ஆதவன் தியானம்
எண் :- 2050 நாள் :- 19.09.2026
"அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்." ( மாற்கு 5 : 35 )
எல்லாம் முடிந்துபோனது என மனிதர்கள் நாம் நினைக்கும்போது தேவன் ஆரம்பிக்கின்றார். இனி வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லை என நாம் எண்ணும்போது, உனக்கு ஒரு வாழ்வு உண்டு என்று தேவன் தனது வல்லமையான செயல்மூலம் நம்மை மகிழ்ச்சியூட்டுகின்றார். தேவனது வல்லமையினை புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் நாம் குறுகிய கண்ணோட்டத்துடன் அனைத்தையும் பார்ப்பதுதான் நமது மனவருத்தங்களுக்குக் காரணம்.
இன்று தேவையற்ற பல தற்கொலைகள் நாட்டில் நடைபெறுவதை நாம் பார்க்கின்றோம். மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும்போதே பயத்தில் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வு எழுதியபின்னர் முடிவு வருமுன் பயத்தில் பலர் தங்கள் வாழ்க்கையினை முடித்துக்கொள்கின்றனர். மருத்துவ படிப்பிற்கு இடம்கிடைக்கவில்லை என்று சிலர் தற்கொலை செய்து மடிகின்றனர். ஆம், மருத்துவ படிப்பே மேலான படிப்பு எனும் குறுகிய அறிவற்ற தவறான மனநிலையே இதற்குக் காரணம். மருத்துவப் படிப்பு படித்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக அமையும் எனும் குருட்டு எண்ணமே இதற்குக் காரணம்.
இதுபோல, காதல் தோல்வியினால், கடன் பாரத்தினாலும், தீராத உடல் நோயினாலும், எதிர்கால வாழ்க்கை குறித்த பயத்தினாலும், மனக்குழப்பதினாலும் பலர் தற்கொலை எனும் விபரீத முடிவினை எடுக்கின்றனர். அத்தகைய மனநிலையிலுள்ளவர்கள் ஒரு நிமிடம் செலவழித்து இந்தத் தியானத்தை வாசிக்க வேண்டுகின்றேன்.
ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் இயேசு கிறிஸ்துவிடம் தனது நோயுற்ற மகளைக் குணமாக்க வருமாறு தனது வீட்டிற்கு அழைக்கின்றான். இயேசு செல்லும்போது இடையிலேயே இரத்தப்போக்கு நோயுற்ற ஒரு பெண் அவருக்கு இடைப்படுகின்றாள். இதனால் அவரது பயணம் தாமதமாகின்றது. அப்போது, "ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்."
அன்பானவர்களே, மரணத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் மனிதர்கள் நாம் எண்ணுவோம். ஆனால் அப்படி முடியவில்லை, உனக்கு நம்பிக்கை உண்டு என்கின்றார் தேவன். நாம் காத்திருக்கவேண்டும். தேவன் செயல்பட தாமதித்தாலும் நம்மை நினைவில் வைத்திருக்கின்றார், அவரை நோக்கிப் பார்க்கும்போது நிச்சயம் நமக்கு என்ற பதில் தருவார். மகள் இறந்துபோன கவலையுடன் நின்ற ஜெபஆலயத்தலைவனை நோக்கி ஆண்டவர் இயேசு, "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" என்று சொல்லி ( மாற்கு 5 : 36 ) அவனது வீட்டிற்குச் சென்று இறந்துபோன அவனது மகளை உயிர்பெறச் செய்தார்.
ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து வந்த மக்கள் கூறியதைப்போல, "இனி உனக்கு நல்ல வாழ்க்கை ஏற்படப்போவதில்லை, எல்லாம் முடிந்துவிட்டது" என்று இன்று நம்மைப்பார்த்தும் பலர் எண்ணலாம்; கூறலாம். அல்லது நாமே நமது வாழ்வில் எல்லாம் முடிந்துவிட்டது, இனி பிழைக்கமுடியாது என்று எண்ணிக் கலங்கலாம். ஆனால் ஆண்டவர் இயேசு அன்புடன் கூறுகின்றார், "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" என்று.
நமது பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள் போன்றவை நம்மை அவரிடம் நெருங்க உதவுகின்றன. ஆம், "இந்தப் பிரச்சனைகளும் துன்பங்களும் எனக்கு ஏற்படவில்லையானால் நான் ஆண்டவரை வாழ்வில் அறிந்திருக்கமாட்டேன்" என்று பிற்காலத்தில் நீங்கள் கூறும்படியான ஒரு மிகப்பெரிய அற்புதத்தை ஆண்டவர் இயேசு இன்று உங்கள் வாழ்வில் செய்வதற்கு ஆயத்தமாய் இருக்கின்றார். ஜெப ஆலயத் தலைவனுக்குக் கூறியதுபோல இயேசு உங்களைப்பார்த்து இன்று கூறுகின்றார், "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு."
✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️
AATHAVAN
MEDITATION
No.: 2050 | Date: 19.09.2026
"While He was still
speaking, they came from the house of the synagogue official, saying, 'Your
daughter has died; why trouble the Teacher anymore?'" (Mark 5:35, NASB)
When we as humans think that
everything is finished, God begins. When we think there is no longer any hope
in life, God gladdens us through His mighty work, saying, "You have a
life." The reason for our discouragements is that we fail to understand
God's power and view everything with a narrow perspective.
Today we see many
unnecessary suicides taking place in our nation. Even while preparing for the
medical entrance examination, many students—boys and girls—commit suicide out
of fear. After writing the exam, before the results come, many end their lives
out of fear. Some die by suicide because they did not get a seat for medical
studies. Yes, the cause is the narrow, ignorant, and wrong mindset that medical
education alone is the superior education. The cause is the blind notion that
life will be good only if one studies medicine.
In the same way, many people
make the disastrous decision of suicide because of failed love, the burden of
debt, incurable physical illness, fear about the future, and mental confusion.
I appeal to those in such a state of mind to spend one minute and read this
meditation.
A synagogue official comes
to Jesus Christ, inviting Him to his house to heal his sick daughter. As Jesus
goes, a woman suffering from a haemorrhage interrupts Him along the way.
Because of this, His journey is delayed. At that moment, "they came from
the house of the synagogue official, saying, 'Your daughter has died; why
trouble the Teacher anymore?'"
Dear ones, we as humans
think that with death everything is over. But God says that even though it did
not work out that way, you have hope. We must wait. Even though God delays in
acting, He keeps us in His remembrance; when we look to Him, He will surely
give us an answer. To the synagogue official who stood grieving over his dead
daughter, the Lord Jesus said, "Do not be afraid any longer, only believe"
(Mark 5:36, NASB), and He went to his house and raised his dead daughter to
life.
Just as the people who came
from the synagogue official's house said, many today may look at us and think
or say, "No good life is going to come to you anymore; everything is
over." Or we ourselves may become troubled, thinking that everything in
our life is finished and that we cannot survive anymore. But the Lord Jesus
lovingly says, "Do not be afraid any longer, only believe."
Our problems, sufferings,
and illnesses help draw us closer to Him. Yes, the Lord Jesus is ready today to
do such a great miracle in your life that later you will say, "If these
problems and sufferings had not come to me, I would not have known the Lord in
my life." Just as He said to the synagogue official, Jesus says to you
today, "Do not be afraid any longer, only believe."
✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦
No comments:
Post a Comment