அதாவது இந்தப்பூமியில் நாம் வாழும் இறுதிநாள்வரை என்று பொருள். இறுதி நாள்வரை நாம் கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசத்தில் தளர்வடையாக்கூடாது. இப்படி ஆரம்பத்தில் கொண்ட  விசுவாசத்தைக் இறுதிவரைக் காத்துக்கொள்பவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவ கிரீடத்தைப் பெறுவார்கள்.  

அன்பானவர்களே, அப்போஸ்தலராகிய பவுல் கூறுவதுபோல நாமும் கூறத்தக்க ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்." ( 2 தீமோத்தேயு 4 : 8 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 846 மே 23, 2023 செவ்வாய்க்கிழமை    ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. " (யாக்கோபு 3:17)

இந்த உலகத்தில் சில காரியங்களில் வல்லவர்களாக விளங்குபவர்களை ஞானிகள் என்று கூறுகின்றனர். இப்படி  உலகத்தில் இசை ஞானி, கலை ஞானி, நடனகலா ஞானிகள் உள்ளனர். உலகத்துக்கு இந்த கலைஞர்கள் ஞானிகளாக இருந்தாலும் தேவனது பார்வையும் அவர் ஞானம் என்று கருதுவதும் வேறு விதமானது.  

உலக மனிதர்களது ஞானம் அவர்களை அகந்தையுள்ளவர்களாக மாற்றுகின்றது.  இத்தகைய உலக ஞானிகள் மற்றவர்களை அற்பமாக எண்ணுபவர்களாகவும், பிறரை மதிக்காதவர்களாகவும், பரிசுத்த வாழ்கைக்குத் தூரமானவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

எனவே, தேவன் தனக்குப் பயப்படுபவர்களையே ஞானிகளாக எண்ணுகின்றார். உலகத்துக்கு அவர்கள் பேதைகளாக இருக்கலாம், ஆனால் தேவனது பார்வையில் அத்தகைய மனிதர்களே ஞானிகள். எனவேதான் நீதிமொழிகள் நூல் கூறுகின்றது, "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" ( நீதிமொழிகள் 1 : 7 ) என்று. 

சங்கீதம் 111 இல் நாம் வாசிக்கின்றோம், "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு" ( சங்கீதம் 111 : 10 ) என்று. 

நாம் இந்த உலகத்தில் சிறந்த திறமையோ அறிவோ இல்லாதவர்களாக இருக்கலாம். பள்ளிப் படிப்பு படிக்க வாய்ப்பற்று எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வாழ்வோமானால் நாமே அவரது பார்வையில் ஞானமுள்ளவர்கள்.  

பள்ளிப்படிப்பு படிக்காத , இரண்டு கண்களும் தெரியாத ஒரு பாட்டியைக்குறித்து நான் கேள்விப்பட்டதுண்டு. ஆவிக்குரிய வரங்களால் நிறைந்த அந்தப் பாட்டியிடம் ஜெபித்து ஆசீர்வாதம்பெற பிரபல மருத்துவர்கள், பொறியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் வந்து காத்திருப்பதுண்டு. ஆம், அவர்கள் உலகத்தைப் பொறுத்தவரை படிக்காத ஒரு பெண், ஆனால் தேவனது பார்வையில் ஞானி. உலகத்துக்குத் தெரியாத பல விஷயங்களை தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்கின்றார்.  

அன்பானவர்களே, நாம் பல்வேறு பட்டங்கள் பெற்றவர்களாக இருக்கலாம், தேவனுக்குமுன் அவை போதாது. நாம் தேவ ஞானத்தால் நிரப்பப்படவேண்டும். அதற்குக் கர்த்தருக்குப் பயப்படும் பயம் - அதாவது கர்த்தருக்கு ஏற்புடைய ஒரு வாழ்வு வாழவேண்டுமென்று முடிவெடுத்து நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். அப்படி நாம் கர்த்தருக்குப் பயந்த வாழ்க்கை வாழும்போது நம்மை அவர் பரலோக ஞானத்தால் நிரப்புவார். 

அப்போது நாம் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளவர்களாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்தவர்களாகவும், பட்சபாதமில்லாதவர்களாகவும், மாயமற்றவர்களாகவும் இருப்போம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 847🌻 மே 24, 2023  புதன்கிழமை                          ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

".............நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்." ( ஓசியா 4 : 6 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் நாம் தேவனுடைய வேதத்தின்மேல் பற்றுக்கொண்டு அதனை நேசித்து நமது வாழ்வை அதற்கு ஏற்றாற்போல மாற்றி வாழவேண்டியதன் அவசியத்தைக் குறிக்கின்றது. தேவன் ஆதிகாலமுதல் பல்வேறு தீர்க்கதரிசிகள், பக்தர்கள் மூலம் தனது வார்த்தைகளை வெளிப்படுத்தி அவற்றை மக்கள் மறந்திடாமல் இருக்க அவர்களைக்கொண்டு பதிவுசெய்தும்  வைத்துள்ளார். தோள்சுருள்கள், கற்பலகைகள், சுட்ட மண் பலகைகள், போன்றவற்றில் தேவனுடைய வார்த்தைகள் பதிவுசெய்யப்பட்டு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

வேதத்தை இந்த உலகத்திலிருந்து அழிக்க முயன்ற மனிதர்கள் அழிந்தார்களேதவிர வேதம் என்றும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றது. தேவன் அற்புதமாக இப்படித் தனது வார்த்தைகளைப் பாதுகாப்பதன் நோக்கம் தனது மக்கள் அவற்றைப் படித்து உணர்ந்து தனக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே.  ஆனால் வேதத்தை உண்மையான ஆர்வத்துடன் படிப்பவர்கள் வெகு சொற்பமே. இதனையே தீர்க்கத்தரிசி ஓசியா முலம் தேவன், "என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்." ( ஓசியா 8 : 12 ) என்று கூறுகின்றார்.

இருளில், அந்தகாரத்தில் வசிக்கும் மக்களுக்கு விளக்கும் வெளிச்சமும் வேதமே.  "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி." ( நீதிமொழிகள் 6 : 23 ) என்று வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, இன்றைய வசனம் வேதத்தை மறப்பவர்களின் பிள்ளைகள் தேவனால் மறக்கப்பட்டுவிடுவார்கள் என்று ஒரு எச்சரிக்கையினை விடுக்கின்றது. தேவனால் மறக்கப்படுதல் எவ்வளவு அவலமானது என்று எண்ணிப்பாருங்கள். நாம் ஒருவேளை இன்று இந்த உலகத்தில் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம்  ஆனால் நமது பிள்ளைகளது எதிர்காலம் நமது கையில் என்பதை மறந்துவிடக்கூடாது. உலகத்தில் சொத்து சுகங்களை நமது பிள்ளைகளுக்காகச் சேர்த்துவைக்க முயலும் நாம் அவர்களுக்கான தேவ ஆசீர்வாதங்களுக்காகவும் முயலவேண்டியது அவசியம். 

வேதாகமத்தை அந்நிய காரியமாக எண்ணாமல் ஆர்வமுடன் வாசித்து அதன் மகத்துவங்களை உணர்ந்து விசுவாசத்தில் வளரவேண்டியது அவசியம். சொத்து சுகங்கள், அதிக ஆஸ்திகள் சம்பாதிக்க உடல் பலமில்லாதவர்களும், பெரிய படிப்பு பதவிகள் இல்லாதவர்களும் இந்த ஆசீர்வாதத்தை நமது பிள்ளைகளுக்காகச் சேர்த்திட முடியும்.  

வேதத்தை  நேசிப்போம், வாசிப்போம் வாழ்வாக்குவோம்.

"கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 2, 3 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 848🌻 மே 25, 2023  வியாழக்கிழமை                        ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்." ( 2 சாமுவேல் 6 : 14 )

தேவனை ஆராதிப்பதில் ஒவ்வொருவரும் ஒரு முறையினைப் பின்பற்றுகின்றனர். ஆராதனையின் முறைமைகளைத் தேவன் பார்ப்பதில்லை. மாறாக ஆராதிப்பவர்களின் இதயத்தையே பார்க்கின்றார். இன்று அமைதியாக தேவனை ஆராதிக்கும் சபைகளும் உண்டு ஆர்ப்பரித்து உற்சாகமாக ஆராதிக்கும் சபைகளும் உண்டு. ஆர்ப்பரித்து ஆராதிப்பவர்கள் அமைதியாக ஆராதிப்பவர்களை செத்த சபையினர் என்றும் , அமைதியாக ஆராதிப்பவர்கள் ஆர்ப்பரித்து ஆராதிப்பவர்களை கூத்தாடி சபைகள் என்றும் விமர்சிக்கின்றனர்.

இப்படி ஒருவர் செய்யும் ஆராதனையைக் குறைகூற யாருக்கும் அதிகாரம் இல்லை. தேவனே இருதயங்களை நோக்கிப்பார்க்கின்றவர். அவருக்கே யார் தன்னை உண்மையாக ஆராதிக்கிறார்கள் என்று தெரியும். தேவன் ஆராதனையினை இப்படித்தான் செய்யவேண்டுமென்று எந்தக் கட்டளையும் தரவில்லை. இருதய சுத்தத்திற்கே தேவன் முன்னுரிமை கொடுக்கின்றார்.

தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவானபின்பு அதுவரை கிபியாவிலிருந்த கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.   "தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்.." ( 2 சாமுவேல் 6 : 3 ) அப்போது தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

ஒரு பெரிய ராஜா சணல் ஆடையினை உடுத்திக்கொண்டு தெருவில் நடனமாடியது சவுலின் குமாரத்தியாகிய தாவீதின் மனைவி மீகாளுக்கு  கேவலமான காரியமாகத் தெரிந்தது. "கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்." ( 2 சாமுவேல் 6 : 16 )

அன்பானவர்களே, இப்படி இருதயத்தில் தாவீதை அவமதித்ததற்கு தேவன் கொடுத்தத் தண்டனை மிகக் கொடியது. ஆம், "அதனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது." ( 2 சாமுவேல் 6 : 23 ) என்று கூறப்பட்டுள்ளது. 

"ஆதவன்" தியானங்களில் சில வேளைகளில் பிறரை விமரிசிப்பதுபோல உங்களுக்குத் தெரியலாம், ஆனால் அவை வேத சத்தியங்களை அவர்கள் மீறி அதற்கு முரணாக பிரசங்கிப்பதை தவறு என்று காட்டவேதவிர அவர்களது ஆராதனை முறைகளை விமரிசிப்பதற்கு அல்ல. வேத சத்தியங்களை புரட்டிப் பேசுவதை நாம் விமரிசிக்கலாம்.  காரணம், தவறான போதனைகள் மனிதர்களை நரகத்தின் மக்களாக்கிவிடும் என்பதால்.

மற்றவர்கள் செய்யும் ஆராதனைகள், பிற சபைகளை,  தனி நபர்களது ஆராதனை முறைமைகளை விமரிசனம் செய்வதை நாம் விட்டுவிடுவது நல்லது. சவுலின் மகள் மீகாள் நமக்கு ஒரு எச்சரிக்கை.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 849🌻 மே 26, 2023  வெள்ளிக்கிழமை                        ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள்." ( சங்கீதம் 4 : 2 )

கர்த்தருக்கு நாம் செலுத்தவேண்டிய மகிமையைச் செலுத்தாமல் இருப்பது அவரை அவமானப்படுத்துவதாகும். உலகப் பொருட்களுக்கும் தேவனுக்கும் நாம் செலுத்தவேண்டிய முக்கியத்துவம் வெவேறானவை. உலகப் பொருட்களா தேவனா என்று பிரச்னை வரும்போது நாம் தேவனுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்காமலிருப்பது அவரை அவமானப்படுத்துவதாகும். 

உலகப் பொருட்களுக்கு இன்றைய வசனம் இரண்டு பெயர்களைக் கொடுத்துள்ளது. அவை வீணானவை, பொய்யானவை என்பனவாகும். இப்படி வீணானவைகளையும் பொய்யானவைகளையும் விரும்பி எதுவரை என் மகிமையை அவமானப்படுத்துவீர்கள்? என்று இன்றைய வசனம் கேள்வி எழுப்புகின்றது.    

இந்த உலகத்தில் மற்றவர்களைத் திருப்திப்படுத்தவேண்டுமென்று சிலவேளைகளில் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தவறிவிடுகின்றோம். இது சுய லாபத்துக்காகவோ பயத்தினாலோ இருக்கலாம். 

மோசே மலையிலிருந்து இறங்கிவர காலதாமதம் ஏற்பட்டபோது இஸ்ரவேல் மக்கள் ஆரோனிடம், " எங்களை எகிப்திலிருந்து அழைத்துகொண்டுவந்த மோசேக்கு என்ன நேர்ந்ததோ என்று அறியோம்...நீர் எங்களுக்காக எங்கள்முன் செல்லும் தேவனை எங்களுக்குத் தாரும்" என்று கேட்டனர். அவர்களுக்குப் பயந்த  ஆரோன் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கி அவர்கள்முன் வைத்து, எகிப்திலிருந்து உங்களை வரவழைத்துக்  கொண்டுவந்த தேவன் இவரே" என்று கூறினான்.  

மட்டுமல்ல, "ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்." ( யாத்திராகமம் 32 : 5, 6 )

இப்படி, "ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான்." ( யாத்திராகமம் 32 : 25 ) என்று வாசிக்கின்றோம். ஆம், கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய ஆராதனையை நாம் பிறருக்குச் செலுத்தும்போது நாமும் அவமானமடைந்து கர்த்தரையும் அவமானப்படுத்துகின்றோம்; நிர்வாணிகளாகின்றோம். 

"நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்." ( ஏசாயா 42 : 8 ) என்கின்றார் பரிசுத்தர். விக்கிரகங்கள் என்பது சிலைகள் மட்டுமல்ல, தேவனைவிட்டு வேறு உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் குறிக்கும். பொருளாசை மிகப்பெரிய விக்கிரக ஆராதனை. "விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. " ( எபேசியர் 5 : 5 ) என்று பவுலடிகள் கூறுகின்றார்.

நமது இரட்சிப்பின் ஆடையினை உரிந்து நம்மை அவமானப்படுத்திட சாத்தான் பொருளாசையினை நமது இருதயத்தில் விதைக்கின்றான்.  எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். இயேசு கிறிஸ்துவோடு பன்னிருவருள் ஒருவனாக இருந்த யூதாஸ் சாத்தான் இருதயத்தில் விதைத்தப்  பொருளாசையால் இரட்சிப்பை இழந்து அவமானடைந்து தற்கொலை செய்துகொள்ளவில்லையா? 

எனவே அன்பானவர்களே, கர்த்தரது மகிமையை அவமானப்படுத்திடாமல், வீணானதை விரும்பி, பொய்யை நாடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். இதற்காக நமது அன்றாட ஜெபங்களில் மன்றாடவேண்டியது அவசியம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 850🌻 மே 27, 2023  சனிக்கிழமை                      ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது." ( எண்ணாகமம் 17 : 8 )

நமது தேவன் அதிசயமான முறையில் தான் தெரிந்துகொள்பவர்களை நடத்துபவர். மனித அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத அதிசயங்களை செய்து தனக்கு ஏற்புடையவர்களாக வாழ்பவர்களை அவர் மற்றவர்களிலிருந்து வேறுபிரித்து உயர்த்துகின்றார். 

இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். அதாவது அந்த மக்கள் மோசேயும் ஆரோனும் தங்களாகத் தங்களை உயர்த்தி மற்றவர்களுக்குத் தங்களைத் தலைவர்களாக ஏற்படுத்த முயல்வதாக எண்ணிக்கொண்டனர். தேவனது கட்டளையின்படியே மோசேயும் ஆரோனும் செயல்பட்டனர் என்பதை அவர்கள் நம்பவில்லை. 

அப்போது கர்த்தர் மோசேயிடம்,  இஸ்ரவேல் கோத்திரத்துத் தலைவர்கள் பன்னிரண்டுபேரிடமும் ஆளுக்கொரு கோலை கொண்டுவரச்செய்து அதில் அவர்களது பெயரை  எழுதவும், லேவி கோத்திரத்துக்குரிய கோலில் ஆரோனின் பெயரை எழுதி கர்த்தரது சமூகத்தில் வைக்கவும் சொன்னார். "அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்." ( எண்ணாகமம் 17 : 5 ) என்றார்.

மோசே அப்படியே செய்தான். அந்த ஒரே இரவில் அற்புதம் நிகழ்ந்தது. லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.

அன்பானவர்களே, இது பல்வேறு பிரச்சனைகள், தோல்விகள், துன்பங்களால் துவண்டுபோயிருக்கும் நமக்குத் தேவனது வல்லமையினை உணரவும் நமது எந்தப் பிரச்சனையையும் அவரால் ஒரு நொடியில் மாற்றமுடியும் எனும் விசுவாசத்தைத்  தரக்கூடியதாகவும்  இருக்கின்றது. 

நமது வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவும், நமது எந்த நோயையும் பிரச்சனைகளையும் மாற்றிடவும் தேவனுக்கு அதிக நாட்களோ நேரமோ தேவையில்லை. காய்ந்துபோல ஒரு மரக்கோலை  ஒரே இரவில் துளிர்த்து, பூத்து, காய்த்து கனிகளைக் கொடுக்கத்தக்கதாக  மாற்ற தேவனால் கூடுமென்றால் காய்ந்து பட்டுப்போன நமது வாழ்வையும் அவரால் ஒரே நொடியில் மாற்றிட முடியும். ஆரோனின் கோல்போல நமது வாழ்வையும் அவர் துளிர்விடச் செய்வார். இஸ்ரவேல் மக்கள் கூட்டத்தார்முன் மோசேயும் ஆரோனும் உயர்த்தப்பட்டதுபோல நம்மையும் அவர் உயர்த்துவார். 

மோசே உலர்ந்துபோன கோலை தேவ சமூகத்தில் வைத்ததுபோல நமது உலர்ந்த வாழ்வையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் ஒப்படைத்து ஜெபிப்போம். அவர் ஒரே நொடியில் சாதாரண தண்ணீரை சுவைமிக்கத் திராட்சைரசமாக்கி மகிழச்செய்யவில்லையா? ஒரே வார்த்தையால் மரித்து நான்கு நாட்களான லாசரை உயிர்ப்பிக்கவில்லையா? ஆம், தேவனால் எல்லாம் கூடும். மனிதர்களாகிய நமக்குத்தான் காலமும் நேரமும். அவரோ காலங்களைக் கடந்தவர். நமது விசுவாசம் தளர்ந்திடாமல் இருப்போம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 851🌻 மே 28, 2023  ஞாயிற்றுக்கிழமை                    ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தை நாம் பெறும்போது ஆவிக்குரிய வாழ்வின் முதல் படியினை அடைகின்றோம். அந்த நிலையினில் நாம் அன்றாடம் வளர்ச்சியடையவேண்டும். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் நாம் வளரும்போது பழைய  நியாயப்பிரமாண கட்டளைகள் நம்மை நடத்தாமல்  பரிசுத்தஆவியானவரே நடத்துவார். 

ஆம், நாம் பழைய கட்டளைகள் எனும் எழுத்தின்படியல்ல புதுமையான ஆவியின்படியே தேவனுக்குமுன் நடப்போம். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்." ( ரோமர் 7 : 6 ) என்கின்றார். அதாவது ஆவியின்படி நடக்கும்போது கட்டளைகளுக்கு விடுதலையாகி ஆவியானவரின் வழிநடத்தலுக்கு உட்பட்டவர்களாகின்றோம். 

இப்படி நாம் நடக்கும்போது, அந்த ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நம்மை  பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்குகின்றது.

மரணம் என்று இங்குக் குறிப்பிடப்படுவது ஆத்தும மரணத்தையே. ஏனெனில் உலகினில் பிறந்த அனைவருக்குமே சரீர மரணம் பொதுவானது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23 ) என்று குறிப்பிடுகின்றார்.   ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவின் பிரமாணம் நம்மை ஆத்தும மரணம், பாவம் இவைகளிலிருந்து விடுதலையாக்குகின்றது. மட்டுமல்ல நாம் முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவனுக்குத்  தகுதியுள்ளவர்களாகின்றோம். 

அன்பானவர்களே நாம் பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெறவேண்டியதன் அவசியம் இதுதான். பாவத்துக்கு அடிமையாகி சாவுக்கேதுவாகவுள்ள நமது சரீரங்களையும் கிறிஸ்துவை உயிர்பித்ததுபோல ஆவியானவர் உயிர்ப்பிப்பார். இதனையே, "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்கின்றார் பவுல் அடிகள். 

இந்த அனுபவத்தைப் பெறும்போதே நாம் அவரது சொந்த பிள்ளைகளாகின்றோம். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு உள்ளாகின்றோம்.  இப்படி கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் நம்மை பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்குக்கின்றது. மட்டுமல்ல, நாம் நம்மை முற்றிலுமாக ஆவியானவரின் வழிநடத்தலுக்கு ஒப்புக்கொடுத்து வாழும்போது நித்திய ஜீவனுக்கும் தகுதியுள்ளவர்களாகின்றோம்.
 
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 852🌻 மே 29, 2023  திங்கள்கிழமை                    ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." ( பிலிப்பியர் 4 : 19 )

இந்த உலகத்தில் தேவனிடத்தில் விசுவாசம்கொண்டு வாழும் எல்லோரும் செல்வந்தர்களல்ல. வறுமை, குறைச்சல், பெரும்பான்மை மனிதர்களுக்குள்ள பலவித செல்வங்கள் இல்லாமை. இவைதான் ஆவிக்குரிய பல மக்களுக்கு இருக்கும் உண்மை நிலைமை. ஆனால் கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தால் அவர்கள் இந்த  உலகத்தில் வாழ்கின்றனர். கர்த்தரையே நம்பி வாழ்கின்றனர்.

இந்த உலகினில் வறுமையில் வாழும் மக்களை நாம் இரு பிரிவாகப் பிரிக்கலாம்:- 

1. வறுமையில் வாழும் உலக மக்கள். இவர்கள் எந்த மதத்தினராகவும் இருக்கலாம். கிறிஸ்தவர்களில்கூட, கிறிஸ்துவை பெயரளவில் மட்டும் அறிந்த பெயர் கிறித்தவர்களாக இருக்கலாம். 
2. கிறிஸ்துவின் அன்பை ருசித்து கிறிஸ்துவுக்குள் வாழும் ஆவிக்குரிய அனுபவமுள்ள கிறிஸ்தவர்கள்.

இன்றைய தியானத்துக்குரிய வசனம் இரண்டாம் வகை மனிதர்களுக்குக் கூறப்பட்ட வசனமாகும். கிறிஸ்துவுக்குள் நாம் வாழ்வோமென்றால், தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நமது குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். காரணம் இத்தகைய ஆவிக்குரிய மக்கள் உலக வாழ்வில் தரித்திரராக இருந்தாலும் தேவனின் பார்வையில் விசுவாசத்தில் ஐசுவரியவான்கள்.

"என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா?" ( யாக்கோபு 2 : 5 ) என்கின்றார் அப்போஸ்தலராகிய யாக்கோபு. ஆம், இதுதான் இன்றைய வசனம் கூறும் கிறிஸ்துவுக்குள் மகிமையில் நிறைவாக்குதல். அதாவது தேவன் வாக்களித்த பரலோக ராஜ்யத்தின் சுதந்திரவாளிகள்.

'மறுமையில் நிறைவு கிடைக்குமென்றும்,  பரலோக ராஜ்யத்தின் சுதந்திரவாளிகள் என்றும் கூறிக்கொண்டு இந்த உலக வாழ்க்கை முழுவதும் தரித்திரத்தில் கழிக்கமுடியுமா?' என்று சிலர் எண்ணலாம். அப்படியல்ல, தேவன் நினைக்கும்போது, அல்லது அவரது காலம் வரும்போது உலக ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்புவார். 

"ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்." ( 1 நாளாகமம் 29 : 12 ) என்று நாம் வாசிக்கின்றோம்.

மேலும், உலக செல்வ ஆசீர்வாதம் படைத்தவர்கள் என்று நாம் கருதும் பலர் பல்வேறு துன்பங்களிலும், இக்கட்டுகளிலும், நோய்களிலும், சமாதானக் குறைவிலும் தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கர்த்தர் ஒருவரை ஆசீர்வதிக்கும்போது முற்றுமுடிய ஆசீர்வதிப்பார். வேதனையில்லாத ஆசீர்வாதம்; மன சமாதானத்தோடுகூடிய ஆசீர்வாதம். எனவேதான் வேதம் கூறுகின்றது, "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) ஆம், வேதனையைக் கூட்டாத ஆசீர்வாதமே கர்த்தர்தரும் ஆசீர்வாதம். 

ஆம் அன்பானவர்களே, "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி என்  குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள்  நிறைவாக்குவார்." என அப்போஸ்தலரான பவுல் விசுவாசத்தோடு கூறுவதுபோல நாமும் விசுவாச அறிக்கையிடுவோம். நமது எந்தக் குறைவையும் நிறைவாக்கி நடத்த அவர் வல்லவராயிருக்கிறார்.  

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 853🌻 மே 30, 2023  செவ்வாய்க்கிழமை                  ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்......அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்." ( கொலோசெயர் 1 : 9, 10, 11 )

இன்று பலரும் பொதுவாக ஆராதனை எனும் பெயரில் ஆலயத்துக்கு வந்து ஒருமணி அல்லது ஒன்றரைமணி நேரம் செலவிட்டுவிட்டு தங்கள் கிறிஸ்தவ கடமை நிறைவேறிவிட்டது என்று திருப்தியடைந்துகொள்கின்றனர். அன்பானவர்களே, தேவன் நம்மை வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கவில்லை. அதனையே இன்றைய வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல் எழுதுகின்றார். அவர் தனது சபை மக்களுக்காக எதற்காகவெல்லாம் ஜெபிக்கின்றார் என்பதை இங்குக் குறிப்பிடுகின்றார். அவை என்னவென்றால்:- 

1. தேவனது சித்தத்தை அறியும் அறிவால் நிரப்பப்படவேண்டும்; 
2. சகலவிதமான நற்கிரியைகளின் கனிகளைத் தரவேண்டும்;
3. தேவனை அறியும் அறிவில் விருத்தியடையவேண்டும்;
4. கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளவேண்டும்.;
5. கர்த்தருடைய எல்லா வல்லமையிலும் பலப்படவேண்டும்              

அதாவது ஒரு சிறந்த கிறிஸ்தவன், மேற்குறிப்பிட்ட ஐந்து தகுதிகளிலும் தினமும் வளரவேண்டும்.

அன்பானவர்களே, ஏதோ கடமைக்கு நாமும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. 

தேவ சித்தத்தை அறியும்போதுதான் நாம் நம்மைக்குறித்தும் நம்மைச் சார்ந்துள்ளவர்களைக்குறித்தும் தெளிவு பெற முடியும். கனியுள்ள ஒரு வாழ்க்கைதான் பிறருக்குக் கிறிஸ்துவை அறிவிக்க உதவும். தேவனை அறியும் அறிவில் வளரும்போதுதான் தேவனைப்பற்றி ஒரு  தெளிவு கிடைக்கும். இல்லையானால் நாம் அறியாததைத் தொழுதுகொள்பவர்களாகவே இருப்போம். கர்த்தருக்குப் பிரியமாக நடக்கவேண்டுமென்று எண்ணும்போது பாவத்துக்கு விலகி வாழ்வோம். இவை அனைத்தும் இருக்கும்போது கர்த்தரது வல்லமை நம்மில் வெளிப்படும்.

இங்கு அப்போஸ்தலரான பவுல் வெறுமனே வல்லமை என்று குறிப்பிடாமல், "எல்லா வல்லமையாலும் பலப்படவும்" என்று கூறுகின்றார். அதிசயம் அற்புதம் செய்யும் வல்லமை மட்டுமல்ல,  மாறாக பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை. பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளும் வல்லமை. 

நமது அன்றாட ஜெபங்களில் நாம் பெரும்பாலும் உலகத் தேவைகளுக்காகவே ஜெபிக்கின்றோம். மேலான ஆவிக்குரிய தேவைகளை விட்டுவிடுகின்றோம். நமக்கு இன்றைய வசனம் மூலம் அப்போஸ்தலரான பவுல் தெளிவான வழி காட்டுகின்றார். இங்கு அப்போஸ்தலரான பவுல் தனக்காக ஜெபிக்கவில்லை. மாறாக, தான் வழிகாட்டி நடத்தும் சபை மக்களுக்காக ஜெபிக்கின்றார். 

இன்று நமக்காக இப்படி முயற்சியெடுத்து ஜெபிக்க எந்த ஊழியரும் இல்லை. எனவே நாம்தான் ஜெபிக்கவேண்டும். நமது அன்றாட ஜெபங்களின் பாணியை மாற்றுவோம். உலகத் தேவைகளைவிட்டு ஆவிக்குரிய தேவைகளுக்காக ஜெபிப்போம். அதுவே தேவனுக்கு ஏற்புடைய ஜெபமாக இருக்கும். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                                ஆதவன் 🌞 854🌻 மே 31, 2023  புதன்கிழமை                ✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

"நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே". (கலாத்தியர் 3:26)

கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு மேலான காரியம் பாருங்கள். நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு வாழும்போது கடவுளின் மக்களாகின்றோம். நாம் மட்டுமல்ல, எத்தனைபேர்கள் எந்த மத, இன, ஜாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் இப்படி கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது கடவுளின் பிள்ளைகளாகின்றோம். 

இதனையே, "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலனாகிய யோவான். 

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறுவது வாயினால் கூறுவது மட்டுமல்ல, செயலிலும்  நாம் நமது விசுவாசத்தைக் காட்டுவது. அதாவது, அவரை விசுவாசித்து, அவருக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழவேண்டும். வெறும் விசுவாசம் மட்டும் போதாது. ஏனெனில் பிசாசுகளும் கடவுள் ஒருவர் உண்டு என்று விசுவாசிக்கின்றன.

"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ?" ( யாக்கோபு 2 : 19, 20 ) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

அன்று யூதர்கள் கடவுளை விசுவாசித்தனர். ஆனால் அவர்களது செயல்பாடுகள் பிசாசின் செயல்பாடுகளாக இருந்தன. எனவேதான் இயேசு கிறிஸ்து அவர்களைப்பார்த்து கூறினார், "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; ....................."  ( யோவான் 8 : 44 ) என்று.

கடவுளை நாம் அன்பு செய்கின்றோமென்றால் இயேசு கிறிஸ்துவை அன்புசெய்வோம்.  "இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்." (யோவான் 8:42) என்று கூறினார். இயேசுவை அன்பு செய்வது என்பது  அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதே. 

அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவருக்கு ஏற்பில்லாத வாழ்க்கை  வாழ்வோமென்றால் நாம் பிசாசின் பிள்ளைகளாயிருப்போம். எனவே கிறிஸ்துவின் கட்டளைகளைக் கைக்கொண்டு அவரை அன்புசெய்து வாழவேண்டியது அவசியமாயிருக்கிறது. அப்படி வாழ்வதுதான் அவரை விசுவாசிப்பது. 

அப்படி நாமெல்லாம் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் வாழ்வோமானால் இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுவதுபோல தேவனுடைய புத்திரராயிருப்போம்.  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.