Tuesday, May 16, 2023

தேவனிடத்தில் மன்னிப்பு உண்டு

ஆதவன் 🌞 841🌻 மே 18, 2023  வியாழக்கிழமை            


"கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு." ( சங்கீதம் 130 : 3, 4 )

நமது தேவன் மன்னிக்கிறதற்கு தயை நிறைந்தவர். மனிதர்கள் பலவீனமானவர்கள் என்பது அவருக்குத் தெரியும். மனிதர்களது பாவங்கள் அக்கிரமங்களை அவர் மன்னியாதிருப்பாரானால் இந்த உலகத்தில் எவருமே நிலைநிற்க முடியாது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

"துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." ( ஏசாயா 55 : 7 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைத் தண்டிப்பதற்கல்ல, மாறாக பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கவே உலகினில் வந்தார். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 9 ) என்று கூறுகின்றார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தன்னைப்பற்றிக் கூறும்போது,  "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்." ( யோவான் 3 : 17 ) என்று கூறினார். 

கிறிஸ்தவத்தின் அடிப்படையே மன்னிப்புதான். வேண்டாதவர்களை அழித்து ஒழிப்பது தெய்வீகமல்ல, மாறாக வேண்டாத துன்மார்க்கரையும் மனிதனாக மாற்றி  கிறிஸ்துவின் அன்பில் பங்குகொள்ள வைப்பதுதான் தெய்வீகத்தின் உட்சம். துன்மார்க்கரும், பாவிகளும் மனம்திரும்பி பரிசுத்த வாழ்க்கைக்கு நேராகத் திரும்பிய சாட்சிகளை கிறிஸ்தவத்தில் மட்டுமே நாம் காண முடியும்.  

தேவன் நமது தகப்பன் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம். நமது பிள்ளைகள் தவறுசெய்யும்போது நாம் அவர்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கிறோமே, அன்பே உருவான நமது விண்ணகத் தகப்பன் எப்படி நம்மை மன்னியாதிருப்பார்? 

எந்த அக்கிரமம் நம்மிடம் இருந்தாலும் இயேசு கிறிஸ்து மன்னிக்கத் தயாராக இருக்கிறார். அவரது இரத்தத்தால் கழுவப்படும் மேலான அனுபவத்தை வேண்டுவோம். நமக்காக அவர் ஆவலோடுக் காத்திருக்கின்றார். ஆம், கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. என்னை மன்னியும் என உண்மையான இருதயத்தோடு வேண்டுவோம். கர்த்தர் நம்மை மன்னித்து மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, May 15, 2023

நாள் பார்த்தலும் நேரம் பார்த்தலும் வேண்டாம்

ஆதவன் 🌞 840🌻 மே 17 2023  புதன்கிழமை      


"நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே" ( கலாத்தியர் 4 : 10 )

நாம் நமது நாட்டின் கலாச்சாரத் தாக்கத்தால் பல்வேறு காரியங்களை விடமுடியாமலிருகின்றோம். அதில் ஒன்றுதான் நல்ல நாள், நல்ல நேரம்  பார்த்தல். இது அவிசுவாசத்தால் மனிதர்கள் செய்யும் காரியம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புவித்துவிட்டோமென்றால் அவரே நம்மை நடத்துவார் எனும் உறுதியான நம்பிக்கை நமக்கு ஏற்படும். அப்படி இல்லாததால் நல்ல நாள் நல்ல நேரம் பாகின்றனர் பலர். காலங்கள் தேவனது  கரத்தில் இருக்கின்றன. நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்போமானால் நமக்கு ஏற்றபடி அனைத்தையும் நலமாக நமக்கு நடத்தித் தருவார்.   

இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும்கூட நேரங்களையும், நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்த்துச் செயல்படுவது நாம் அறிந்ததுதான். சில கிறிஸ்தவர்கள் இதற்குமேலும் பல காரியங்களைச்  செய்கின்றனர். பிற மதத்தினர் செய்வதுபோல ஜாதகம், ஜோசியம், குறிகேட்டல் போன்றகாரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.  

இஸ்ரவேல் மக்கள் கானானை நோக்கிப் பயணித்தபோது எதிர்ப்பட்ட பல்வேறு இன மக்களை அழித்து வெற்றிகொண்டனர். அப்படி அந்த மக்கள் இஸ்ரவேல் மக்களால் அழிக்கப்பட அவர்களது இத்தகைய தேவன் வெறுக்கும் செயல்பாடுகளே காரணமாய் இருந்தன. எனவேதான் தேவன் அவர்களை இஸ்ரவேல் மக்கள் மூலம் அழித்தார். எனவே, நீங்கள் அந்த மக்கள் செய்ததுபோல செய்யாதிருங்கள் என்று தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார் 

"........ குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை (கானானியரை) உன் முன்னின்று துரத்திவிடுகிறார்."( உபாகமம் 18 : 11, 12 )

கலாத்திய சபையினரும்  இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அப்போஸ்தலரான பவுல் அறிவுறுத்தவே இதனை எழுதினார். இன்றைய வசனத்துக்கு முந்தின வசனங்களில் பவுல் கூறுகின்றார், "நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?" ( கலாத்தியர் 4 : 8, 9 ) அதாவது தேவனை அறிந்த நீங்கள் எப்படி இந்தச் செயல்களில் ஈடுபடலாம் என்கின்றார்.

கிறிஸ்துவை அறியாதகாலங்களில் இப்படி இருந்திருந்தாலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன் என்று கூறுபவர்கள் இத்தகைய அவிசுவாச செயல்களில் ஈடுபடுவது முறையல்ல. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையாக உறுதியாக ஏற்றுக்கொள்வோமானால் அவர் நமக்கு தீங்கான எந்தச் செயலையும் செய்யமாட்டார்; நமக்கு எதிராக வரும் சத்துருக்களின் வல்லமைகளையும் நம்மைவிட்டு அகற்றுவார். 

நம்மருகினில் வசிக்கும் மக்கள் செய்கிறாரகளே என்று நாம் இவைகளைச் செய்யும்போது கிறிஸ்துவை அவமதிக்கின்றோம்; கிறிஸ்துவை பிறர் ஏற்றுக்கொள்ளத் தடையாக இருக்கின்றோம் என்று பொருள்.  கிறிஸ்துவுக்குள் வாழும் நமக்கு எல்லா நாளும் எல்லா நேரமும் நல்லவையே.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, May 14, 2023

ஞானிகளை வெட்கப்படுத்த பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;

ஆதவன் 🌞 839🌻 மே 16 2023  செவ்வாய்க்கிழமை  


















"அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 : 41, 42 )


இன்று கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும்  பலரும் வேதாகமக் கல்லூரிகளில் படிப்பதையும், பல்வேறு பட்டங்களையும் திருச்சபைப் பதவிகளை அடைவதையும் பெருமையாக  எண்ணிக்கொள்கின்றனர். வேதாகமத்தில் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்று தங்கள் பெயருக்குமுன் அதனைப் பதிவுசெய்வதிலும்  ஆர்வமாக இருக்கின்றனர். வேத அறிஞர், தீர்க்கத்தரிசன வரம் பெற்றவர் எனது தங்களை அழைத்துக்கொள்வதில் மனதளவில் இன்பம் காணுகின்றனர்.   

ஆரம்ப கால கிறிஸ்தவ ஊழியம் செய்த அப்போஸ்தலர்கள் இதற்கு மாறாக, கிறிஸ்துவின் பெயருக்காக தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷப்பட்டார்கள் என்று இன்றைய வசனத்தில் வாசிக்கின்றோம். ஆம், உலக மனிதர்களால் அற்பமாக எண்ணப்படுபவர்களையே தேவன் உயர்த்தி ஆசீர்வதித்து அவர்கள்மூலம் பல ஆவிக்குரிய ரகசியங்களை வெளிப்படுத்துகின்றார். 

வேதாகம கல்லூரி படிப்பு படிக்காத பலர்தான் ஆவிக்குரிய மேலான அனுபவம் உள்ளவர்களாக இருப்பதை அனுபவபூர்வமாக அறிந்துள்ளேன். என்னை ஆவிக்குரிய வாழ்வில் ஆரம்பத்தில் வழிநடத்திய இந்தியன் பெந்தெகொஸ்தே சபை (IPC) பாஸ்டர் பெரியவர் ஜாண்சன் டேவிட் அவர்கள் வேதாகம கல்லூரியில் படித்தவரல்ல. ஆனால் அவரைப்போல தேவ அனுபவமும் வழிநடத்துதலும் வெளிப்பாடுகளும் பெற்ற ஊழியர்களை இதுவரை நான் பார்க்கவில்லை. ஆனால் பலரும் அவரை அற்பமான மனிதராகவே கருதினர்.   

"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." (1 கொரிந்தியர் - 1:27, 28)

அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போன அப்போஸ்தலர்களால் ;  அவர்களது பிரசாங்கத்தால் ஐயாயிரம், மூவாயிரம் என மக்கள் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொண்வர்களாக மாறினர்.  ஆனால் அப்போதிருந்த ஞானிகள் கிறிஸ்துவை அறியவில்லை.

அன்பானவர்களே, கிறிஸ்துவை நாம் அறிவிப்பதால் நமது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள்  நம்மைப்பற்றி என்ன எண்ணுகின்றார்கள் என்று நாம் கவலைப்படவேண்டியதில்லை. புகழ் பெற்ற ஊழியர்களைப்போல நாம் இல்லை என்பதால்  நம்மைக்குறித்துச் சிலர்  அற்பமாக எண்ணலாம்;  பணத்துக்காக ஊழியம்செய்ய வந்ததாக பலர் எண்ணலாம். ஆனால் நமது உண்மையான எண்ணமும் நாம் செய்யும் பணிகளும் இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். 

சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியேறி இயேசுவே கிறிஸ்து என்று அறிவித்த அப்போஸ்தலர்களைப்போல பிறரால் அற்பமாக எண்ணப்படும் நாமும் கிறிஸ்துவை அறிவிப்போம்.  கர்த்தர் நம்மைக்கொண்டும் பலரை தனதுபக்கமாகத் திரும்புவார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, May 13, 2023

விவசாயிகளைப்போல பொறுமையோடிருந்து, இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்

ஆதவன் 🌞 838🌻 மே 15, 2023  திங்கள்கிழமை       






"......கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே". ( யாக்கோபு 5 : 7, 8 ) 

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தை நியாயம்தீர்க்க்கும் நியாயாதிபதியாய் பூமிக்கு வரவிருக்கின்றார். அப்படி அவர் வரும்போது அவரோடு நாமும் சேர்த்துக்கொள்ளப்படத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. 

ஒரு விவசாயி பயிற்செய்யும்முன் மழைக்காகக் காத்திருக்கின்றான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் மாதம் பருவமழை துவங்குமென்பதால்  விவசாயிகள் அதற்குமுன்பே கடலை, நெல்  அல்லது இதர பயிர்களுக்கான விதைகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு எப்போது மழை பொழியுமென்று காத்திருக்கின்றனர். முன்மாரி எனும் முதல் மழை பெய்தவுடனேயே விதைகளை விதைக்கின்றனர். அந்த நீர்ப்பதத்தில் விதைகள் முளைத்து எழும்பும். 

ஆனால் தொடர்ந்து அடுத்த பின்மாரி மழை பெய்திடவேண்டும். அப்போதுதான் முளைத்த பயிர்கள் மேற்கொண்டு வளரும். இவை ஒரேநாளில் நடைபெறுவதில்லை; அந்த விவாசாயிகள் காத்திருக்கின்றனர். இதனையே, இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

இந்த விவசாயிகளைப்போல நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே என்று அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார். 

அதாவது விவசாயிகள் மழைக்காக காத்திருப்பது மட்டுமல்ல, முதலில் பயிர்ச்செய்வதற்காக நிலத்தைப் பண்படுத்தி பல்வேறு முன்னேற்பாடுகளைச்  செய்கின்றனர். அதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவதற்குமுன் நாம் நமது இருதயங்களை அவருக்கு ஏற்புடையதாக பண்படுத்திதயார் நிலையில் இருக்கவேண்டும். அதனையே, கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே என்று நம்மை  உணர்வூட்டுகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

நாம் நமது இருதயங்களை நாமாக ஸ்திரப்படுத்த முடியாது. நமது இருதயத்தை தேவன்தான் பலப்படுத்தமுடியும். ஏனெனில் நாம் இந்த உலகத்தில் பல்வேறு துன்பங்கள், சோதனைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றோம். நம்மைக்கொண்டு எதுவும் செய்திடமுடியாது. எனவே அவருக்கு நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். 
 
எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார், "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" ( 1 பேதுரு 5 : 10 ) என்று. தேவனையே சார்ந்துகொண்டு நமது இருதயங்களை ஸ்திரப்படுத்தி கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

நீதிக்குத்தக்கதாக பதிலளிக்கும் தேவன்

ஆதவன் 🌞 837🌻 மே 14, 2023  ஞாயிற்றுக்கிழமை   





"என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்." ( சங்கீதம் 18 : 19, 20 )

தாவீது ராஜா தனது வாழ்வின் ஆரம்பகாலமுதல் பல்வேறு பிரச்சனைகளையும் சோதனைகளையும் சந்தித்துவந்தார். உயிரே போகக்கூடிய நிலைமையையும் அவர் பல வேளைகளில் சந்தித்தார்.  தாவீதை எப்படியாவது கொலைசெய்திட வேண்டுமென்று சவுல் வெறிகொண்டு அலைந்தான். ஆனால் தாவீது கர்த்தருக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழத் தீர்மானித்து வாழ்ந்ததால் தேவன் தாவீதைத் தப்புவித்தார். மட்டுமல்ல, தேவனது இருதயத்துக்குப் பிரியமானவன் என்று தாவீது பெயர் பெற்றார். 

ராஜாவாயிருந்த சவுலைத் தள்ளிவிட்டு, "....தாவீதை அவர்களுக்கு ராஜவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார்." என்று வாசிக்கின்றோம்.
( அப்போஸ்தலருடைய நடபடிகள் 13 : 22 ) ஆம்;  தாவீது கர்த்தருக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்தார். 

எனவே தேவன் தாவீதோடு இருந்து அவரைக் காப்பாற்றி மொத்த இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார். இதனைத்தான் தாவீது இன்றைய தியானத்துக்குரிய  வசனத்தில் குறிப்பிடுகின்றார்:  "என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்." என்று. 

அன்பானவர்களே, நமது தேவன் நீதியைச் சரிக்கட்டக்கூடிய தேவன். அவர் யாருக்கும்  கடனாளியாவதில்லை. நாம் செய்யும் நீதிக்குத் தக்கதாகவும் அதற்குமேலும் அவர் நமக்குச் செய்ய ஆர்வமாயிருக்கிறார். 

நாம் நமக்கு தேவன் என்னென்ன செய்யவேண்டுமென்று பட்டியலிட்டு வேண்டுதல் செய்கின்றோம். ஆனால் அவற்றை நிறைவேற்ற தேவன் விரும்புவது ஒன்றே. அது நீதியுள்ள வாழ்க்கை; பாவமற்ற, கைகள் தூய்மையான ஒரு வாழ்க்கை.  இப்படி வாழ்ந்ததால், என்  நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார் என்கின்றார் தாவீது.    

நமது தேவன் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவதில்லை. தாவீதுக்குச் செய்தாரென்றால் நிச்சயமாக நமக்கும் செய்வார். நாம் பலவேளைகளில் ஜெபங்களுக்கும் இதர ஆவிக்குரிய காரியங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துவிட்டுத்  தாவீது கூறும் நீதி, நேர்மை, தூய்மை போன்ற காரியங்களில் தவறிவிடுகின்றோம்.  

தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ நம்மை  ஒப்புக்கொடுப்போம். அப்போது, நம்மேல் அவர் பிரியமாயிருந்து, விசாலமான இடத்திலே நம்மைக் கொண்டுவந்து, நம்மைத் தப்புவிப்பார். நமது கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டுவார்."

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, May 11, 2023

சுய பலத்தையல்ல; கர்த்தரையே நம்புவோம்

ஆதவன் 🌞 836🌻 மே 13, 2023  சனிக்கிழமை     




"என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை." ( சங்கீதம் 44 : 6 )

நமது சுய பலத்தை நம்புவதைவிட கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருப்பதை இன்றைய வசனம் நமக்கு உணர்த்துகின்றது. வில், பட்டயம் (வாள்) இவை நமது சுய பலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள். என்னிடம் இந்த உலகத்தில் வெற்றி வாழ்க்கை வாழ்ந்திட, வில், வாள் போல பல தகுதிகள் உள்ளன. நல்ல படிப்பு, பதவி, பொருளாதார வசதிகள் இவை எனக்கு இருக்கின்றன என எண்ணி இவைகளை நம்பி நாம் வாழக்கூடாது என்கின்றது இந்த வசனம். 

இத்தகைய உலக சிறப்பம்சங்கள் நம்மை எப்போதும் வெற்றியடையச் செய்திடாது. எனவேதான் இவைகளை நான் நம்பமாட்டேன் கர்த்தரையே நம்புவேன் என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். இதனை இன்றைய தியான வசனத்தின் தொடர்ச்சியான அடுத்த வசனத்தில், "நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்." ( சங்கீதம் 44 : 7 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, நமக்கு இத்தகைய உலக காரியங்களே பலம் என்று நாம் வாழ்வோமானால் சிலவேளைகளில் அவையே நமக்கு எதிராகத் திரும்பிவிடும்.  அல்லது அவைகளை நம்மால் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். தங்களது பதவி, புகழ், செல்வாக்கு இவைகளையே நம்பி இந்த உலகத்தில் வாழ்ந்த பல தலைவர்கள் தங்களது பாதுகாவலர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர்.  அதாவது இந்தத் தலைவர்களுக்கு வாளாகவும் வில்லாகவும் இருந்து பாதுகாப்புக் கொடுப்பார்கள் என நம்பியவர்களே அந்தத் தலைவர்களைக் கொன்றுள்ளனர். 

தேவனைத தவிர இந்த உலகத்திலுள்ள அனைத்துமே நம்ப முடியாதவை. ஏனெனில் அனைத்து வசதிகளும் இருந்தும் அவற்றை நாம் அனுபவிக்க கர்த்தரது கிருபை அவசியம். உலகப்புகழ்பெற்ற பெண் டிசைனர்.( Crisda Rodriguez) செப்டம்பர் 9, 1987 அன்று கேன்சரால் இறந்தார்.  அவர் இறப்பதற்குமுன் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் எழுதிய வார்த்தைகள்..  

"மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ! இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்துச்  செல்லப் படுகிறேன்.!  இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.!  என் வங்கிக்  கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!  என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். 

இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஒரு லேபிலிருந்து (lab) மற்றொரு லேபிற்க்கு மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!  அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை... உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு மட்டுமே உணவு!  தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் உதவுகிறார்கள்....  எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை... எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை..."

ஆம், "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்." ( சங்கீதம் 44 : 6, 7 ) உலகச் செல்வங்கள், பதவிகளையல்ல, கர்த்தரையே நம்பி வாழ்வோம்; மெய்யான ஆசீர்வாதம் பெறுவோம். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

கொடியேற்றுவது வெற்றியின் அடையாளம்

ஆதவன் 🌞 835🌻 மே 12, 2023  வெள்ளிக்கிழமை       





"வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்." ( ஏசாயா 59 : 19 )

அநேகம் மக்கள் தங்களது வாழ்க்கையில் வரும் துன்பங்கள், நோய்கள், பிரச்சனைகளுக்கு சாத்தான் அல்லது சத்துருவானவன்தான் காரணம்  என்று எண்ணிக்கொள்கின்றனர். "பிரதர், ஒரே சத்துரு போராட்டமாய் இருக்கிறது, எனக்காகவும் எனது குடும்பத்துக்காகவும்  ஜெபித்துக்கொள்ளுங்கள்" என்று சிலர் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு. 

சத்துருவானவன் அல்லது சாத்தான் மனிதர்களது ஆத்துமாவை அழித்து ஒழித்திட அதாவது நம்மை தேவனை விட்டுப் பிரித்து நமது விசுவாச வாழ்வைச்  சீர்குலைத்திட, ஆதிகாலமுதல் போராடிக்கொண்டிருக்கிறான். கோடிக்கணக்கான ஆத்துமாக்களையும்   அழித்துக்கொண்டிருக்கிறான்.  சாத்தான் என்றால் கருப்பு உடலமைப்பு, கோரமான பற்கள், பார்க்கவே பயங்கரமானதும் அருவெறுப்புமான தோற்றம் இவைகளே நமது கண்களுக்குமுன் வரும். ஆனால் இவை மனிதர்களால் கற்பனைசெய்யப்பட்டத்  தோற்றமே. 

ஆதியில் ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளை வஞ்சித்த சாத்தான், ஞானத்தால் நிறைந்தவன்,  பூரண அழகுள்ளவன், என வேதாகமத்தில் சாத்தானைக் குறித்து பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"....கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது........" ( எசேக்கியேல் 28 : 12, 13 )

இப்படி ஞானமும் அழகும் நிறைந்தவன்தான் சாத்தான். மனிதர்களை எப்படி வஞ்சிக்கவேண்டுமென்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இந்தச் சாத்தான் பெரு வெள்ளம் மக்களை அழித்தொழிக்க வருவதுபோல ஆக்ரோஷமாக போராடிவருகின்றான். ஆனால் நாம் ஆவிக்குரிய பலமுள்ளவர்களாக வாழும்போது அவனால் நம்மை நெருங்க முடிவதில்லை.   ஆவியானவர் அவனுக்கு எதிராகக் கொடியேற்றுவார் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

கொடியேற்றுவது வெற்றியின் அடையாளம். அன்று தமிழ் மன்னன் சேரன் இமயத்தில் கொடி  ஏற்றினான் என்று படிக்கின்றோம். நிலவில் கால்பதித்த மனிதன் அங்கு அமெரிக்க நாட்டின் கொடியைப் பறக்கவிட்டான். அதாவது கொடியேற்றுவது அந்த இடத்தை வெற்றிகொள்வதைக் குறிகின்றது. அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது. சாத்தான் வெள்ளம்போல எதிர்த்து வந்தாலும் கர்த்தர் அவனுக்கு விரோதமாய்ப் போராடி வெற்றிக்கொடி ஏற்றுவார். 

மேலும், "தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர்." ( சங்கீதம் 74 : 13 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே,  தேவனுக்கேற்ற ஆவிக்குரிய வாழ்க்கை நாம் வாழும்போது சத்துருவான வலுசர்ப்பம்  நமது வாழ்வில் எத்தகைய வெறித்தனமான தாக்குதல் நடத்தினாலும் கர்த்தருடைய ஆவியின் வல்லமையால் அவனை வெற்றிகொண்டு நாம் வெற்றிகொடியேற்ற முடியும். 

எனவே, சத்துருவான சாத்தானின் செயல்பாடுகளைக்கண்டு நாம் அஞ்சிடவேண்டாம். நமது ஆவிக்குரிய வாழ்வைப் பலமுள்ளதாக்குவோம். "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்." ( ரோமர் 16 : 20 ) 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Wednesday, May 10, 2023

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்

ஆதவன் 🌞 834🌻 மே 11, 2023  வியாழக்கிழமை                          


















"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்விழித்திருங்கள்ஏனெனில்உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்." (  1 பேதுரு 5 : 8 )

அப்போஸ்தலனாகிய பேதுரு பிசாசின் குணத்தைப்பற்றி தெளிவாக விளக்குகின்றார்ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளைக் கவிழ்த்துப்போட்ட பிசாசு தனது தந்திரங்களை இன்னும் நிறுத்தவில்லைபெருமையினால் தான் இழந்துபோன பரலோக இன்பத்தை மனிதர்கள் அனுபவித்து விடக்கூடாது என்பதில்  அவன் வைராக்கியமாக இருக்கின்றான்இதனால்தான் கர்ஜிக்கிற சிங்கம் போல சுற்றித்திரிகின்றான்.

இயேசு கிறிஸ்து உலகினில் வந்து பாடுபட்டு மரித்து உயிர்த்தபோது பிசாசின் தலையை நசுக்கினார்.  அதனால்  தலை நசுக்கப்பட்ட ஆதி சர்ப்பம் இப்போது வலு இழந்தவனாக இருக்கிறான்.  தேவனுக்கு கீழ்ப்படிந்த  ஒரு வாழ்க்கை வாழும்போது சிங்கம் போன்ற பிசாசு நம்மைவிட்டு ஓடிப் போவான்

"ஆகையால்தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." (  யாக்கோபு 4 : 7 )

ஆனால் மனிதர்கள் நாம் பெரும்பாலான வேளைகளில் இந்த வசனத்துக்கு மாறி நிற்கின்றோம்பிசாசைக்  கண்டு பயந்து ஓடுகின்றோம் ஆனால் பாவத்துக்கு எதிர்த்து நிற்க முயன்று தோல்வியடைந்து பாவத்தில் விழுகின்றோம்.  காரணம் நாம் பல பாவ காரியங்களைப் பாவம் என்று எண்ணுவதில்லைபிசாசு நமது மனதை மயக்கி வைத்துள்ளான்."இதெல்லாம் பெரிய பாவமா?" எனும் எண்ணத்தை நம்மில் விதைப்பதே பிசாசுதான்

எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான்சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லைஅவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்". (  யோவான் 8 : 44 )

இந்தப் பிசாசை எதிர்த்து நிற்கக்கூடிய வல்லமையையும் அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்துள்ளார்போர் செய்பவன் எப்படித்  தன்னைப் பாதுகாத்திட சில கவசங்களையும் எதிரியைத் தாக்கிட சில ஆயுதங்களையும் வைத்திருப்பானோ அதுபோல நமக்கும் தேவன் சில பாதுகாப்புக் கவசங்களையும் ஆயுதங்களையும் தந்துள்ளார்இதனைப் பவுல் அடிகள்

"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படிதேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்". (  எபேசியர் 6 : 11 ) "ஆகையால்தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும்சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்குதேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்" (  எபேசியர் 6 : 13 ) என்று கூறுகின்றார்அவை என்ன கவசங்கள்ஆயுதங்கள் ?

சத்தியம் என்னும் கச்சை,  நீதியென்னும் மார்க்கவசம்சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சைவிசுவாசமென்னும் கேடகம் , இரட்சணியமென்னும் தலைச்சீராய்தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் (  எபேசியர் 6 : 14-17 )

மேற்குறிப்பிட்ட பாதுகாப்புக் கவசங்களையும்போர் ஆயுதங்களையும் நாம் கையாண்டால் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரியம் பிசாசு நம்மை விட்டு ஓடுவான்.

இந்தக் கவசங்களும் ஆயுதங்களும் நம்மிடம் எப்போதும் இருக்கின்றதா என்பதை நாம் உறுதி செய்து கொள்ளவேண்டும்அன்பானவர்களே பிசாசுக்கு எதிர்த்து நிற்கும் பலத்துடன் வாழ்ந்து ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி பெறுவோம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, May 08, 2023

நீக்ரோ தனது தோலின் நிறத்தை மாற்றக்கூடுமோ?

ஆதவன் 🌞 833🌻 மே 10, 2023  புதன்கிழமை                             










"எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." ( எரேமியா 13 : 23 )

மனிதர்கள் பொதுவாக இயற்கையில் நற்குணங்கள் உள்ளவர்களாக இருப்பதில்லை. சிறு வயது குழந்தைகளைக் கவனித்துப்பார்த்தாலே இது புரியும். இரண்டு சிறு குழந்தைகளிடம் ஒரு பொருளைக்கொடுத்தால் இரண்டு குழந்தைகளும் ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்வதும், சண்டையிடுவதையும் அந்தப் பொருள் தனக்குத்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதையும் நாம் பார்க்கலாம். இந்த மனித குணமே அவர்கள் வளரும்போது போட்டி, பொறாமை, வஞ்சகம், தந்திரம் போன்ற குணங்களாக மாறுகின்றன. 

எனவேதான் தாவீது, "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்." ( சங்கீதம் 51 : 5 ) என்று கூறுகின்றார். இந்த மோசமான மனித குணம் எவ்வளவு நற்போதனைகள் செய்தாலும் முற்றிலுமாக மாறிவிடுவதில்லை. ஓரளவு மாறினாலும் தேவைக்கேற்ப மனிதன் தனது துர்க்குணத்தைக் காட்டிவிடுகின்றான். இதனையே இன்றைய வசனம், "எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்." ( எரேமியா 13 : 23 ) என்று கூறுகின்றது. 

எத்தியோப்பியனான நீக்ரோ மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றமுடியாது, சிவிங்கி, சிறுத்தை போன்ற மிருகங்கள் தங்கள் உடலிலுள்ள புள்ளிகளை மாற்றமுடியாது. அப்படி அவைகள் மாற்றக் கூடுமானால் நீங்களும் நம்மை செய்யக்கூடும் என்கிறார் கர்த்தர். அதாவது, மனிதர்கள் தாங்களாக நன்மை செய்ய முடியாது என்கின்றது இந்த வசனம்.    

இப்படித் தன்னால் நன்மைசெய்ய முடியாத மனிதர்களை நன்மைசெய்ய வைக்கவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். ஆம், அவரே இதற்கு வழி. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "..........ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 )

ஆம் அன்பானவர்களே, நாம் நீதி போதனைகளைக் கேட்பதாலோ, நீதி நூல்களைக் கற்பத்தாலோ, பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்பதாலோ தேவனுக்கேற்றவர்களாக மாறிட முடியாது. அதற்கு ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொள்வதுதான். தேவனுக்கேற்ற கனி கொடுப்பவர்களாக நாம் மாறவேண்டுமானால், கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட வேண்டியது அவசியம். 

எனவேதான், ".......கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இதுவரை நாம் செய்த பாவங்களை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது, இரத்தத்தால் கழுவப்பட்டு, பாவ மன்னிப்பு பெற்று அவரோடு நம்மை இணைத்துக்கொள்வோம். அப்போது மட்டுமே தீமை செய்யப் பழகிய நம்மாலும் நன்மை செய்ய முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com