Saturday, August 29, 2026

🏫 வேதாகமத் தியானம் - ஆகஸ்ட் 2026


தியானம் - 2001

"ஆதவன்"ஆகஸ்ட் 01  சனி 2026 

"ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே." ( 2 கொரிந்தியர் 3 : 9 )

இன்றைய தியான வசனம் பழையஏற்பாட்டுக்கும் புதியஏற்பாட்டுக்குமுள்ள வித்தியாசத்தை உணர்த்துவதாகவும், மகிமையான புதிய ஏற்பாட்டுக்கால விசுவாசிகளின் மேன்மையையும் எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.   

பழைய ஏற்பாட்டு ஊழியம்  ஆக்கினையைக் கொடுக்கும் ஊழியம் என்று கூறப்பட்டுள்ளது. பழிக்குப் பழிவாங்கும் ஊழியம் அது. கண்ணுக்குக்  கண், பல்லுக்குப்பல் என இரக்கமற்ற சட்டங்களைக் கொண்டிருந்த ஊழியம். ஆனால் அந்த ஊழியத்திலும் தேவனது மகிமை வெளிப்பட்டது.  

மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டு ஊழியம் நிரந்தரமானதாக இருக்கவில்லை. அது ஒழிந்து கிறிஸ்து இயேசுவினால் புதிதாக்கப்படவேண்டியதாய் இருந்தது. இப்படி ஒழிந்துபோகக்கூடிய அந்தப் பழைய ஏற்பாட்டு ஊழியம் மகிமையுள்ளதாக இருந்திருக்குமானால் கிறிஸ்து இயேசு மூலம் ஏற்படுத்தப்பட்ட நிலையான புதிய ஊழியம் எத்தனை மகிமையுள்ளதாக இருக்கும் !!!. இதனையே அப்போஸ்தலரான பவுல், "அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே." ( 2 கொரிந்தியர் 3 : 11 ) என்று கூறுகின்றார்.

மோசேயின் பழைய ஏற்பாட்டுக்கால ஊழியம்போல கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு குறுகிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றல்ல. கட்டளைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் ஒருவரும் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியாது. 

உதாரணமாக, பழைய ஏற்பாட்டின் பத்துக்கட்டளைகள் சிறப்பானவைதான். ஆனால், அதனைக் கடைபிடிப்பதால் மட்டும் ஒருவர் நீதிமானாக முடியாது.  இதனையே அப்போஸ்தலரான பவுல், "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) என்று கூறுகின்றார். ஆனால் இன்றும் பல கிறிஸ்தவ சபைகள் இந்த வித்தியாசத்தை உணர்ந்துகொள்ளாமல் பத்துக்கட்டளை போன்ற பழைய கட்டளைகளுக்கு முன்னுரிமை கொடுத்து போதித்துக்கொண்டிருக்கின்றன. 

அனைத்து பழைய கட்டளைகளையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து புதிதாக்கியுள்ளார்; கூர்மைப்படுத்தியுள்ளார். உதாரணமாக, பழைய ஏற்பாட்டின்படி விபச்சாரம் செய்தால்தான் அது பாவம். ஆனால் பலர் விபச்சாரம் செய்ய ஆசையிருந்தாலும் சமூகத்துக்குப் பயந்தும், அதற்கான வாய்ப்புப்  கிடைக்காததாலும் அந்தப் பாவத்தைச் செய்யாமலிருந்தனர். இப்படி மனதளவில் ஆசையை வைத்துக்கொண்டு வாழ்வதும் பாவம்தான் என்றார் இயேசு கிறிஸ்து. "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." ( மத்தேயு 5 : 28 ) என்றார் அவர். இதுபோல அவர் பல கட்டளைகளையும் மாற்றியுள்ளார். இதனை இன்று பல சபைகள் உணரவும் இல்லை, போதிப்பதுமில்லை. 

இதுவே ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் பழைய ஏற்பாட்டுக்கும்  நீதியைக் கொடுக்கும் அதிக மகிமையுள்ள புதிய ஏற்பாட்டுக்குமுள்ள வேறுபாடு. குறிப்பிட்டக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதல்ல, மாறாக தேவனால் அந்தக் கட்டளை ஏன் கொடுக்கப்பட்டதோ தேவன் விரும்பும் அதன் உள்ளான வழியில் நம்மை நடத்துவதே புதிய ஏற்பாடு. கட்டளைகள் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தராது. கர்த்தரது ஆவியானவரே நம்மை பாவத்திலிருந்து விடுவித்து நடத்த முடியும். ஆம், "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு." ( 2 கொரிந்தியர் 3 : 17 )

பழைய ஏற்பாட்டின்படி பாவம் செய்யாமல் இருந்தால் தேவனிடம் தண்டனை பெறாமல் தப்புவிக்கப்படுவோம். ஆனால் புதிய ஏற்பாட்டின்படி அப்படி பாவமில்லாமல் பரிசுத்தமாய் வாழ்வோமானால்  "நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்." ( 2 கொரிந்தியர் 3 : 18 )

ஆம், நீதியைக் கொடுக்கும் புதிய ஏற்பாடு எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கின்றது.  பழையஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முயல்வோம்; புதிய ஏற்பாடு காட்டும் வழியில் வாழ்வோம்.  அதுவே நமக்கு மகிமையுள்ளதாக இருக்கும்.  

தியானம் - 2002 

"ஆதவன்"ஆகஸ்ட் 02  ஞாயிறு  2026   

"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 34 : 8 )

ஒரு சிறிய உதாரணத்துடன் இன்றைய தியானம் கூறும் சத்தியத்தை விளக்கலாம் என்று எண்ணுகின்றேன். ஒரு மனிதனுக்கு இந்த உலகத்தில் யாரும் பார்த்திராத உண்டிராத ஒருவித மரத்தின் பழம் ஒன்று கிடைத்தது. அதனை அவன் சாப்பிட்டுப் பார்த்தபோது அதன் சுவையினைப்போல அதுவரை அவன் எதனையுமே உண்டதில்லை என்று தெரிந்தது. அந்தப் பழத்தின் சுவையினை அவன் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறி விளக்க முயன்றான். ஆனால் அவனால் விளக்க முடியவில்லை. காரணம் எந்த பழத்தின் சுவையுடனும் அதனை அவனால் எந்த சுவையையும் ஒப்பிட்டுக் கூறி மற்றவர்களைப் புரியவைக்க முடியவில்லை. எனவே அவன் மற்றவர்களிடம் கூறினான், "இதன் சுவையை நான் உங்களுக்குப் புரியவைக்க முடியாது; இதில் சிறிது சாப்பிட்டுப்பாருங்கள்." 

ஆம் அன்பானவர்களே, இதுபோன்றதுதான் தேவனை நாம் அறிந்து சுவைப்பது. தேவனை நாம் அனுபவித்து உணரும் அந்தச் சுவையினை நாம் மற்றவர்களுக்கு எளிதாகச் சொல்லிப் புரியவைக்க முடியாது. எனவேதான் நற்செய்தி அறிவிப்பாளர்கள் பிறரிடம் தேவனை அறிந்துகொள்ளும்  வழியினைக்கூறி மற்றவர்கள் அவரைச் சுவைக்கவைத்திட முயல்கின்றனர். தேவன் படித்தும், போதித்தும் சுவைக்கக்கூடியவரல்ல. அனுபவித்து அறிந்து சுவைக்கவேண்டியவர்.  

ஆலயங்களில் சென்று ஆராதிப்பதால் நாம் தேவனைச் சுவைக்க முடியாது. ஆனால் அவரை நமது வாழ்வில் அவரை அறிந்துகொள்வதன்மூலம்  சுவைக்கமுடியும். அவர் தரும் அனுபவங்கள், அவர் நம்மோடு இடைப்பட்டு  நம்மோடு நெருக்கமாக இருக்கும் உறவு, ஒரு தாயைப்போல நமது துன்பங்களில் அவர் நம்மைத் தேற்றும் அனுபவங்கள், அன்றாடம் நமது வாழ்வில் அவர் தரும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றை நாம் அவரை அறிவதன்மூலம் பெறமுடியும். இவற்றை வெறும் ஆலய ஆராதனைகள் மூலம் பெறமுடியாது. ஆனால், தேவனை தனிப்பட்டமுறையில் நாம் அறிந்துகொள்ளும்போது, எப்படி நாம் முன்பு உதாரணத்தில்  கூறிய அந்த மனிதன் பழத்தினைச் சுவைத்தானோ அப்படி நாமும் அவரைச் சுவைக்கமுடியும். 

தாவீதுராஜா இப்படித் தேவனைத்  தனது வாழ்வில் சுவைத்து அறிந்ததால் அவர் மற்றவர்களுக்கு இன்றைய தியான வசனம் மூலம், "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்" என்று அழைப்புவிடுகின்றார். கர்த்தர் நல்லவர் என்பதனை ஆராதித்துப்பாருங்கள் என்றோ, ஜெபக்கூட்டங்களில் கலந்து பாருங்கள் என்றோ, உபவாசம் இருந்துபாருங்கள் என்றோ கூறாமல் அவரை நீங்களே ருசித்துப்பாருங்கள் என்று கூறுகின்றார். 

கர்த்தரை வெறுமனே ஆராதிப்பவர்களுக்கும் ருசித்துப்பார்த்தவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. யோபுவும் அவர் மனைவியும் ஒரே தேவனைத்தான் வழிபட்டனர். ஆனால், யோபு கர்த்தரை ருசித்தவர், அவர் மனைவியோ வெறுமனே கர்த்தரை ஆராதித்தவள். எனவேதான் வாழ்வில் இக்கட்டான வேளை வந்தபோது அவள் யோபுவிடம், "நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்." ( யோபு 2 : 9 ) ஆனால் கர்த்தர் நல்லவர் என்பதனை ருசித்திருந்த யோபு கர்த்தர்மேல் கொண்டிருந்த விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். 

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் தொடர்ந்து கூறுகின்றது, "அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" என்று. பாக்கியவான் என்றால் பேறுபெற்றவன் என்று பொருள். செல்வச் செழிப்புடன் எல்லா நலன்களையும் பெற்று வாழும் மனிதர்களை நாம், "அவனுக்கென்ன, அவன் கொடுத்துவைத்தவன்" என்று கூறுவோமே அதுபோல இப்படித் தேவனை ருசித்து அவர்மேல் நம்பிக்கையாக இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று பொருள். கர்த்தரை வாழ்வில் ருசித்திருந்ததால்தான் அப்போஸ்தலர்கள் அந்தச் சுவைக்காக தங்கள் உயிரையும் கையளித்தனர்.

வெறுமனே ஆராதனை கிறிஸ்தவர்களாக வாழாமல், உதட்டளவில் "இயேசுவே  உம்மை நேசிக்கின்றேன்" என்று கூறாமல் உளமார அவரை  நேசித்து வாழ்வோம்; "ஆண்டவரே, உமது மேலான அனுபவங்களை எனக்குத் தாரும், என்னோடு வந்து தங்கியிரும்" என்று வேண்டுவோம்; கிறிஸ்துவைத்தவிர வேறு எவரையும் எதனையும் நோக்காமல் இருப்போம்; அப்போது நாம் அவரை வாழ்வில் ருசிக்கமுடியும். மட்டுமல்ல, நாம் பேறுபெற்றவர்களாக வாழவும் முடியும்.

தியானம் - 2003

"ஆதவன்"ஆகஸ்ட் 03  திங்கள்  2026   

"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." ( தீத்து 3 : 5 ) 

இந்த உலகத்தில் நாம் திறமை, அறிவு , பொருள், செல்வாக்கு, அதிகாரம் பெற்றவர்களாக இருந்தால் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள். இதுபோல வெளிப்பார்வைக்கு நீதியான பல காரியங்களைச் செய்பவர்களும்  மக்கள்முன் மதிப்புப் பெறுகின்றனர். இவை எதுவுமற்ற ஒருவரை எவரும் மதிப்பதில்லை. 

இதுபோல ஒருவன் பெரிய குற்றவாளி, அநியாயங்கள் பல செய்தவன், ஏமாற்றுக்காரன், நீதி நேர்மையற்றவன் என்று வெளிப்டையாகத் தெரியுமானால் அப்படிப்பட்டவர்களை நம்பி யாரும் வேலைக்கு அமர்த்துவதில்லை. பல அரசாங்க வேலைகளுக்குக்கூட பணியில் அமர்த்துமுன் சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவர்களிடமிருந்து  நற்சான்று (Conduct Certificate) பெற்று சமர்பிக்கச் சொல்கின்றனர். 

ஆனால், கிறிஸ்து நமது நீதிச் செயல்களையும் பாவங்களையும் பெரிதாக எண்ணவில்லை. நாம் பாவிகள் என்று அறிந்தே நம்மைத் அவர் தெரிந்தெடுத்துள்ளார். ஆம், தேவன் தகுதியைப்பார்த்து ஒருவரைத் தேர்வு செய்வதில்லை. மாறாக, தகுதியில்லாதவர்களைத் தேர்வுசெய்து தகுதிப்படுத்துகின்றார். இப்படித்தான் நாம் பாவிகள் என்று தெரிந்தும் நம்மை அவர் தெரிந்தெடுத்துள்ளார். "நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." ( ரோமர் 5 : 7, 8 ) என்று வாசிக்கின்றோம். 

இதனையே இன்றைய தியானவசனமும், நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார் என்று கூறுகின்றது. நாம் செய்த நீதிச் செயல்களல்ல, மாறாக, தேவனது கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" ( எபேசியர் 2 : 8 )

நாம் பாவிகள், அநீதிகள் செய்து வாழ்ந்தவர்கள். ஆனால் நாம் தேவனிடம் சென்று சேரவேண்டும் என்பதற்காக அவர் பாடுபட்டு மரித்து உயிர்த்தார். நமது பாவங்களை நிவர்த்திசெய்யும் கிருபாதார பலியானார். "ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்." ( 1 பேதுரு 3 : 18 )

ஒருமுறை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "மருத்துவன் நோயற்றவனுக்கல்ல, நோயுற்றவனுகேத் தேவை" என்று கூறவில்லையா? நாம் பாவ நோயற்றவர்கள் என்று எண்ணிக்கொண்டு வாழ்வோமானால் நமது நோய் குணமாகாது. நாம் பாவ நோயினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்று உணர்ந்து நம்மை பரம வைத்தியனாகிய அவரிடம் ஒப்புக்கொடுப்போமானால் நமது நோய் குணமாகும். காரணம், நாம் பாவிகள் என்பதால்தான் நம்மை மீட்பதற்காக  கிறிஸ்து நமக்காக மரித்தார். இப்படித்  தேவன் நம்மேல் வைத்த தமது அன்பையும்  விளங்கப்பண்ணுகிறார்.

நமது பாவ நோயினை உணர்ந்துகொள்வோம். பயப்படாமல் மருத்துவரிடம் செல்வதுபோல தேவ சமூகத்தில் செல்வோம். அவர் பரிசுத்தவான்களைத் தேடி வரவில்லை. நம்மைப்போன்ற பாவிகளைத்தான் தேடிவந்து நம்மைப் பரிசுத்தப்படுத்த விரும்புகின்றார். ஒருமுறை ஒரு புனிதர் கூறிய வார்த்தையினை நான் வாசிக்க நேர்ந்தது. அவர் கூறுகின்றார், "புனிதர்கள் எல்லோரும் உண்மையில் மனம்திரும்பிய பழைய பாவிகளே" என்று. 

ஆம், நாம் இரட்சிக்கப்படுவதற்கு நமது பாவங்கள் அவருக்குத் தடையாக இருப்பதில்லை; நாம் செய்த நீதிச் செயல்கள்  மட்டுமே நம்மை இரட்சிக்கமாட்டாது. மாறாக, கிறிஸ்துவின்  இரக்கத்தின்படியே நாம்  மீட்கப்படுகின்றோம். எனவே, நமது நீதிசெயல்களை எண்ணி பெருமைகொள்ளாமல் நமது பாவத்தை எண்ணி பயப்படாமல் மனம்வருந்தி அவரிடம் நெருங்கி வருவோம். அப்போது பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினால் நம்மை இரட்சித்து புதிய மனிதனாக்குவார். 

தியானம் - 2004

"ஆதவன்"ஆகஸ்ட் 04  செவ்வாய்  2026   

"உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது." ( உபாகமம் 23 : 14 )

இன்றைய தியான வசனம் கர்த்தர் மோசே மூலம் இஸ்ரவேல் மக்களுக்குத் தூய்மையினைக் கடைபிடிக்கக் கூறிய ஒரு அறிவுரை. இஸ்ரவேல் மக்கள் மலம்கழிக்கச் செல்லும்போது ஒரு கோலையும் கையில் கொண்டு செல்லவேண்டுமென்றும் அதனால் மணலில் குழியெடுத்து அதில் மலம் கழித்தபின்னர் அதனை மணலினால் மூடிவிடவேண்டும் என்றும் அறிவுரைகூறித் தொடர்ந்து, இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். இதன்மூலம் தேவன் கூறும் முக்கிய காரியம் என்னவென்றால்  நீங்களும் உங்கள் வசிப்பிடமும்  தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே. 

அன்பானவர்களே, நாம் ஏற்கெனவே பலமுறை தியானங்களில் விளக்கிக் கூறியுள்ளபடி பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாக இருக்கின்றது என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, அனைத்துப்  பழைய ஏற்பாட்டுக் காரியங்களையும் நாம் புதிய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது" என்று. அதாவது, நமது ஆவிக்குரிய வாழ்வில் தேவன் நம்மோடு கூடவே இருக்கின்றார். அவர் நம்மோடு உலவி நமது தேவனாக இருக்கின்றார். எனவே, அவரது இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பைப்  பெற்றுள்ள நாம் நம்மைத் தூய்மையுள்ளவர்களாக காத்துகொண்டு வாழவேண்டியது அவசியம். நம்மிடம் அவருக்கு ஏற்பில்லாத செயல்களைக்கண்டு நம்மைவிட்டு அவர் விலகிச் சென்றுவிட நாம் அனுமதிக்கக்கூடாது. 

தேவன் நம்மைவிட்டு விலகும்போது, இஸ்ரவேலர்களை விட்டு தேவன் விலகியபோதெல்லாம் அவர்கள் பல்வேறு இராஜாக்களுக்கு அடிமைகளானதுபோல நாமும் அடிமைகளாவோம். அப்போஸ்தலரான பேதுரு இதனால்தான், "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்று நம்மை எச்சரிக்கின்றார்.

அதாவது, தேவனை நீங்கள் அறிந்துள்ளபடியினால் இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி, அவர் பாளயத்திற்குள்ளே (உனக்குள்ளே) உலாவிக்கொண்டிருக்கிறார், உன்னிலுள்ள அசுத்த காரியங்களை உன்னைவிட்டு விலக்கி உன்னைப் பரிசுத்தப்படுத்தியுள்ளார்.  எனவே நீ மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவைகளால் ஜெயிக்கப்பட்டால், உன் பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும் என்று கூறுகின்றார். 

மட்டுமல்ல, அப்படிச் செய்வது நாய் தான் கக்கினத்தைத் தின்பதுபோன்றதாகும். "நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது" ( 2 பேதுரு 2 : 22 ) என்று வாசிக்கின்றோம். 

இன்றைய தியான வசனம், "உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும்" என்று கூறுகின்றது. நமக்குச் சத்துருக்கள் யார்? அது நமது பாவங்களும் நம்மை நெருக்கி நசுக்குகின்ற பல்வேறு உலகப் பிரச்சனைகளும்தான். இவைகளிலிருந்து நாம் தப்புவிக்கப்பட, தேவன் நமக்குள் உலாவிடவேண்டியது அவசியமாக இருக்கின்றது. 

ஆகையால், அவர் நம்மிடம் அசுத்தமான காரியங்களைக்கண்டு நம்மைவிட்டு விலகிப் போய்விடாதபடிக்கு நம்மைச் சுத்தமாகக் காத்துக்கொள்வோம். பேதுரு கூறுகின்றபடி உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.


தியானம் - 2005

"ஆதவன்"ஆகஸ்ட் 05 புதன் 2026   

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்." ( பிலிப்பியர் 4 : 19 )

இன்றைய தியான வசனம் நமக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரும் வசனமாகும். அப்போஸ்தலரான பவுல் இந்த வசனத்தில் பிதாவாகிய தேவனை வெறுமனே தேவன் என்று சொல்லாமல், "என் தேவன்" என்று கூறுகின்றார். சிறு பிள்ளைகள் தங்கள் நண்பர்களிடம் பேசும்போது சிலவேளைகளில், "என் அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தருவேன் என்று சொல்லியிருக்கிறார்" என்று கூறுவார்களே அதுபோல என்று இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆம், பவுல் தேவனைத் தனக்குத் தனிப்பட்ட உரிமையுள்ளவராக என்தேவன் என்று கூறுகின்றார்.

மட்டுமல்ல, தேவனிடம் எல்லா செல்வங்களும் நிறைந்துள்ளன. நமது எந்தத் தேவையையும் பூர்த்திசெய்ய அவரால் முடியும். இதனையே அவர், தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் என்று கூறுகின்றார். அதாவது, எனது தேவன் அளப்பரிய செல்வத்துக்குச் சொந்தக்காரர். அவர் எனது தேவைகளை மட்டுமல்ல, உங்கள் அனைவரது அனைத்துக் குறைகளையும் நிறைவாக்குவார் என்று கூறுகின்றார். 

ஆனால், பிதாவாகிய தேவன் தன்னிடம் உள்ள செல்வத்தைத் தானாகக் கொடுக்காமல் தனது குமாரன் மூலமே கொடுக்கின்றார். இது பிதாவாகிய தேவன் தனது குமாரனிடம் கொண்டுள்ள தனிப்பட்ட அன்பின் வெளிப்பாடு.  இந்த உண்மையினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதனையே,  கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று கூறுகின்றார் பவுல். அதாவது பிதாவாகிய தேவனிடமுள்ள அளப்பரிய செல்வத்தை நாம் கிறிஸ்து இயேசு மூலமே பெறமுடியும். 

இன்று யெகோவா சாட்சிகள் போன்றவர்களும் இதர சில சபைகளும் பிதாவாகிய தேவனுக்கு முன்னுரிமைகொடுத்து அவரிடமே நாம் வேண்டுதல் செய்யவேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், நாம் பிதாவிடம்  நேரடியாக அல்லாமல் அவரது குமாரன் மூலம் வேண்டுதல் செய்யவேண்டும். குமாரனாகிய அவரையே பிதாவானவர் தனது பரலோக செல்வத்துக்கு உரிமையாளராகத்  தகுதிப்படுத்தியிருக்கிறார். 

இதனையே, "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 9 -11 ) என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நாமத்துக்கு வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும். பூமியின் கீழுள்ள ஆவிகள்கூட முடங்கும். எனவே அவர் கொடுக்க முயல்வதை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் கிறிஸ்துவிடம் அன்பாயிருக்கிறவன் பிதாவுக்கும் அன்பாயிருக்கிறான் என்று வேதம் கூறுகின்றது.  கிறிஸ்து இயேசுவின் கட்டளைகளை நாம் கைக்கொள்ளும்போது நாம் அவருக்கு அன்பாயிருக்கிறோம் என்று பொருள். "என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்." ( யோவான் 14 : 21 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

நமது தேவன் தனக்குள் அடங்கியிருக்கும் ஒப்பற்ற மகிமைச் செல்வத்தை கிறிஸ்துமூலமே உலகிற்கு அளிக்கின்றார் எனும் உண்மையினை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.  எனவே நாம் கிறிஸ்துவிடம் அன்பாயிருக்கும்போது நமது குறைகளை அவர் நிறைவாக்குகின்றார். அந்நிய உபதேசங்களால் அலைக்கழிக்கப்படாமல் கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்வோம். அப்போது பிதாவாகிய தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.


தியானம் - 2006

"ஆதவன்"ஆகஸ்ட் 06  வியாழன் 2026   
 
"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." ( 1 தீமோத்தேயு 2 : 4 )

எந்த ஒரு ஆசிரியரும் தனது வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண்களுடன் வெற்றிபெறவேண்டுமென்றே விரும்புவார். அதற்காக முயற்சியெடுத்து பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார். ஆனால் மாணவர்கள் வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் அந்தந்த மாணவனைப்பொறுத்தே அமைகின்றது. ஆசிரியர் எப்படித்தான் நல்லமுறையில் பாடங்களைச்  சொல்லிக்கொடுத்தாலும் பல மாணவர்கள் தாங்களாக எந்த முயற்சியும் எடுப்பதில்லை. 

இதுபோலவேத் தேவனும் இரட்சிப்பின் வழியை மனிதர்களுக்குக் காண்பித்துள்ளார். தனது வார்த்தைகளை வேதாகம புத்தகமாக மனிதர்களுக்குக் கொடுத்துள்ளார். 

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் அறிவையும் மனச்சாட்சியையும் கொடுத்திருக்கின்றார். அதனைக் முறைப்படி பயன்படுத்தும்போது  சத்தியத்தை அறியலாம்; மீட்புப்பெறலாம். தேவன் வலுக்கட்டாயமாகத் தன்னை எவரிடமும் திணிப்பதில்லை. காரணம், ஒருவரைக் கட்டாயப்படுத்தி ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லும்போது அதனால் அவர் மனநிறைவு பெறுவதில்லை.  உதாரணமாக ஒரு கடையில் நமக்கு வேண்டிய ஆடைகளைத் தேர்வுசெய்யும்போது நாம் நமது மனதுக்குப் பிடித்த ஆடையையே தேர்வு செய்வோம். மற்றவர்கள் கட்டாயப்படுத்தி ஒன்றினை நாம் தேர்வுசெய்தால் அது நமக்கு மனநிறைவைத் தராது. 

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருந்தாலும் இன்று எல்லோரும் தேவனை அறியவில்லை. காரணம், தேவனை அறியும் ஆவல் இருந்தால் மட்டுமே அவரை அறியமுடியும்.  ஆனால் நமது ஆண்டவர் இரக்கமுள்ளவராக இருப்பதால்  தன்னைவிட்டு விலகிப்போனவர்களும், தன்னை அறியாதவர்களும் சத்தியத்தை அறியவேண்டுமென்று  விரும்புகின்றார். 

ஆம் அன்பானவர்களே, "இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல." ( மத்தேயு 18 : 14 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் வேண்டுமென்றே அவர் விரும்புகின்றார். அவர் பூமியில் மனிதனாகப் பிறந்த நோக்கமே அதுதான். இதனையே அவர், "மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்" ( மத்தேயு 18 : 11 ) என்று கூறினார். 

"உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ?" ( மத்தேயு 18 : 12 ) என்று கூறியுள்ளபடி இயேசு கிறிஸ்து விலகிப்போன ஆடுகளாகிய மக்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார். எனவே, பல்வேறு விதங்களில்  தன்னை அறியக்கூடிய வாய்ப்புக்களை ஒவ்வொரு மனிதருக்கும் அவர் அளித்துக்கொண்டிருக்கின்றார்.  

மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து உலகில் இருந்தபோது, தான் மீண்டும் வருவேன் என்று வாக்களித்துச் சென்றார். அதாவது தன்னை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு பரிசுத்த வாழ்க்கை வாழும் விசுவாசிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள அவர் வருவார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து வேதாகமத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது வருகை இன்று 2026 ஆண்டுகள் கடத்தபின்னரும் ஏற்படவில்லை. இதனைக்குறித்து அப்போஸ்தலரான பேதுரு, "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்று கூறுகின்றார். 

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருப்பதால்  அவர் தாமதித்துக்கொண்டிருக்கின்றார். இந்தத் தாமதத்தைக் கேலி செய்யாமல், அவரது வருகையினைக்குறித்து அவிசுவாசம் கொள்ளாமல் இன்றே நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைவேண்டுவோம்; அவரது சித்தத்தை நிறைவேற்றுவோம். 

தியானம் - 2007

"ஆதவன்"ஆகஸ்ட் 07 வெள்ளி 2026

"இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்." ( எரேமியா 18 : 6 )

இஸ்ரவேல் மக்களைத் தேவன் தனது சொந்த மக்களாகத் தெரிந்துகொண்டதால் அவர்களைத் தானே நடத்தினார். எனவே, அவர்கள் தேவனது கட்டளைகளுக்குக் கீழ்படியாதபோதெல்லாம் தேவன் அவர்களைத் தண்டித்துத் திருத்திட  பல்வேறு இராஜாக்களுக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார். இப்படிப் பல்வேறு தருணங்களில் பல்வேறு அரசர்களுக்கு அவர்கள் அடிமைப்பட்டு அவதியுற்றனர். அப்போது தேவன் எரேமியா தீர்க்கதரிசிமூலம் அவர்களுக்கு அவர்களது துன்பத்துக்கான காரணத்தை விளக்கிக்கூறினார்.

இதனை எரேமியாவுக்குப் புரியவைத்திட அவரை குயவன் வீட்டிற்குப் போகுமாறு கூறினார் தேவன். அப்படி எரேமியா குயவன் வீட்டிற்குச் சென்றபோது குயவன் களிமண்ணினால் பானை வனைந்துகொண்டிருந்தான்.  "குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்." ( எரேமியா 18 : 4 )

ஆம் அன்பானவர்களே, இஸ்ரவேல் மக்களைப்போலவே இன்று நாமும் களிமண்போல தேவனது கரத்தில் இருக்கின்றோம். நாம் அவர் விரும்பும் வடிவத்தில் சரியாக வரும்வரை தேவன் நம்மையும் தொடர்ந்து களிமண்ணை குயவன் மிதிப்பதுபோல மிதித்துச் சரிசெய்துகொண்டுதானிருப்பார். ஆம், "இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை." ( ஏசாயா 64 : 8 )

மனிதர்கள் இன்று பல்வேறு விதங்களில் துன்பப்பட மற்றவர்களைப்போலத் தாங்களும் இருக்கவேண்டும் என்று எண்ணுவதும் ஒரு காரணமாகும். நம்மைத் தேவன் எந்த நோக்கத்துக்காக உருவாக்க நினைக்கின்றாரோ அதனை மறந்தவர்களாக நாம் பலவேளைகளில் மற்றவர்களை நோக்கிப்பார்த்து அவர்களைப்போல மாறிட எண்ணுகின்றோம். இப்படித் தேவ நோக்கத்தைச் செய்யாமல் நமது சுய நோக்கத்தை நாம் விரும்புவதால் தேவன் நம்மை உருமாற்றி உருமாற்றி தனது நோக்கம் செய்பவர்களாக மாற்ற முயல்கின்றார். இது நமக்குத் துன்பமாகத் தெரிகின்றது.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" ( ரோமர் 9 : 21 ) என்று கேட்கின்றார். நம்மைத்   திருத்தித் தனக்கு   உகந்தவர்களாக மாற்றிவனைந்திட பரம குயவனான தேவனுக்கு நம்மேல் எல்லா அதிகாரமும் உண்டு. 

தேவன் பலவேளைகளில் நமது ஆவிக்குரிய வாழ்வை மேம்படுத்தி நம்மை ஆவிக்குரிய வாழ்வில் உயர்த்திட விரும்புகின்றார். ஆனால் நாமோ மற்ற உலக மனிதர்களைப்பார்த்து அவர்களைப்போல மாறிட முயலுகின்றோம். எனவே நம்மைச் சீர்திருத்த குயவன் களிமண்ணை மிதித்துத் திருத்தி புதிய பாண்டமாக வனைவதுபோல தேவன் நம்மைத் திருத்தி  வனைகின்றார்.   

இதனையே இன்றைய தியான வசனத்தில் எரேமியா மூலம் தேவன் நமக்கு உணர்த்துகின்றார். ஆம்,  குயவன் களிமண்ணுக்குச்  செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்கின்றார் ஆண்டவர். 

நாம் நாமாக உலகத்தில் இல்லை. குயவனான அவரது கரத்தில் இருக்கின்றோம். எனவே நமது  சுய சித்தம் நிறைவேற்றிட முயலாமல் பரம   குயவன் சித்தத்துக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து வாழ்வோம். அப்போது நமது வாழ்க்கை மாறும். மற்ற உலக மனிதர்களைப் பார்க்காமல் தேவனையே நோக்கிப்பார்த்து வாழ்வோம்.

தியானம் - 2008

"ஆதவன்"ஆகஸ்ட் 08 சனி 2026

"சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 )

நமது தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.  அவருடைய அனைத்துச் செயல்களும் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள். அவர்மேல் விசுவாசம்கொண்டு உறுதியாக அவரையே சார்ந்து வாழ்வோமானால் எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம். அன்றாடம் தேவன் நமது வாழ்வில் செய்யும் அதிசயமான காரியங்கள் அவர்மேல் நமக்கு உறுதியான விசுவாசத்தை ஏற்படுத்தும். நாம் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டல்ல, மாறாக தேவனது அதிசய செயல்களை நாமே அனுபவித்து அவரை விசுவாசிக்கமுடியும். 

நாம் தேவனை விசுவாசித்து அவரிடம் ஜெபிக்கும்போது பலவேளைகளில் தேவன் நமது ஜெபத்துக்குப் பதில்தந்து  செயல்பட நாம் அவருக்கு நேரம் கொடுப்பதில்லை. ஆம் அன்பானவர்களே, நமக்கு  பிரச்சனையோ தேவையோ ஏற்படும்போது தேவனை நோக்கி வேண்டுகின்றோம். அப்படி வேண்டும் நாம் ஜெபத்துக்குப் பதிலளிக்க அவருக்குக் காத்திருக்கவேண்டும். அப்போது  அவர் நமது ஜெபத்துக்குப் பதிலளிக்கும் விதம் ஆச்சரியமானதாக  இருக்கும். அதனை ருசிக்கும் அனுபவம் நமக்கு வேண்டும்.

ஆவிக்குரிய வாழ்வு வாழும் அனைவருக்குமே இத்தகைய அனுபவம் இருக்கும். இதுபோல, இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்த  ஜார்ஜ் முல்லர் (1805 - 18980) எனும் தேவ மனிதரைக்குறித்தும் அவரது விசுவாசம் குறித்தும்  பல செய்திகளை நாம் அறியலாம். விசுவாசமாக ஜெபிப்பது மட்டுமல்ல, ஜெபித்துவிட்டு எப்படியும் தேவன் இந்த ஜெபத்துக்குப் பதில் தருவார் என்று அவர் நம்புவார். மட்டுமல்ல, இன்று எந்த   அதிசய முறையில் தேவன் பதிலளிக்கப்போகின்றார்  என்று ஆவலுடன் அதிசயத்துக்குக் காத்திருக்கும் அனுபவமும் அதனைப் பெற்றுக்கொள்ளும் அருளையும் அவர் பெற்றிருந்தார். 

ஆயிரக்கணக்கான அனாதைக் குழந்தைகளை வெறும் விசுவாச ஜெபத்தால்  மட்டுமே தேவ உதவி பெற்று ஆதரித்து வந்தார் அவர். அவரது வாழ்வில் நடந்த பல  சம்பவங்களில் ஒன்று...

ஒரு முறை அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுப்பதற்குப் பால் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. இங்கிலாந்து நாட்டில் பொதுவாக பாலும் ரொட்டியும்தான் முக்கிய உணவு. முல்லர் அதிகாலையிலேயே எழுந்து தேவனிடம் தனது தேவையினை முறையிட்டார். "ஆண்டவரே,உமது வார்த்தையின்படியே இந்தக் குழந்தைகளை ஆதரித்து வருகின்றேன். இன்று இக்குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு பால் வாங்குவதற்குக்கூட என்னிடம் பணமில்லை. அன்பான ஆண்டவரே நீரே இந்தத் தேவையைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இந்தக் குழந்தைகளை உமது  பாதத்தில் ஒப்படைக்கிறேன்; பசியில்லாமல் பாதுகாத்துக்கொள்ளும்"  என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அப்போது அவரது ஜெப அறையின் கதவு தட்டப்பட்டது. முல்லர் எழுந்து வந்து கதவைத் திறந்து பார்த்தார். ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான். அவனிடம் விசாரித்தபோது அந்த மனிதன் கூறினான், "ஐயா, நான் பால் வண்டி (Milk Van)  ஓட்டக்கூடியவன்.  பக்கத்து நகருக்கு எனது பால் வண்டியில் தினசரி  இந்த வழியாகப் பால் கொண்டு செல்கின்றேன்.  இன்று எனது வண்டியின் அச்சாணி சரியாக உங்களது இந்த ஆசிரமத்து வாசலின் எதிரே வரும்போது உடைந்துவிட்டது. வண்டியைச் சரிசெய்ய வேண்டுமானால் வண்டியின் எடையினைக் குறைக்கவேண்டும்; எல்லா பாலையும் இறக்கவேண்டும். என்ன செய்வது என்று தடுமாறியபோது உங்களது ஆசிரமத்தின்  பெயர் பலகையினைப்  பார்த்தேன். இந்த ஆசிரமம் அருகில் இருப்பதால் உங்களிடம் வந்தேன். பெரிய பாத்திரங்களைக் கொண்டுவந்து பாலைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்றான். முல்லர் முழங்கால் படியிட்டு தேவனுக்கு நன்றி கூறினார்.

ஆம், அன்று அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு வழக்கத்துக்கு  அதிகமான பால் கிடைத்தது. இதுபோல முல்லரின் ஆசிரமத்துப் பலத் தேவைகளை தேவன் அதிசயமாகச் சந்தித்து நடத்தினார். "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை" என்று இதனைத் தள்ளிவிட முடியாது. காரணம், ஒருமுறையல்ல பல முறை இதுபோன்ற அதிசயங்கள் அவரது வாழ்வில் நடந்தன.  

கர்த்தரது செயல்கள் ஆச்சரியமுமானவைகள்; அவருடைய  வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். நீதி வாழ்க்கை வாழ்ந்து அவர்மேல் விசுவாசத்தோடு வாழ்வோமானால் இதுபோன்ற அதிசயங்கள் நமது வாழ்விலும் நடக்கும்.   

தியானம் - 2009

"ஆதவன்"ஆகஸ்ட் 09 ஞாயிறு 2026

"இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்". ( எசேக்கியேல் 20 : 44 )
 
இன்றைய தியான வசனம் தேவனது வித்தியாசமான இரக்கத்தைத் தெளிவுபடுத்தும்  வார்த்தைகளைக் கூறுகின்றது.  உங்களது கெட்டச் செயல்களுக்கும் பொல்லாத வழிகளுக்கும் ஏற்றபடி நான் உங்களைத் தண்டிப்பேன் என்று கூறாமல், உங்களுக்கு நான் கிருபை செய்வேன்; அப்போது நீங்கள் என்னை அறிந்துகொள்வீர்கள் என்கின்றார் தேவன்.  

ஒரு வகுப்பின் ஆசிரியர் மாணவர்களைப்பார்த்து, "நான் உங்களை நீங்கள் படிக்காமல் இருந்தாலும், நீங்கள் வீட்டுப்படங்களை ஒழுங்காக முடிக்காமல் வந்தாலும், பாடங்களுக்கு மதிப்பெண் குறைவாக எடுத்தாலும், நீங்கள் ஒழுங்கீனமாக நடந்தாலும் உங்களைத் தண்டிக்கமாட்டேன்; அதனால் நீங்கள் என்னை நல்ல ஆசிரியர் என்று உணர்ந்துகொள்வீர்கள்" என்று கூறுவதுபோல இருக்கின்றது தேவனது வார்த்தைகள். 

ஆம் அன்பானவர்களே, நமது தேவனது இரக்கத்தை இந்த வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. தேவன் பாவத்தை வெறுத்தாலும் பாவிகளை நேசிக்கின்றார். எனவேதான் எப்படியாவது அவர்கள் மனம் திரும்பவேண்டுமென்று அவர் விரும்புவதால் இப்படி கிருபையுடன் இரங்குகின்றார். எனவே "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103 : 10 ) இப்படி அவர் இரங்கியதால்தான் தாவீது அவரைப் புகழ்ந்து சங்கீதம் பாடினார்; பவுல் அப்போஸ்தலர் மீட்கப்பட்டார். 

பவுல் கிறிஸ்துவின் பெயரால் பிரசங்கிக்கும் மனிதர்களைப் பிடித்து அவர்களைக் கொலைசெய்யவும், சபைகளை பாழாக்கவும் செய்தார். ஸ்தேவான் கல்லால் எறியப்பட்டுக் கொலை செய்யப்பட்டபோது அதற்குப் பவுல் எனும் சவுல் உடன்பட்டிருந்தார். ஆனால் இன்றைய தியான வசனம் கூறுவதன்படி, தேவன் அவரது பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும்,  கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் பதில் செய்யாமல், அவருக்குக்  கிருபைசெய்தார். 

நம்மில் யாரும் தேவனுக்குமுன் தூய்மையானவர்களோ பரிசுத்தர்களோ அல்ல. ஆனால் நாம் அனைவரும் அவரது கிருபையால் நிலைநிற்கின்றோம். எனவேதான் சங்கீத ஆசிரியர், "கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான்,  ஆண்டவரே" ( சங்கீதம் 130 : 3 ) என்கின்றார். 

இதனையே அப்போஸ்தலரான பவுலும், அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்." ( எபேசியர் 2 : 3-5 ) என்று கூறுகின்றார். 

நாம் முதலில் பார்த்த ஆசிரியர் கூறுவது வேடிக்கைப்போல தெரிந்தாலும் இத்தகைய ஆசிரியர்களால் பல மாணவர்கள் நல்லவர்களாக வாய்ப்பு உண்டு. பொதுவாக ஆசிரியர்களின் கண்டிப்புக்குப் பயந்து பல மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் செய்வதுண்டு. ஆனால் இத்தகைய குணமுள்ள ஆசிரியர்களை மாணவர்கள் தங்களது பிற்காலத்தில் பாராட்டுவதுண்டு. ஆம், தண்டனைகளால் திருத்த முடியாதவர்களை அன்பினால் திருத்த முடியும். இதனையே நமது தேவனும் செய்கின்றார். 

அவர் நமது பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் செய்யாமல், நமக்குக் கிருபை செய்ததால்தான் நாம் நிலைத்திருக்கின்றோம்.  "கர்த்தாவே, நீர் எனது அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், நான் எப்படி நிலைநிற்பேன் ஆண்டவரே" என்று நமது பழைய பாவங்களை உணர்ந்து அவருக்கு நன்றிசொல்லி நன்றியுணர்வுடன் வாழ்வோம்.  
 
தியானம் - 2010

"ஆதவன்"ஆகஸ்ட் 10 திங்கள் 2026

"ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாதிருப்பாரோ? அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?" ( சங்கீதம் 77: 7, 8)

இந்த உலகத்தில் நாம் எதிர்கொள்ளும் ஒருசில கேள்விகளே அக்கேள்விகளுக்கு பதிலாகவும்  அமைந்துவிடுவதுண்டு. உதாரணமாக, "தாய் தனது பிள்ளையை மறப்பாளோ?" என்று கேட்கும் கேள்வியே, "மறக்கமாட்டாள்" எனும் பதிலை உணர்த்துவதாக உள்ளது. இதுபோலவே இன்றைய தியான வசனமும் சில கேள்விகளை எழுப்புகின்றது. இவை அனைத்தும் நேர்மறையான பதிலையேத் தருகின்றன. 

"ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ?" என்றால், தள்ளிவிடமாட்டார் என்றும், "தயை செய்யாதிருப்பாரோ?" என்றால் இருக்கமாட்டார் என்றும்  "அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ?" என்றால் இல்லை, அற்றுபோகவில்லை என்றும், அவரது    "வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ?" என்றால் ஒழிந்துபோகவில்லை என்றும் பொருள் தருகின்றது. 

இப்படியே வாழ்க்கையில் நாம் எழுப்பும் கேள்விகள் தேவன் தரும் பதிலாகவும் அமைகின்றன. 

ஆம் அன்பானவர்களே, ஒருவேளை இன்று நாம் பல்வேறுவிதமான துன்பத்துக்குள்ளாகி, "ஐயோ, ஆண்டவர் என்னைப் புறக்கணித்துவிட்டாரோ, என்னைத் தள்ளிவிட்டாரோ" என்று புலம்பிக்கொண்டிருக்கலாம். அல்லது விரக்தியின் உச்சத்தில் நாம், "அவர் எனது ஜெபத்துக்குப் பதில் தரமாட்டார்" என்றும் எண்ணலாம். ஆனால் இன்றைய தியான வசனம் கூறுகின்றது,  திடன்கொண்டு இருங்கள் ஆண்டவர் அப்படி யாரையும் புறம்பேத் தள்ளமாட்டார்,  நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." ( யோவான் 6: 37) என்று  கூறவில்லையா? 

துன்பங்கள் நெருக்கும்போது எவ்வளவு பெரிய தேவ மனிதர்களும் சிலவேளைகளில் இப்படித் தேவன் தங்களைக் கைவிட்டுவிட்டாரோ என்று புலம்புவதுண்டு. எரேமியா தீர்க்கத்தரிசி இப்படிப் புலம்பியதை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். "நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப்பாடலுமானேன். கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார். அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார். என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்" (புலம்பல் 3: 14-18) என்கிறார் அவர். 

எரேமியா இப்படிப் புலம்பினாலும் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, தேவன் தம்மைத் தள்ளிவிடமாட்டார் என்று அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. எனவே தொடர்ந்து அவர் கூறுகின்றார், "கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது." ( புலம்பல் 3: 24-26)

ஆம் அன்பானவர்களே, கர்த்தரது இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. தேவன் நம்மைக் கைவிட்டதுபோன்ற சூழ்நிலை நமக்கு வாழ்வில் ஏற்பட்டாலும் நமக்கு இந்த உறுதி வேண்டும். ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடமாட்டார்; நமக்கு ஒருபோதும் தயை செய்யாமலிருக்கமாட்டார்;  அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போய்விடாது;  அவரது வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோகாது.  

பிரச்சனைகள், துன்பங்கள், சோர்வுகள் ஏற்படும்போது  நாம் நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. கர்த்தர் நமக்குத் தைரியம் கொடுக்க அருமையான வாக்குத்தத்தத்தை வேதாகமத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். ஆம், "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40: 31) கர்த்தருக்குக் காத்திருப்போம்; அப்போது, கர்த்தரது ஆச்சரியமான வழிநடத்துதலை நாம் நமது வாழ்வில் காணமுடியும்.

தியானம் - 2011

"ஆதவன்"ஆகஸ்ட் 11 செவ்வாய் 2026

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்." (  சங்கீதம் 53 : 2 )

தன்னைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று தேவன் பரலோகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆம், அவர் தன்னை  அறியவேண்டும் எனும் உணர்வுள்ளவன் பூமியில் உண்டுமா என்று பார்த்துகொண்டேயிருக்கின்றார்

ஆனால் பெரும்பாலான மக்கள் அவரைத் தேடுவதற்குப்பதில் அவரிடமிருந்து என்ன கிடைக்கும் என்றே தேடிக்கொண்டிருக்கிறார்கள்.  தேவனை அறியவேண்டும் எனும் மெய்யான உணர்வோடு தேடுகிற மனிதர்களுக்கு மட்டுமே அவர்  வெளிப்படுவார் "தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்" ( மத்தேயு 7 : 7 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? அவர் காணாமல்போன பொருட்களைக் கண்டுபிடிக்க நம்மைத் தேடச் சொல்லவில்லை. மாறாக, இதுவரை அறியாமலிருக்கும் அவரைத் தேடச் சொல்கின்றார். 

கடவுள் என்று ஒருவர் உண்டா? அப்படியானால் உண்மையான கடவுள் யார்? என்பதை அறிய எல்லா மத நூல்களையையும் படித்து இறுதியில் தேவனை அறிந்துகொண்டதாகப் பலர் கூறுகின்றனர். இந்து குடும்பத்தில் பிறந்த எனது நண்பர் சகோதரர் சொர்ணகுமார் அவர்கள் தனது சாட்சியைக் கூறும்போது,   தேவனை அறிய பல மத நூல்களையும் தான் கற்றதாகவும் இறுதியில் வேதாகமத்தைத் தொடர்ந்து  படித்துக் கொண்டுவரும்போது, "உன்னுடனே பேசுகிற நானே அவர் " (யோவான் - 4 : 26) எனும் வசனத்தைப் படித்தபோது தேவனால் உணர்த்தப்பட்டுத் தொடப்பட்டு கிறிஸ்துவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாகக்  கூறுவார்ஆம், இதுபோல உண்மையாய்த் தேவனைத் தேடும் எவருக்கும் அவர் வெளிப்படுவார்  

அன்பானவர்களே, நாம் கிறிஸ்தவப் பெற்றோருக்கு மகனாக,  மகளாகப் பிறந்துவிட்டு கிறிஸ்தவ முறைமைகளை பின்பற்றுவதால் தேவனை அறிந்தவர்களல்ல. இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்காணிக்கும் தேவன் இப்படித் தன்னைத் தேடுகின்ற மனிதர்களுக்கு இரட்சிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றார். "உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக." (  சங்கீதம் 70 : 4 )

தங்களது மத வைராக்கியத்தை விட்டு மெய்யான தேவனை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு தன்னைத் தேடுபவர்கள் மேல் தேவன் பிரியம் வைக்கின்றார். "கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்." (  சங்கீதம் 149 : 4 )

சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் அவர்கள் பிறப்பால் ஒரு சீக்கியர்.  சிறு வயதிலேயே தாயை இழந்த அவர் தகப்பனின் அரவணைப்பில் வளர்ந்தார். இளைஞனானபோது துன்பங்கள் தொடர்ந்திட அவைகளை மேற்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதிகாலையில் எழுந்து தனது வீட்டுக்கு அருகில் செல்லும் ரயில் தண்டவாளத்தில் படுத்து  தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்குமுன், பொதுவான ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார்.

எந்த தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடாமல், "நான் தற்கொலை செய்து என்னை மாய்த்துக்கொள்ளப் போகின்றேன்.... உண்மையிலேயே கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், அவர் என்னை மன்னிக்கட்டும்...தற்கொலை செய்வது பாவம் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன....எனவே உண்மையான தேவன் ஒருவர் உண்டு என்றால் அவர் என்னை மன்னிக்கட்டும்" என்று பொதுவாக ஜெபித்துவிட்டு எழுந்தபோது கிறிஸ்து அவருக்கு வெளிப்பட்டார்.  தற்கொலைக்கு முயன்ற அவர் பிறகு கிறிஸ்துவின் அபோஸ்தர்களது அனுபவித்த அனுபவத்துடன் வல்லமையான ஊழியரானார். 

ஆம், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." (  எரேமியா 29 : 13 ) எனும் வசனத்தின்படி தேவனை அறியவேண்டுமெனும் எண்ணத்துடன் முழு மனதுடன் தேடினால் தேவனைக் கண்டு கொள்ளலாம். மட்டுமல்ல, நொறுங்குண்ட இருதயம் தேவனைக் கண்டுகொள்ளும்.  "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்." (சங்கீதம் 34:18)

பரலோகத்திலிருந்து கண்ணோக்கும் தேவன் நம்மைக் காணட்டும்.நமது உள்ளத்தின் ஆர்வம், உடைந்த உள்ளம் இவையே நாம் தேவனைக் கண்டுகொள்ள உதவும். 



தியானம் - 2012

"ஆதவன்"ஆகஸ்ட் 12 புதன் 2026

"இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்." ( யோவான் 14 : 23 )

உலகினில் சில காரியங்கள் கடைபிடிக்க எளியவை. சில கடினமானவை. ஆனால் மக்கள் பலரும் எளிதான காரியங்களையே செய்ய விரும்புகின்றனர். ஆவிக்குரிய காரியங்களிலும் இப்படியே பெரும்பாலான மக்கள் செய்ய விரும்புகின்றனர். 

ஜெபம் செய்வது எளிது, வேதாகமத்தை வாசிப்பது எளிது, காணிக்கைக்கொடுப்பது எளிது, ஜெபக்கூட்டங்களிலும் ஆலய ஆராதனைகளிலும் கலந்துகொள்வது எளிது. எனவே இவைகளைப் பலரும் செய்து தங்களை ஆவிக்குரிய வாழ்வு வாழ்வதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவையும் குமானையும் அன்புசெய்வதே மேலானது என்றும் அப்படி அன்புசெய்யும்போது தாங்கள் அத்தகைய மனிதர்களிடம் வந்து  குடிகொள்வதாகக் கூறுகின்றார். 

ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான் என்று இயேசு கிறிஸ்து கூறுவது, சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கின்றது. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொள்வதே அவரிடம் அன்பாயிருப்பதாகும். "இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்" என்று வாயினால் கூறுவதல்ல அன்பு, முதலில் நமது வாழ்க்கையால் அதனைக் கூற நாம் முயலவேண்டும்.

நாம் இயேசு கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொள்ளும்போது நம் உண்மையிலேயே அவரது சீடர்களாக இருப்போம். எனவேதான் "இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்' ( யோவான் 8 : 31 ) என்றார். இயேசு கிறிஸ்துவுக்கு 12 சீடர்கள் இருந்தனர். நாம் அவரது வசனத்தைக் கைக்கொள்ளும்போது அவரது பதின்மூன்றாவது சீடராக மாறுகின்றோம். இது எவ்வளவு மேன்மையான காரியம் என்று எண்ணிப்பாருங்கள்!!

மட்டுமல்ல, "நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்." ( யோவான் 15 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து. அப்படி அவரது வசனத்தை நாம் கைக்கொள்ளும்போது நாம் கனிகொடுப்பவர்களாக மறுக்கின்றோம். அப்படி நாம் கனிகொடுப்பதனால் பிதாவாகிய தேவன் மகிமைப்படுவார்; எனவே அவர் நம்மேல் அன்பாயிருப்பார்.

ஆனால், கிறிஸ்துவின் வசனத்தைக் கைக்கொள்வது சற்றுக் கடினமான காரியம். அது சிலுவை சுமக்கும் அனுபவம்; அது தன்னையே வெறுக்கும் அனுபவம்.  "பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வரவிரும்பினால், அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" ( மாற்கு 8 : 34 ) என்று கூறவில்லையா?

ஆம் அன்பானவர்களே, நல்லது செய்யுமுன் நாம் நல்லவர்களாக இருக்கவேண்டியது அவசியம். காணிக்கைக்  கொடுப்பது,  உபவாசிப்பது, வேதாகமத்தை வாசிப்பது, ஜெபிப்பது, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது போன்றவை நல்ல செயல்கள்தான். ஆனால் வாழ்க்கை மாற்றமில்லாமல் இவைகளைச் செய்வது வீண். எனவேதான் இயேசு கிறிஸ்து இவைகளை மேன்மையாகக் கூறாமல்,  "தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல" ( மத்தேயு 10 : 38 ) என்று சாட்சி வாழ்கையினையே மேலானதாகக் கூறினார்.  

ஆம், வாழ்க்கையில் சாட்சியுடன் விளங்குவதே தேவன் விரும்புவது. நாம் கிறிஸ்துவிடம் அன்பாயிருந்தால் அவரது வசனத்தைக் கைக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போது நம்மிடம் பிதாவாகிய தேவன்  அன்பாயிருப்பார்; பிதாவும் குமாரனாகிய கிறிஸ்துவும் நம்மிடம் வந்து தங்கி நம்மை மகிமைப்படுத்துவார்கள். 

"நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல."( 1 யோவான்  5 : 3 )

தியானம் - 2013

"ஆதவன்"ஆகஸ்ட் 13 வியாழன் 2026

"கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்." ( ஏசாயா 34 : 16)

இந்த உலகம்கூட எந்த ஒரு காரியத்துக்கும் இரண்டு சாட்சிகள் தேவை என்பதனை நிலைப்படுத்தியுள்ளது. எந்த ஒரு பத்திரப்பதிவு செய்யும்போதும் இன்றும் இரண்டுபேருடைய சாட்சி தேவைப்படுகின்றது. ஏனெனில் இரண்டுபேர் ஒரு காரியத்தை உறுதிப்படுத்தினால் அது உண்மையென ஏற்றுக்கொள்ளப்படும். 

மோசே மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணக் கட்டளையிலும் இதுவே கூறப்பட்டுள்ளது. இரண்டுபேருடைய சாட்சியால் ஒருவன் தீர்ப்பிடப்படவேண்டும். இதனை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்  "இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே." ( யோவான் 8 : 17 ) என்று  கூறினார். மேலும் அவர் உன் சகோதரன் உனக்கு எதிராக குற்றம் செய்தால் அவனுடன் பேசி ஒப்புரவாகு, "அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ." ( மத்தேயு 18 : 16 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, இதுபோல தேவனுடைய வார்த்தைகள் உண்மை என்பதற்கு அவை வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முறையே சாட்சி. வேத வசனங்களில் ஒன்றும் அதற்கு இணையான ஜோடி இல்லாமல் இராது. இரண்டுபேருடைய சாட்சி உண்மை என்பதுபோல இந்த வசனங்களும் உண்மையானவை என்பதனை இப்படி ஜோடியாக இவை இருப்பது உறுதிப்படுத்துகின்றது. 

வேத வசனங்கள் பல்வேறு மனிதர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. ஆடுமேய்ப்பவர்கள், அத்திப்பழம் பொறுக்குபவர், மீன்பிடிப்பவர், அரசர்கள் போல  பல்வேறு தொழில் செய்வோர் பல்வேறு இடங்களிலிருந்து தேவ வார்த்தைகளைப் பதிவுசெய்தனர். இக்காலத்தில் இருப்பதுபோல விஞ்ஞான வளர்ச்சிகள்  அப்போது இல்லை. ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துப் பேசக்கூடிய வாய்ப்பும் பெரும்பாலும் அவர்களுக்கு அக்காலத்தில் இல்லாமலிருந்தது. ஆனாலும் அவர்கள் மூல தேவன் பேசிய வார்த்தைகள் பதிவிடப்பட்டபோது அவைகளுக்குள் ஒற்றுமை இருந்தது. இதுவே அவர்களோடு பேசியவர் ஒரேதேவன் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. 

இதனையே இன்றைய தியான வசனம், கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று என்று கூறுகின்றது.  தேவனது சில வசனங்கள் ஒரே வார்த்தையால் கூறப்பட்டாலும், பலவேளைகளில் அவை பொருள் மாறாமல்,  அதன்  உட்பொருள் மாறுபடாமல் வேறுமுறையில் பயன்படுத்தப்படுவதும் உண்டு.   

உதாரணமாக, "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (1 கொரிந்தியர் 12:9) எனும் வசனமும், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்" (சக்கரியா 4;6) எனும் வசனமும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. மனித பலவீனத்தில் தேவனது வல்லமை விளங்கும் என்பதனை இவை உணர்த்துகின்றன. 

ஆம்  அன்பானவர்களே, நாம் வேதாகமத்தை கவனமுடன் வாசிக்கும்போது தேவ வார்த்தைகள் இப்படிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டுகொள்ளலாம். இது அந்த வார்த்தைகள் உண்மை என்பதனை உறுதிப்படுத்துகின்றது. எனவேதான் இன்றைய தியான வசனம், "கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்" என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. 

தேவ வார்த்தைகள் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முறைகளை கவனிப்போம்; அவைகளைத் தியானிப்போம். காரணம், அந்த வார்த்தைகள் உறுதியானவை, நமக்கு நித்திய ஜீவனை அளிக்கக்கூடியவை. 

தியானம் - 2014

"ஆதவன்"ஆகஸ்ட் 14 வெள்ளி 2026

"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவை எல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." ( ரோமர் 8 : 36, 37 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வியத்தகு அன்பைக் குறித்தும் அந்த அன்பு நம்மில் செயல்படுத்தும் ஆவிக்குரிய மாற்றங்களைக்குறித்தும் இன்றைய தியான வசனம் எடுத்துக்கூறுகின்றது. 

கிறிஸ்துவின்  அன்பு நம்மில் செயல்படுவதால் நாம் இந்த உலகத்தின் துன்பங்கள், பிரச்சனைகள், வேதனைகளைத் தாங்கக்கூடிய பெலனுள்ளவர்களாக மாறுகின்றோம் என்று கூறப்பட்டுள்ளது. உபத்திரவங்கள்,  வியாகுலங்கள்,  துன்பங்கள், பசி, நிர்வாணம் எனும் வறுமைநிலை,  நாசமோசம், பட்டயம் எனும் நமக்கு எதிரான எதிரியின் செயல்பாடுகள் இவை எதுவும் கிறிஸ்துவின்  அன்பைவிட்டு நம்மைப் பிரிக்காது. 

இந்த உலகத்தில் சில காதலர்களின் வாழ்கையினைக்குறித்து நாம் பார்க்கின்றோம். பெற்றோர்கள் தங்களது காதலைப் பிரிக்க முயலுவதால் தாங்கள் சேர்ந்து வாழ முடியாத விரக்தியில் காதலர்கள் சேர்ந்து தற்கொலை செய்து மடிவதை சிலவேளைகளில்  பத்திரிகைச்  செய்திகளில் நாம் வாசிக்கின்றோம். காரணம், அவர்களுக்கிடையிலான அன்பு அவர்களைப் பிரிக்க முயலும் சக்திகளுக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை. 

ஆனால் நமது ஆண்டவராகிய கிறிஸ்து சர்வ வல்லவர். உலகக் காதலர்களைப்  பிரிக்க பெற்றோர்களும் உறவினர்களும் இருப்பதுபோல நமக்கும் கிறிஸ்துவுக்குமிடையிலான ஆவிக்குரிய அன்பினைப் பிரிக்க, உபத்திரவங்கள்,  வியாகுலங்கள்,  துன்பங்கள், பசி, நிர்வாணம் எனும் வறுமைநிலை,  நாசமோசம், பட்டயம் இவைகள் செயல்படுகின்றன.  ஆனால், நாம் நம்மில் அன்புகூருகிற கிறிஸ்துவினாலே இவைகளிலிருந்து முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம்.  

நாம் கிறிஸ்துவின்  பிள்ளைகளாக இருக்கின்றோம். அவர் நமது அன்பான பெற்றோர்களைப்போல இருப்பதால் நாம் இந்தத் துன்பங்களைச் சகிக்கமுடிகின்றது. ஆம், "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்." ( ரோமர் 8 : 16 )

இந்த உலகத்தில் நாம் படும் பாடுகளும் துன்பங்களும் எதிர்காலத்தில் நாம் அனுபவிக்கப்போகும் மகிமைக்குமுன் ஒன்றுமில்லாதவை. இந்த எண்ணமே நம்மைப் பாடுகளைச் சகிக்க உதவுகின்றது. இதனையே அப்போஸ்தலமான பவுல், "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" ( ரோமர் 8 : 18 ) என்கின்றார். இப்படி இருப்பதால்தான் இன்றைய தியான வசனம் துணிவுடன் கேள்வியெழுப்புகின்றது:- "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?" என்று. பவுல் அப்போஸ்தலர் எழுப்பும் இக்கேள்வியை நாமும் துணித்துக்கூறி நமது விசுவாசத்தை அறிக்கையிடுவோம். 

தியானம் - 2015

"ஆதவன்"ஆகஸ்ட் 15 சனி 2026

"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )

இன்று நமது நாடு சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியினைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். சுதந்திரம் என்றாலே மகிழ்ச்சிதான். ஆனால் சுதந்திரம் என்று சொல்லும்போது இதுவரை நாம் யாருக்கோ அடிமையாக இருந்துள்ளோம் என்பதும் நினைவுக்கு வரும். ஆம் நாம் ஆங்கிலேயருக்கு அடிமைகளாக இருந்தோம். இந்தநாளில் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுள்ளோம்.

இதுபோலவே ஆவிக்குரிய வாழ்விலும் நடக்கின்றது. ஆவிக்குரிய வாழ்வில் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது நமது பாவ பழக்கங்களும் பாவ எண்ணங்களும்தான். இந்தப் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதே ஆவிக்குரிய விடுதலை. இந்த விடுதலையை நமக்குத் தரவே மீட்பராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். 

ஒருவனுக்கு விடுதலை பெறவேண்டும் எனும் எண்ணம் வரவேண்டுமானால் முதலில் தான் அடிமையாக இருப்பதை அவன் உணரவேண்டியது அவசியம்.  எனவேதான்  யூதர்களுக்கு அவர்களது பாவ அடிமைத்தனத்தைக் குறித்து இயேசு உணர்த்தினார். ஆனால்,  "அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்." ( யோவான் 8 : 33 ) அவர்கள் தங்களை ஆபிரகாமின் சந்ததி என்று கூறிக்கொள்வதில் பெருமைகொண்டிருந்தனர்.

இன்று பல கிறிஸ்தவர்களும் இந்த யூதர்களைப்போலவே எண்ணிக்கொள்கின்றனர். தாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால்  பாவங்களிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர்.  அன்பானவர்களே, கிறிஸ்தவர்களாக இருப்பது மட்டும் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்காது. நாம் தனிப்பட்ட விதத்தில் சத்தியமான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அறியவேண்டும்; அவரை விசுவாசிக்கவேண்டும். இதனால்தான் இயேசு கிறிஸ்து, "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் " ( யோவான் 8 : 32 ) என்று  கூறினார். 

ஆம் அன்பானவர்களே, "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 ) குமாரன் தரும் இந்த விடுதலையினைப் பெறும்போது நாம் பாவம் செய்ய முடியாது. காரணம், அந்த அடிமைத்தனம் கிறிஸ்துவால் முறிக்கப்படுகின்றது. 

மட்டுமல்ல, பாவத்துக்கு அடிமையாகி சாத்தானின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற நமக்குள் கிறித்து வந்து தங்குகின்றார். இதனால் நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

"அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) ஆம் அன்பானவர்களே சாவுக்கேதுவான நமது உடலானது கிறிஸ்துவால் உயிப்பிக்கப்படுவதே விடுதலை வாழ்வின் சிறப்பு. இந்த விடுதலையினை பெற்றுக்கொள்ள முயல்வோம்.

முதலில் நாம் பாவத்துக்கு அடிமைகள் என்பதனை உணர்வோம்; அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற ஆசைகொள்வோம்; விடுதலை அளிக்கும் குமாரனாகிய கிறிஸ்து நமக்குள்வர நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

தியானம் - 2016

"ஆதவன்"ஆகஸ்ட் 16 ஞாயிறு 2026

"கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்." (2 சாமுவேல் 6: 16)

மனிதர்களது பார்வை வேறு, தேவன் ஒரு காரியத்தைப் பார்க்கின்ற பார்வை வேறு. தேவன் மேன்மையாக எண்ணுவதை நாம் பலவேளைகளில் அற்பமாக எண்ணுகின்றோம். ஆவிக்குரிய காரியங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. ஆனால் இதன்மூலம் சிலவேளைகளில் நாம் நம்மை அறியாமல் தேவனது கோபத்தையும் சாபத்தையும் பெறவேண்டிய நிலை ஏற்படலாம்.

ஒவ்வொருவரும் தங்களது மனதில் தேவன் கொடுக்கும் எண்ணத்திற்கேற்ப, அவர்களுக்குத் தேவன் செய்த தனிப்பட்ட நன்மைகளை எண்ணி அவர்களது மனதின் ஆழத்திலிருந்து பல்வேறுவிதங்களில் தேவனை ஆராதிக்கின்றனர். இதில், நாங்கள் வழிபடும் முறைதான் மேலானது என்றோ மற்றவர்கள் வழிபடும் முறை தவறு என்றோ நாம் கூறிட முடியாது. அப்படிக் கூறி மற்றவர்களையும் அவர்களது வழிபாட்டு முறைகளையும் கேலியாக, அற்பமாக எண்ணுவோமானால் நாம் தேவனது சாபத்தைப் பெறுவோம்.

தாவீது ராஜாவுக்குத் தேவன் செய்த காரியங்கள் மிக மேலானவை. வனாந்தரத்தில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த அவரைத் தேவன் தெரிந்துகொண்டு தனது இருதயத்துக்கு ஏற்றவன் என்றும் கூறினார். மட்டுமல்ல, அவர்மேல் கொண்ட அன்பினால் மீட்பரை அவரது சந்ததியில் பிறக்கச்செய்வேன் என்றும் வாக்களித்து அதனை நிறைவேற்றவும் செய்தார். இதனால் தாவீதுக்கு தேவன்மேல் அளவிடமுடியாத அன்பும் பற்றும் இருந்தது. அவரது சங்கீதங்களை சுமார் நாலாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக மக்கள் பாடிக்கொண்டிருக்கிறார்களென்றால் காரணம், அந்தப் பாடல்களிலுள்ள அபிஷேகம். 

தேவன் தனக்குச் செய்த இத்தனை மேன்மைகளை எண்ணி தேவன்மேலுள்ள அன்பினால் அவர் உடன்படிக்கைப்பெட்டி எடுத்துவரும்போது அதன்முன் குதித்து ஆடிப்பாடினார். ஆனால் சவுலின் மகள் மீகாளுக்கு தாவீதின் நடனம் கேலிக்கூத்தாகத் தெரிந்தது. அதனை அவள் அற்பமாக மனதினில் எண்ணினாள். "அதனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது." (2 சாமுவேல் 6: 23) ஆம் அன்பானவர்களே, மீகாள் வேறு யாரிடமும் தாவீது நடனமாடியதைக் குறையாகக் கூறவில்லை. தனது மனதினில்தான் அவள் தாவீதை அவமதித்தாள். ஆனால் தேவன் அதனைப் பெரிய பாவமாகக் கருதி  அவளது கர்ப்பத்தை அவள் மரணமடையும்வரை அடைத்துப் போட்டார்.

இந்தச் சம்பவம் நமக்கும் ஒரு படிப்பினையாக இருக்கின்றது. யாராக இருந்தாலும் மற்றவர்களது வழிபாட்டு முறைகளைக் கிண்டலாக, கேலியாக எண்ணாதிருப்போம்; பேசாதிருப்போம்.  தேவனுக்கும் மற்றவர்களுக்குமுள்ள உறவு குறித்து  நமக்குத் தெரியாது. மட்டுமல்ல, இதுவரை அப்படி மற்றவர்களைக் கேலியாக அற்பமாக எண்ணியிருந்தாலோ, பேசியிருந்தாலோ தேவனிடம் மன்னிப்பைக் கேட்போம். ஒருவேளை நமது ஆசீர்வாதக் குறைவுக்கு இதுபோன்ற  நமது செயல்கள்  காரணமாக இருந்திருக்கலாம்.  

தியானம் - 2017

"ஆதவன்"ஆகஸ்ட் 17 திங்கள் 2026

"தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 20 )

மெய்யானத்  தீர்க்கத்தரிசனங்கள் தேவனால் அருளப்படுகின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி உண்மையான தீர்க்கத்தரசிகளைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மக்களும் தீர்க்கதரிசனங்களையும் அவர்கள் கூறுவதையும் இன்று பெரிதாக மதிப்பதில்லை. காரணம், உண்மையான தீர்க்கத்தரிசனத்தைவிட  கள்ளத் தீர்க்கத்தரிசனங்கள்  அதிகரித்துவிட்டதே. 

ஆனால் உண்மையான தீர்க்கத்தரிசனம் கூறப்படும்போது அதற்குச் செவிகொடுக்காமல் இருப்போமானால் அது நமக்கு சாபத்தைக் கொண்டுவரலாம். இதற்குச் சமாரியாவில் பெரிய பஞ்சம் ஏற்பட்டபோது எலிசா கூறிய தீர்க்கத்தரிசனத்தை நம்பாத ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் உதாரணமாக  இருக்கின்றான். 
 
அந்தப் பஞ்சகாலத்தில் ராஜாவிடம் எலிசா "கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்." ( 2 இராஜாக்கள் 7 : 1, 2 )

எலிசா கூறியபடியே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே மக்கள்  அவனை நெருங்கி மிதித்ததினாலே, எலிசா சொல்லியிருந்தபடியே. அவன் செத்துப்போனான். 

அன்பானவர்களே, எப்போதும் ஆசீர்வாதத்தையே கூறி மக்களை ஏமாற்றும் ஊழியர்களின் தீர்க்கத்தரிசனங்களை நாம் அற்பமாக எண்ணினால் அது தவறல்ல, ஆனால்,  நமது பாவங்களைக் குறித்தும் மனம்திரும்புதலைக் குறித்தும் உணர்த்தி நம்மை ஆவிக்குரிய வழியில் நடத்த விரும்பும் உண்மையான தீர்க்கத்தரிசிகளுக்கு நாம் கண்டிப்பாகச்    செவிகொடுக்கவேண்டியது  அவசியம். இல்லையானால் நாம் தேவனுடைய மீட்பு அனுபவத்தைப் பெறாமலேயே போய்விடுவோம்.       

ஏனெனில், "தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." ( 2 பேதுரு 1 : 21 ) அன்பானவர்களே, உண்மையான தேவ மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வோம். தேவனுடைய மனிதர்களின் வார்த்தைகளை மதித்து ஏற்றுக்கொள்வோம். அந்த வார்த்தைகள் கூறும் உண்மையினை உணர்ந்து நம்மைத் திருத்திக்கொள்வோம்.  தீர்க்கத்தரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை.
தியானம் - 2018

"ஆதவன்"ஆகஸ்ட் 18 செவ்வாய் 2026

"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 )

இயேசு கிறிஸ்து தான் பரலோகம் செல்லுமுன் ஒரு முக்கியமான கட்டளையைத் தனது சீடர்களுக்குக் கூறினார். இதனை நாம், "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம். 

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை என்று உணர்கின்றோம். கிறிஸ்துவை பிரசங்கிக்கவேண்டியது மட்டுமே நமது கடமை; அது கிறிஸ்து கூறிய ஒரு முக்கியமான  கட்டளை. அதனைத்தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றனரேத்   தவிர மதம் மாற்றுவதில்லை. 

ஊழியம் செய்கின்றேன் என்று கூறி வேத அறிவோ அனுபவமோ இல்லாத சில அற்பமான ஊழியர்கள்தான் இதில் தவறு செய்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவை மக்களிடம் திணிக்க முயல்கின்றார். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விதைக்கவேண்டுமேத்தவிர வலுக்கட்டாயமாக அதனை எவர் உள்ளத்திலும் விதைத்து எவரையும் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியாது. 

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது இதுதான்.  அதாவது எனது வார்த்தைகளை நீங்கள் விதையுங்கள். அதனை ஏற்றுகொள்ளாதவனை நான் கூறிய வசனமே இறுதிநாளில் நியாயம் தீர்க்கும். ஆம், தேவனது வார்த்தைகள் உயிரும் வல்லமையும் உள்ளது. அது மனிதனது  உள்ளத்தில் ஊடுருவி அவனது ஆத்துமா, சிந்தனை, செயல், அவனது உடல் அனைத்தையும் ஊடுருவி குத்தக்கூடியது. இதனை நாம் எபிரெயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

ஒருவன் எந்த மார்க்கத்தானாய் இருந்தாலும் மனச்சாட்சி ஒன்றுதான். அதாவது அதுவே அனைவரையும் ஒரே தேவன் உண்டாக்கினார் என்பதற்கு அடையாளம். எனவே எந்த மனிதனும் இறுதி நியாயத் தீர்ப்பில் தேவனுக்குத் தப்பிட  முடியாது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) ஆம், ஆண்டவரது சட்டங்கள் எல்லா மனிதர்கள் உள்ளத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஆண்டவரது வசனம் நீதியானது, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் இயேசு கிறிஸ்து. இதனாலேயே அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கின்றோம். கிறிஸ்துவைத் தள்ளி அவரது வார்த்தைகளை விசுவாசியாமல் போகும்போது நாம் நீதியாக வாழ முடியாது. அவரது வசனமே நம்மைச் சரியான நீதிப் பாதையில் நடத்த வல்லமையுள்ளது. 

"என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொண்டு வசனத்துக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள்  எனக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நமது வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தின்படி உள்ளதா? என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். 

தியானம் - 2019

"ஆதவன்"ஆகஸ்ட் 19 புதன் 2026

"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்." ( யோவான் 14 : 1 )

இந்த உலகத்தில் நாம் ஏதாவது காரியத்தில் கலக்கமடைகின்றோம் என்றால் அதற்கு நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளைக்குறித்த பயமே முக்கிய காரணம். தீராத நோய்கள் நம்மைத் தாக்கும்போது, கடன் பிரச்சனைகள் நம்மை நெருக்கும்போது, அல்லது தப்பிடவே முடியாத இக்கட்டான பிரச்சனைகள் ஏற்படும்போது நாம் கலக்கமடைகின்றோம். ஆனால் இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக" என்று. 

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து மோசேயால் கானானைநோக்கி வழிநடத்தப்பட்டனர். அப்போது, அவர்களை விடுவித்த பார்வோன் மனம்மாறி அவர்களைக் கொல்வதற்கு வந்தான். இஸ்ரவேலர் கலக்கமடைந்தனர். அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: "பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." ( யாத்திராகமம் 14 : 13, 14 ) இந்த தேவ வார்த்தைகள் அவர்களது கலகத்தைப் போக்கியது. அதுபோல அவர்கள் விடுதலை பெற்றனர்.

மேலும், பல்வேறு பெரிய பெரிய இராஜாக்கள் அவர்களுக்கு எதிர்பட்டபோது அவர்கள் மிகவும் கலக்கமடைந்தனர். அப்போதெல்லாம் தேவனை நோக்கி முறையிட்டனர். தேவன் அவர்களை அந்த இராஜாக்களுக்குத் தப்புவித்து நடத்தினார். இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தேவனே அவர்களை அதிசயமாக நடத்தினார். 

ஆம் அன்பானவர்களே, ஒரு பிரச்சனை ஏற்படும்போது நமது பிரச்சனைகளைத் தாங்கிக்கொள்ள ஒருவர் இருக்கின்றாரென்றால் நமக்கு அது மிகப்பெரிய ஆறுதலாக இருக்குமல்லவா? 

கடன் பிரச்சனையால் நமது வீடு ஜப்திசெய்யப்படும் நிலை ஏற்படுமானால் நமது உள்ளம் எவ்வளவு கலக்கமடையும்!! ஐயோ, இனி என்ன செய்வோம்? எங்கு சென்று தங்குவோம்? எப்படி வீட்டு வாடகையினைக் கொடுப்போம்? நமது வீடு ஜப்தி செய்யப்படும்போது அது நமக்குச் சமூகத்தில் எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கும்!! ஆனால் அத்தகைய சூழ்நிலையில், "பயப்படாதேயுங்கள் உங்கள் கடனை நான் செலுத்தித் தீர்க்கிறேன்" என்று ஒரு பெரிய செல்வந்தர் ஒருவர் நமக்குத் துணைவந்தால் நமது கலக்கம் உடனேயே தீர்ந்துவிடுமல்லவா? 

இதுபோல, நமது ஆண்டவராகிய இயேசு தம்மிடம் உதவிகேட்டு வந்தவர்கள் அனைவரிடமும், "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாய் இரு" என்றுதான் முதலில் கூறி அவர்களைத் தைரியப்படுத்தினார்..    

சர்வலோகத்தையும் படைத்து  ஆளும் மிகப்பெரிய செல்வந்தர் நமக்குத் தந்தையாக இருக்கின்றார். அவர் தன்னிடம் நாம் விசுவாசமாக இருக்கும்படி அறிவுறுத்துகின்றார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என்கின்றார் அவர். ஆம் அன்பானவர்களே, எனவே நாம் பிதாவாகிய தேவனிடமும் அவரது குமாரனாகிய கிறிஸ்துவிடமும் விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சகல ஐஸ்வர்யமும் அவருக்குள் அடங்கியிருக்கின்றது. 

"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" (எபிரெயர் 11:1) இத்தகைய விசுவாசத்துடன் கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசிப்போம். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.

தியானம் - 2020

"ஆதவன்ஆகஸ்ட் 20  வியாழன் 2026

"ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 2 )

மனிதர்கள் பலரும் தங்களது படிப்பைவைத்துத்  தங்களைத் தாங்களே மேன்மையாக எண்ணிக்கொள்கின்றனர். அதிகம் படித்துள்ளதால் தங்களுக்கு எல்லாம் தெரியும் என இறுமாப்புக்கொள்கின்றனர் சிலர். ஆனால் உண்மை என்னவென்றால் நாம் எவ்வளவுதான் படித்திருந்தாலும் பல விஷயங்களில் நாம் கல்லாதவர்களாவே இருக்கின்றோம். "கற்றது கைமண்ணளவு; கல்லாததோ கடலளவு" என்பது மெய்யான ஒரு கூற்றாகும்.

இதுபோலவே ஆவிக்குரிய வாழ்விலும் இருக்கின்றது. ஆவிக்குரிய வாழ்வில் நாம் அறிந்துகொள்வதற்கு எல்லையே கிடையாது. நமக்குத் தெரிந்த ஒருசில சத்தியங்களையும் நமக்குச்  சிறுவயதுமுதல் பெற்றோர்கள் போதித்து வந்தவைகளையும் நாம் பெரும்பாலும் நம்பிக்கொண்டிருக்கின்றோம். அவைகளையே உண்மை என்று எண்ணிக்கொண்டிருக்கின்றோம். இப்படி நாம் இருப்போமானால் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல நாம் இன்னும் ஒன்றையும் அறியவேண்டியபடி அறியவில்லை என்று பொருள். 

வேதாகாமக் கல்லூரியில் படிப்பதனாலோ, வேதாகமத்தை தினசரி வாசித்து வேதத்தின் வசனங்களை அதிகார மற்றும் வசன எண்ணுடன் கூறுவதாலோ நாம் ஆவிக்குரிய சத்தியங்களை முற்றிலும் அறிந்தவர்களல்ல.  ஆம், "நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்." ( 1 கொரிந்தியர் 13 : 9,10 ) என்று கூறியுள்ளபடி நிறைவான கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே நாம் அறிவில் தெளிவுள்ளவர்களாகவும் அறியவேண்டியவற்றை அறியவேண்டியபடி அறிந்தவர்களாகவும் மாறமுடியும்.   

ஒரு ஜாடியில் தண்ணீரையோ அல்லது இதர பானங்களையோ நாம் ஊற்றிவைக்கவேண்டுமானால் அந்த ஜாடி வெறுமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதில் நாம் எதனையாவது சேமிக்கமுடியும். அந்த ஜாடி ஏற்கெனவே நிரம்பியதாக இருக்குமானால் அதனுள் ஒன்றையும் சேமிக்கமுடியாது. இதுபோலவே பெரும்பாலோருக்கு அவர்களது நிரம்பிவிட்ட அறிவு மேற்கொண்டு ஆவிக்குரிய சத்தியங்களை  அறிவதற்குத் தடையாக இருக்கின்றது. நம்மை நாம் வெறுமையான பாத்திரங்களாக உணரும்போதுதான் தேவன் நமக்குள் கிரியைச்செய்து புதிய ஆவிக்குரிய சத்தியங்களை நமக்கு விளங்கவைக்கமுடியும். 

நமது படிப்பு மேன்மை, வேதாகம அறிவு இவைகளை முற்றிலும் நம்பாமல் நமது வெறுமையான நிலையை தேவனுக்குத் தாழ்மையுடன் தெரியப்படுத்துவோம். "ஆண்டவரே நான் வெறுமையான பாத்திரமாக இருக்கிறேன், எனது படிப்பும் அறிவும் குறைவுள்ளது. நான் அவற்றைப் பெரிதாகக் கருதவில்லை.  எனது வெறுமையை உமது விண்ணக ஞானத்தால் நிரப்பும். நான் அறியவேண்டிய ஆவிக்குரிய உண்மைகளை அறியவேண்டியபடி அறிந்துகொள்ள உதவிசெய்யும்" என வேண்டுதல்செய்வோம். 

நமது தாழ்மையினை கண்ணோக்கி தேவன் தனது ஆவியால் நம்மை நிரப்பும்போது மட்டுமே நாம் ஞானமுள்ளவர்களாகவும்  ஆவிக்குரிய உண்மைகளை அறியவேண்டியபடி அறிந்துகொள்ளவும் முடியும். 

தியானம் - 2021

"ஆதவன்" ஆகஸ்ட் 21 வெள்ளி 2026

"நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். " ( லுூக்கா 17 : 26 )

இன்றைய தினசரி செய்தித்தாட்களை வாசிக்கும்போது நாம் பல்வேறு மனிதத்தன்மையற்ற செயல்பாடுகள் ஆங்காங்கே நடைபெறுவதை வாசிக்கின்றோம். பெற்றதாயையே கொலைசெய்யும் பிள்ளைகள், தான் பெற்ற பிள்ளையையே கொலைசெய்யும் தாய்மார்கள், வயது வித்தியாசம் பார்க்காமல் நடைபெறும் கற்பழிப்புக்கள், வன்முறைகள், இயற்கைக்கு மாறுபட்ட பாலுணர்வு வக்கிர செயல்கள் நம்மைத் திகைக்கவைக்கின்றன. பெருகிவிட்ட சமூக ஊடகங்களும் இதற்குப் பெரிய உறுதுணையாக இருக்கின்றன.  

இதுபோலவே நோவாவின் நாட்களிலும் பூமியில் அக்கிரமம் பெருகி இருந்தது. அதனால் பூமியில் தான் உருவாக்கிய மக்களை அழிக்கத்  தேவன் சித்தம் கொண்டார். ஆனால் நடக்கப்போவது எதுவும் தெரியாத மக்கள் இயல்பாக நடப்பதுபோல உண்டு குடித்து பெண்கொண்டு வாழ்ந்தார்கள்.  எல்லோருமே அழிந்துபோயினர். வெள்ளம் வந்தபோது அனைவருமே அழிந்துபோயினர். "நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17 : 27 )

ஆனால் தேவனுக்குமுன் உத்தமனாய் நடந்த நோவாவுக்கு கடவுளின் கண்ணில் தயவு கிடைத்தது. எனவே உலகினைத் தான் அழிக்கும்போது அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்றிட மரத்தால் ஒரு பேழை செய்யுமாறு கூறுகின்றார். அதன்படி பேழையைச் செய்து நோவாவும் அவரது குடும்பத்தினரும் காப்பாற்றப்பட்டனர். 

ஆம் அன்பானவர்களே, இந்தத் தியானத்தின் ஆரம்பப் பகுதியில் குறிப்பிட்டுள்ளபடி, நோவாவின் நாட்களைப்போலவே இன்றும் மக்கள் வாழ்கின்றனர். அன்பில்லாத மனிதர்கள், கொலைவெறிகள், கற்பழிப்புகள், களவு, காமவெறி போன்ற அவலட்சண வாழ்க்கையில் மக்கள் மூழ்கி இருக்கின்றனர்.  

அன்று தேவ எச்சரிப்பும் அறிவுரையும் பெற்ற நோவா பேழை செய்யும்போது அதனைப் பார்த்தவர்கள் அவரைக்  கேலி செய்திருக்கலாம். மட்டுமல்ல, அவர்கள் அவர் கூறியதை நம்பவுமில்லை மனம் திரும்பவுமில்லை. புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள், இயல்பான தங்கள் வாழ்வைத் தொடர்ந்தார்கள். ஆனால் இறுதியில் மொத்தமாக அழிந்துபோனார்கள். 

இதுபோலவே லோத்தின் நாட்களிலும் மக்கள் இருந்தனர்.  எனவேதான் இயேசு கிறிஸ்து, "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்." ( லுூக்கா 17 : 28 ) இங்கும் லோத்து தனது மருமக்களிடம் சென்று வரவிருக்கும் அழிவினைக் கூறி எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதனை கேலியாக எண்ணினர். ( ஆதியாகமம் 19 : 14 )

அன்பானவர்களே, இதே நிலைதான் இன்றும் தொடர்கின்றது. இயேசு கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி கூறினால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்கூட நம்புவதில்லை, நம்பினாலும் தங்கள் குணங்களை மாற்றி தேவனிடம் உண்மையாய் மனம்திரும்பி வருவதில்லை. நோவா காலத்திலும் லோத்துவின் காலத்திலும் வந்த அழிவைவிடப் பெரிய அழிவு கிறிஸ்துவின் வருகைக்குமுன் வருவது உறுதி என்று வேதாகமம் கூறுகின்றது. 

உலக ஆசீர்வாதங்களைப்பெறுவதற்கே முன்னுரிமைகொடுத்து நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை நாம் இழந்துபோய்விடக்கூடாது.  கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினை முன்குறித்துக் கூறப்பட்டப் பலத்  தீர்க்கதரிசனங்கள்  நிறைவேறிவிட்டன. எனவே நாம் எச்சரிக்கையாக இருந்து மனம்திரும்பவேண்டியது அவசியம். கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைப்பதே நாம் செய்யவேண்டடியது. பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதே நாம் செய்யவேண்டியது. 

"கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்." ( செப்பனியா 1 : 18 ) என எச்சரிக்கிறார்  தேவன். 


தியானம் - 2022

"ஆதவன்" ஆகஸ்ட் 22  சனி 2026

"மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா." ( சங்கீதம் 115 : 17, 18 )

நாம் அதிகமான வசனங்களை அடுக்கி ஜெபிக்கத் தெரியாதவர்களாக இருக்கலாம்; அல்லது சிலவேளைகளில் துன்பங்கள், பிரச்சனைகள் நம்மை நெருக்கும்போது நம்மால் ஜெபிக்கமுடியாமலிருக்கலாம். ஆனால் தேவன் அவற்றைப் பார்ப்பதில்லை. அவர் நமது மனதினை அறிவார். நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நாம் அவரைத் துதிப்பதையே அவர் பெரிய ஜெபவிண்ணப்பமாக ஏற்றுக்கொள்கின்றார்.  துதியோடு அவர் சமூகத்தில் நாம் சேர்கின்றோம்.

நமது தேவனாகிய கர்த்தரை நாம் எப்போதும் துதி செய்துகொண்டு இருக்கவேண்டியது அவசியம். துதித்தல் என்பது வெறுமனே அவரைப் புகழ்வது மட்டுமல்ல, மாறாக அவர் நமக்குச் செய்திருக்கும் அனைத்துக் காரியங்களுக்காகவும் அவருக்கு நன்றிசெலுத்துவதுமாகும். மட்டுமல்ல, நமது வாழ்க்கையில்  நாம் செய்யும் எல்லா பணிகளுக்கிடையிலும் நாம் அவரைத் துதிக்கமுடியும். இப்படி இருப்போமானால் நாம் தவறான வழிகளில் செல்லமாட்டோம்.  

இன்றைய தியான வசனம், "மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்' என்று கூறுகின்றது. அதாவது, நாம் கர்த்தரைத் துதிக்காமல் வாழ்வோமென்றால் நாம் இறந்தவர்களுக்குச் சமானம். காரணம், இறந்தவர்கள்தான் துதிக்கமாட்டார்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. எனவேதான் சங்கீத ஆசிரியர், "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்று கூறுகின்றார். மரித்தவர்கள்  என்பது ஆவியில் மரித்து வாழும் மக்களைக் குறிக்கின்றது. அவர்கள் கர்த்தரை நினைக்கவுமாட்டார்கள்; துதிக்கவுமாட்டார்கள். 

சங்கீதம் 136 ஒரு துதியின் சங்கீதமாகும். அந்தச் சங்கீதத்தில் தேவனது ஒவ்வொரு மகத்துவமான காரியத்தையும் பக்தன் நினைவுகூர்ந்து துதிப்பதை நாம் பார்க்கலாம். நமது வாழ்க்கையிலும்கூட நாம் இதனைச் செயல்படுத்திப் பார்க்கலாம். நமது நினைவுதெரிந்த நாள்முதல் நமக்கு நடந்த நல்ல மற்றும் கெட்டக்  காரியங்கள் ஒவ்வொன்றையும் நினைவுகூர்ந்து தேவனுக்கு நாம் துதி செலுத்தவேண்டியது அவசியம். "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 )

ஆவிக்குரிய வாழ்வில் நாம் மேலான ஒரு நிலையினை அடையும்போது கர்த்தரைத் துதிப்பது நாம் சுவாசிப்பதுபோல இயற்கையாகிவிடும். வலுக்கட்டாயமாக அல்ல, மாறாக நமது இருதயம் கர்த்தரது அன்பில் நிறைந்துவிடுவதால் நம்மை அறியாமலேயே அவரை நாம் துதிப்போம்.  தாவீது இராஜா இந்த அனுபவத்தில்தான், "எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்." ( சங்கீதம் 16 : 7 ) என்கின்றார். இராக்காலங்களில் படுக்கையில் விழிப்பு ஏற்படும்போது நமக்குக் கர்த்தரது நினைவு வரும். அப்போது அவரை நாம் துதிப்போம். 

சரி, இப்படித் துதிப்பதனால் என்ன பலன்? "துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்" ( சங்கீதம் 18 : 3 ) என்கின்றார் சங்கீதக்காரர். அதாவது, நமது உலகச்சத்துருக்கள் மற்றும் ஆவிக்குரிய சத்துருக்களாகிய அலகை இவை துதிக்கும்போது நம்மைவிட்டு அகலுகின்றன. நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரச்சனைகள் அகலுகின்றன. ஆம் அன்பானவர்களே, எரிகோவின் மதில்சுவர்கள் இஸ்ரவேலர் அர்ப்பரித்துக் கர்த்தரைத் துதித்தபோது இடிந்து தகர்ந்தது.  

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தொழுமரத்தில் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில்  "நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடுதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்." ( கொலோசெயர் 4 : 2 ) கர்த்தரைத் துதியாத, ஸ்தோத்தரிக்காத  ஆவிக்குரிய மரித்த வாழ்வு நமக்குத் தேவையில்லை.
 
தியானம் - 2023

"ஆதவன்" ஆகஸ்ட் 23  ஞாயிறு 2026

"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 )

உபத்திரவங்கள் நல்லவை என்று யாரும் கூறமாட்டார்கள். பொதுவாக நாம் எல்லா காரியங்களிலும் உபத்திரவப்படாமல் எளிதாக எதையும் அடைந்திடவே விரும்புவோம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல. உபத்திரவங்கள் மூலமே நாம் மேலான ஆவிக்குரிய அனுபவங்களைப்  பெறுகின்றோம். தற்போது நாம்  உபத்திரவப்படுவதுபோலத் தெரிந்தாலும் பிற்காலத்தில் சங்கீத ஆசிரியர் கூறுவதுபோல நாமும், நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது என்று கூறுவோம். 

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்துவார்கள். தேர்வுகள் ஒரு சோதனை. இந்த மாணவன் அல்லது மாணவி மேற்கொண்டு மேற்படிப்புக்குத் தகுதியானவர்தானா என சோதிக்கும் சோதனை. ஒரு சோதனையினை நாம் மேற்கொள்ளும்போது வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுகின்றோம். மேலும் இந்தத் தேர்வுகள் நம்மை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்போது நமது மகிழ்ச்சி அதிகமாகும். தேர்வுபோன்ற சோதனைகள் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் மென்மேலும் முன்னேற உதவுகின்றன. 

நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவந்த உடனேயே என்னோடு பயின்ற மாணவர்கள் பலரும், எனது ஊரில் என்வயதுடைய பலரும் நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அது அப்போது எனக்கு மிகப்பெரிய துன்பமாகத் தெரிந்தது. சோர்ந்துபோய், மனம் வெறுத்துப் போயிருந்தேன். தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்வதுகூடப் பிடிக்கவில்லை.  கவலையுடன் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தேன். ஆனால், அந்தச் சூழல்தான் நான் தேவனை அறிய உதவியது. பின்னர் நான் கூறினேன், "எனக்கு உலகவேலை கிடைக்காமல் போனது நல்லது, கிடைத்திருந்தால் நான் தேவனை அறிந்திருக்கமாட்டேன்." ஆம் அன்பானவர்களே, சிலவேளைகளில் நமது நன்மைக்காகத் தேவன் இப்படி நம்மை உபத்திரவத்தின் பாதையில் நடத்துவார். 

இப்படி தேவன் நம்மை உபத்திரவப்படுத்துவது நமது  நன்மைக்கே. இதனையே பக்தனான யோபுவும், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் " (யோபு 23:1) என்று கூறுகின்றார்.  தங்கச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படும் தங்கம் முதலில் சாதாரண மண்போலவே இருக்கும். அதனையே நெருப்பிலிட்டு உருக்கி தங்கமாக மாற்றுகின்றனர்.  நகைக் கடைகளில் அழகுடன் மின்னும் தங்க நகைகள் கடந்துவந்த துன்பத்தின் பாதைகள் நமக்குத் தெரியாது. அக்கினியில் புடமிடப்பட்டு, அடித்து வளைத்து நகையாக உருவாக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவை அழகுடன் நகைக்கடைகளில் பார்வையாளர்களைக் கவரும்வண்ணம் மின்னுகின்றன. 

நமது ஆவிக்குரிய வாழ்விலும் நாம் தேவனுக்கு ஏற்புடையத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் தேவன் தரும் சோதனைகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.  இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) என்று கூறுகின்றார்.

இதனை உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." என்று கூறுகின்றார். தேவனது பிரமாணங்களை அதாவது கட்டளைகளைகளுக்குக்  கீழ்ப்படியும் முறைகளை  நாம் உபத்திரங்களின்மூலம் கற்றுக்கொள்கின்றோம்.  எனவேதான்  அப்படி நான் உபாத்திரவப்பட்டது நல்லது என்கின்றார் இந்தச் சங்கீத ஆசிரியர். 

நாம் துன்பங்கள், துயரங்களில் அகப்படுவது இயற்கை. ஆனால் நாம் மற்றவர்களைப்போல் துன்பங்களைக்  கண்டு சோர்ந்துபோகாமல் அந்தத் துன்பங்கள் மூலம் தேவன் நமக்கு அளிக்கும் செய்திகளை அறிந்துகொள்ள முயலவேண்டும். நமது வாழ்க்கைப் பாதைகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். ஆம், நாம் உபத்திரவப்படுவது நல்லது, அதனால் தேவனது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கின்றோம், 

தியானம் - 2024

"ஆதவன்" ஆகஸ்ட் 24  திங்கள் 2026

"இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்." ( ஓசியா 14 : 9 )

தேவன் தனது பிள்ளைகளுக்கு வைத்துள்ள வழிகள் மேலானவைகள், ஆனால் இடுக்கமானவைகள். இந்த இடுக்கமான வழியிலேயேதான் நமது ஆவிக்குரிய பயணம் அமையவேண்டும். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்."  ( மத்தேயு 7 : 13-14 ) என்று கூறினார். 

இதனையே இன்றைய தியான வசனத்தில், இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? என்று கேள்வியெழுப்புகின்றது.  

நீதிவாழ்க்கை வாழ்பவர்களுக்கு கர்த்தரின் நீதிவழிகள் கடினமாகத் தெரியாது. ஆனால் துன்மார்க்கர்களுக்கு அப்படியல்ல, அந்த நீதியின் வழிகள் அவர்களுக்கு இடறுதலுக்குரிய வழியாகவே இருக்கும். அவர்களுக்கு நாம் நேர்வழியைப் போதித்தாலும் அதனை உணர்ந்துகொள்ளமாட்டார்கள். எனவேதான் அவர்களை இன்றைய தியான வசனம் பாதகர்கள் என்று கூறுகின்றது.  அவர்கள் எந்த நீதி வழியையும் அறியாமல் படுபாதக செயல்களையும் செய்யத் தயங்கமாட்டார்கள். 

இத்தகைய துன்மார்க்க பாதகர்களைக் கட்டுப்படுத்தவே பலவித சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவர்களுக்கு எத்தனை பெரிய இரக்கம் காண்பித்தாலும் அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். ஆம், "துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்." ( ஏசாயா 26 : 10 )

ஆனால், கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள் என்று இன்றைய தியான வசனம்கூறுகின்றபடி, கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ள நீதிமான்களாகிய நாம்  அவரது வழிகளில் நடக்கவே அழைக்கப்பட்டுள்ளோம். ஆவியானவர் நம்மை அந்த வழியில் நடத்துகின்றார். எனவேதான் "ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்." (உபாகமம் 8:6) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 
 
ஆம் அன்பானவர்களே, இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவர்களாகவும் இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவர்களாகவும் நாம் வாழவேண்டியது அவசியம்.  கர்த்தருடைய வார்த்தைகள் நமக்குள் வேரூன்றி வளரவேண்டியது அவசியம். ஆவியானவர் நமக்கு அவற்றைத் தெளிவுபடுத்தி நம்மை அந்த வழியில் நடத்தவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் தேவ ஞானத்தில் வளர்ந்து பாதக செயல்களுக்கு விலகிடமுடியும். தேவ ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். 

தியானம் - 2025

"ஆதவன்" ஆகஸ்ட் 25 செவ்வாய் 2026

"பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்." ( ஆதியாகமம் 1 : 2 )

இந்த பூமியின் ஆரம்பகால நிகழ்வுகள் நமது வாழ்க்கையுடன் ஒன்றித்தே இருக்கின்றது. தேவன் எதனையும் நேர்த்தியான முறையில்தான் உருவாக்குவார். ஆனால் இன்றைய வசனத்தில் "பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது" என்று கூறுகின்றது. ஒழுங்கற்ற நிலையில் தேவன் எதனையும் உருவாக்க மாட்டார். எனவே, சில வேத அறிஞர்கள் இதற்கு விளக்கம் கூறும்போது, தேவனுக்கு எதிராகச் சாத்தான் கலகம் செய்தது இந்தகாலகட்டத்தில் இருக்கலாம் என்கின்றனர். (ஏசாயா 14:10-17 மற்றும் எசேக்கியேல் 28) எனவே, கலகம் செய்து வீழ்ச்சியடைந்த சாத்தான் இதனைச் செய்திருக்கலாம். எனவேதான் தேவனால் உருவாக்கப்பட்ட பூமியானது ஒழுங்கற்றுப் போனது என்கின்றனர்.   

அன்பானவர்களே, இதுபோலவே மனிதர்களையும் தேவன் செம்மையானவர்களாகவே  உருவாக்கினார். தேவ சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் சாத்தானின் தந்திரத்தால் மனிதன் தேவ சாயலை இழந்தான். தான் இழந்த பரலோக இன்பத்தை மனிதர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகச் சாத்தான் மனிதர்களை வஞ்சித்து வைத்துள்ளான். இதனால் பூமிக்கு நேர்ந்த கதியே மனிதர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்து இருள் சூழ்ந்து இருந்ததுபோல  மனிதர்களும் வெறுமையும் இருளும் சூழ்ந்தவர்களாக இருக்கின்றனர். 

ஆனால், ஆதியில் "தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்." அதனால் பூமி மாற்றமடைந்தது. தேவன் மனிதர்களும்  இப்படியே மாற்றமடைய விரும்புகின்றார். எனவேதான் தூய ஆவியானவரை அவர் மனிதர்களுக்குத் துணையாகத் தந்துள்ளார். மட்டுமல்ல, தனது வார்த்தையான வெளிச்சத்தையும் மனிதர்களுக்குள் அனுப்பியுள்ளார். இதனையே நாம் "தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று."( ஆதியாகமம் 1 : 3 ) என்று வாசிக்கின்றோம். 

மனிதர்கள் மாற்றமடைய கிறிஸ்துவாகிய மெய்யான ஒளியை பிதாவாகிய தேவன் நமக்குத் தந்துள்ளார். "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) ஆம், ஒழுங்கற்றும் இருள்சூழ்ந்தும் இருந்த பூமியை மாற்றி உயிர்க்கோளமாக மாற்றியதுபோல தேவன் மனிதர்களைக் கிறிஸ்துவின் ஒளியின் மூலம் புதிதாக மாற்றுகின்றார். 

அன்று "தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்"; எனவே பூமி புத்துயிர் பெற்றது. இதுபோல தேவனின் ஆவியானவர் நம்மேல் அசைவாடிட நாம் இடம்கொடுக்கவேண்டியது அவசியம். அப்படி ஆவியானவர் நமக்குள் அசைவாடிடும்போது நாம் தேவன் அருளும் ஞானத்தை பெற்றவர்களாக மாறமுடியும். "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 12 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருக்கின்றதும் ஆழத்தின்மேல் இருள் சூழ்ந்ததுமான நமது வாழ்க்கை ஒளிபெறவேண்டுமானால் ஒளியான கிறிஸ்து நமக்குள் வரவேண்டியது அவசியம்; அதுபோல ஆவியானவரின் அசைவாடுதல் நமக்குத் தேவை. நமது வாழ்க்கையினை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். ஒழுங்கற்று இருள் சூழ்ந்திருந்த பூமி புத்துயிர் பெற்றதுபோல நமது வாழ்கையினையும் அவர் மாற்றி மகிழ்விப்பார்.  
 
தியானம் - 2026

"ஆதவன்" ஆகஸ்ட் 26 புதன் 2026

"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." ( ஏசாயா 58 : 11 )

ஒரு மகனோ மகளோ பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழும்போது அது அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். அத்தகைய குழந்தைகள் கேட்பதை மறுக்காமல் அந்தப்பெற்றோர் அவர்களுக்குச் செய்வார்கள். மட்டுமல்ல, அந்தப்பிள்ளைகள் எதிரிபார்ப்பதற்கும் மேலாக பெற்றோர்கள் அவர்களுக்கு நன்மையே செய்வார்கள். 

இதுபோல, நாம் கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது, கர்த்தரே நம்மை நடத்துவார். எனவே நாம் எதனைப்பற்றியும் பெரிய எதிர்பார்ப்போ கவலையோ இன்றி வாழமுடியும். ஆம், நமது வாழ்க்கை தேவனால் நடத்தப்படுகின்ற  வாழ்க்கையாக இருக்குமானால் நாம் எதனைப்பற்றியும் கவலையோ நிம்மதியின்மையோ படமாட்டோம்.  அவரே நமது வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாகி நமது எலும்புகளை வலிமையுள்ளவையாக்குவார். அதாவது, துன்பகாலங்களிலும் நம்மை நிலைகுலையாமல் காப்பாற்றுவார். 

மிகக் கொடிய பாலைவனத்திலும் சில இடங்கள் செழிப்புள்ளதாக இருக்கும். அவைகளைப் பாலைவனச் சோலைகள்  என்பார்கள். அன்பானவர்களே, இதுபோல நாம் கர்த்தரைச் சார்ந்து வாழும்போது எத்தகைய கொடிய துன்பங்கள், வருத்தங்கள் நமக்கு வந்தாலும் பாலைவனச்  சோலைகள்போல துன்பங்களுக்கிடையிலும் நமது ஆத்துமாவுக்கு  இனிய இளைப்பாறுதல் உண்டு.

இன்று அப்படி கர்த்தருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்பவர்களைப்பார்த்துக்   கர்த்தர் கூறுகின்றார், "நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்" என்று. நாம் பராமரிக்கும் தோட்டத்திற்கு நாம் தினசரி நீர்பாய்ச்சுவதுபோல தேவன் நீர்பாய்ச்சி நம்மைப் பராமரிப்பார்; வற்றாத நீரூற்று இருக்குமானால் அந்த இடத்திலுள்ள மரம், செடி, கொடிகள் கோடை வெப்பத்தையும் தங்கி செழித்து வளர்வதுபோல நாமும் இருப்போம். 

உலகத்தில் தேவனற்று வாழும் பெரிய செல்வந்தர்களை நாம் பார்க்கின்றோம். புகழும் பணமும் அதிகமுள்ள பல மனிதர்களை பார்க்கின்றோம். ஆனால் அவர்களது வாழ்க்கை இருளானதாக, நிம்மதியற்றதாக, மெய்யான செழிப்பு இல்லாததாக இருக்கக் காண்கின்றோம். பணமிருந்தாலும் சமாதானமற்ற வாழ்க்கைதான் பலருக்கு. எனவேதான் மனநிம்மதிக்காக மதுவுக்கும், இதர பாவச் செயல்களுக்கும் அடிமையாகி பலர் எந்த நிம்மதியுமின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். 

கர்த்தருக்கு ஏற்புடையவன் அவருக்கேற்ற காரியங்களைச் சிந்திப்பான், அவரது வார்த்தைகளைத் தியானிப்பான். அப்படிக் கர்த்தரது  வார்த்தைகளை ஒருவன் இரவும் பகலும் தியானித்து வாழ்வானானால்,  "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 3 ) என்று வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, வேத வசனங்கள் தேவனால் அனுப்பப்பட்டவை. அந்த வார்த்தைகள் பொய்ச்சொல்லாது. அவற்றை விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசித்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரது வார்த்தைகளைத் தியானித்து வாழ்வாக்கும்போது இன்றைய வசனம் கூறும் ஆசீர்வாதம் நமக்கு உண்டு. கர்த்தர் நித்தமும் நம்மை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாவைத் திருப்தியாக்கி, நமது எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நாம் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்போம். 

தியானம் - 2027

"ஆதவன்" ஆகஸ்ட் 27 வியாழன் 2026

"கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."( 1 கொரிந்தியர் 15 : 58 )

கர்த்தருக்காக என்று ஆர்வமுடன்  நாம் செய்யும் தர்ம காரியங்கள், உதவிகள், அவருக்கென்று செய்யும் ஊழியங்கள் இவை விளம்பர நோக்கத்திற்காக அல்லாமல், உண்மையான அன்புடன் செய்யப்படுமேயானால் கர்த்தர் அவற்றை நினைவுகூர்ந்து நமக்குப் பதில் செய்வார். மேலும், அப்படிக் கர்த்தர் பதில் செய்வார் என்று எண்ணிக்கூட நாம் செய்யக்கூடாது. மாறாக கர்த்தருக்கென்று செய்வது இயற்கையாக நம்மில் உருவாகவேண்டும். 

பொதுவாக இந்த உலகில் மனிதர்கள் பிறர் அவர்களுக்குச் செய்யும் உதவிகளை உடனேயே மறந்து விடுவார்கள். எவ்வளவு பெரிய உதவி செய்தாலும் அதனை நினைவுகூர்ந்து வாழ்பவர்கள் வெகுசிலர்தான். ஆனால் நமது கர்த்தர் அப்படிப்பட்டவர் அல்ல; அவற்றை அவர் மறந்துவிடுவதுமில்லை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருக்காக என்று நாம் செய்யும் செயல்கள் வீணானவை அல்ல என்பதால் உறுதியுடன் அப்படி கர்த்தருக்காக என்று செய்யும் செயல்களைச் செய்து அவற்றில் பெருகவேண்டும் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். நாம் காற்றை சுவாசிக்காவிட்டால் உயிர்வாழ முடியாது.  ஆனால் நாம் அப்படி நினைத்துக்கொண்டு சுவாசிப்பதில்லை. மாறாக, நம்மை அறியாமல் நாம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றோம். இதுபோலவே நாம் கர்த்தருக்கென்று நற்செயல்களை இயற்கையாகவே செய்யவேண்டியது அவசியம். அத்தகைய நமது செயல்களை கர்த்தரும் மறக்கமாட்டார். 

அப்படி நாம் கர்த்தரது பெயருக்காகச்  செய்யும் அன்புள்ள செயல்களை மறந்துவிடுவதற்கு அவர் அநீதியுள்ளவரல்ல என்று வேதம் கூறுகின்றது. "உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6 : 10 ) நீதி, நேர்மையற்று வாழும் சில உலக மக்களைப்போல அநீதியுள்ளவரல்ல நமது தேவன். 

சிலர் தங்கள் செய்த நல்லச்  செயல்களை விளம்பரப்படுத்திச்  சொல்லிச் சொல்லி வாழ்வார்கள். வேறு சிலரோ, "நான் எவ்வளவோ நல்லது செய்தேன் எனக்கு ஆண்டவர் ஒண்ணுமே செய்யமாட்டேன் என்கிறார்" எனப் புலம்புவார்கள். அன்பானவர்களே, உண்மையும் உத்தமத்தோடும் செய்த எந்த செயலையும் தேவன் மறக்கமாட்டார். தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல. மட்டுமல்ல கர்த்தர் எவருக்கும் கடன்பட்டவரல்ல. இந்த உண்மை நமக்குள் உறுதியாக இருக்குமானால் எந்த எதிர்பார்ப்புமின்றி கர்த்தருக்கென்று நற்செயல்கள் செய்பவர்களாக இருப்போம்.

எனவே கர்த்தருக்குள் நாம்  படுகிற முயற்சிகள் வீணானவையல்ல  என்று  அறிந்து, நாம்  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருக்கென்று செய்யும் செயல்களில் எப்போதும் பெருகுகிறவர்களாக  இருக்கவேண்டியது அவசியம் என்று கூறும் பவுலடிகளின் வார்த்தைகளின்படி வாழ முயற்சிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

தியானம் - 2028

"ஆதவன்" ஆகஸ்ட் 28 வெள்ளி 2026

"ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்." ( 2 கொரிந்தியர் 13 : 4 )

இயேசு கிறிஸ்து தேவனையுடைய குமாரனும் மெய்யான தேவனுமாக இருந்தாலும் அவர் பலவீன மனிதனாகவே பூமியில் தோன்றினார். எல்லா விதத்திலும் அவர் நம்மைப்போல சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமில்லாதவராக இருந்தார். எனவேதான் அவர் நமக்கு உதவிசெய்ய வல்லவராகவும் இருக்கின்றார். "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்" ( எபிரெயர் 4 : 15 ) என எழுதுகின்றார் எபிரேய ஆசிரியர். 

இப்படி மனிதனைப்போல பலவீனமானவராக அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் அவர் அப்படியே அறையப்பட்டு மடிந்துபோய்விடவில்லை. மாறாக முற்றும் முடிய நம்மை இரட்சிக்கவல்லவராக பிழைத்திருக்கின்றார்; இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஆம் அன்பானவர்களே, இன்று நாமும் பூமியில் வாழ்ந்தபோது கிறிஸ்து இருந்ததுபோல பலவீன மனிதர்களாக இருக்கின்றோம். ஆனால் அப்படி பலவீனராயிருந்தும், தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம். இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. அதாவது இன்று இந்த உலகத்தில் பல்வேறு துன்பங்கள், பாவங்கள், நோய்கள், பிரச்சனைகள் நம்மை நெருக்கலாம். நம்மைப் பலவீனப்படுத்தலாம். ஆனால் கிறிஸ்துவை உயிர்தெழச்செய்தவர்  நம்மோடு இருக்கின்றார். அவர் நம்மை அழிந்துபோக விடமாட்டார். 

அன்று கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்தபோது யூதர்களும் ஏனைய மனிதர்களும் அவரைக் கேலி செய்தனர். "நீ கிறிஸ்துவானால் சிலுவையிலிருந்து இறங்கியவா, அப்போது உன்னை விசுவாசிப்போம்" என்றார்கள். ஆனால் ஏற்றகாலம் வரும்வரை கிறிஸ்து அமைதியாக இருந்தார். பின்னர் மகிமையோடு உயிர்த்தெழுந்தார். 

இதுபோல நமது இன்றைய நிலைமை உலக மக்களுக்கு ஒருவேளை அற்பமாகத் தெரியலாம். அவர்கள் நம்மைப்பார்த்து, "கடவுள் உன்னொடு  இருக்கிறாரென்றால்  ஏன் உனக்கு இந்தத் துன்பம்?,  கடவுளை நம்பாத பலர்  உன்னைவிட நல்ல நிலையில் இருக்கின்றார்களே?" எனக் கேள்வி எழுப்பலாம். ஆனால் நாம் அவர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.  கிறிஸ்து தமது உயிர்த்தெழுதல் மூலம் அவர்களுக்குப் பதிலளித்தார். 

கிறிஸ்து பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருந்ததுபோல நாமும் இப்போது பலவீனராயிருந்தாலும், நம்மிடம் விளங்கும் தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.  சிலுவையில் அறையப்பட ஒரு காலமுண்டு என்றால் உயிர்த்தெழவும் ஒரு காலம் உண்டு. நமக்காக தேவனே நமக்கு எதிராகப் பேசியவர்களுக்குப் பதிலளிப்பார். 

தியானம் - 2029

"ஆதவன்" ஆகஸ்ட் 29 சனி 2026

"யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்." ( ஏசாயா 46 : 3 )

இன்றைய தியான வசனம் நமக்கு மிகப்பெரிய ஆறுதல் தரும் வசனமாக இருக்கின்றது. இஸ்ரவேல், யாக்கோபு எனும் வார்த்தைகள் நம்மைக் குழப்பமடையச் செய்யவேண்டாம். இந்த வார்த்தைகள் நம்மையேக்   குறிக்கின்றன. ஆம் அன்பானவர்களே, வேதாகம அடிப்படையில், தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும் நாமே  இன்றைய இஸ்ரவேலரும்  யாக்கோபின் சந்ததியுமாக இருக்கின்றோம். 

தேவன் நாம் தாயின் வயிற்றினில் உருவானதுமுதலே நம்மைத் தாங்கி நடத்துகின்றார். இன்று நாம் மருத்துவ மனைகளில் பல்வேறு விதங்களில் தங்கள் கர்ப்பம் கலைந்து பல பெண்கள் கலங்கி நிற்பதைப்  பார்க்கலாம். ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் உருவாகி நல்ல முறையில் பிறக்கவேண்டுமானால் தேவனது கிருபை அதிகம் தேவையாக இருக்கின்றது. நம்மேல் தேவன் அப்படிக் கிருபை வைத்தால்தான் நாம் இன்று உலகினில் உயிரோடு இருக்கின்றோம். அந்தக் கிருபையில் நிலைத்து நிற்க அவருக்குச் செவிகொடுக்கவேண்டியது அவசியம். எனவேதான்,  நம்மைப்பார்த்துத்  தேவன் அன்புடன் கூறுகின்றார், "எனக்குச் செவிகொடுங்கள்" என்று. 

அப்படி நாம் அவருக்குச் செவிகொடுத்து அவரில் நிலைநிற்கும்போது, நாம் நமது முதிர்வயது அடையும்வரைத் தாங்குவேன் என்கின்றார் தேவன். ஆம், "உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்." ( ஏசாயா 46 : 4 )

இன்று நாம் உலகத்தில் நமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள், இவைகளைக்கண்டு மனம் கலங்குகின்றோம். ஆனால் நினைத்துப்பாருங்கள், தேவன் இன்றல்ல, நாம் உருவாகுமுன்பே நம்மை அறிந்துள்ளார். நமது தேவைகளை அறிந்துள்ளார். அதனால்தான் நாம் உயிருடன் உலகினில் இருக்கின்றோம். தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் நம்மை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் நம்மைத் தாங்கியவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றமாட்டாரா? 

ஆனால் இன்று நாம் நமக்கு ஏற்படும் ஒருசில துன்பங்களைக்கண்டு பல்வேறு அவிசுவாச எண்ணங்களால் கலங்குகின்றோம். அன்பானவர்களே, "என்னைத் தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே அறிந்த தேவன் எனது பிரச்சனைகளையும் அறிவார்.  எனவே நிச்சயம் அவைகளிலிருந்து என்னைத் தப்புவிப்பார்" என்று நாம் விசுவாச அறிக்கையிடவேண்டியது அவசியம்.  

இன்று வாலிப வயதில் படிப்புக்கேற்ற வேலையின்றி,  மற்றவர்களைப்போல் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழவேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டு கலங்கி நிற்கும் மகனே, மகளே, உன்னைத் தாயின் கர்ப்பத்தில் தெரிந்துகொண்ட தேவன் கூறுகின்றார், "பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்." ( ஏசாயா 54 : 4 )

யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள் என்கின்றார் தேவனாகிய கர்த்தர். அப்போது நமது வாழ்க்கையினை அவரே பொறுப்பெடுத்துக்கொள்வார். 

தியானம் - 2030

"ஆதவன்" ஆகஸ்ட் 30 ஞாயிறு 2026

"தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" ( 2 கொரிந்தியர் 6 : 16 )

நம்முடைய தேவன் தனது பிள்ளைகளை விட்டு ஒதுங்கி எங்கோ சிலைபோல அமர்ந்து இருபவரல்ல. அவர் நம்மோடு உறவுகொண்டு தாய் தகப்பனைபோல நம்மோடு வாழ விரும்புபவர். ஆனால் இன்று பொதுவாக மக்கள் கடவுளை அப்படி எண்ணுவதில்லை. அவரைச் சிலைபோல எங்கோ அமர்ந்திருப்பவர் என்றே எண்ணுகின்றனர். எனவே பல்வேறு கடவுள் உருவங்களுக்கு  வணக்கமும், ஆராதனைகளும் செய்கின்றனர். இப்படிச் செய்வதால் கடவுள் மகிழ்ச்சியடைவார் என்று எண்ணிக்கொள்கின்றனர். இப்படிச் செய்வது, நமது தாய் தகப்பனுடன் பேசாமல் இருந்துகொண்டு; அவர்களோடு எந்த உறவும் இல்லாமல் வாழ்ந்துகொண்டு;  அவர்களது படங்களுக்கு மாலைகளும் மரியாதையும் செய்வதுபோலத்தான்.  

தேவன் நம்மோடு ஒரு சக மனிதனைப்போல வாழ்வதையே விரும்புகின்றார். "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்" ( லேவியராகமம் 26 : 12 ) என்கின்றார் அவர்.

அப்படி நமக்குள் அவர் வந்து தங்கியிருக்க நம்மிடம் அசுத்தமான காரியங்கள் காணப்படாமல் முற்றிலும் நம்மைத் தூய்மையாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கின்றார். அவர் நமக்குள்ளே உலாவி நம்மை வழிநடத்த விரும்புகின்றார். "உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது" ( உபாகமம் 23 : 14 )

ஆம் அன்பானபவர்களே, நாமே  கடவுளின் ஆலயமாக இருக்கின்றோம். காரணம் கடவுள் வெளியில் உள்ள சிலைகளில் அல்ல, மாறாக நமக்குள் இருக்கின்றார். அவர் நமக்குள் இருப்பதால் நாமே அவரது ஆலயமாக இருக்கின்றோம். ஆம், இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" என்கின்றார். 

கடவுளைச் சிலைகளிலும் இதர இடங்களிலும் தேடித்திரிபவர்கள் கடவுளை காண்பதில்லை. நமக்குள் அவர் இருப்பதை உணரும்போது அவர் நம்மோடு பேசுவதை, நம்மை வழிநடத்துவதை நாம் உணரமுடியும். இந்த அனுபவம் உள்ளவர்கள் சிலைகளைத்தேடி ஓடமாட்டார்கள். 

நாம் தேவனுடைய ஆலயமாக இருப்பதால் நமக்கு விக்கிரகங்கள் தேவையில்லை. வெறும் சிலையாக அல்ல மாறாக, ஜீவனுள்ள பேசக்கூடிய தேவனாக அவர் நமக்குள் இருப்பதால் தேவனுடைய ஆலயமாகிய நமக்கும்  விக்கிரகங்களுக்கும் சம்பந்தமில்லை. 

அன்பானவர்கள், நமது உடலை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்பபோம்:-  "அன்பான ஆண்டவரே, நான் உமது ஆலயமாக வாழ ஆசைப்படுகின்றேன். என்னை உமக்கு அர்ப்பணிக்கிறேன். எனது பாவங்கள், அனைத்தையும் உமது பரிசுத்த இரத்தத்தால் கழுவி என்னைத் தூய்மையாக்கும். பரிசுத்தரான நீரே எனக்குள் வந்து தங்கி என்னை உமது ஆலயமாக மாற்றும். இனிமேல்  தேவனுடைய ஆலயமாகிய எனக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமே இல்லாதபடி என்னைத் தூய்மைப்படுத்தும், ஆமென் "  

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

📞 96889 33712 & 76390 22747                                                                                                                                                                                                          
 🌐 Website:aathavanmonthly.blogspot.com

தியானம் - 2031

"ஆதவன்" ஆகஸ்ட் 31 திங்கள் 2026

"திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது." ( யாக்கோபு 1 : 27 )

தேவன் விரும்பும் உண்மையான மேலான பக்தி என்ன என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது. 

மனிதர்களது எண்ணங்களும் தேவனது எண்ணங்களும் வேறுவேறானவை. அவரது வழிகள் மனித வழிகளல்ல. "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" ( ஏசாயா 55 : 8 ) என்று நாம் வாசிக்கவில்லையா?

தேவபக்தி என்று மக்கள் எண்ணிக்கொள்வதிலும் இப்படியே தேவனுக்கும் மனிதர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஆம் அன்பானவர்களே, பொதுவாக மனிதர்கள் ஒரு சில காரியங்களைச் செய்து தாங்கள்  தேவன் விரும்பும் பக்திச் செயல்களை நிறைவேற்றிவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆலய ஆராதனைகளில் தவறாமல் கலந்துகொள்வது, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது, வேதாகமத்தை வாசிப்பது, காணிக்கைக்  கொடுப்பது போன்ற செயல்களை மனிதர்கள் பக்திச்  செயல்களாக எண்ணிக்கொள்கின்றனர். 

ஆனால் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு வித்தியாசமான காரியங்களைப்  பக்திசெயல்பாடுகளாகக் குறிப்பிடுகின்றார். முதலில் உலகத்தால் கறைபடாதபடிக்கு ஒருவன்  தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கின்றார் அவர். அதாவது, முதலில் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்படிப் பரிசுத்தமாக வாழ்ந்துகொண்டு தர்ம காரியங்களையும் செய்யவேண்டும். அதனையே, "திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது" என்று கூறுகின்றார். இப்படிச் செய்வதே மேலான பகுதியாகும் என்று அவர் கூறுகின்றார்.

அதாவது நமது ஆவிக்குரிய வாழ்க்கை வெறும் ஆலய வழிபாடுகளுடன் நின்றுவிடக்கூடாது, மாறாக நமது வழிபாடு நமது தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசுத்தத்தைப் பிரதிபலிக்கவேண்டும். மட்டுமல்ல, ஏழைகள், விதவைகள், அனாதைகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யவேண்டும். இப்படிச் செய்வதே,   பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. 

இந்தக்காரியத்தில் இன்று நாம் இரண்டுவித மக்களை உலகத்தில் பார்க்கின்றோம். ஒரு பிரிவினர் ஏழைகளுக்கு உதவி செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு நலஉதவிகளை ஏழைகளுக்குச் செய்கின்றனர். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்கள் பல்வேறு பாவகாரியங்களில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். இன்னொருபிரிவினர் பக்திச் சடங்குகளில் மூழ்கி  வாழ்ந்துகொண்டு இரக்கமற்றவர்களாக எளியவர்களைப் புறக்கணித்து வாழ்கின்றனர். இவை இரண்டுமே தவறு என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

முதலில் நல்லது செய்யுமுன்பே நாம் நல்லவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அதாவது, முதலில் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். மட்டுமல்ல, அப்படிக் காத்துக்கொண்டு திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கவேண்டும். இப்படிக் செய்வதே மேலான பக்தியாகும். 

இதனையே ஏசாயா தீர்க்கத்தரிசி மூலமும் தேவன் கூறுகின்றார்:-  "உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்." ( ஏசாயா 1 : 16, 17 )

தேவன் விரும்பும் உண்மையான மேலான பக்தி என்ன என்பதனை உணர்ந்து நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை மாற்றிக்கொள்வோம். 

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

❤️ When the Manna Ceases - Video

  Even the smallest verse in the Bible has been written with a purpose and can become a source of blessing in someone’s life.  Let us receiv...