INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Wednesday, June 07, 2017

இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை


இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை 

சகோ. எம் . ஜியோ பிரகாஷ் 


யேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை  நாம் பார்த்தால்   அது  இரண்டு பெரும் பிரிவாக இருப்பதைக் காணலாம். ஒன்று அவர் போதனைகள் மற்றும் அவர் செய்த அற்புதங்கள். இரண்டாவது அவரது பாடுகள், மரணம் மற்றும் அவர் அடைந்த மகிமை. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அன்பை அடிப்படையாகக் கொண்டவைகள். 'தேவன் அன்பாகவே இருக்கிறார் ' என்பதற்கேற்ப அன்பையே பிரதான கட்டளையாகக் கொடுத்தது மட்டுமல்லாமல்  அதனை வாழ்வில் பிரதிபலிப்பவராகவே வாழ்ந்தார். இதில் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களைத்தான் இன்றைய  ஊழியர்கள் பெரிதாக பறை சாற்றி தாங்களும் அதுபோல அதிசயம் செய்வதாகக் கூறி மக்களை சேர்க்கின்றனர். இயேசு கிறிஸ்து கொண்டிருந்த அன்பையோ மன உருக்கத்தையோ பெரும்பாலோனோரிடம் காண முடிவதில்லை.  

இயேசு கிறிஸ்து உலகினில் வந்ததன் நோக்கம் அதிசயம் செய்வதல்ல. ஆதி முதல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவாகவும் மகா  பரிசுத்த ஸ்தலமான பிதாவின் இடத்திற்கு மக்களை   வழிநடத்திடவுமே. நானே வழி என்று இயேசு கிறிஸ்து கூறினாரே ? நித்திய ஜீவன் எனும் நிலை வாழ்வினை மக்கள்  அடைந்திட இயேசு கிறிஸ்துவின் போதனைகள் வழி காட்டுவனவாக உள்ளன. அவர் போதித்த மற்றும் கடைபிடித்த அன்பின் உச்சம்தான் அவரது சிலுவை மரணம். 

மக்கள் மேல் அவர் கொண்ட அன்பினாலும் மன உருக்கத்தினாலும் அவர்  பல அற்புதங்கள் செய்தார். அவர் அற்புதங்களும் அதிசயங்களும் செய்ததன் மேலும் ஒரு காரணம்  தான் கூறுவதை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே. அதனால்தான், "நான் சொல்பவைகளை நம்பாவிடினும் என் கிரியைகளின் நிமித்தமாவது அவற்றை நம்புங்கள் " என்று கூறினார்.  ஆனால் அற்புதம் செய்வது அவரது பிரதான நோக்கமல்ல. 

இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் முக்கியமான பகுதி அவரது பாடுகளுடன் ஆரம்பிக்கின்றது. இதுவே அறிவிக்கப்படவேண்டிய நற்செய்தி. அப்போஸ்தலரான பவுல் அடிகள் இதனைத் தான் பிரதான அறிவிப்பாக அறிவித்துவந்தார். கிறிஸ்துவின் மரணம் உயிர்ப்பு இவை தான்  கிறிஸ்தவத்தின் அச்சாணி. எனவேதான் அவர், " கிறிஸ்து எழுந்திருக்கவில்லை (மரணத்திலிருந்து) என்றால் எங்கள் பிரச்சங்கமும் விருதா உங்கள் விசுவாசமும் விருதா"   (1 கொரிந்தியர் - 15:14) என்று கூறுகிறார். மேலும், "கிறிஸ்து  எழுந்திராவிட்டால் உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும், நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்"  (1 கொரிந்தியர் - 15:17) என்கிறார்.

ஆதியில் ஏதேனில் தேவன் அளித்த வாக்குறுதி இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நிறைவேறியது. "உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்  பகை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையை நசுக்கும். நீ அதன் குதிகாலை காயப்படுத்துவாய்" (ஆதியாகமம் - 3:15) என தேவன் பாம்பிற்கு (சாத்தானுக்கு)  இட்ட சாபம் பெண்ணின் வித்தாகிய கிறிஸ்துவால்  நிறைவேறியது. தனது சிலுவை மரணத்தின் மூலம் சாத்தானின் தலையை நசுக்கினார். எனவேதான் இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானுக்கு தன்மீது அதிகாரமில்லை என இயேசு கிறிஸ்து கூறினார். (யோவான் - 14:30)

மேலும் இயேசு கிறிஸ்துவின் மரணம் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கான வாயிலைத் திறந்துவிட்டது. பழைய ஏற்பாட்டுக்கால முறைமைகள் மாற்றப்பட்டு கிருபையினால் தேவனைச்  சேரும் மிகப் பெரிய வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க இயேசு கிறிஸ்துவின் மரணம் வழிவகுத்தது. காரணம், "இயேசு கிறிஸ்துவின் சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதனாலே அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்" (எபிரேயர்  - 10:10)

ஆனால் மிருகங்களின் இரத்தம் பூரண சுத்திகரிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பலி செலுத்திய மனிதன் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று பூரணம் அடையாததால் இரட்சிப்பின் சந்தோஷத்தை அனுபவிக்காததால் மீண்டும் மீண்டும் இரத்த பலி செலுத்தவேண்டியிருந்தது.  (எபிரேயர்  - 10:1-4)

இது இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் நிவிர்த்தி செய்யப்பட்டது. "இயேசு கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு தமக்காக காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரெண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்"   (எபிரேயர்  - 9:28) 

பழைய ஏற்பாட்டின் காலத்தில் பாவ நிவாரணத்திற்காக மிருகங்கள் பலியிடப்பட்டன. காரணம், பாவத்தினால் மரணமடைந்த ஆத்துமாவை மீட்க  இரத்தம் சிந்தப்பட்ட வேண்டியிருந்தது.  ஏனெனில் இரத்தமே உயிர். "மாம்சத்தின்  உயிர் இரத்ததில் இருக்கிறது"  (லேவியராகமம்  - 17:11) மேலும், " சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது, இரத்தம் ஜீவனுக்கு சமானம்" (லேவியராகமம்  - 17:14) என்று வேதம் கூறுகிறது. எனவேதான் "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது"   (எபிரேயர்  - 9:22) என்கிறது வேதம். 

ஆசரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழையுமுன் ஆசாரியன் இரத்ததால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டியிருந்தது. இயேசு கிறிஸ்து  தனது சொந்த இரத்தத்தால்  சுத்திகரிப்பை உண்டுபண்ணி பிரதான ஆசாரியனாக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்தது மட்டுமல்ல அவர் மூலம் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்ட  அனைவரும் அதில் நுழையும் வாய்ப்பையும் ஏற்படுத்திவிட்டார்.

" மாம்சத்தில் பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு தம்முடைய குமாரனை பாவ  மாம்சத்தின் சாயலாகவும் பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்" (ரோமர் - 8:3)

" ஆகையால் சகோதரரே நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமான திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால் அந்த மார்க்கத்தின் வழியாக பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தால் நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும் .."  (எபிரேயர்  - 10:19,20) என்கிறது வேதம்.

இன்று இயேசு கிறிஸ்துவை மெய்யான தேவனாக ஏற்றுக்கொண்டு அவர் நமது பாவங்களுக்காக மரித்தார் என்பதை விசுவாசித்து நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டால் நாம் இரட்சிக்கப்படுவோம். ஏனெனில் வேகம் கூறுகிறது, " கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு  தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் - 10:9)

அன்பானவர்களே! உலக ஆசை இச்சைகளுக்காக இயேசுவைத் தேடுவதைவிட்டு  நித்திய ஜீவனுக்காக தேடுவோம். "இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எல்ல மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்க்களாயிருப்போம்" (1 கொரிந்தியர்  - 15:19) என எச்சரிக்கிறது வேதம்.

No comments: