Saturday, October 26, 2024

எது ஆவிக்குரிய ஆராதனை?

தேவச் செய்தி - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

விக்குரிய ஆராதனை என்றால் என்ன என்பதனைப் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளுக்குச் செல்லும் பலர் தங்களை மட்டும்  ஆவிக்குரிய ஆராதனை செய்பவர்களாகவும் மற்றவர்கள் அனைவரும் தேவன் விரும்பாத ஆராதனை செய்வதாகவும்  எண்ணிக்கொள்கின்றனர். இன்று ஆவிக்குரிய சபைகள்  என்று கூறப்படும் பல சபைகளில் பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்கிறோம் என்று கூறி அலறி ஆர்ப்பாட்டம் செய்வதை நாம் காணலாம். ஆனால் இவர்களில் பலரும் ஆராதனை முடிந்து வெளியுலக வாழ்க்கையில் தேவனை அறியாத மக்களைவிட அவலட்சணமான குணங்களுள்ளவர்களாக காணப்படுகின்றனர். 

ஆராதனை செய்த இவர்கள் மற்றவர்களைவிட நல்லவர்களாக அல்லவா இருக்கவேண்டும்? அப்படியானால் ஆலய ஆராதனையில் இவர்களைத் துள்ளிக் குதிக்கவைத்த ஆவி எது?  பரிசுத்த ஆவி, "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்றல்லவா கூறப்பட்டுள்ளது? "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" ( யோவான் 16 : 13 ) என்று கூறப்பட்டுள்ளதே? அப்படியானால் ஆராதனை முடிந்து வெளியே வந்தவுடன் மற்றவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும், உண்மையற்ற வாழ்க்கை வாழ்வதும் ஏன்? 

ஆனால் என்ன இருந்தாலும் கிறிஸ்தவம் ஆவிக்குரிய ஆராதனையையே வலியுறுத்துகின்றது என்பதே நிஜம். இயேசு கிறிஸ்து கூறினார், "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்." ( யோவான் 4 : 24 ) சமாரியா பெண்ணிடம் பேசும்போது இயேசு கிறிஸ்து இந்த மாபெரும் சத்தியத்தை வெளிப்படுத்தினார். 

மேலும், யூதர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்திலே தான் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டுமென நம்பினர். அவர்கள் தேவனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருப்பவர் என்றே நம்பினர். மேலும் தேவனைத் தொழுதுகொள்ள சில முறைமைகளையும் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையையும் முறைமைகளையும் கடைபிடிப்பதுதான் ஆவிக்குரிய ஆராதனை என்று எண்ணிக்கொண்டனர். 

குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட முறைமைகளின்படி மட்டுமே தேவனை ஆராதிக்கமுடியும் என்று யூதர்கள் நம்பினர். ஆனால் அந்தச் சமாரிய பெண்ணிடம் பேசும்போது இயேசு கிறிஸ்து, " ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது." ( யோவான் 4 : 21 ) என்றார்.

அதாவது நாம் ஆவிக்குரிய ஆராதனை செய்யவேண்டும், மட்டுமல்ல அந்த ஆராதனையை நாம் எந்த இடத்திலும் செய்யலாம் என்று பொருள்.  இன்றும்கூட கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருயாத்திரை செல்கின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைமைகளைக் கைக்கொள்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், தேவன் குறிப்பிட்ட ஆலயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தனது அருளை அங்கு மட்டும் பொழிபவரல்ல. இவற்றைத் தெளிவாகப்  புரிந்துகொள்ள நாம் ஆவிக்குரிய ஆராதனை என்றால் என்ன என்பதனைப் புரிந்துகொண்டால்தான் முடியும்.  

"தேவனை நாம் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்." என்று இயேசு கிறிஸ்துக் கூறுவதன் பொருள்தான் என்ன?

ஆவியோடும் என்பது இரண்டு அர்த்தங்களை உடையது. ஒன்று , நமது உள்ளான ஆத்துமத்தோடு (ஆத்தும அன்போடு) தேவனைத் தொழுதுகொள்ளவேண்டும் என்று பொருள். இரண்டாவதாக, பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்ளவேண்டும். அதாவது, பரிசுத்த ஆவியின் குணங்களோடு அல்லது கனிகளோடு. இன்று ஆவிக்குரிய சபை என்று கூறப்படும் சபைகளில் பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்கிறோம் என்று கூறி அலறி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அலறுவது பரிசுத்த ஆவியல்ல, ஆவியின் கனிகள் உள்ளவனே பரிசுத்த ஆவியை உடையவன்.

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று வாசிக்கின்றோம். அதாவது , தேவனைத் தொழுதுகொள்பவன் உள்ளான ஆத்தும அன்போடும், மேலேகுறிப்பிடப்பட்டுள்ள ஆவியின் குணங்களோடும் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டும் என்பது பொருள்.

இரண்டாவது இயேசு கூறும் வசனத்தில் "உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்" என்று கூறுகின்றார். உண்மை என்றால் என்ன? தேவனுடைய வசனமே சத்தியம் என்று இயேசு கூறுகின்றார். "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். ( யோவான் 17 : 17 ) அதாவது தேவனது வார்த்தைகளை வாழ்வாக்கி அவரைத் தொழுதுகொள்ளவேண்டும். மேலும், வாழ்க்கையில் உண்மையுள்ளவர்களாக இருந்து அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.

இந்தக் குணங்களோடு தேவனை ஒருவர் எங்கிருந்தபடியும் தொழுதுகொள்ளமுடியும். எனவேதான் இயேசு கிறிஸ்து, "ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது". என்று கூறினார்.

அன்பானவர்களே, ஒருவர் ஆராதனைக்குச் செல்லும் ஆலயத்தை வைத்து ஒருவரை ஆவிக்குரிய நபர் என்றோ அல்லது இவர் ஆவிக்குரிய நபர் அல்ல என்றோ என்று நாம் கருதிவிடக் கூடாது. இயேசு கூறிய அளவுகோல்களை உடையவரே ஆவிக்குரிய முறையில் தேவனைத் தொழுதுகொள்பவர். எனவேதான் "தீர்ப்பிடாதீர்கள்" என்று இயேசு கிறிஸ்து கூறினார். 

மற்றவர்கள் செய்யும் ஆராதனை முறைகளைப்பார்த்து அவர்கள் என்ன ஆராதனைச் செய்கிறார்கள் என்று நாம் ஆராய்ச்சிசெய்யத் தேவையில்லை. இயேசு கிறிஸ்த்துக் கூறிய முறையில் நாம் தேவனைத் தொழுதுகொள்கிறோமா என்று நம்மையே நாம் நிதானித்து அறிந்து நம்மைச் சீர்படுத்திக் கொள்வோம். "இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 10 : 12 )  

Wednesday, October 23, 2024

ஏவாளை வஞ்சித்த பாம்பு

 'ஆதவன்' 💚அக்டோபர் 31, 2024. வியாழக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,362

"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 )

ஆதியில் ஏதேனில் பாம்பானது தனது வஞ்சகமான பேச்சினால் ஏவாளை ஏமாற்றியது. அதாவது, தேவன் கூறிய வார்த்தைகள் பொய்யானவை என்றும், தான் கூறுவதுதான் மெய்  என்றும்  அவளை நம்பச் செய்தது. தோட்டத்தின் நடுவில் இருக்கும் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்ணும் நாளில் நீங்கள் சாகவே சாவீர்கள் என்று கர்த்தர் கூறியிருந்தார். 

ஆனால் வஞ்சக பாம்பாகிய சாத்தான், அவளை நோக்கி: "நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3 : 4, 5 ) ஆனால், தேவனது வார்த்தைகளைவிட  பாம்பு கூறியதையே ஏவாள் நம்பினாள்; தேவனது வார்த்தைகளைப் புறக்கணித்தாள். 

அப்போஸ்தலரான பவுல் இந்தச் சம்பவத்தைக்  கிறிஸ்துவின் நற்செய்தி அறிவித்தலோடு ஒப்பிடுகின்றார். அன்று சாத்தான் பாம்பு உருவம்கொண்டு ஏவாளை வஞ்சித்தது. இன்று அதுபோல ஒருவர் வேத வசனங்களுக்கு  தவறான அளித்து அவற்றை உண்மை என விசுவாசிகளை நம்பச் செய்யும்போது மக்களை சாத்தான் போல வஞ்சிக்கிறார் என்று பொருள். "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்.......( 2 கொரிந்தியர் 11 : 4 ) என்று கூறுகின்றார். 

அதாவது, வேதம் குறிப்பிடும் கிறிஸ்துவைப் பிரசங்கியாமல், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் உலக ஆசீர்வாதம் நிரம்பி வழியும் என்று மக்களை நம்பச் செய்வது   ஆதியில் ஏதேனில் சாத்தானாகிய பாம்பு பேசிய பேச்சைப்போலவே இருக்கும். இத்தகைய   தவறான நற்செய்தி அறிவிப்பால் "உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்" என்கிறார் அப்போஸ்தலரான பவுல். ஏனெனில், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16 : 33 ) இயேசு கிறிஸ்து. உபத்திரவத்தை சகித்து வெற்றிபெற்ற வாழ்க்கை வாழவே கிறிஸ்து நம்மை அழைத்துள்ளார்.

ஆனால், அப்போஸ்தலரான பவுல் காலத்திலேயே இத்தகைய தாறுமாறான உபதேசங்கள் இருந்திருக்கின்றன என்றால் இன்று எத்தனை அதிகமாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். பாம்பு வேஷமணிந்த சாத்தானின் வார்த்தைகளை ஆதாமும் ஏவாளும் விசுவாசித்ததுபோல இன்று பலரும் தவறான சுவிசேஷ அறிவிப்புகளைத்தேடி அதிகம் ஓடுகின்றார்கள்.  

எப்போதும் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் என்று உலக ஆசீர்வாதத்தை மட்டுமே  பிரசங்கிப்பது, கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்திய  ஜீவன் இவைகளைக்குறித்து பேசாமலிருப்பது, வேதாகமத்தில் குறிப்பிடாதமுறைகளில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள மக்களைத் தூண்டுவது, மனம்திரும்புதல் / வாழ்க்கை மாற்றத்தைக் குறித்துப் முக்கியத்துவம்கொடுத்துப் பேசாமலிருப்பது  போன்றவை ஏதெனில் சாத்தான் விலக்கப்பட்ட கனியின் அழகையும் கவர்ச்சியையும் ஆதிப்பெற்றோருக்குக் காட்டியது போன்ற செயலே.    

சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, நமது மனதையும்  கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகச் செய்திடாமல் காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு

 'ஆதவன்' 💚அக்டோபர் 30, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,361


"இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )

அனைத்துக்கும் மூலம் வெளிச்சமே. இதனால்தான் தேவன் முதல்முதலில் ஒளியைப் படைத்தார் (ஆதியாகமம் 1 : 3) இப்படி ஆதியில் ஒளியைப்படைத்த அதே தேவன் நம்மில் கிறிஸ்துவின் மகிமையின் அறிவாகிய ஒளி பிரகாசிக்கவேண்டும் என்பதற்காக நமது இருதயங்களில் வந்து பிரகாசமூட்டுகின்றார். அதாவது, கிறிஸ்து நம்மில் இருக்கின்றார் என்றால், நமக்குள் பிதாவாகிய தேவனும் இருக்கின்றார். 

இந்த ஒளி நமது சுய முயற்சியால் உண்டாகவில்லை. மாறாக தேவனால் உண்டாகியிருக்கின்றது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். இதனையே, "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.' ( 2 கொரிந்தியர் 4 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

சர்வலோகத்தையும் படைத்து ஆளும் தேவன் வெறும் மண்பாண்டங்களான நமக்குள் வந்து தங்கியிருப்பது ஆச்சரியமான காரியம்.  ஆனால் அப்படித் தங்கியிருக்க என்ன காரணம் என்பதையே, "இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக" என்று  இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது பிதாவின் மகிமையின் ஒளி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கின்றது. அதே ஒளி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வரவேண்டும் என்பதற்காக நமது இருதயத்தில் அவர் பிரகாசித்தார். 

ஏனெனில் இருள் என்பது பாவ அடிமைத்தனம்.  இந்தப் பாவ இருள் நம்மைவிட்டு அகலவேண்டும் என்பதற்காக கிறிஸ்துவின் ஒளி நம்முள் வந்துள்ளது.  கிறிஸ்துவின் ஒளி நம்மிடம் வரும்போது நாம் நீதியுள்ளவர்களாகின்றோம்; அநீதியைவிட்டு விலகுகின்றோம். கிறிஸ்துவின் ஒளியைப்பெற்றவர்கள் மற்ற துன்மார்க்கர்களிடமிருந்து விலகிவிடுகின்றனர். "............நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?" ( 2 கொரிந்தியர் 6 : 14, 15 ) என்று வாசிக்கின்றோம்.  இதனையே ஆதியில் ஒளியைப் படைத்தத் தேவனும்  கண்டார். "வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்." ( ஆதியாகமம் 1 : 4 ) என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் அன்பானவர்களே, இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இருளான மனிதர்களை பிரகாசிக்கச்  செய்வதுடன் தங்கள் துன்மார்க்கத்திலேயே தொடர்ந்து வாழும் இருளான மக்களிடமிருந்து நம்மைப் பிரிகின்றார். இதற்காகவே இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, நமது  இருதயங்களிலே பிரகாசித்தார். இந்த ஒளியை நாம் ஏற்றுக்கொள்ளும்போது நாமும் கிறிஸ்துவைப்போல பிரகாசமடைகின்றோம். 

கிறிஸ்துவின் ஒளி நம்மில் பிரகாசிக்கத் தடைசெய்யாமல் கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Tuesday, October 22, 2024

மேலான இரகசியம்

 'ஆதவன்' அக்டோபர் 29, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,360

"கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 )

தேவன் தனக்கு வெளிப்படுத்தின இரகசியம் என்ன என்பதை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். முற்காலங்களில் மட்டுமல்ல, இன்றும் மனிதர்கள் கடவுளை ஆலயங்களில் தேடி அலைகின்றனர். ஆலயங்களில் மட்டுமே தேவன் தங்கியிருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். எனவேதான் சில புண்ணிய ஸ்தலங்களில் கூட்டம் அலைமோதுகின்றது. பொதுவாக எல்லா மதங்களிலும் இப்படித்தான் இருக்கின்றது. 


அன்று இஸ்ரவேலர் எருசலேம் தேவாலயத்தை பெரிதாக மதித்து அங்குதான் தேவன் இருக்கின்றார் என்று நம்பினர். இன்றும் கிறிஸ்தவர்களிலும் பலர் இப்படி நம்புவதால்தான் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்கின்றனர். இதுபோல, தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பலர் குறிப்பிட்ட ஊழியர்களிடம்தான் தேவன் இருக்கின்றார், அவரிடம் சென்றால் நமக்குப் பதில் கிடைக்கும்; விடுதலை கிடைக்கும் என்று நம்புகின்றனர்.  

ஆனால் தேவனை வெளியில் தேடி அலையவேண்டாம் அவர் வெளியில் எங்கும் இல்லை மாறாக  ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் இருக்கின்றார் என்பதே பவுல் அப்போஸ்தலருக்குத் தேவன் வெளிப்படுத்தின இரகசியம். ஆம், "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." கிறிஸ்துவானவர் வெறுமனே நம்முள் இருக்கவில்லை, மாறாக எதிர்கால மகிமையான வாழ்க்கையைத் தருபவராக, அந்த நம்பிக்கையை நமக்கு ஊட்டுபவராக  நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றார். 

இதனை ஒவ்வொருவரும் அறிய அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்பு. ஆனால் இன்று ஊழியர்கள் ஏதேதோ அறிவிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு ஆசீர்வாதங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆசீர்வாதங்களின் ஊற்றாகிய அவர்  மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் வர வழிகாட்டுவதே மெய்யான சுவிசேஷ அறிவிப்பு. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 ) என்று. 

ஆம் அன்பானவர்களே, தேவன் வெளியில் எங்கும் இல்லை. ஆலயம் என்பது நாம் அனைவரும்கூடி தேவனை ஆராதிக்கும் இடம் மட்டுமே. அங்கு மட்டுமே தேவன் இருக்கின்றார் என்று நம்பி கோவில் கோவிலாக அலைவதைவிட நமக்குள் இருக்கும் அவரை நாம் நமது பரிசுத்தமான வாழ்க்கையால் மகிமைப்படுத்தவேண்டும். மட்டுமல்ல நமது அடுத்திருப்பவர் உள்ளேயும் அதே தேவன் இருக்கின்றார் எனும் உணர்வு நமக்கு வேண்டும். இந்த உணர்வு இல்லாததால்தான் பக்தியுடன் ஆராதனை மற்றும் வழிபாடுகளில் கலந்துகொள்ளும் பலர் ஆராதனை முடிந்து வெளியில் வந்ததும் மற்றவர்களுக்கு எதிராக பேசியும் செயல்பட்டும் வருகின்றனர். 

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கவேண்டுமானால் முதலில் நமது பாவங்கள் அவரது இரத்தத்தால் கழுவப்படவேண்டும். எனவே முழு மனதுடன் அவரிடம் பாவ அறிக்கைசெய்வோம்.  பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெறுவோம். அப்போது அப்போஸ்தலரான பவுல் கூறும் இந்த இரகசியத்தை நாமும் கண்டுகொள்வோம். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் வாசம்பண்ணுவார். 

சிந்தனை வசனம்:- "ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                            

Monday, October 21, 2024

ஆவியும் மாம்சமும்

 'ஆதவன்' அக்டோபர் 28, 2024. 💚திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,359


"நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ( 1 கொரிந்தியர் 3 : 2, 3 )

மெய்யான ஆவிக்குரிய வழியும் வாழ்க்கையும் தேவ சுபாவத்தோடு நம்மை வாழச்செய்வது. அது இல்லாத வாழ்க்கை மாம்சத்துக்குரியது. அதாவது, அது சாதாரண மனித சுபாவம் கொண்டது.  போட்டிகள், பொறாமை, வாக்குவாதம், மார்க்க பேதங்கள் இவை தேவனுக்குக் கிடையாது. நாம் ஆவிக்குரியவர்களாக இருப்போமானால் தேவன் வெறுக்கும்; தேவனிடம் இல்லாத இந்தக் குணங்கள் நம்மிடமும் இருக்காது. 

ஆனால் இன்று தங்களை ஆவிக்குரிய சபை என்று கூறிக்கொள்ளும் சபைகளுக்குள்ளே ஊழியர்களுக்குள் போட்டியும் பொறாமையும் வஞ்சகமும் நிறைந்துள்ளதை நாம் காண முடிகின்றது. மூன்றாம்தர அரசியல்வாதிகளைவிட அவலட்சணமான குணங்கள் இவர்களுக்குள் இருப்பதால் சாதாரண விசுவாசிகள் இத்தகைய சபைகளை வெறுக்கின்றனர்.   

அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார் இப்படி இருக்கக் காரணம் ஆவிக்குரிய சபைகள் என்றுகூறிக்கொண்டாலும் உண்மையில் இத்தகைய சபைகள் ஆவிக்குரிய சபைகளல்ல; மாறாக மாம்சத்துக்குரிய சபைகள்; ஆவிக்குரிய பெலனில்லாத சபைகள்.  சபைகள் மட்டுமல்ல, விசுவாசிகளுக்கும் இது பொருந்தும். காரணம், சபை என்பது மீட்கப்பட்ட விசுவாசிகளின் கூட்டம்; அது கிறிஸ்துவின் உடல்.   

பவுல் நிறுவிய கொரிந்து சபைக்குள்  இருந்த விசுவாசிகளிடம் இத்தகைய குணங்கள்  இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் நடந்த கொரிந்து சபையில் மட்டுமல்ல; இன்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இத்தகைய குணங்களைத் தங்களுக்குள் கொண்டுள்ள சபைகளும் விசுவாசிகளும் ஆவியில் பெலனில்லாதவை.  மனுஷமார்க்கமாய் நடக்கின்றவை.  

இன்று நாம் பார்க்கும் அரசியல் கட்சிகளுக்குள் பதவிகளுக்காக் சண்டைகளும், போட்டிகளும், பொறாமைகளும் கொலைகளும் நடப்பதுபோலவே கிறிஸ்தவ சபைகளுக்குள்ளும் நடைபெறும்போது மற்றவர்கள் நம்மை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சபைகள் மாறும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவின் சாட்சிகள் என்று நம்மைப் பிறர் ஏற்றுக்கொள்வார்கள்.  

சபைகள் மாறுவது என்பது விசுவாசிகளிடம் மாற்றம் வரும்போதுதான் சாத்தியமாகும். எனவே  நம்மிடமிருக்கும் மாம்சீக பலவீனங்களை அகற்றிட முயற்சியெடுப்போம். அதற்காகத்  தேவனிடம் ஊக்கமாய் ஜெபிப்போம். ஆவியானவர் நம்முள் செயல்படும்போது மட்டுமே நமது உள்ளான குணங்கள் மாறி நாம் ஆவிக்குரிய பெலனடைய முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

எல்லா மனுஷரும் சத்தியத்தை அறியவேண்டும்

 'ஆதவன்' அக்டோபர் 27, 2024.ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,358

"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." ( 1 தீமோத்தேயு 2 : 4 ) 

உலகினில் பலநூறு விதமான மார்க்கங்கள் உள்ளன. ஒரே மதத்தினுள் பல்வேறு பிரிவினைகள் உள்ளன. இவை அனைத்தையும் தேவன் அறிவார். ஆனால் நீ என்னைத்தான் வணங்கவேண்டும் என்றோ, நான்தான் மெய்யான தேவன் என்றோ அவர் தன்னை மனிதர்களிடம் திணிப்பது கிடையாது. தன்னை மனிதர்கள் அறிந்துகொள்ள அவர்களுக்கு அறிவினைக் கொடுத்துள்ளார். ஆனால் மனிதர்கள் அவரை அறியாததற்குக் காரணம் பாரம்பரியங்களும் வீண் மத வைராக்கியமும் மனக் கடினமுமே. 

தன்னை அறிய தேவன் வைத்துள்ள ஒரே நிபந்தனை இருதய சுத்தம். இருதய சுத்தம் ஒருவருக்கு இருக்குமானால் தேவன் அவருக்குத் தன்னை வெளிப்படுத்துவார். இதனால்தான் இயேசு கிறிஸ்து, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்று சொன்னார். பலர் தேவனை வாழ்வில் அறியாமலிருக்கக் காரணம் மனக்கடினத்துடன் இருதய சுத்தமும்  இல்லாமலிருப்பதுதான். ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் எல்லோரும் கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. 

கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு பாவ மன்னிப்பு பெற்று மீட்பு அனுபவம் பெற்றவர்களே மெய்யான கிறிஸ்தவர்கள். இந்த அனுபவத்தை அனைவரும் பெறவேண்டும் என்று தேவன் விரும்புகின்றார். இதனையே,  "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இதற்கு மனிதர்கள் தங்கள் மனநிலையில் மாறுதல் செய்யவேண்டும். 

நாம் அனைவருமே பல்வேறு சமயங்களில் பாவம் செய்கின்றோம். ஆனால் அந்தப் பாவங்களை நாம் தேவனிடம் ஒளிவு மறைவில்லாமல் அறிக்கையிடும்போதே சுத்த இருதயம் நம்மில் உருவாகும். தாவீது ராஜா பாவத்தில் விழுந்தபோது, "தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்." ( சங்கீதம் 51 : 10 ) என்றுகதறினார். நமது மனக்கடினத்தை விட்டு பாவ உணர்வடைந்து நாம் தேவனை நெருங்குவோமானால் சுத்த இருதயத்தை தேவன் நமக்குத் தந்தருள்வார். 

இப்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், தேவன்  சித்தமுள்ளவராயிருக்கிறார். இதற்காகவே அவர் ஊழியர்களை நியமித்திருக்கின்றார். ஆனால் இந்தப் பணியை ஊழியர்கள் மட்டுமல்ல, மாறாக கிறிஸ்துவை வாழ்வில் அறிந்தவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். எனவே ஊழியர்கள் அறிவிக்கும் தேவ அறிவிப்பு பலரை கிறிஸ்துவண்டை கொண்டுவர நாம் அனைவருமே ஜெபிக்கவேண்டியது நமது கடமையாகும். 
 
எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்;" ( 1 தீமோத்தேயு 2 : 1 ) என்று கூறுகின்றார். நாம் ஜெபிக்கும்போது சுவிசேஷ வாசல்கள் திறக்கும். இப்படி நாம் ஜெபிப்பது "நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது." ( 1 தீமோத்தேயு 2 : 3 )

எப்போதும் நமது தேவைகளுக்காக மட்டும் ஜெபிக்காமல்  இன்றைய தியான வசனம் கூறுவதுபோல எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

தேவ சித்தம்.

 'ஆதவன்' 💚அக்டோபர் 26, 2024. 💚சனிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,357

"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 4 : 3 ) "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 )

இன்றைய தியான வசனங்களில் இரண்டு தேவ சித்தங்களைக்குறித்து நாம் வாசிக்கின்றோம். நம் ஒவ்வொருவரையும் குறித்தத் தனிப்பட்ட  தேவ சித்தமும் அனைவருக்குமான பொதுவான தேவ சித்தமும் உண்டு. இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தேவசித்தங்களும்  அனைவருக்கும் பொதுவானவை. 

நாம் அனைவரும் பரிசுத்தமாகவேண்டும் என்பது தேவனது சித்தம்.  காரணம், பரிசுத்தமில்லாமல் நாம் தேவனை யாரும் தரிசிக்கமுடியாது என்று வேதம் கூறுகின்றது. அதுபோல, எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைக் குறித்த  தேவனுடைய சித்தமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு தேவ சித்தங்களும் ஒன்றுக்கொன்று இணைந்தவை. எப்படியெனில், நாம் பரிசுத்தமாகவேண்டுமானால் பாவங்கள், சோதனைகள் இவற்றை மேற்கொள்ளவேண்டியது அவசியம். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள் என்றுகூறியுள்ளபடி நாம் இப்படி ஸ்தோத்திரம் செய்யும்போது பாவத்துக்கு விலகி, பரிசுத்தத்துக்கு நேராகச் செல்ல முடியும்.   

மேலும், தேவனது கிருபை இல்லாமல் நம்மால் வெற்றிகரமான வாழ்க்கை வாழ முடியாது. அந்தத் தேவ கிருபை ஸ்தோத்திரம் செய்வதால் பெருகும். "தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாகியிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 4 : 15 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்க்கை வெறுமனே ஜெபிப்பதும் ஆராதனைகளில் கலந்து கொள்வதும் வேதாகமத்தை வாசிப்பதும் மட்டுமல்ல, நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்வது. அதுவே நம்மைக்குறித்த முதன்மையான தேவ சித்தம். எனவே நாம் பரிசுத்த வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியது அவசியம். தேவனது ஐக்கியம் மட்டுமே நம்மை பரிசுத்தமாக்க முடியும். 

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யும்போது நாம் தேவ  ஐக்கியத்தில் வளர முடியும். தேவ ஐக்கியத்தில் வளர வளர நம்மில் பரிசுத்தம் அதிகரிக்கும். எனவே நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர இந்த இரண்டு தேவ சித்தத்தையும் நிறைவேற்றுபவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Sunday, October 20, 2024

ஆமென் (Amen)

 'ஆதவன்' 💚அக்டோபர் 25, 2024. வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,356

"எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 )

வேதாகமத்தில் காணப்படும் ஆமென் எனும் சொல், "அப்படியே ஆகட்டும்" என்று பொருள்படும். இது எபிரேய வார்த்தையாகும். எபிரேய வேதாகமத்தில் உறுதிப்படுத்துதலின் பதிலாக உருவானது இது. மக்களால் செய்யப்பட்ட உறுதிமொழியாக இது உபாகமத்தில் காணப்படுகிறது (உபாகமம் 27: 15 - 26) மேலும்,  மக்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும் வாக்குத்தத்தை ஏற்றுக்கொள்வதற்கும்   "ஆமென்" என்று பதிலளித்தனர். 

கிறிஸ்தவர்கள் பொதுவாக ஜெப வேளைகளில் ஒருவர் ஜெபிக்கும்போதும் ஜெபித்து முடிக்கும்போதும் "ஆமென்" என்று கூறுவதுண்டு. இது ஜெபத்தில் கூறப்படும் வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே." ( 1 கொரிந்தியர் 14 : 16 ) என்று கூறுகின்றார். 

வேதாகமத்தில் பல ஆயிரம் வாக்குத்தத்தங்கள் உள்ளன. இந்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும் அவற்றை நாம் உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ளும்போது நமக்குப் பலிக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது சில வாக்குத்தத்தங்கள் நமக்காகவே சொல்வதுபோல இருக்கும். சில நேரங்களில் தேவன் நம்மிடம் அதனைத்  தெளிவாக உணர்த்துவார். அப்படி உணர்த்தும்போது நாம் உள்ளத்திலிருந்து ஆமென் என்று வாயினால் அறிக்கையிடவேண்டும். அப்படிச் செய்வது அந்தத் தேவ வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதனை வெளிப்படுத்துகின்றது.   

வேதத்திலுள்ள ஆயிரக்கணக்கான தேவனுடைய  வாக்குத்தத்தங்களும்  இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருந்தாலும் குறிப்பிட்ட வாக்குத்தத்தங்களை  நாம் ஆமென் என அறிக்கையிடும்போது நமக்காக அவற்றை உறுதிப்படுத்துகின்றோம் என்று பொருள். 

வேதாகமத்தை வாசிக்கும்போதும், நல்ல பிரசங்கங்களைக் கேட்கும்போதும்  அவற்றை நாம் ஏற்றுக்கொள்வதை ஆமென் என்று கூறி உறுதிப்படுத்துவோம். கர்த்தர் நிச்சயம் அவற்றை நமது வாழ்வில் பலிக்கச்செய்வார். இப்படியே அப்போஸ்தலரான யோவான் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்த காரியங்களை  ஏற்றுக்கொண்டுக் கூறுகின்றார், "இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 20 ) ஆமென் என்று கூறி வாக்குத்தத்தங்களை நமதாக்கிக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

வாழ்வின் நிகழ்வுகளுக்கு நமது செயல்பாடுகளே காரணம்

 'ஆதவன்' அக்டோபர் 24, 2024. 💚வியாழக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,355

"முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்." ( ரோமர் 2 : 9, 10 )

எல்லா உலகச் செல்வங்கள் இருந்தாலும் பலருக்கு வாழ்வில் உபத்திரவம், மனவேதனை, அமைதியற்ற நிலை  இவை தொடருவதை பலவேளைகளில் நாம் காணலாம். இதற்குக் காரணம் என்ன என்பதை அவரவர் வெளிப்படையான மனநிலையுடன் தங்களைத் தாங்களே ஆராய்ந்து பார்க்கவேண்டும்.  மட்டுமல்ல,நம்மிடம் தவறு இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும். 

மெய்யான தேவ ஆசீர்வாதம் என்பது வெறும் உலகச் செல்வங்களைப் பெறுவது அல்ல, மாறாக நமக்குத் தேவையான காரியங்களை வேதனையில்லாமல் பெற்று அனுபவிப்பது. எந்தத் தகப்பனும் தன் குழந்தைக்கு நல்ல உணவையும் கூடவே உடலுக்கு கேடு தரும் அசுத்தத்தையும் கொடுக்கமாட்டான். அதுபோலவேதான்  தேவனும் ஆசீர்வாதத்தினையும் வேதனையையும் சேர்த்தே கொடுக்கமாட்டார். 

"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) என்று வேதம் கூறுகின்றது. ஆம்,  கர்த்தரின் ஆசீர்வாதம் வேதனையை அதிகரிக்காத ஆசீர்வாதம். மனிதர்களுக்கு  பலவேளைகளில் உபத்திரவம், மனவேதனை, அமைதியற்ற நிலை ஏற்படக்  காரணம் என்ன என்பதை விளக்கவந்த அப்போஸ்தலரான பவுல்,   "பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்." என்று இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். 

உலகத்தில் உபத்திரவம், துன்பங்கள் அனைவருக்கும் பொதுவானவையே. ஆனால், கிறிஸ்துவுக்குள் வாழும் மக்களுக்கு எந்தத் துன்பத்திலும் மன ஆறுதலும் மனச் சமாதானமுமிருக்கும். இந்தச் சமாதானம் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் இருக்காது. அதுபோல,  "எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்." என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படிப் பொல்லாங்கானவற்றைச் செய்கின்றவனுக்கு சமாதானம் இல்லை என்பதால் அப்போஸ்தலரான பவுல், "பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 22 ) என்று அறிவுரை கூறுகின்றார். அதாவது பொல்லாங்கான ஒரு வழியை அல்ல, மாறாக பொல்லாங்காய்த் தோன்றும் அனைத்து வழிகளையும்விட்டு விலகிவிடவேண்டும் என்கின்றார். 

இதற்கு மாறாக, நன்மைசெய்வோமானால் நிச்சயம் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. அது உடனடியாக இல்லையானாலும் பிந்திய நிலையிலாகிலும் நமக்குக் கிடைக்கும். எனவேதான் "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." ( கலாத்தியர் 6 : 9 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்வில் நிகழும் அனைத்துக் காரியங்களுக்கும் நமது செயல்பாடுகளே காரணம். பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.  எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். வேத வார்த்தைகள் பொய்யானவையல்ல. நமது அன்றாட வாழ்க்கையில் நாம் இதனை கண்டுணர முடியும். எனவே, பொல்லாங்கான வழிகளை விட்டு விலகி அமைதியும் சமத்தானமும் பெற்று மகிழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்     

Saturday, October 19, 2024

எல்லோருக்குள்ளும் ஒரே பிதா

 'ஆதவன்' 💚அக்டோபர் 23, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,354

"ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,  எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது". (எபேசியர் 4: 5 - 7 )

தங்களுக்குச் சொந்த விசுவாசமில்லாமல் எதெற்கெடுத்தாலும் ஊழியர்களைத் தேடி ஓடும் பல கிறிஸ்தவர்களை நாம் உலகில் பார்க்கின்றோம். இந்தக் கிறிஸ்தவர்கள் புகழ்பெற்ற ஊழியர்களை வானத்திலிருந்து வந்தவர்கள் என எண்ணிக்கொள்கின்றனர்.  ஆனால் தங்களுக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளை மதிப்பதில்லை. இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுவது நாம் அனைவரும் சிந்திக்கத்தக்கது. 

ஊழியர்களுக்கென்றும் விசுவாசிகளுக்கென்றும் தனித்தனி பிரிவான கர்த்தரும், விசுவாசமும், ஞானஸ்நானமும் இல்லை. மாறாக,  எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், நம்  எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். அதாவது, ஒரே தேவன்தான் நம் எல்லோருக்குள்ளும் இருந்து செயல்புரிகின்றார். 

ஆனால் அடுத்ததாக பவுல் அப்போஸ்தலர் இந்த வசனத்தில் கூறுகின்றார், "கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது" என்று. அதாவது தேவ கிருபை ஆளாளுக்கு வித்தியாசமாகச் செயல்படும். அது கிறிஸ்து பகிர்ந்து கொடுப்பது. மற்ற ஊழியர்களைப்போலவோ மற்ற விசுவாசிகளைப்போலவோ நாம் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை.  ஆனால் மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டாத தேவன் நாம் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நமக்கும் ஏற்ற கிருபையளிப்பார். 

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூற  விரும்பும் காரியங்கள்:-

வெவ்வேறு கர்த்தரல்ல ஒரே கர்த்தர்தான் உண்டு.  எனவே இங்கு அங்கு என அலையவேண்டாம். விசுவாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானது; வேதம் கூறுவதை விசுவாசிக்கவேண்டும். ஒரே தேவன் எல்லோருக்குள்ளும் இருப்பதால் எல்லோரையும் மதிக்கவேண்டும். கிறிஸ்துவினுடைய விருப்பப்படி அவர் அவனவனுக்குக் கிருபை அளிக்கின்றார். 

இப்படியிருப்பதால் "மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்." ( எபேசியர் 4 : 2, 3 ) என்று இன்றைய தியான வசனத்தின் முன் குறிப்பிடுகின்றார்.  

கிறிஸ்துவின் முன்பு நாம் அனைவரும் ஒன்றுதான். விசுவாசி, ஊழியன் என்று இல்லை. எனவே குறிப்பிட்ட ஊழியர்களை மட்டும் அன்பு செய்யாமல் நமக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளையும் அன்புசெய்து சமாதானத்தோடு ஒருமைப்பாட்டுடன்  நாம் வாழவேண்டும். ஆனால் இந்த உணர்வில்லாததால் அடுத்த வீட்டில் உணவுக்காக ஏங்கித் தவிக்கும் மக்கள் இருந்தாலும் ஐந்துகாசுகூட உதவி செய்யாத பலர் தொலைவிலிருக்கும் ஊழியர்களுக்கு ஆயிரக்கணக்கான பணத்தை அனுப்பிவைக்கின்றனர்.  

அன்பானவர்களே, எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் தான் உண்டு; அவரே எல்லார்மேலும், எல்லாரோடும், நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் என்ற உணர்வோடு வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 4 : 3 / 2 Corinthians 4:3

" ஆதவன் " தியானம் - 1995  ஜூலை 25 சனி 2026     "எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளா...