Monday, May 08, 2023

எதைச் செய்தாலும், மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.

ஆதவன் 🌞 832🌻 மே 09, 2023  செவ்வாய்க்கிழமை   




                           








"அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்புநாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 )

இயேசு கிறிஸ்து இங்கு ஆவிக்குரிய வாழ்வில் தேவ ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான குணத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றார்இது ஊழியர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையாக இருந்தாலும் நாம் அனைவருமே வாழ்வில் பின்பற்றவேண்டிய ஒரு பண்புஅதாவது சில சின்னச் செயல்களைச் செய்துவிட்டு பலரும் அதனைப் பெரிதாக விளம்பரப்படுத்துவதுண்டுஆனால் அப்படிச் செய்வது தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல என்று கிறிஸ்து குறிப்பிடுகின்றார்.

வேலைக்காரனின்  பணி தனது எஜமான் கட்டளையிட்டப் பணிகளை செய்து முடிப்பதுஎஜமான் எப்போதும் தனது வேலைக்காரனை வேலைக்காரனாகத்தான் பார்ப்பானேத் தவிர அவன் தனக்கு உதவுவதால் அவனைத் தனியாக சிறப்பாகக் கவனிக்கமாட்டான்அதனைத்தான் இயேசு கிறிஸ்து"உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போதுஎஜமான் அவனை நோக்கிநீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?" ( லுூக்கா 17 : 7 ) என்று கூறுகின்றார்.

மேலும்,"தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோஅப்படிச் செய்யமாட்டானே." (  லுூக்கா 17 : 9 ) 

ஆம் வேலைகாரனது வேலை தனது எஜமான் கட்டளையிட்டவைகளைச் செய்து முடிப்பது. "அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்புநாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 ) 

அதாவது நாம் தேவனது ஊழியங்களுக்காகச் செய்யும் செயல்கள் குறித்து நாம் பெருமைப்பட ஒன்றுமில்லைஅது நமது கடமை. அதற்காகவே தேவன் நம்மை நியமித்துள்ளார்.

இதில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டுஅதாவது வேலைக்காரன் செய்த செயல்களுக்குக் கைமாறாக எஜமான் ஒன்றும் கொடுக்காமல் விட்டுவிடமாட்டான்மாறாகஅவனுக்கென்று நியமிக்கபட்டக் கூலியைக் கொடுப்பான்அதாவது நியமிக்கப்பட்ட பணியை வேலைக்காரன் செய்வது அவனது கடமைஅதற்கானக் கூலியைக் கொடுப்பது எஜமான்.ஆனால் நமது பரலோக எஜமான் தனது ஊழியர்களை மதிப்போடு நடத்துகின்றார். "ஒருவன் எனக்கு ஊழியம்செய்தால் பிதாவானவர் அவனைக் கனம்  பண்ணுவார்" (யோவான் 12:26) என்று கூறியுள்ளார்

ஆனால் ஊழியக்காரர்கள் நிலைமை இன்று வேறாக இருக்கின்றதுஎஜமான் குறிப்பிட்டப் பணியைச் சரியாகச் செய்யாமல் இருந்துகொண்டு வலுக்கட்டாயமாக எஜமானிடம் கூலியைப் பெற முயலுகின்றனர்ஆம்இன்று எஜமான் கூலியைக் கொடுப்பான் எனும் நம்பிக்கையும் இல்லைஎஜமான் விரும்பும் சித்தப்படியான வேலையும் பலர் செய்வதில்லை.

அன்பானவர்களேஊழியம் செய்பவர்கள் மட்டுமல்லநாம் இன்று வேறு உலக வேலைகள் செய்தாலும் இந்த நல்ல குணம் நமக்கு வேண்டும்செய்யக்கூடிய வேலையை நாம் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சனையில்லாமல், நம்மைப் பணியில்அமர்த்தியவருக்கு  உண்மையாக செய்யவேண்டியது அவசியம்எனவேதான் அப்போஸ்தலரான கூறுகின்றார், "எதைச் செய்தாலும்அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல்கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்."( கொலோசெயர் 3 : 24 )

இப்படி உண்மையாய் பணி செய்யும்போது நிச்சயமாக தேவனது பார்வையிலும் மனிதர்களது பார்வையிலும் நாம் மதிப்புமிக்கவர்களாக விளங்குவோம்.


தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, May 06, 2023

பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் வேண்டாம்

ஆதவன் 🌞 831🌻 மே 08, 2023  திங்கள்கிழமை     



             


"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ( ரோமர் 12 : 2 )

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவம் பெறும்போது நாம் புதிய மனிதனாகின்றோம்; நமது மனமும் புதிதாகின்றது. இப்படி நாம் மாற்றப்படுவதால் நம்மால் இந்த உலகத்தோடு பல விஷயங்களில் ஒத்துபோகமுடிவதில்லை. 

ஆனால், ஆவிக்குரிய அனுபவங்களைச் சுவைத்தபின்னரும் சிலர் உலக நன்மைகளுக்காக இந்த உலக மனிதர்களுக்கு ஒப்பாக தங்களை மாற்றிக்கொள்கின்றனர். அதாவது தங்களது சுய லாபத்துக்காக சாதாரண மனிதர்களைப்போல நடந்துகொள்கின்றனர். கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பெற்ற அனுபவங்களை துணிந்து மறந்துவிடுகின்றனர். இதனையே இன்றைய வசனம் இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் என்று  கூறுகின்றது. 

ஆவிக்குரிய மனிதர்களாகிய நாம் இப்படி வேடம்தாரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக வாழவேண்டும். நமது மனம் கிறிஸ்துவினால் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் இப்படி நாம் வாழும்போது ஆவிக்குரிய வாழ்வில் மறுரூபமடைந்து மேலும் மேலும் வளர்ச்சியடைவோம். 

இப்படி வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்று இதற்கு முந்தின வசனத்தில் பவுல் அடிகள் விளக்குகின்றார்.  அதாவது நாம் வீண் ஆராதனை செய்யாமல் புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக இருக்கவேண்டும். அது என்ன புத்தியுள்ள ஆராதனை? நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். ( ரோமர் 12 : 1 ) இதுவே நாம் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.

அன்பானவர்களே, நாம் நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து வாழ்வோமானால் உலகத் தேவைகளுக்காக பிற மனிதர்களைப்போல வேஷம் தரிக்கமாட்டோம்.

பரிசுத்தவான்கள் எல்லோருமே இப்படி வாழ்ந்தவர்கள்தான். தங்களது உயிரே போகக்கூடிய நிலையிலும் அவர்கள் உலகத்தோடு ஒத்துப்போகாமல் கிறிஸ்துவுக்காகத் தங்களது உயிரையும் கொடுத்தனர். இன்று நமக்கு அப்படி உயிரைக் கொடுக்கத்தக்க இக்கட்டுகள் ஏற்படவில்லை. விசுவாசத்தை லேசாக அசைக்கும்  சிறிய சிறிய நெருக்கடிகள், துன்பங்கள்தான் நமக்கு ஏற்படுகின்றன. எனவே கபட வேடம் தரிக்காமல், உலக மனிதர்கள் எல்லோரும் இப்படிச் செய்கிறார்களே நாமும் செய்தால் என்ன என எண்ணாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து வாழ்ந்து நமது மனங்களை மறுரூபமாக்குவோம்  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Friday, May 05, 2023

இடறல்கள் வருவது அவசியம்

ஆதவன் 🌞 830🌻 மே 07, 2023  ஞாயிற்றுக்கிழமை        




                   

"இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல்வருகிறதோ, அவனுக்கு ஐயோ!" ( மத்தேயு 18 : 7 )

இடறல் என்பது ஒருவர் செல்லும்  சரியான வழியைவிட்டு அவரை  வழி விலகச்செய்வது. இந்த இடறல் ஆவிக்குரிய காரியத்திலும் உலகக் காரியங்களிலும் நமக்கு ஏற்படலாம். சில வேளைகளில் நாம் எடுக்கும் முடிவுகளைச் சிலர் சந்தேகத்துக்குரிய கேள்விகளை எழுப்பி நம்மைக் குழப்பமடையச் செய்வார்கள். இதுவே இடறல்.

ஆனால் இங்கு இயேசு கிறிஸ்து கூறும் இடறல் ஆவிக்குரிய காரியங்களில் ஒருவரை இடறலடையச் செய்வது. சரியான ஆவிக்குரிய வழியையும் சத்தியத்தையும்விட்டு ஒருவரை வழிவிலகச் செய்வது. அல்லது ஒருவரைப்  பாவத்தில் விழச்செய்வது; விழக்கூடிய சூழலை உருவாக்குவது. இப்படிச் செய்பவர்களுக்கு ஐயோ கேடு.

இன்றைய வசனத்தில், இடறல்கள் வருவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது இடறல்கள் ஏன் அவசியமென்றால் அவை ஆவிக்குரிய வாழ்வில் ஒரு தேர்வுபோல இருக்கின்றது. இடறலான காரியங்களை நாம் மேற்கொள்ளும்போது ஆவிக்குரிய வாழ்வில் ஒருபடி முன் செல்கின்றோம். இத்தகைய ஒரு இடறலைத்தான் சாத்தான் ஆதாம் ஏவாளுக்குக் கொண்டுவந்தான். ஆனால் அவர்கள் அந்தத் தேர்வில் தோல்வியடைந்தார்கள். 

இயேசு கிறிஸ்துவையும்  சாத்தான் இடறலடையச் செய்யப்பார்த்தான். (லூக்கா 4 : 3-12 ) ஆனால் அவர் இடறலை வெற்றிகொண்டார். இவைதவிர பல்வேறு இடங்களில் யூதர்களாலும், பரிசேயர் சதுசேயர்களாலும் இயேசு கிறிஸ்து இடறல்களைச் சந்தித்தார். ஆனால் அவற்றில்  வெற்றிகொண்டார்.  

ஒருவரை இடறலடையச் செய்வது மிகக்கடுமையான பாவம். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி, முத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்."  (மாற்கு 9:42)

இதுபோல ஊழியங்களில் ஈடுபடுபவர்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் தவறான போதனைகள், வழிகாட்டுதல்கள் பலரை நரகத்துக்கு நேராக இழுத்துச் சென்றுவிடும். அப்போஸ்தலரான பவுல் இதில் தான் கவனமாக இருப்பதாகக் கூறுகின்றார். "இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்". (2 கொரிந்தியர் 6:3) என  எழுதுகின்றார் அவர். 

எனவே நாம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சாட்சியற்ற கிறிஸ்தவ வாழ்வும் மற்றவர்களுக்கு இடறல்தான்.  ஏனெனில் கிறிஸ்துவை அறியாத மக்கள், கிறிஸ்தவர்கள் எனும் பெயர் பெற்றிருக்கும் நம்மைத்தான் மாதிரியாகப்   பார்ப்பார்கள்.  நமது வாழ்வே சாட்சியற்று இருக்குமானால் அவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள நாம் இடறலாக இருக்கின்றோம் என்று பொருள். 

சாட்சியுள்ள,  மற்றவர்களுக்கு இடறல் ஏற்படுத்தாத வாழ்க்கை வாழ்வோம்; அதன்மூலம் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தல் உத்தமம்

ஆதவன் 🌞 829🌻 மே 06, 2023 சனிக்கிழமை  



                     

"கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." ( 1 சாமுவேல் 15 : 22 )

வெற்று ஆராதனைக் கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் கூறும் அறிவுரைதான் மேற்படி வசனம். இன்று பலரும் தேவனை  அரசியல் தலைவனைப்போலவே எண்ணிச் செயல்படுகின்றனர்அரசியல் தலைவனுக்கு  அவன் வரும்போது அவனைப் புகழ்ந்து ஆரவாரக்  குரலெழுப்பினாலே போதும்அவன் உள்ளம்  மகிழுவான்.  ஆனால் நமது தேவன் அப்படிப்பட்டவரல்ல; அவர் உள்ளான மனித மனங்களைப்  பார்கின்றவர்வெற்றுப் புகழ்ச்சிக் கீதங்களும் அல்லேலூயா எனும் அலறல்களும் அவரை மகிழ்ச்சியடையச்  செய்யாது

தேவன் தனது வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பார்நடுங்குகிறவன் என்றால் குளிரால் நடுங்குவதுபோல நடுங்குவதல்ல,  கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படியவேண்டுமெனும் அச்ச் உணர்வுடன் செயல்படுவது;  பாவம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்போது  தேவனுக்கு அஞ்சி அவற்றில் ஈடுபடாமல் இருப்பது.

சின்னக் கற்பனையோ  பெரிய கற்பனையோ என்று பார்க்காமல்தேவன் விரும்பாத எந்தச் செயலையும்  செய்யாமல் தவிர்ப்பதையே தேவன் விரும்புகின்றார்

சவுல் அமெலேக்கியரை எதிர்த்துப் போரிடச் சென்றான்அப்படிச் செல்லும்போது,  அமெலேக்கியரை வெற்றிகொள்ளும்போது அவர்களையும் அவர்களது கால்நடைகளையும் அழித்துவிடுமாறு தேவன் சாமுவேல் தீர்க்கத்தரிசி மூலம் சவுலுக்குச் சொல்லியிருந்தார். ஆனால் சவுல் போரில் வெற்றிபெற்றபோது தேவனது வார்த்தைகளுக்குச்  செவிகொடுக்கவில்லை.அவன் தரமான  ஆடு மாடுகளை தனக்கென்று   உயிரோடு வைத்துக்கொண்டு அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்துப்போட்டான்

சாமுவேல் அதுபற்றி சவுலிடம் கேட்டபோது  சவுல்ஆடுமாடுகளில் நலமானவைகளை தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்ததாகக் கூறினான். (  1 சாமுவேல் 15 : 15 ) அதற்கு மறுமொழியாகவே சாமுவேல்,  இன்றைய வசனத்தைக் கூறுகின்றார்.

பலர் இன்று சவுலைப்போலவே இருக்கின்றனர். காணிக்கைகளையும்ஆலய காரியங்களுக்கும் ஊழியங்களுக்கு,  ஊழியர்களுக்குமிஷனரி பணிகளுக்கு  அள்ளி வழங்குவதையும் தாராளமாகபெருமையாகச் செய்கின்றனர்ஆனால் தேவனது வார்த்தை இவர்களது வாழ்வில் செயலாவதில்லைதாழ்மைபொறுமைஅன்புவிட்டுக்கொடுத்தல் என்று எந்த கிறிஸ்தவ பண்புகளும் இவர்களுக்கு இருப்பதில்லை

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? தேவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் ஊழலிலும் லஞ்சத்திலும், அடிதடி அரசியலிலும், கணவன் மனைவி சண்டையிலும் ஈடுபட்டுக்கொண்டு ஞாயிறு ஆராதனையில் உருக்கமுடன் வேண்டுதல் செய்வது, பாடுவது கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?

ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளிலும்கூட பல விசுவாசிகள் இத்தகைய தேவனுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் காண  முடிகின்றது. வாழ்க்கை இத்தகைய மாற்றமில்லாத ஆராதனைகள் தேவனுக்கு ஏற்புடைய ஆராதனைகளல்ல.

"நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிரகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண்காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்...........உங்கள் சபைக் கூட்டத்தையும் நான் சகிக்கமாட்டேன்." (ஏசாயா - 1 : 12, 13 ) என்கின்றார் கர்த்தராகிய பரிசுத்தர். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, May 04, 2023

எல்லா மனிதர்களிடமும் அன்புகூருவோம்

ஆதவன் 🌞 828🌻 மே 05, 2023 வெள்ளிக்கிழமை       


"நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து....." ( 1 தெசலோனிக்கேயர் 3 : 12 )

தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கச்சொன்ன இயேசு கிறிஸ்துவின் போதனையை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் விரிவாக விளக்குகின்றார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் அப்படி வரும்போது நாம் தேவனுக்குமுன் பிழையற்றவர்களும், பரிசுத்தமானவர்கலாகவும் இருக்கவேண்டியது அவசியம். 

இன்றைய வசனத்தின் தொடர்ச்சியினை வாசித்தால் இதனைப் புரிந்துகொள்ளலாம். இங்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக." ( 1 தெசலோனிக்கேயர் 3 : 13 ) என்று எழுதுகின்றார். 

அதாவது, நாம் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அன்புச்செய்தால்  மட்டும் போதாது  மற்ற எல்லோரிடமும், எல்லா மத இன மக்களுக்கும் அன்புசெலுத்தவேண்டும் என்கின்றார். இதனை, "நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும்.." எனக் கூறுகின்றார். இப்படி அன்பு  செலுத்தினால் மட்டுமே நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்த முள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை தேவன் ஸ்திரப்படுத்துவார் என்கின்றார். 

அப்போஸ்தலரான பவுல் இதனை வெறும் அறிவுரையாகக் கூறாமல், தானும் இதனைக் கடைபிடிப்பதால் கூறுகின்றார். அதனைத்தான், நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், என்று எழுதுகின்றார்.

ஆம், நாம் தேவனுக்கேற்ற பரிசுத்தமுள்ளவர்களாய் மாற முதல்படி எல்லோரையும் அன்புசெய்வதுதான். ஜாதி,  மத இனம் பார்க்காமல் அன்பு செய்வது. ஏனெனில் இதுவே தேவனது குணம். இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் எல்லோரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தேவன் எல்லோரையும் ஒன்றுபோலப் பார்ப்பதால் எல்லோரும் தேவ நன்மைகளைப் பெறுகின்றனர். 

ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் நம்மைப் பெருகச்செய்ய வேண்டுவோம். அப்போது  நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி நமது இருதயங்களை தேவன்  ஸ்திரப்படுத்துவார்" ( 1 தெசலோனிக்கேயர் 3 : 13 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Wednesday, May 03, 2023

புத்தியீனமான தர்க்கங்களை விட்டு விலகு

ஆதவன் 🌞 827🌻 மே 04, 2023 வியாழக்கிழமை     




                    

"புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )

இன்று கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை சபை பாகுபாடுகள் மட்டுமல்ல, தாங்கள் சார்ந்திருக்கும் சபையும் அதன் போதனைகளும்தான் சரியானவை என்பதனை நிரூபிக்க நடைபெறும்  தேவையில்லாத வாக்குவாதங்கள். நியாயப்பிரமாண கட்டளைகள் குறித்து வெவ்வேறுசபைகளும் கூறும் விளக்கங்கள். இவைகளையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் புத்தியீன தர்க்கங்கள் என்று குறிப்பிடுகின்றார். 

இத்தகைய தர்க்கங்களும் சண்டைகளும் நம்மை ஒரு மதவாதியாக காட்டுமேதவிர ஆவிக்குரிய மக்களாக அடையாளம் காட்டாது. எனவே இத்தகைய தர்க்கங்களைவிட்டு நாம் விலகி இருக்கவேண்டும் என்று கூறுகின்றார் பவுல் அடிகள்.  கிறிஸ்துவை வாழ்வில் ருசித்தவன் கிறிஸ்துவை மட்டுமே விசுவாசிப்பான், போதிப்பான் அவர் நடந்தபடியே நடப்பான். 

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூதர்களுக்கு சரியான மேசியா யார் என்பதை அடையாளம் காண்பிக்கவேண்டியிருந்தது. அந்தக் காலத்திலேயேகூட இயேசு கிறிஸ்து வீண் தர்க்கங்கள் செய்துகொண்டு இருக்கவில்லை. சத்தியத்தைச் சொல்லிவிட்டு, "கேட்க செவியுள்ளவன் கேட்கக்கடவன்" என்று கூறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். ஏனெனில் தர்க்கம் செய்வது அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். 

சபைகள் நம்மை இரட்சிக்கமுடியாது; கிறிஸ்து ஒருவரே நம்மை இரட்சிக்கமுடியும். ஆனால், முதல்கால கிறிஸ்தவர்களிடையேகூட பிரிவினையும், குறிப்பிட்ட ஊழியர்களைச் சார்ந்து வாழும் அவலமும் இருந்தது. எனவேதான் பவுல் அடிகள், "உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்"  ( 1 கொரிந்தியர் 1 : 12 ) என்று எழுதுகின்றார்.

புத்தியீனமான தர்க்கங்கள், வம்சவரலாறுகள், சண்டைகள், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்கள் இவைகள் எந்த உபயோகமும் இல்லாதவை. உண்மையில் அவைகள் வீண். எனவே, நாம் எந்தச்சபைப் பிரிவைச் சார்ந்தவர்களாக  இருந்தாலும் கிறிஸ்து ஒருவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி பேசவேண்டும்.  வீண் தர்க்கங்கள், சபை போதனைகளின் விளக்கங்கள் இவை தேவையில்லாதவை. 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்." ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்று கூறுகின்றார். தர்க்கம் செய்பவன் கிறிஸ்துவை இன்னும் சரியாக அறியவில்லை என்று பொருள். சபை வெறிகொண்ட சில பாரம்பரிய சபைகளைச் சார்ந்தவர்களுக்கு எனது தினசரி தியானம் பிடிக்கவில்லை.  அவர்கள் என்னோடு தர்க்கம் செய்வதில்லையென்றாலும் மனதளவில் வெறுக்கிறார்கள். ஆம், இவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சபைகளை அறிந்தவர்களேதவிர கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. 

சபைகளைச் சார்ந்திருப்பது தவறல்ல; காரணம் நாம் கட்டாயமாக ஒரு சபையோடு இணைந்திருக்கவேண்டும். அதேவேளையில் கிறிஸ்துவை யார் போதித்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனமும் வேண்டும். அத்தகைய குணமுள்ளவர்களே மேலான ஆவிக்குரிய வளர்ச்சி அடையமுடியும். தர்க்கங்களைவிட்டு விலகுவோம் ;கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Tuesday, May 02, 2023

பாவங்களை மேற்கொள்ள ஆவியானவர் உதவுவார்.

ஆதவன் 🌞 826🌻 மே 03, 2023 புதன்கிழமை                                     

















"நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 )

நமது தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமும் நிறைந்தவர். மனிதர்கள் தங்களது பலவீனங்களால் பாவத்தில் விழுந்தாலும் உடனேயே அவர்களைத் தண்டித்துவிடுவதில்லை. 

குழந்தைகள் தவறு செய்யும்போது பெற்றோர்கள் கோபப்படுவது இயல்பு. ஆனால் உடனேயே பெரிய தண்டனையைக் கொடுப்பதில்லை. கோபத்தில் கொஞ்சநேரம் பேசாமல் இருந்தாலும் மீண்டும் குழந்தைகளை அணைத்துக்கொள்வர். காரணம் தவறு செய்யும் குழந்தைகளிடம் தொடர்ந்து கோபத்தில் இருப்போமானால் அந்தக் குழந்தை மனமடிவடைந்திடும். 

இதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார். "நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." என்று. 

மனிதனை உருவாக்கிய ஆரம்பத்திலேயே தேவன் கூறுகின்றார், "என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்." ( ஆதியாகமம் 6 : 3 )

அதாவது மனிதன் வெறும் இரத்தமும் சதையுமுள்ள மாம்சமானவன். அந்த மாம்ச இயல்பு அவனைத் தொடர்ந்து பாவம் செய்யத் தூண்டுகின்றது. கூடிப்போனால் அவன் 120 ஆண்டுகள் பூமியில் வாழ்வான்.  இது தேவனுக்குத் தெரியும். எனவே தொடர்ந்து அவர் மனிதனோடு போராடிக்கொண்டிருக்கமாட்டார்.

இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் அடிகளும், "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை." ( ரோமர் 7 : 18 ) என எழுதுகின்றார். 
 
அதற்காக நாம் பாவம் செய்வது நியாயமென்று எண்ணிவிடக்கூடாது. பாவத்துக்கு எதிராக நாம் போராடும் போராட்டங்களைத் தேவன் பார்க்கின்றார். உண்மையிலேயே நமது பாவங்களுக்காக நாம் ஆத்துமாவில் வருத்தப்படுவோமானால் தேவனது ஆவியானவர் நமக்கு உதவுவார். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்திட ஒப்புக்கொடுக்கவேண்டும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர் களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன்  அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

கிறிஸ்துவின் ஆவியைப் பெற வேண்டுவோம். அப்போதுதான் அவர் பாவத்தைக்குறித்து உணர்த்துவதை நாம் அறிய முடியும். அப்படி ஆத்துமாவில் பாவ உணர்வுள்ளவர்களாக வாழ்வோமானால் அவர் எப்போதும் நம்மோடு வழக்காடமாட்டார்; நம்மீது என்றைக்கும் கோபமாயிருக்கவுமாட்டார். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, May 01, 2023

பாதங்களைக் கழுவினேன், எப்படித் திரும்பவும் அழுக்காக்குவேன் ?

ஆதவன் 🌞 825🌻 மே 02, 2023 செவ்வாய்க்கிழமை         






          "என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்." ( உன்னதப்பாட்டு 5 : 3 )


வஸ்திரம் அல்லது ஆடை என்பது வேதாகமத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள கழற்றிப்போடப்பட்ட ஆடை பாவ ஆடையினைக் குறிக்கின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நாம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெறும்போது நமக்கு இரட்சிப்பின் ஆடை உடுத்தப்படுகின்றது. ஆம், நாம் நமது பாவ ஆடைகளைக் களைந்துவிட்டு புதிய ஆடைகளை உடுத்துகின்றோம். 

புதிய ஆடை என்பது "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 8 ) எனவேதான் என் பழைய பாவ  வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன்? என்று கூறப்பட்டுள்ளது.

ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தில் திருமண ஆடையில்லாதவன் வெளியேற்றப்படுவதை இயேசு உவமைமூலம் நமக்கு விளக்கினார். "சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்." ( மத்தேயு 22 : 12 ) அவனை வெளியேற்றி தண்டனைக்கு நேராக அனுப்பினார்கள்.

இன்றைய தியான வசனத்தின் தொடர்ச்சியாக நாம் "என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன்" என்றும் வாசிக்கின்றோம். இதுவும் பாவங்கள் கழுவப்படுவதன் அடையாளம்தான். தனது  இறுதி உணவின்போது இயேசு கிறிஸ்து சீடர்களின் பாதங்களைக் கழுவினார். அப்போது "பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது என்றார். இயேசு அவருக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்." ( யோவான் 13 : 8 ) ஆம், பாதங்களைக் கழுவுவது பாவங்கள் கழுவப்படுவதன் அடையாளமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்படிப் பாவங்கள் கழுவப்பட்டு சுத்தமாக்கப்பட்ட நான் எப்படி என் பாதங்களை மீண்டும் அழுக்காக்குவேன்? எனக் கேட்கின்றது இன்றைய வசனம். 

அன்பானவர்களே, இன்றைய வசனத்தின் தொடர்ச்சியான அடுத்த வசனம் கூறுகின்றது, "என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது." ( உன்னதப்பாட்டு 5 : 4 ). ஆடை அழுக்கடையாமல், பாதங்கள் அழுக்காகாமல் காத்துக்கொள்ளும்போது  "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்" ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என இதயக் கதவுகளைத் தட்டும் இயேசு நாம் கதவைத் திறக்குமுன்பே கதவுத் துவாரத்தின் வழியாய்க் கையைநீட்டி நம்மை அணைக்கத் தயாராக இருக்கின்றார். அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

பாவம் செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது "என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன்" எனக் கேட்டு பாவத்துக்கு விலகி நம்மைக் காத்துக்கொள்வோம்.  

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, April 29, 2023

கர்த்தர் நம்மை உயர்த்துகிறவராகவும் தாழ்த்துகிறவராகவும் இருக்கின்றார்.

ஆதவன் 🌞 824🌻 மே 01, 2023 திங்கள்கிழமை  












"சரீரமுயற்சிஅற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )


நமது உடல் உழைப்பு, சுய முயற்சி எதுவானாலும் அது தேவனைச் சார்ந்ததாக இருக்கவேண்டும். இந்த உலகத்தில் நாம் நன்றாக வாழும்போது நம்மை அறியாமலேயே "நான்" எனும் எண்ணம் நமக்குள் வந்துவிடுகின்றது. "நான் நன்றாக படித்ததால் இந்த வேலை எனக்குக்  கிடைத்தது,  நான் கடினமாக உழைத்ததால் இந்தச் செல்வம் எனக்குக் கிடைத்தது" எனப் பலரும் எண்ணிக்கொள்கின்றனர்; சிலர் வெளிப்டையாகக் கூறவும் செய்கின்றனர். ஆனால் இது முற்றிலும் சரி என்று கூறிட முடியாது. தேவன் நினைத்தால் ஒரே நொடியில் எல்லாவற்றையும் அழித்து ஒழிக்க அவரால் முடியும். 

எண்ணிப்பாருங்கள்...., நம்மைவிட நன்றாகப்  படித்தவர்கள் நல்ல வேலை இல்லாமல் இருப்பதையும் படிப்பில் மட்டமாக இருந்தவர்கள் நல்ல வேலையில் இருப்பதையும் பல வேளைகளில் நாம்  பார்க்கலாம். இதுபோலவே, அதிகம்  உழைத்தும் கொஞ்சமாகச் சேர்ந்தவர்களும் உண்டு, கடின உழைப்பு  உழைக்காமல் அதிகம் சம்பாதிப்பவர்களும் உண்டு.   இவைகளே சரீர முயற்சி அற்பப் பிரயோஜனமுள்ளது  என்பதற்குச் சாட்சிகள். 

ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆம், தேவனுக்குப் பயந்த ஒரு உண்மையான பக்தியுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அது இந்த உலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல,  இதற்குப் பின்வரும் வாழ்க்கைக்கும் உபயோகமானதாக இருக்கும்.

"நான்" எனும் எண்ணம் அல்லது அகந்தை நமக்குள் வந்துவிடக் கூடாது என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு உணர்த்தவே, "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 ) என்று கூறுகின்றார். அதாவது நம்மால் எதுவுமில்லை. நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதும் தேவன் தான். தேவனது கிருபை இல்லையானால் நாம் எதனையுமே செய்யத் தகுதியற்றவர்களே.

"கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்." ( 1 சாமுவேல் 2 : 7 ) ஆம், நமது சுய பலமல்ல, தேவனே  நம்மை உயர்த்துகிறவராகவும் தாழ்த்துகிறவராகவும் இருக்கின்றார். 

அன்பானவர்களே, நாம் உழைக்கவேண்டியதுஅவசியம். அது தேவ கட்டளை. ஆனால், வெறும் உழைப்பு மட்டும் நம்மை உயர்த்திவிடாது. தேவனது கிருபை நமக்கு வேண்டும். எவ்வளவு சம்பாதித்தாலும் அது நிரந்தரமல்ல. எனவேதான் இன்றைய வசனம், "சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது"  என்று கூறுகின்றது. 

தேவன் நமக்குத் தந்துள்ள வேலைக்கு, படிப்புக்கு, உடல் பலத்துக்கு  நன்றி சொல்வோம். அவற்றைப் பெருமையாகக் கருதாமல் தேவனைச் சார்ந்து அவருக்கேற்ற வாழ்க்கை  வாழ்வோம். தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com