Wednesday, September 30, 2026

🦋 ആധവൻ ധ്യാനം - യെശയ്യാവ് 25:4

 ꧁༺ആധവൻ ധ്യാനം༻꧂

എണ്ണം: 2064 — തീയതി: 03.10.2026

"ഭയങ്കരന്മാരുടെ ചീറ്റൽ മതിലിനെ അടിക്കുന്ന പെരുമഴപോലെയായിരിക്കുമ്പോൾ, അങ്ങ് ദീനക്കാരന് ബലവും കഷ്ടത്തിലായ എളിയവന് ആശ്രയവും പെരുമഴയിൽനിന്നുള്ള സങ്കേതവും വെയിലിൽനിന്നുള്ള തണലുമായിരുന്നു." — യെശയ്യാവ് 25:4

മരുഭൂമികളിലും കാടുകളിലും യാത്ര ചെയ്യുന്നവർ കൊടിയ ചൂട്, മഴ, വന്യമൃഗങ്ങൾ തുടങ്ങിയ പ്രാകൃതിക ദുരന്തങ്ങളിൽ നിന്ന് സ്വയം രക്ഷനേടാനായി കൂടാരങ്ങൾ നിർമ്മിക്കാറുണ്ട്. അല്ലെങ്കിൽ ചില ഗുഹകളിൽ അഭയം പ്രാപിക്കാറുണ്ട്. ഈ കൂടാരങ്ങളും ഗുഹകളും വിവിധ തരത്തിൽ ആ മനുഷ്യർക്ക് സംരക്ഷണം നൽകുന്നു. ദാവീദ് രാജാവ് തന്റെ ജീവിതത്തിലെ നിരവധി പ്രതിസന്ധി ഘട്ടങ്ങളിൽ ഗുഹകളിലാണ് അഭയം പ്രാപിച്ചത്.

നാം ഒരുപക്ഷേ ഇന്ന് വിജനപ്രദേശങ്ങളിലും മരുഭൂമിയിലും യാത്ര ചെയ്യാത്തവരായിരിക്കാം. എന്നാൽ, ഈ ലോകയാത്ര നമുക്ക് ഇതുപോലെയുള്ള ഒരു വിജനപ്രദേശവും മരുഭൂമിയുമായിട്ടാണ് കാണപ്പെടുന്നത്. നമ്മുടെ ജീവിതത്തിൽ ക്രൂരന്മാരുടെ ചീറ്റൽ പോലെയും മതിലിനെ അടിക്കുന്ന പെരുമഴപോലെയും മനുഷ്യരാലും അന്ധകാര ശക്തികളാലും വിവിധ പ്രശ്നങ്ങളും കഷ്ടങ്ങളും ഉണ്ടാകുന്നു.

ഇതുപോലുള്ള ക്രൂരമായ ജീവിത സാഹചര്യം അനുഭവിച്ച വ്യക്തിയാണ് ദാവീദ്. അത്തരം സാഹചര്യങ്ങളിൽ കർത്താവ് തന്നോടുകൂടെ നിന്ന് അദ്ദേഹത്തെ രക്ഷിച്ചു. ആ അനുഭവത്തിൽ അദ്ദേഹം പറയുന്നു:

"യഹോവ പീഡിതർക്ക് ഒരു സങ്കേതമായിരിക്കും; കഷ്ടകാലങ്ങളിൽ ഒരു സങ്കേതംതന്നെ." — സങ്കീർത്തനങ്ങൾ 9:9

ജീവിതത്തിൽ ക്രൂരതകൾ അനുഭവിച്ച മറ്റൊരു വ്യക്തിയാണ് ജെറീമിയ പ്രവാചകൻ. അതുകൊണ്ടാണ് അദ്ദേഹവും ഇപ്രകാരം പ്രാർത്ഥിക്കുന്നത്:

"അങ്ങ് എനിക്ക് ഭയങ്കരനായിരിക്കരുതേ; ആപത്തുനാളിൽ അങ്ങ് എന്റെ സങ്കേതമാകുന്നു." — യിരെമ്യാവ് 17:17

നാം കടന്നുപോയ സുനാമി സമയത്ത് പെരുമഴയും വെള്ളപ്പൊക്കവും എങ്ങനെയാണ് ആഞ്ഞടിച്ചത് എന്ന് നാം കണ്ടതാണ്. ശക്തമെന്ന് കരുതിയിരുന്ന പല വലിയ കെട്ടിടങ്ങളും പാലങ്ങളും വെള്ളത്തിൽ ഒഴുകിപ്പോയി. അതെ പ്രിയപ്പെട്ടവരെ, രക്ഷപ്പെടാൻ കഴിയാത്ത ഒരു പ്രതിസന്ധി ജീവിതത്തിൽ ഉണ്ടാകുമ്പോൾ; ശത്രു നമ്മുടെ ജീവിതത്തെ ലക്ഷ്യമാക്കി ആക്രമിക്കുമ്പോൾ, നമുക്ക് കർത്താവ് മാത്രമേ സങ്കേതമായിരിക്കാൻ കഴിയൂ.

അദ്ദേഹം എളിയവന് ബലവും കഷ്ടത്തിലായ ദീനക്കാരന് ആശ്രയവും പെരുമഴയിൽനിന്നുള്ള സങ്കേതവും വെയിലിൽനിന്നുള്ള തണലുമായിരിക്കുന്നു. ചില പ്രതിസന്ധി ഘട്ടങ്ങളിൽ നമ്മുടെ സ്വന്തം ബലമോ നമുക്കറിയാവുന്ന അധികാരമുള്ളവരുടെ സഹായമോ നമ്മെ രക്ഷിക്കുകയില്ല. കർത്താവിന് മാത്രമേ നമ്മെ രക്ഷിച്ചു കരയ്ക്കെത്തിക്കാൻ കഴിയൂ.

ഒരു വാക്കുകൊണ്ട് കൊടുങ്കാറ്റിനെയും ഇളകിമറിഞ്ഞ കടൽത്തിരമാലകളെയും അടக்கியவர் നമ്മുടെ കർത്താവായ യേശുക്രിസ്തുവാണ്. നമ്മൾ അവിടുത്തെ മുറുകെപ്പിടിക്കുമ്പോൾ നമ്മുടെ ജീവിതത്തിലും അവിടുന്ന് ഇത്തരം അത്ഭുതങ്ങൾ ചെയ്യും. നമുക്ക് അവിടുത്തെത്തന്നെ മുറുകെപ്പിടിക്കാം. അവിടുന്ന് നമ്മുടെ ബലവും കഷ്ടകാലങ്ങളിൽ നമ്മുടെ ആശ്രയവും പെരുമഴയിൽനിന്നുള്ള സങ്കേതവും വെയിലിൽനിന്നുള്ള തണലുമായിരിക്കുന്നു.

✒ സഹോദരൻ എം. ജിയോ പ്രകാശ് ✒️

Tuesday, September 29, 2026

🦋 Meditation verse - ஏசாயா 25 : 4 / Isaiah 25:4

 ஆதவன் தியானம்

எண் :- 2064 - நாள் :- 03.10.2026



"கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்." ( ஏசாயா 25 : 4 )

பாலைவனங்கள், காட்டுப்பகுதிகளில் பயணம் செய்பவர்கள் தங்களை இயற்கை இடர்களான கொடிய வெப்பம், மழை, மற்றும் விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள கூடாரங்கள் அமைத்துக்கொள்வதுண்டு. அல்லது சில குகைகளில் தஞ்சம் புகுவதுண்டு.  இந்தக் கூடாரங்கள் மற்றும் குகைகள் பலவிதங்களில் அந்த மனிதர்களுக்குப் பாதுகாப்பைத் தருகின்றன. தாவீது இராஜா தனது வாழ்வில் பல இக்கட்டான வேளைகளில் குகைகளில்தான் தஞ்சம் புகுந்தார். 

நாம் ஒருவேளை இன்று வானாந்தரங்களிலும் பாலைவனங்களிலும் பயணம் செய்யாமல் இருக்கலாம். ஆனால், இந்த உலகப்பயணம் நமக்கு இப்படியான வானாந்தரமும் பாலைவனமுமாகவே இருக்கின்றது. நமது வாழ்வில் கொடூரமானவர்களின் சீறல் போலவும், மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போலவும் பல்வேறு பிரச்சனைகளும் இன்னல்களும் மனிதர்களாலும் அந்தகார சக்திகளாலும் ஏற்படுகின்றன. 

இப்படிப்பட்ட கொடுமையான வாழ்க்கைச் சூழலை அனுபவித்தவர்தான் தாவீது. அத்தகையைச் சூழ்நிலைகளில் கர்த்தரே அவரோடு இருந்து அவரைக் காப்பாற்றினார். அந்த அனுபத்தில் அவர் கூறுகின்றார், "சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்" ( சங்கீதம் 9 : 9 ) என்று. 

இப்படி வாழ்க்கையில் கொடுமைகளைச் சந்தித்த இன்னொருவர்  எரேமியா தீர்க்கத்தரிசி. எனவேதான் அவரும், "நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்" ( எரேமியா 17 : 17 ) என்று வேண்டுதல் செய்கின்றார். 

பெருவெள்ளம் சீறியடிப்பதை நாம் கடத்த சுனாமி சமயத்தில் பார்த்தோம். வலிமையானவை என்று கருதப்பட்ட பல்வேறு பெரிய பெரிய கட்டிடங்களும், பாலங்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. ஆம் அன்பானவர்களே, தப்பவே முடியாது எனும் இக்கட்டு வாழ்க்கையில் ஏற்படும்போது;  சத்துரு நமது வாழ்வைக் குறிவைத்துத் தாக்கும்போது, நமக்குக் கர்த்தர் மட்டுமே அடைக்கலமாக இருக்கமுடியும். 

அவரே, ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாக இருக்கின்றார். சில இக்கட்டான வேளைகளில் நமது சுய பலமோ நமக்குத் தெரிந்த அதிகார பலமுடையவர்களின் உதவியோ நம்மைக் காப்பாற்ற முடியாது. கர்த்தர் மட்டுமே நம்மைக் காப்பாற்றி கரைசேர்க்க முடியும். 

ஒரு வார்த்தையால் புயலையும் பொங்கி எழுந்த கடல் அலைகளையும் அடக்கியவர் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரைப் பற்றிக்கொள்ளும்போது நமது வாழ்க்கையிலும் அவர் இத்தகைய அதிசயங்களைச்  செய்ய முடியும். அவரையே பற்றிக்கொள்வோம். அவரே, நமது பெலனும், நெருக்கப்படுகிற சமயங்களில் நமது திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாக இருக்கின்றார்.

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️

AATHAVAN MEDITATION

No.: 2064 — Date: 03.10.2026


"For You have been a defence for the helpless, A defence for the needy in his distress, A refuge from the storm, a shade from the heat; For the breath of the ruthless is like a storm against a wall." — Isaiah 25:4 (NASB)

Those who travel through deserts and wilderness areas often set up tents or take refuge in caves to protect themselves from natural hazards such as extreme heat, rain, and wild animals. These tents and caves provide protection for people in various ways. King David sought refuge in caves during many critical moments of his life.

We may not be traveling through literal deserts and wildernesses today, but our journey through this world often resembles such a wilderness and desert. In our lives, various problems, troubles, and dark forces—originating from people and spiritual wickedness—rise up against us like the fury of the ruthless and a flood beating against a wall.

David was someone who experienced such harsh life circumstances. Yet, in all those situations, the Lord was with him and delivered him. Reflecting on that experience, he declares:

"The Lord also will be a stronghold for the oppressed, A stronghold in times of trouble;" — Psalm 9:9 (NASB)

Another person who faced cruelty in life was the prophet, Jeremiah. That is why he too prayed:

"Do not be a terror to me; You are my refuge in the day of disaster." — Jeremiah 17:17 (NASB)

We witnessed how a raging flood can strike during the times of tsunamis. Various massive buildings and bridges, once thought to be indestructible, were swept away by the waters. Yes, beloved ones, when a hopeless crisis arises in life, and when the enemy targets and attacks our lives, the Lord alone can be our refuge.

He is the strength of the helpless, the strength of the needy in distress, a refuge from the flood, and a shade from the heat. In certain critical moments, neither our own strength nor the help of influential people we know can save us. The Lord alone can deliver us and bring us safely to shore.

Our Lord Jesus Christ is the One who calmed the storm and the raging waves of the sea with a single word. When we hold fast to Him, He can perform similar miracles in our lives as well. Let us hold firmly to Him. He is indeed our strength, our stronghold in times of trouble, our refuge from the flood, and our shade from the heat.

✦ 𝓖𝓮𝓸 𝓟𝓻𝓪𝓴𝓪𝓼𝓱 ✦

🏫 ஆதவன் தியானம் - செப்டம்பர் 2026


 
தியானம் - 2032

"ஆதவன்" செப்டம்பர் 01 செவ்வாய் 2026

"மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது." ( ரோமர் 5: 16)

ஆதாமின் கீழ்ப்படியாமை எனும் ஒரே பாவம் முழு மனுக்குலத்துக்கும் சாபமாக அமைந்தது. ஆதாமின் ஒரே குற்றம் நமக்கு ஆக்கினையைக் கொண்டுவந்தது. ஆனால் அதனை நிவிர்த்திசெய்ய உலகினில் வந்த இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவினால் பல குற்றங்கள் மன்னிக்கப்படும் சூழ்நிலை உருவானது. 

மட்டுமல்ல, ஆதாமைப்போல பாவம் செய்யாதவர்களையும் ஆதாமின் பாவத்தின் தண்டனை பற்றிக்கொண்டது. இதனை அப்போஸ்தலரான பவுல், "அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்" ( ரோமர் 5: 14) என்று கூறுகின்றார். ஆம், பழைய ஆதாம் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருக்கின்றான். 

ஆதாமின் பாவம் அவனைப்போல பாவம் செய்யாதவர்களையும் தண்டனைக்குள்ளாக்கியது. ஆனால் கிறிஸ்துவின் கிருபை பல பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றது. இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல், கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது என்று கூறுகின்றார். ஒரேபாவத்தினால் உலகம் தண்டனை பெற்றது; ஆனால், ஒரே மனிதனின் கீழ்ப்படிதலினால் பல பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இதுதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான கிருபை. 

ஆம் அன்பானவர்களே, நாம் இன்று கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்பு பெறுகின்றோம். அவரால் நமது பல பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அன்று பாவம் செய்த ஆதாம் ஏதேன் தோட்டத்தில் உலாவிய தேவனுக்குப் பயந்து ஒளிந்துகொண்டதுபோல நாம் பயந்து ஒளித்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. காரணம், நமது பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளவே கிறிஸ்து உலகினில் அவதரித்தார்; அவர் பாவிகள் மனம்திரும்பி தன்னிடம் வருவதையே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்.

கிறிஸ்துவின் கிருபை பல பாவங்களையும் மன்னிக்கின்றது. எனவே நாம் தயங்காமல் நமது எந்தப் பாவத்தையும் அவரிடம் அறிக்கையிட்டு மனம்திரும்ப அழைக்கப்படுகின்றோம். எனவே, நமது எந்தப் பாவமாக இருந்தாலும் அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல" என்று. ஆம், ஆதாமின் தண்டனைத்தீர்ப்பை நாம் கிறிஸ்துவின் கிருபைக்கு ஒப்பிடமுடியாது. எனவே துணிவுடன் அவரை நெருங்கி நமது பாவங்களுக்கு மன்னிப்பை வேண்டுவோம். 

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."(1 யோவான்  1 : 9) ஆம், கிறிஸ்துவின் கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நமக்கு நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.


தியானம் - 2033

"ஆதவன்" செப்டம்பர் 02 புதன் 2026

"அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே." ( ரோமர் 5: 17)

ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள ஒரு முக்கிய வேறுபாட்டினைக்குறித்து நேற்றைய தியானத்தில் நாம் தியானித்தோம். அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் இன்னொரு வேறுபாட்டினைக்குறித்து விளக்குகின்றார். 

ஆதாமின் மூலம் மரணம் மக்களைக் கவ்விக்கொண்டது.  ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பூரண கிருபையினை நாம்  பெறுவோமானால் மரணத்துக்கு மாற்றாக நித்தியஜீவன் நமக்குக் கிடைக்கும் என்கின்றார் அவர். ஆதாமினால் நாம் இழந்துபோன நித்திய ஜீவனை நமக்கு அளிக்கவே கிறிஸ்து உலகினில் வந்தார்.  ஆம், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்" ( யோவான் 3: 16) என்று வாசிக்கின்றோம். 

இந்த நித்திய ஜீவனை நாம் சோர்ந்துபோகாமல் நற்செயல்கள் செய்து வாழும்போது தேவன் நமக்குத் தருவார். "தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்." ( ரோமர் 2: 6, 7)

மேலும், இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல், "நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே" என்று உறுதியாகக் கூறுகின்றார். நாம் நித்திய ஜீவனை அடைவது மட்டுமல்ல, அவரோடுகூட ஆளுகையும் செய்வோம். காரணம், கிறிஸ்துவின் கீழ்ப்படிதலினால் நாம் நீதிமான்களாக்கப்படுகின்றோம். நீதிமான்கள் நீதிபரானாகிய கிறிஸ்துவோடு ஆளுகையும் செய்வார்கள். 

இப்படி நாம் ஆளுகை செய்வதற்கு, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைத் தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக ராஜாக்களும் ஆசாரியர்களுமாக ஆக்கியுள்ளார். ஆம், "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்." ( வெளிப்படுத்தின விசேஷம் 1: 6)

கிறிஸ்துவின் கிருபையின் பிரமாணத்தை நாம் காத்துக்கொண்டு வாழ்வோமானால் நமது மேலான பலன் இதுதான். பழைய ஆதாம் எனும் ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது கீழ்ப்படிதல்மூலம் அதனைத் தகர்த்து நமக்கு நித்திய ஜீவனையும் நித்திய ஆளுகையையும் தந்துள்ளார். எனவே இதனை உணர்ந்து நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வோம். 


தியானம் - 2034

"ஆதவன்" செப்டம்பர் 03 வியாழன் 2026

"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;" ( பிலிப்பியர் 2: 5)

இன்று மனிதர்கள் சிலருக்குப்  பதவிகள் கிடைக்கும்போது அவர்களது செயல்கள் அற்பத்தனமாக மாறிவிடுவதை நாம் பார்க்கின்றோம். அரசாங்க அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பதவி கிடைத்துவிட்டால்கூட தங்களது பெருமையை நிலைநிறுத்த சிலர் பல்வேறு  காரியங்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கின்றோம். ஆனால் பலரது வாழ்வில் அவர்கள் மேலான ஆசீர்வாதத்தினைப் பெறமுடியாததற்குக் காரணம் அவர்களது இந்தப் பெருமையே. ஏனெனில் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிராகவே இருக்கின்றார்.  

எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" (1 பேதுரு 5: 5) என்று கூறுகின்றார். ஆம், தாழ்மையே தேவன்  விரும்பும் மேலான குணம்; அதுவே தேவ கிருபையினை நாம்பெற்றுக்கொள்ள வழி. இந்த கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஒருமுறை ஒரு ஆலயத்துக்குச் சென்றபோது மின்விசிறி ஒன்றினைக் காணிக்கையாகக் கொடுத்த ஒருவர் அந்த மின்விசிறியின் மூன்று இறக்கைகளிலும் தங்களது குடும்பத்து உறுப்பினர்களது பெயரை பொறித்திருந்ததை  பார்த்தபோது இப்படியும் இழிகுணம் கொண்டவர்கள் இருப்பார்களா என்று ஆச்சரியப்பட்டேன். மனிதர்களாகிய நமக்கே இது இப்படி அற்பத்தனமாகத் தெரியுமானால் தேவனது பார்வையில் இத்தகைய குணங்கள் எப்படி இருக்கும்!!!

கிறிஸ்துவைக்குறித்து, "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." ( பிலிப்பியர் 2: 6, 7) என்று வாசிக்கின்றோம். உலகத்தையே படைத்து ஆளும் தேவகுமாரனாகிய கிறிஸ்து ஒரு அடிமைபோல மாறினாரென்றால் அவரது தாழ்மை எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள். இந்த கிறிஸ்துவின்  சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது என்று இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 

மட்டுமல்ல, காணக்கூடாத தேவனாகிய அவர் மனிதனாக தோன்றியது மட்டுமல்ல, அடிமைபோல அனைத்திலும் தன்னைக் கீழ்ப்படிந்து தாழ்த்தினார். "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." ( பிலிப்பியர் 2: 8)

எனக்குத் தெரிந்த ஒருவர் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். திருமண வீடுகளிலும், இதர பொது நிகழ்ச்சிகளிலும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, "நான் தினசரி எத்தனை கோப்புகள் (files)  பார்க்கின்றேன் தெரியுமா? எத்தனை கையொப்பம் இடுகிறேன் தெரியுமா? நமது ஊரில் எவன் இப்படி இத்தனைக் கோப்புகளை பார்த்திருப்பான்; எவன் இத்தனைக் கையொப்பம் போட்டிருப்பான்?" என்று கூறிக்கொள்வார். அவரது நண்பர்கள் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் அவர் சற்று அப்புறம் சென்றபின் அவரைக்குறித்துக் கேலிபேசிச் சிரிப்பார்கள். 

ஆம் அன்பானவர்களே, அற்பமான பெருமை நமக்கு இருக்குமானால் நாம் மற்றவர்களால் அற்பமாகவே எண்ணப்படுவோம். தன்னைத் தாழ்த்திய இயேசு கிறிஸ்து மிகவே உயர்த்தப்பட்டார். "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிச் செய்தார்." ( பிலிப்பியர் 2: 9, 10)

இத்தகைய மாம்சீக பெருமை நமக்கு இருக்குமானால் அதனை நம்மைவிட்டு நீக்குவோம். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9)  கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே நம்மிலும் இருக்கும்படி நம்மைக் காத்துக்கொள்வோம். 

தியானம் - 2035

"ஆதவன்" செப்டம்பர் 04 வெள்ளி 2026

"இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்." ( 1 கொரிந்தியர் 2 : 2 )

இன்று பெரும்பாலான கிறிஸ்தவ விசுவாசிகளும் போதகர்களும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அதிசயம் செய்பவராகவும், நோய்களைக் குணமாக்குபவராகவும், தங்களுக்கான உலக ஆசீர்வாதங்களைத் தருபவராகவுமே அறிந்துள்ளனர்; அப்படியே கிறிஸ்துவைப் பார்க்கின்றனர்.  ஆனால், கிறிஸ்தவம் என்பது செழிப்பின் மார்க்கமல்ல, அது சிலுவை சுமக்கும் அனுபவத்தையே நமக்கு அடையாளம் காட்டுகின்றதாக இருக்கின்றது. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் மீட்பராக, நமது பாவங்களை மன்னிப்பவராக அறியவேண்டியது அவசியம். இதுவே ஆவிக்குரிய பார்வையாகும். மற்றபடி அவரிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என அவரைத் தேடுவது கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிவதாகும். கிறிஸ்துவை மாம்சத்தின்படி அறிந்தவன் ஆவிக்குரியவனல்ல. "ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." ( 2 கொரிந்தியர் 5 : 16 )

எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" என்கின்றார். கிறிஸ்து செய்த அற்புத அதிசயங்களை மேன்மைப்படுத்தி அதனையே சொல்லிக்கொண்டிருப்பதைவிட  சிலுவையில் அறையப்பட்டவராக நாம் கிறிஸ்துவை பார்க்கவேண்டும். காரணம், "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 ) இதனையே நாம் அறியவேண்டும். 

எனவேதான் சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் என்கின்றார் பவுல். அதாவது, நமக்காக இரத்தம் சிந்தி, சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்ட  கிறிஸ்துவின் இந்தத் தியாக அன்பைத்தவிர இதற்குமேல் கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் எதனையும் அறிவதை நான் விரும்பவில்லை என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கின்றோம் என்பதனை நிதானித்துப்பார்ப்போம்.  ஆசீர்வாதங்களைத் தருபவராக, நோய்களைக் குணமாக்குபவராக, அதிசயங்களை செய்பவராக மட்டுமே நாம் அவரைப் பார்ப்போமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே இருப்போம். காரணம், அப்படிப்பார்க்கும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட முடியாது; நமது பாவ வாழ்க்கையிலிருந்து நாம் விடுபடமுடியாது. 

கிறிஸ்துவை நமக்காக, நமது பாவங்களுக்காக,  சிலுவையில் அறையப்பட்டவராக பார்க்கப் பழகுவோம். அப்போது மட்டுமே நாம் நமது பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மீட்பு அனுபவத்தைப் பெறமுடியும். 

தியானம் - 2036

"ஆதவன்" செப்டம்பர் 05 சனி 2026

"கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" ( பிலிப்பியர் 1 : 21 )

ருஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்களது பிரபலமான ஒரு மேற்கோள், "ஒருவரை நீங்கள் நேசிக்கும்போது, ​​அவரை அவர் எப்படிப்பட்டவரோ அப்படியே நேசிக்கிறீர்கள்; மாறாக, அவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படி அல்ல" என்பதாகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மை இப்படித்தான் நேசித்தார். நாம் பரிசுத்தவான்கள் என்று அவர் நம்மை நேசிக்கவில்லை. நாம் பாவிகளாக இருக்கும்போதே நம்மை அவர் நேசித்தார். 

"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" ( ரோமர் 5 : 8 ) என்று நாம் வாசிக்கின்றோம். ஆம், இந்த உலகத்தில் நாம் ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது  ​​அவரை அவர் எப்படிப்பட்டவரோ அப்படியே நேசிக்கின்றோம். அப்படியே கிறிஸ்து நம்மை நேசித்தார். 

இதுபோல நாமும் அவரை எந்த நிபந்தையுமின்றி நேசிக்கவே அழைக்கப்படுகின்றோம். அந்த அன்பினால்தான் அப்போஸ்தலராகிய பவுல், "கிறிஸ்து எனக்கு உயிர்" என்கின்றார். இந்த உலகத்தில் காதலர்கள் பலர் தாங்கள் காதலிப்பவர்களைப் பார்த்து , "நீதான் என் உயிர்" என்று கூறும் வார்த்தைகள்தான் இவை. இப்படி நமது உயிராக நாம் கிறிஸ்துவை எண்ணி அன்புசெய்யவேண்டியது அவசியம். 

தொடர்ந்து பவுல் அப்போஸ்தலர், "சாவு எனக்கு ஆதாயம்" என்று கூறுகின்றார். இதற்கு நாம் இரண்டு பொருள் கூறலாம். ஆவிக்குரிய விதத்தில் கூறுவதென்றால், கிறிஸ்துவுக்காக நாம் பாவத்துக்கு மரிப்பது நமக்கு லாபமாகும். காரணம் நாம் அவரோடுகூட மறுமையில் நித்தியமாக வாழ்வதற்கு நாம் தகுதிபெறுகின்றோம். இன்னொருபொருள், கிறிஸ்துவுக்காக என்று உண்மையாகப் பணிச்செய்து மரிப்பது நமக்கு ஆதாயம். 

இப்படி நாம் கிறிஸ்துவை அன்புசெய்வோமானால் நமது வேறு எந்த உலக ஆசைக்கும் அவரைத் தேடமாட்டோம். கிறிஸ்துவின் பிரசன்னம் நம்மோடு இருக்கவேண்டும், அவர் நமக்குள் இருந்து நம்மை வழிநடத்தும் அனுபவம் நமக்கு நிரந்தரமாக வேண்டும் எனும் ஆசைகளே நமக்குள் எழும். 

சமீபத்தில் படித்தப்  பத்திரிகைச் செய்தி என்னைச் சிந்திக்கவைத்தது. தனது காதல் கைக்கூடாததால் ஒரு பெண் தற்கொலை செய்து மடிந்துபோனாள். அதனை அறிந்த அவளது காதலனும் தற்கொலை செய்துகொண்டான். சாகுமுன் அவன் எழுதிவைத்திருந்த கடிதத்தில், "அவளே எனது உயிராக இருந்தாள்;  அவளோடு சாவதே  எனக்கு நல்லது" என்று குறிப்பிட்டிருந்தான்.  ஆம், கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளவேண்டிய அன்பு இதுபோல தூய்மையான காதல் உணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம். 

வேதாகமத்தின் உன்னத சங்கீதம் தேவனுடன் பக்தன் இந்த அனுபவத்துடன் பாடிய பாடல்களே. "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" என்று நம்மால் கூறி வாழமுடியுமானால் நாம் மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றோம் என்று பொருள். 

தியானம் - 2037

"ஆதவன்" செப்டம்பர் 06 ஞாயிறு 2026

"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1 )

பிரபலமான ஊழியர் ஒருவரது தலைமை அலுவலகத்துக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கு பணியிலிருந்த அலுவலர் என்னிடம் ஒரு விண்ணப்பத்தைக்கொடுத்து எதற்காக ஜெபிக்கும்படி சகோதரரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதனை இந்தப் படிவத்தில் பூர்த்திசெய்து தாருங்கள் என்று கூறினார். அதில் சுமார் 15 பல்வேறு கோரிக்கைகள் அச்சிடப்பட்டிருந்தன. எல்லாமே உலகத் தேவைகளும், பிரச்சனைகளும்தான். இறுதியாக ஒரு கோரிக்கைமட்டும், "ஆன்மீக காரியங்களில் வளர்ச்சிபெற" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதாவது பிரபல ஊழியர் உலக காரியங்களையே மக்களிடம் பிரசங்கித்து அதற்காகவே ஜெபிக்கிறவராக இருக்கின்றார். இன்றைய தியான வசனம் இதற்கு முற்றிலும் வேறான ஆவிக்குரிய உண்மையினை நமக்கு எடுத்துக் கூறுவதாக உள்ளது. 

முதலில் நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெறவேண்டியது அவசியம். இப்படி நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் கிறிஸ்துவுக்குள்ளான மனிதர்களாக மாறிவிடும்போது பாவத்துக்கு மரித்தவர்களாகின்றோம்.  மட்டுமல்ல, கிறிஸ்து மரித்து உயிர்த்ததைப்போல நாமும் புது மனிதர்களாக உயிர்பெறுகின்றோம். இப்படி நாம் அவரது மரணத்திலும் உயிர்ப்பிலும் அவரோடுகூட இணைக்கப்பட்டவர்களாகின்றோம். இதுதான் ஆவிக்குரிய சத்தியம்.

ஞானஸ்நானம் இதற்கு ஒரு அடையாளமாக இருக்கின்றது. "ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்." ( கொலோசெயர் 2 : 12 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

இப்படி நாம் மெய்யான மனம்திரும்புதல்பெற்று ஞானஸ்நானம் பெறும்போது கிறிஸ்துவுடன் மரித்து நாமும் உயிர்தெழுந்துள்ளோம் என்று அறிக்கையிடுகின்றோம். உண்மையான ஆவிக்குரிய ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்த அனுபவத்துடன்  கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுகின்றவர்களாக இருப்பார்கள். 

நமக்கான நிலையான வீட்டினை ஏற்பாடுசெய்ய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துச் சென்றுள்ளார். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்கு,  "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" ( யோவான் 14 : 2, 3 ) என்று முன்னறிவித்தார். 

அப்போஸ்தலரான பவுலும், "பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 5 : 1 ) என்கின்றார். நாம் கிறிஸ்துவுடன்கூட பாவத்துக்கு மரித்து ஜீவனுக்கென்று எழுந்தது உண்மையானால் இந்த நிதியவீட்டின்மேல் ஆர்வமுள்ளவர்களாக இருப்போம். இதனையே இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. 

அதாவது, முதலில் நாம் கிறிஸ்துவுடன் மரிக்கவேண்டும்; புதிய மனிதர்களாக அவருக்குள் உயிர்ந்தெழவேண்டும். ஞானஸ்நானம் பெறுவதன்மூலம் அதனை வெளியரங்கமாக அறிக்கையிடுகின்றோம். "ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்." ( ரோமர் 6 : 8 )

ஆம் அன்பானவர்களே, வெறும் உலக காரியங்களுக்காக ஜெபிக்கின்றவர்களாகவும் அவற்றையே வாழ்வில் தேடுகின்றவர்களாகவும் இல்லாமல், ஆவிக்குரிய மேலான காரியங்களையே நமது வாழ்வில் வாஞ்சிக்கிறவர்களாக இருப்போம். 


தியானம் - 2038

"ஆதவன்" செப்டம்பர் 07 திங்கள் 2026

"கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்." ( கலாத்தியர் 6 : 15 )

ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே இருந்த மிக முக்கிய பிரச்சனை விருத்தசேதனம் செய்துகொள்வது சம்பந்தப்பட்ட போதனைகளே. பழைய ஏற்பாட்டு முறைமையின்படி, உண்மையான யூதன் என்பவன் விருத்தசேதனம் செய்தவனாக இருக்கவேண்டும். ஆதி கிறிஸ்தவர்களிடையே இதுகுறித்து மிகப்பெரிய விவாதங்களும் எழுந்ததுண்டு. ஆனால் அப்போஸ்தலராகிய பவுல் இவைபோன்ற எண்ணங்கள் தவறு என்று கூறுகின்றார். வெறுமனே கட்டளைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் எவரும் கடவுளுக்குமுன் நீதிமான்கள் ஆகிவிடுவதில்லை. கிறிஸ்து இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போதுதான் நாம் நீதிமான்களாகமுடியும். 

"நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 11 )

ஒரு மனிதன் கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டுப்  புதுப்பிறப்பாக மாறுவது முக்கியமேத்தவிர வெளியரங்கமான சில சடங்குகள் தேவையில்லை. காரணம், விருத்தசேதனம் செய்யாதவனும் தேவ நீதியைக் கைக்கொள்ளலாம். ஆம், "மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?" ( ரோமர் 2 : 26 )

சில சடங்குமுறைகள் மட்டும் ஒருவரை கடவுளுக்கு ஏற்புடையவராக மாற்றாது. உள்ளத்தில் ஒருவர் மாற்றம் பெறுவதே முக்கியம். "ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது." ( ரோமர் 2 : 28, 29 )

ஆதிகால கிறிஸ்தவ சபைகளைப்போல இன்றும் பல கிறிஸ்தவ சபைகளும் ஊழியர்களும் இதுபோல பல்வேறு சடங்குகளைக் கைக்கொள்ள மக்களை வலியுறுத்துகின்றனர். ஒரு மனிதன் புதுப்படைப்பாக மாறுவது குறித்து போதித்து வழிநடத்துவதை விட்டு தாங்களாக சில உபதேசங்களைப் போதித்துக்கொண்டிருக்கின்றனர். 

இதற்கு ஒரு உதாரணம் இன்று சில சபைகள் வலியுறுத்தும் தசமபாக காணிக்கை குறித்த போதனைகள். குறிப்பாக இன்று சில கிறிஸ்தவ சபைகளில் தசமபாக காணிக்கை கொடுப்பது சம்பந்தமான போதனைகள் விருத்தசேதன போதனைப்போல ஆகிவிட்டதை மறுக்கமுடியாது. ஒருவர் தேவ ஆசீர்வாதம் பெறுவதற்கு அவர் தசம்பாக காணிக்கை கொடுக்காமல் இருப்பதே காரணம் என்று சிலர் போதிக்கின்றனர். தேவன் ஒருவர் தசமபாக காணிக்கைக் கொடுக்கின்றாரா இல்லையா என்று தேவன் பார்ப்பதில்லை. உண்மையான மனமாற்றம் பெற்று புதுப்படைப்பாக மாறியுள்ளாரா  என்றே பார்க்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் காணிக்கை கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் பிரச்சனையில்லை  புது சிருஷ்டியே காரியம்.  தலையை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதைப்போல இன்று கிறிஸ்தவ ஊழியர்களில் பலரும் தலையான கிறிஸ்தவ  போதனைகளை விட்டுவிட்டு வாலைப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். 

நமது பாவங்களை கிறிஸ்து இயேசுவிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெறுவோம். இதுவே நாம் புதுப்படைப்பாக மாறிட முதல் தேவை; இதுவே மறுபடி பிறக்கும் அனுபவம். இதனையே இயேசு கிறிஸ்து வலியுறுத்தினார். ஆம், "இயேசு அவனுக்குப் (நிக்கொதேமுவுக்கு)  பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 3 : 3 )


தியானம் - 2039

"ஆதவன்" செப்டம்பர் 08 செவ்வாய் 2026

"அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்." ( யோவான் 1 : 23 )

உலகின் மிகப்பெரிய வனாந்தரமாக அமேசான் காடுகள் உள்ளன. இந்தக் காட்டுப்பகுதிகளில் உள்ள சில இடங்களில் இன்றுவரை மனிதர்கள் யாரும் சென்றது கிடையாது. காரணம், மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற இங்குள்ள கடினமான சூழ்நிலை. ஆம், வனாந்தரம் பல்வேறு இடர்கள் சூழ்ந்த இடம். பொதுவாக, இருளும் அந்தகாரமும்தான் வனாந்தர பகுதிகளில் நிலைத்திருக்கும். மட்டுமல்ல, பல்வேறு கொடிய விலங்குகளின் வாழ்விடமாக வானாந்தரம் இருக்கின்றது. பொதுவாக, மனிதர்கள் பாதுகாப்பாக நல்லமுறையில் வாழமுடியாத இடங்களே இவை.  

அன்பானவர்களே, இன்று மனிதர்கள் பலரது குடும்ப வாழ்க்கையும் தனிப்பட்ட வாழ்க்கையும் இதுபோல வனாந்தரமாகவே இருப்பதை நாம் உலகத்தில் பார்க்கலாம். வெளிப்பார்வைக்கு பகட்டாக நல்ல நிலையில் இருப்பதுபோலத் தெரிந்தாலும் இருள், அந்தகாரம், பாதுகாப்பற்றநிலை இவையே பலரது வாழ்க்கையாக இருக்கின்றது. இத்தகைய சூழல் மாறிட, "கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள்" என்று அறைகூவல் விடுக்கின்றார் யோவான்.  

நமது இருளான வனாந்தர வாழ்க்கை மாறவேண்டுமானால் நமது வாழ்வில் ஒளியாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரவேண்டியது அவசியம். அவர் நமக்குள் வருவதற்கு நமது வழிகளை நாம் மாற்றவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

இந்த உலகத்தில் மனிதர்கள் நாம்கூட அசுத்தமான இடங்களில் தங்கிட விரும்புவதில்லை. நம்மைச் சிலர்  எவ்வளவுதான் அன்புடன் உபசரித்தாலும், தங்களது வீட்டில் சில நாட்கள் தங்குமாறு  நம்மை வற்புறுத்தினாலும்  அவர்களது வீடுகளுக்குள் நாம் சென்று பார்த்தால் அங்குள்ள அசுத்தமான சூழ்நிலை நம்மை அங்குத் தங்கிட அனுமதிக்காது. ஆம் அன்பானவர்களே, இதுபோலவே தேவன் அசுத்தமான உள்ளங்களில் குடிவருவதில்லை. அவர் நமக்குள் வரவேண்டுமானால் முதலில் நமது உள்ளங்கள் தூய்மையடையவேண்டியது அவசியம். 

மேலும், நாம் தூய்மையான பாலை அசுத்தமான பாத்திரங்களில் சேமிப்பதில்லை. அப்படிச் சேமித்தால் சுத்தமான பால் கெட்டுப்போகும். எனவே, முதலில் பாத்திரத்தைத் தூய்மைப்படுத்தவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனம் யோவான் தன்னைக்குறித்து கூறும் சாட்சி வார்த்தைகளாகும். தன்னைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளபடி,  "கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று  நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்" என்கிறார் அவர். ஆம், உங்கள் வழிகளை செம்மைபண்ணுங்கள் அப்போது நான் உங்களுக்குள் வருவேன் என்று யோவான் மூலம் இன்று கூறுகின்றார்  தேவனாகிய கர்த்தர். 

கிறிஸ்து இயேசுவுக்கு மனப்பூர்வமாக நம்மை ஒப்புக்கொடுத்து நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டும்போது நாம் தூய்மையாகின்றோம். ஆம், அப்போது யோவான் கூறியதுபோல, கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுகிறவர்கள்  ஆவோம்.  அப்போது அவர் நமக்குள் வருவார்.  அவர் நமக்குள் வரும்போது மட்டுமே நமது குடும்ப வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாம் மாற்றத்தைக் காணமுடியும். அப்போது வனாந்தர இருள், அந்தகாரம், பாதுகாப்பற்றநிலை இவை மாறி நமது வாழ்வில் வசந்தம் வருவதைக் காணலாம்.  

"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 )


தியானம் - 2040

"ஆதவன்" செப்டம்பர் 09 புதன் 2026

"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 )

வெளிப்பார்வைக்கு எதுவும் தெரியாமல் இருந்தாலும் இந்த உலகம் அந்தகார இருளில் மூழ்கி இருக்கின்றது. எனவேதான் இன்று இருளின் செயல்பாடுகள் உலகினில் அதிகரித்துள்ளன. நாமும் ஒருகாலத்தில் இந்த இருளின் மக்களாகவே இருந்தோம். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிருபையால் நமது வாழ்க்கையில் வந்தபோது நமது அந்தகாரம் மாறியது. 

இப்போது நாம் அவருடைய ஆச்சரியமான ஒளிக்குள் வந்துள்ளோம். மட்டுமல்ல, அவர் நம்மைக் கடவுளால்  தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் மாற்றியுள்ளார். 

நாம் யாராக இருந்தாலும், இன்று எவ்வளவு பெரிய அந்தகாரத்தினுள் இருந்தாலும் உலகின் ஒளியாகிய அவரால் நம்மை முற்றிலும் ஒளிமிக்கவர்களாக மாற்றிடமுடியும். இதனையே அப்போஸ்தலரான யோவான், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" ( யோவான் 1 : 9 ) என்று கூறுகின்றார். எனவே, எந்த மனிதனும் அவரது ஒளியைத் தேடினால் நிச்சயமாக அதனைக் கண்டடைவான்.

இப்படி அந்தகாரத்திலிருந்த நாம் இன்று மெய்யான ஒளியினிடம் வந்துள்ளதால் நாம் அந்த ஒளியை நமக்குள் மட்டும் வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஏற்கெனவே நம்மைப்போல இருளில் இருக்கும் மற்றவர்களையும் அந்த ஒளியைநோக்கி வரச்செய்யவேண்டும். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு என்று கூறுகின்றார். தேவன் நம்மைக் கடவுளால்  தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் மாற்றியுள்ளது நாம் அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கவே. 

அவரை அறிவித்தல் என்றவுடன் எல்லோரும் வேதாகமத்தைக் கையில் எடுத்துக்கொண்டு போதிக்கவேண்டும் என்று பொருளல்ல. மாறாக, நமது பழைய அந்தகார வாழ்க்கையிலிருந்து நாம் மாறி ஒளியிடம் வந்துள்ளோம் என்பதனை நமது வாழ்க்கையினால் மற்றவர்களுக்கு அறிவிப்பதைக் குறிக்கின்றது. அதாவது, ஒரு சாட்சியுள்ள வாழ்க்கையினை தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். அப்படி சாட்சியாக வாழ்வதே அவரை அறிவித்தல். 

ஆம் அன்பானவர்களே, நாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்,  ராஜரீகமான ஆசாரியக்கூட்டம், பரிசுத்த ஜாதி, அவருக்குச் சொந்தமான ஜனம். இந்த எண்ணம் எப்போதும் நமக்குள் இருக்கவேண்டியது அவசியம். 

தியானம் - 2041

"ஆதவன்" செப்டம்பர் 10 வியாழன் 2026

"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )

நேற்றைய தியானத்தில் நாம் இருளின் அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்த கர்த்தரைக்குறித்தும் அவர் நம்மை தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் மாற்றியுள்ளார் என்றும்  பார்த்தோம். 

இன்றைய தியான வசனம், அப்படி நம்மைத் தனது ஒளியால் நிரம்பிய கர்த்தர் நம்மை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்தி மகிமைப்படுத்துவார் என்று கூறுகின்றது. அதாவது, கிறிஸ்துவின் ஒளி நம்மில் வரும்போது நாம் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு விளங்குவோம். மட்டுமல்ல, நாம் உலகத்துக்கு மறைவாக இருக்கமாட்டோம். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 ) என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மீது காணப்படும். அந்த மகிமையை மற்றவர்கள் பார்க்கும்படி அவர் நம்மை உயர்த்துவார். 

கிறிஸ்து தெரிந்துகொள்ளுமுன்  நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் யாரும் உலகிற்கு அறிமுகமானவர்களல்ல. அவர்கள் சாதாரண மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். ஆனால் கிறிஸ்து அவர்கள்மேல் உதித்தபோது அவர்கள் மகிமையடைந்தனர். 

இன்று நாமும் இதற்காகவே கிறிஸ்துவால் அழைக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொண்ட நாம் அந்த ஒளியை மற்றவர்களுக்குக் கொடுக்கும்படி மலைமேல் உள்ள வெளிச்சமான பட்டணமாக விளங்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார். அப்படி நாம் விளங்கும்போது என்ன நடக்கும் என்பதனை இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனமாக நாம், "உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்."  ( ஏசாயா 60 : 3 ) என்று வாசிக்கின்றோம். 

இருளான இடத்தில் ஒரு ஒளி இருக்குமானால் அதனைத்தேடி அந்தச் சுற்றுவட்டாரத்திலுள்ள பூச்சிகளெல்லாம் ஓடிவரும். அதுபோல நாம் ஒளிகொடுப்பவர்களாக வாழும்போது ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.

கிறிஸ்துவுக்குள் ஒளிகொடுப்பவர்களாக நாம் வாழும்போது இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடினாலும் நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மேல் காணப்படும். அதாவது, உலகமெல்லாம் இருளுக்குள்ளும் அந்தகாரத்துக்குள்ளும் கிடந்தாலும் கர்த்தரது மகிமை நம்மேல் காணப்படும். 

இந்த ஒளியான இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வில் பெற்றுக்கொள்ள நாம் முயற்சியெடுக்கின்றோமா? இந்த மெய்யான ஒளி நமக்கு வேண்டும் எனும் ஆர்வம் நமக்கு இருக்கின்றதா? இந்த ஆர்வம் நமக்கு இருந்து உண்மையாக அவரைத் தேடுவோமானால், "உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

தியானம் - 2042

"ஆதவன்" செப்டம்பர் 11 வெள்ளி 2026

"அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 4 & 6:18)

மனிதர்களைப்போல தேவன் நம்மைப் பார்ப்பது கிடையாது. மனிதர்கள் பொதுவாக நமது அந்தஸ்து, திறமை, பதவி, பகட்டு இவைகளைக்கொண்டு நம்மை எடைபோடுகிறார்கள். இவற்றின் அடிப்படையிலேயே நம்மை மதிக்கின்றனர். ஆனால் தேவன் நமது அந்தரங்க வாழ்கையினைப் பார்க்கின்றார். குறிப்பாக நமது இருதயத்துச் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பார்க்கின்றார். 

தாவீதைத் தெரிந்துகொள்ளுமுன் கர்த்தர் சாமுவேலுக்கு இதனைத் தெளிவாகக் கூறினார். "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்" ( 1 சாமுவேல் 16 : 7 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

நாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் நமக்கும் தேவனுக்கும் மட்டும் தெரியும்படி நல்லச்  செயல்களைச் செய்யவேண்டும். நாம் ஜெபிப்பது, தர்மம் செய்வது, உபவாசம் மேற்கொள்வது இவைபோன்ற காரியங்களை அந்தரங்கமான முறையில் தேவனுக்கும் நமக்கும் மட்டும் தெரியும்படிச் செய்யவேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறும்போது இன்றைய தியான வசனத்தைக் கூறினார். ஆம், இவைகளை நாம் அந்தரங்கமாகச் செய்யவேண்டும், "அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்" என்று கூறினார். 

ஆனால் மனிதர்கள் இதற்கு மாறாக, நல்லச் செயல்களை எல்லோரும் அறியும்படி பறைசாற்றுகின்றனர். பாவ காரியங்களையோ அந்தரங்கத்தில் இரகசியமாகச் செய்கின்றனர். அனால் அன்பானவர்களே, நல்ல செயலோ, கெட்ட செயலோ அனைத்தையும் தேவன் அந்தரங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவற்றுக்கு அவர் வெளியரங்கமான பலனளிப்பார்.  

"தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்." ( ரோமர் 2 : 6,7 )

ஆம் அன்பானவர்களே, நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தேவனுக்குமுன் வெளியரங்கமாக இருக்கின்றன. நமது செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற பலன் உண்டு. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். நல்ல செயலோ கெட்ட செயலோ அனைத்தையும் தேவன் அந்தரங்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றார். "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்" ( எபிரெயர் 4 : 13 )

இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் நமது செயல்களுக்குத் தேவன் வெளியரங்கமான பதிலைத் தருவார். இறுதிநாளில் மட்டுமல்ல, அவர் விரும்பினால் நமது உலக வாழ்வில்கூட நாம் நமது செயல்களுக்கு ஏற்ற பலனை அவர் தருவதற்கு உண்மையும் கிருபையும் உள்ளவராகவே இருக்கின்றார். 

தியானம் - 2043

"ஆதவன்" செப்டம்பர் 12 சனி 2026

"பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்." ( சகரியா 2 : 7, 8 )

நமது பாவ வாழ்க்கையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ளும்போது நமக்கு வாழ்க்கையில் மகிமை உண்டாகும் என்று இன்றைய தியான வசனம் மூலம் தேவன் நமக்கு அறிவுறுத்துகின்றார். 

பாபிலோன் என்பது அடிமைத்தனத்தைக் குறிக்கின்றது. இஸ்ரவேல் மக்கள் பாபிலோனியருக்கு அடிமைகளாக இருந்ததுபோல கர்த்தருக்கு என நியமிக்கப்பட்ட சீயோன் மக்களாகிய பலர் இன்று அறிந்தோ அறியாமலோ பாவத்துக்கு அடிமைகளாக இருக்கின்றோம். ஆம், பாவ சந்ததிகளாகிய பாபிலோன் வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில் அவர்களைப்போல வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 

இப்படி வாழும் மக்களைப்பார்த்து, "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." அதாவது, பாபிலோன் வாழ்க்கை வாழும் மக்களைவிட்டு; அவர்களது பாவ பழக்கங்களை விட்டு, உன்னை விடுவித்துக்கொள். அப்போது உனது வாழ்க்கையில் புது மகிமையைக் காண்பாய் என்கின்றார். 

இப்படி நாம் நம்மை விடுவித்துக்கொள்ளும்போது நமக்கு ஆசீர்வாதம் உண்டு. இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதியில்  இதனைக் குறித்து கூறப்பட்டுள்ளது. நாம் பாபிலோன் வாழ்க்கையினை விட்டுவிடும்போது, இதுவரை உங்களை அடிமைப்படுத்தி கொள்ளையிட்ட பாபிலோனிடத்துக்கு நான் செல்வேன் என்று ஆவியானவர் கூறுகின்றார்; எனவே, அவர்கள் இனி உன்னை நெருங்க முடியாது.   மட்டுமல்ல, இனி நீங்கள் எனது கண்மணிபோல இருப்பீர்கள். உங்களை எவரும் இனித் தொடமுடியாது. இதனையே,  "உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

ஆம் அன்பானவர்களே, கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்ட சீயோன் மக்கள் நாம். இதனை உணர்ந்து நமது பாவ வாழ்க்கையினை விட்டு மனம்திரும்பி அவரிடம் வரவேண்டியது அவசியம். இன்று பலரும் தங்களது தொடர்ந்த துன்பங்கள், ஆசீர்வாதக் குறைவுகளுக்கான காரணம் புரியாமல் தொடர்ந்து பாபிலோன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இன்று தேவன் சகரியா மூலம்  "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்" என அறைகூவல் விடுகின்றார். 

அப்படி விடுவித்துக்கொண்டபின் மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மட்டுமல்ல, அதன்பின் எந்தத் துன்பங்களும் உங்களை மேற்கொள்ளாதவாறு கர்த்தர்  நான் காத்துக்கொள்வேன் என்கின்றார். காரணம், பாபிலோன் வாழ்க்கையிலிருந்து விடுவித்துக்கொண்ட  உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். அப்படித் தொடுகிறவனை அவர் விட்டுவிடமாட்டார். 


தியானம் - 2044

"ஆதவன்" செப்டம்பர் 13 ஞாயிறு 2026


"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." ( சங்கீதம் 57 : 2 )

இன்று நல்ல மதிப்பெண்ணுடன் படித்துமுடித்தும் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகள் இல்லாத இளைஞர்களும் இளம்பெண்களும் அதிகம் உண்டு.  ஆனால் இப்படி வேலைவாய்ப்பில்லாத பலரும் பொதுவாக தேவனை நோக்கிப்பார்ப்பதில்லை. நாம் தேவன்மேல் பற்றுக்கொள்ளவும் ஜெபிக்கவும் நமக்கு இன்னும் வயதாகவில்லை என்றே பலரும் எண்ணுகின்றனர். மேலும் தங்களது இளம் வயதை இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் கைப்பேசியிலும், சமூக வலைத்தளங்களிலும் செலவிடுகின்றனர். 

ஆனால், "நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை" ( பிரசங்கி 12 : 1 ) என்று வேதம் அறிவுறுத்துகின்றது.  ஆம் அன்பானவர்களே, நாம் நமது இளம் வயதிலேயே தேவனை அன்புசெய்து அவரையேச் சார்ந்து வாழப் பழகவேண்டும். 

தாவீது சவுல் இராஜாவுக்குப் பயந்து  தப்பி ஓடியபோது மலையிலுள்ள ஒரு குகையிலிருந்து இன்றைய தியான வசனம் குறிப்பிடப்பட்டுள்ள சங்கீதத்தை எழுதினார். ஆனால், தாவீது இராஜாவானபோது அவருக்கு வயது முப்பது. அதாவது, அவர் இராஜாவாகுமுன்,  முப்பது வயதுக்கும் குறைவாக இருக்கும்போது இன்றைய தியான வசனத்தை எழுதியுள்ளார் என்பது தெளிவாகின்றது. ஒரு துடிப்பான இளைஞனாக அவர் இருந்தபோது தனது பலத்தை நம்பாமல்,  "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்" என்று கூறுகின்றார். 

இது தாவீதின் விசுவாச அறிக்கையாகவும் இருப்பதை நாம் காண்கின்றோம். "தேவன் எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகின்றார், எனவே அவரை நோக்கிக் கூப்பிடுவேன்"  என்று அவர் முழு நம்பிக்கையுடன் கூறுவதை நாம் பார்க்கின்றோம். மட்டுமல்ல, தொடர்ந்து அவர் கூறுகின்றார், "என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்:  தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்." ( சங்கீதம் 57 : 3 ) என்கின்றார் முழு விசுவாசத்துடன். 

இதனை வாசிக்கும் இளம் சகோதரனே, சகோதரியே, முப்பது வயதுக்குமுன் தேவன்மேல் இத்தகைய அன்பும் விசுவாசமும் கொண்டிருந்த தாவீதைப்போல உங்கள் அன்பும் விசுவாசமும் இருக்கின்றதா? தேவன் எனக்காக இதனைச் செய்து முடிப்பார் என்று தாவீதைப்போல உறுதியான விசுவாச அறிக்கையை  உங்களால் கூறமுடியுமா? தாவீது சுகமாக வாழ்ந்து இருக்கும்போது இப்படிக்கூறவில்லை. மாறாக,  நொறுங்குண்ட இதயத்துடன், உயிர் பயத்துடன் இருந்தபோது இந்த விசுவாச அறிக்கையினைச் செய்தார். 

இதே தாவீது, "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்" ( சங்கீதம் 34 : 18 ) என்று ஏற்கெனவே கூறியுள்ளார். அதாவது,  நொறுங்குண்ட இதயத்துடன், மனவேதனையுடன் தேவனை நோக்கிப்பார்த்தால் தேவன் நிச்சயமாக நமக்கு இரங்குவார் என்கின்றார். தாவீதின் வார்த்தைகள் அனைத்துமே அவர் தேவனோடு அனுபவித்த அனுபவத்தின் வெளிப்பாடுகள்.  ஆம், மனவேதனைக்குத் தீர்வு முகநூலும், இன்ஸ்டாகிராமும் இதர சமூக ஊடகங்களுமல்ல. மாறாக, தேவனாகிய கர்த்தரின் சமூகம் மட்டுமே. 

இன்றைய ஒடுக்கபட்ட, வேலையற்ற, புறக்கணிக்கப்பட்ட நிலையினை எண்ணி வருந்தாமல், கர்த்தரை உறுதியான விசுவாசத்துடன் பற்றிக்கொள்ள இன்றைய தியான வசனம் மூலம் கர்த்தர் உணர்த்துகின்றார். கர்த்தரையே பற்றிக்கொள்ளுங்கள்; "எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்" என்று கூறியுள்ளபடி அவரை நோக்கி விசுவாசத்துடன் உங்கள் மனதின் வேதனையையும் எதிர்பார்ப்பையும் வெற்றி அறிக்கையிடுங்கள். ஆம், உங்கள் விசுவாச அறிக்கையின்படியே கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். 


தியானம் - 2045

"ஆதவன்" செப்டம்பர் 14 திங்கள் 2026

"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்." ( யாக்கோபு 1 : 8 )

இந்த உலக வாழ்க்கையில்கூட நாம் ஏதாவது ஒன்றினைச் சாதிக்கவேண்டுமானால்  மனம் தடுமாற்றமின்றி எடுத்த முடிவில் நிலைத்து நிற்கவேண்டியது அவசியம். ஒரு முடிவெடுக்குமுன் பலமுறை சிந்திக்கவேண்டும் அனால் முடிவெடுத்தபின்னர் எடுத்த முடிவில் தடுமாற்றமின்றி துணிந்து நிற்கவேண்டும். இப்படித் துணிந்து  முடிவெடுக்கமுடியாதவர்கள் எதனையும் சாதிக்கமுடியாது. இத்தகையவர்களே இருமனமுள்ளவர்கள். இருமனமுள்ளவர்களாக நாம் இருப்போமானால் நிலையற்றவர்களாகவே இருப்போம். 

ஆவிக்குரிய வாழ்விலும் நாம் இப்படியே இருக்கவேண்டியது அவசியம். கர்த்தருக்காக வாழ நாம் முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து நாம் பின்வாங்கிடக்கூடாது. உழக்கூடிய உழவன் முன்னோக்கிப்பார்த்து வயலை உழவேண்டியது அவசியம். பாதி வயலை உழுதுவிட்டு பின்னோக்கிப் பார்த்துத் தனது வேலையை நிறுத்திவிட்டால் அவனால் வயலை உழுது பயிர்ச்செய்து அறுவடையைக் காண முடியாது.  

நாம் தேவனுக்கென்று எடுத்த முடிவில் நிலைத்து நிற்கவேண்டியது அவசியம். இல்லையானால் நாம் அவருக்குமுன் தகுதியற்றவர்களாக ஆகிவிடுவோம். இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்" ( லுூக்கா 9 : 62 )

ஆம் அன்பானவர்களே, இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இருமனமுள்ளவர்களாகவே இருக்கின்றனர். தாங்கள் நினைத்தது கிடைக்கவேண்டும், ஜெபித்தது நிறைவேறவேண்டும் என எண்ணுகின்றனர். அப்படி நடக்கவில்லையானால் கர்த்தருக்கு எதிராக முறுமுறுத்து மாற்றுவழியைத் தேடுகின்றனர்.  தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 

இப்படியே எலியா காலத்திலும் மக்கள் இருந்தனர். "அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை." ( 1 இராஜாக்கள் 18 : 21 ) என்று வாசிக்கின்றோம். ஆம், இரண்டு நினைவுகள் நம்மைக் குந்திக்குந்திதான் நடக்கச்செய்யும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணமுடியாது. 

கிறிஸ்துவிடம்  வந்த ஒருவன் பின்னிட்டுப் பார்க்கின்றான் என்றால் அதற்கு இன்னொரு காரணம் பழைய பாவ சந்தோஷங்களாகும். பழைய பாவ நண்பர்களும் அவர்களோடு செலவழித்த பழைய நாட்களும்  நினைவுக்கு வருவதால் பலர் இருமனமுள்ளவர்களாக மாறி, கிறிஸ்துவை விட்டுப் பின்வாங்குகின்றனர்.  பாவகாரியங்களுக்கு விலகி ஓடியபின் அவைகளை முற்றிலும் மறந்துவிட வேண்டியது அவசியம். திரும்பிப்பார்த்தோமானால் பாவம் நம்மை மீண்டும் இழுத்து படுகுழியில் தள்ளிவிடும். 

"கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 )

ஒரு மனிதனுக்கு இருமனம் ஏற்படக் காரணங்கள் விசுவாசக் குறைவும் தேவையில்லாத மாற்று சிந்தனைகளும்தான். எனவே நாம் கிறிஸ்துவைத்தவிர வேறு எதனையும் அறியாமலும், அறிய ஆசைப்படாமலும் இருக்கவேண்டியது அவசியம். இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்கின்றார். 

இருமனம் வேண்டாம்; கிறிஸ்துவைத்தவிர வேறு சிந்தனை வேண்டாம்; கலப்பையின்மேல் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கவேண்டாம். நமது இலக்கான கிறிஸ்துவை மட்டுமே நோக்கிப்பார்த்து நமது விசுவாசப் பயணத்தைக் தொடருவோம். காரணம், இன்றைய தியான வசனம் கூறுவதுபோல  இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். 

꧁༺ ஆதவன் தியானம் ༻꧂
எண் :- 2046       நாள் :- 15.09.2026

"அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்." ( ரோமர் 8 : 24, 25 )

நாம் உலகத்தில் பார்ப்பனவற்றை பார்க்கின்றபடியே ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், நாம் பார்த்திராத ஒன்றினைப்பற்றி ஒருவர் கூறுவதை நமது மனது எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. இதனாலேயே இடதுசாரி சிந்தனையாளர்கள் கடவுள் பற்றிய கோட்பாடுகளை கருந்துமுதல்வாதம் என்கின்றனர். அதாவது, கடவுள் நம்பிக்கை என்பது ஒரு கருத்து மட்டுமே. அதனை முன்னிலைப்படுத்தி மதவாதிகள் பேசுகின்றனர் என்கின்றனர். 

இப்படி மூளை அறிவால் சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் வாழ்வோமானால் கடவுளை எவரும் உணர்ந்துகொள்ள முடியாது. அவர் உள்ளத்தால் உணரக்கூடியவர். பரிசுத்த உள்ளத்தில் குடிகொள்ள விரும்புபவர்.  எனவே,  அவரை விசுவாசத்தினாலும் அவருக்கேற்ற பரிசுத்த வாழ்வு வாழ்வதாலும் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடியும். அவரது வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படியும்போது அவர் நமக்குத் தம்மை வெளிப்படுத்தி நடத்துகின்றார். இதனை நாம் உறுதியாக விசுவாசிக்கவேண்டியது அவசியம்.   ஆம்,  "விசுவாசமானது      நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) 

நாம் கண்ணால் காண்பவற்றை நம்பவேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  இப்படித் தான் காணாததை நம்பி விசுவாசத்துடன் காத்திருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட தேவ மனிதன்தான் ஆபிரகாம். 

"விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்." ( எபிரெயர் 11 : 8 ) அதாவது, ஆபிரகாம் தனது சுய ஆசை விருப்பங்களை நிறைவேற்றிட தேவனை விசுவாசிக்கவில்லை. மாறாக,  தேவன் விரும்புவதை அவர் தனக்குச் செய்யட்டும் என்று தன்னை ஒப்புக்கொடுத்தார்.  இதனால் தேவனால் வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்தை ஆபிரகாமின் சந்ததியினர் சுதந்திரமாகப் பெற்றுக்கொண்டனர். 

இதுபோன்ற ஒரு விசுவாச உண்மைதான் வேதம் கூறும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் மீட்பு அனுபவம். கிறிஸ்துவின் இரத்தத்துக்கு நமது பாவங்களைக் கழுவும் வல்லமை உண்டு. இதனை நாம் விசுவாசிக்கவேண்டியது அவசியம். எப்படி ஆபிரகாம் தேவனது வார்த்தையினை முற்றிலுமாக விசுவாசித்தாரோ, அப்படியே நாம் இதனை விசுவாசிக்கவேண்டியது அவசியம். இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்" என்கின்றார். 

ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் இன்று தேவனுடைய வார்த்தைகள்  அருளப்படுகின்றன. ஆபிரகாமைப்போல வாக்களிக்கப்பட்ட இவற்றை  இதுவரை வாழ்வில் நாம்  காணாதவர்களாக இருந்தாலும் ஆபிரகாமைப்போல இந்த வார்த்தைகளை விசுவாசிப்போமானால் ஆண்டவர் இயேசு அளிக்கும் மீட்பினைப் பெற்றுக்கொள்ளமுடியும்.  "என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9,10 )

இப்படி நமக்கு நீதி உண்டாக இருதயத்தில் விசுவாசம் கொள்வோமானால் நாம் ஒளியின் மக்களாக மாறுவோம்; அவரோடு ஐக்கியப்பட்டவர்களாக இருப்போம். ஆம், "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 )

எனவே, இதுவரை நமது வாழ்வில் காணாத வேதாகமம் கூறும் மீப்பு அனுபவத்தை முதலில் விசுவாசிக்கவேண்டும். மட்டுமல்ல,  விசுவாசித்து அவை நிறைவேறுவதற்குப் பொறுமையோடே காத்திருக்கவேண்டும்.   அப்போது  நிச்சயமாக ஆண்டவாகிய இயேசு கிறிஸ்துவால் நமது பாவங்கள் மன்னிக்கப்படும் மேலான அனுபவத்தை வாழ்வில் நாம் கண்டுணரமுடியும். 
꧁༺ஆதவன் தியானம்༻꧂
எண் :- 2047       நாள் :- 16.09.2026

"எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்." ( எபிரெயர் 12 : 11 )
                                           
தேவன் அளிக்கும் தண்டனையைப் பற்றி இன்றைய தியான வசனம் கூறுகின்றது. நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குப் பல காரணங்கள் உள்ளன.  நமது தகாத செயல்பாடுகள், சரியான திட்டமிடுதல் இல்லாமை போன்றவை பல துன்பங்களுக்குக் காரணமாக அமைகின்றன. ஆனால், சில துன்பங்கள் தேவனால் நம்மைத் திருத்துவதற்காகத் தரப்படுகின்றன.  அதாவது, எல்லா துன்பங்களும் தேவனால் நமக்கு வருவதில்லை. ஆனால், ஆவிக்குரிய வாழ்வில் தேவன் தனது அடியார்களைத் துன்பங்களின் மூலம் கடிந்து திருத்துகின்றார். 

நாம்  குழந்தைகளாக இருக்கும்போது நாம் தவறு செய்யும்போது நமது பெற்றோர்கள் நம்மைத் தண்டிப்பதுண்டு. இதனை,  "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 ) என்று நாம் வாசிக்கின்றோம். அதாவது, தேவன் நம்மைத் தண்டிக்கின்றார் என்றால் காரணம் அவர் நம்மைத் தமது மகனாக, மகளாக நடத்துகின்றார் என்று பொருள். இதுபோல, பள்ளியில் ஆசிரியர்கள் நம்மைத் தண்டிப்பதுண்டு. இவை நல்ல நோக்கத்துக்காக தண்டனைகளே.  

ஆனால் நாம் தண்டிக்கப்படும்போது நமக்கு வேதனையாக இருக்கும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

நமது உலக தகப்பன் நம்மைத் தண்டிக்கும்போது அவர்களுக்கு நாம் பயப்படுகின்றோம். நம்மைத் திருத்திக்கொள்கின்றோம். அப்படியானால் நமது வழிகளைத் திருத்த தேவன் தண்டிக்கும்போது அவருக்கு நம் எவ்வளவு பயப்பட்டு நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும்!!! ஆம், "அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?" ( எபிரெயர் 12 : 9 )

இதனையே எபிரெய நிரூப ஆசிரியர் விளக்கி, நம்மைத் தேவனுக்கேற்பத்  திருத்திக்கொள்ள அறிவுறுத்துகின்றார். அதாவது, இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனங்களில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- "ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்." ( எபிரெயர் 12 : 12, 13 )

அதாவது, உங்கள் கைகள், முழங்கால்கள் இவைகளைத் செவ்வைபண்ணுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. சுருக்கமாக, உங்களை; உங்கள் வழிகளைச் சீர்படுத்துங்கள் என்று கூறப்படுகின்றது. எப்படி ஒரு தகப்பனோ, ஆசிரியரோ நம்மைத் தண்டிக்கும்போது நமது தவறுகளைத் திருத்திக்கொள்கின்றோமோ, அப்படியே நம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.  

"நான் இன்று இந்த நிலைமையில் இருப்பதற்குக் காரணம் எனது தாய் தகப்பன் என்னைக் கண்டித்து வளர்த்ததுதான்" என்று இந்த உலகத்தில் கூடச் சிலர் கூறுவதுண்டு, ஆம்,  அன்பானவர்களே, எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.

துன்பங்களைக் கண்டு துவண்டுபோவதையல்ல, மாறாக, அவை நமக்குச் சொல்லும் செய்திகளை ஆய்ந்தறிந்து நம்மைத் திருத்திக்கொள்வதையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். எனவே, நெகிழ்ந்த நமது கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு அவைகளைக் காத்துக்கொள்வோம்.

꧁༺ஆதவன் தியானம்༻꧂
எண் :- 2048       நாள் :- 17.09.2026

"மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம் பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாயிருந்தன." ( 2 சாமுவேல் 9 : 13 )

சிலவேளைகளில் நமது உடலிலோ மனதிலோ மிகப்பெரிய பாதிப்பைத் தேவன் அளிக்கின்றாரென்றால் நாம் அது ஒருவேளை நமது நன்மைக்காகவே இருக்கும். ஆம், தேவன் ஏதோ பிற்காலத்தில் நமக்கு நன்மையாக முடியப்பண்ண சிலப் பெரிய  வேதனைகளை நமக்குத் தரக்கூடும். "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 ) என்று பவுல் அப்போஸ்தலர் கூறவில்லையா? 

இதற்கு இரண்டு கால்களும் முடமாயிருந்த மேவிபோசேத்தின் வாழ்க்கை நமக்கு ஒரு உதாரண பாடமாக இருக்கின்றது. சவுலின் வாரிசுகள் அனைவரும் இறந்துபோனபோதும் முடவனாகிய மேவிபோசேத் மட்டும் உயிர் தப்பினான். அதற்கு அவனது முடமான கால்களே காரணமாக இருந்தன. சவுல் இறந்த அதே வேளையில், அவருடன் போரில் ஈடுபட்டிருந்த அவரது மூன்று மகன்களான யோனத்தான், அபினதாப் மற்றும் மல்கிசூவா ஆகியோரும் கொல்லப்பட்டனர். (1 சாமுவேல் 31:1-2) சவுலின் இறப்பிற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, தாவீது ராஜாவின் ஆட்சிக்காலத்தில், சவுலின் சந்ததியினர் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.  (2 சாமுவேல் 21:8-9). இப்படி சவுலில் வாரிசுகள் அனைவரும் அழிந்தனர். 

ஆனால், சவுலின் மகனாகிய யோனத்தானின் ஒரே ஒரு மகன் மேவிபோசேத் மட்டும் உயிர் பிழைத்திருந்தான்.  "யோனத்தானும் சவுலும் கில்போவா மலையில் மரித்தபோது, ​​இவனுக்கு ஐந்து வயதுதான் ஆகியிருந்தது. போரைப் பற்றிய செய்தியைக் கேட்ட மேவிபோசேத்தின்  தாதி, அவனைத் தூக்கிக்கொண்டு தப்பியோட முயன்றபோது கீழே விழுந்துவிட்டாள்; அதனால் அவன் இரு கால்களிலும் ஊனமுற்றான்." (2 சாமுவேல் 4:4)

யோனத்தான் மீதான அன்பு மற்றும் அவனுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் காரணமாக தாவீது  மேவிபோசேத்தைக்  காப்பாற்றினார். தாவீது அவனை அரண்மனைக்கு அழைத்து வந்து, சவுலுக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தையும் அவனிடம் திரும்ப ஒப்படைத்தார்; மேலும் அவன் தன் வாழ்நாள் முழுவதும் அரசரின் மேஜையில் ஒரு மகனைப் போல அமர்ந்து உண்ணும்படி செய்தார். (2 சாமுவேல் 9). ஆம்,  கடவுளின் கிருபையால் அவன் பாதுகாக்கப்பட்டான்.

​​அவனது அந்த ஊனம், அவனை ஒரு பயனற்றவனாகவும், அரசராகும் தகுதி இல்லாதவனாகவும் மற்றவர்கள் பார்க்கும்படி செய்தது. அக்காலத்தில், ஊனமுற்ற ஒருவரால் அரசராகவோ அல்லது போர்வீரராகவோ இருக்க முடியாது. எனவே, யாரும் அவனைத் தேட முற்படவில்லை; கொல்லவும் முயலவில்லை.  

ஆனால் பிற்காலத்தில், அதே ஊனம்தான் அவனுக்குக் கிருபையைப் பெற்றுத் தந்தது. தாவீது அவனைக் கண்டறிந்தபோது, ​​அவன் மீது இரக்கம் காட்டி இவ்வாறு கூறினார்: "பயப்படாதே... உன் தகப்பனாகிய யோனத்தானின் நிமித்தம் நான் உனக்குத் தயவு செய்வேன்" (2 சாமுவேல் 9:7). எனவே இதை இப்படிச் சொல்லலாம். தேவனே அவனது பலவீனத்தைப் பயன்படுத்தி அவனை மறைத்து வைத்தார்; பின்னர் அதே பலவீனத்தைப் பயன்படுத்தி அவனை இராஜாவின் பந்திக்குக் கொண்டு வந்தார். 

ஆம் அன்பானவர்களே இது நமது வாழ்க்கை பற்றிய ஒரு அழகான படமாக அமைந்துள்ளது. சிலவேளைகளில் நமது பலவீனம், உடைந்த நிலை, இழப்புகள் பிற்கால நன்மைக்காகவே இருக்கலாம். தேவன் அவருக்கு உகந்தவர்களை அப்படியே விட்டுவிடுவதில்லை.  நிச்சயமாக அவர் நம்மைத் தம்முடைய பந்திக்கு அழைத்து வருவார். இராஜாவுடன் ஒரு மகனைப்போல அன்றாடம் உணவு உண்ணக்கூடிய மேலான நிலைக்கு அவர் நம்மை உயர்த்துவார். 

சில உடல் இழப்புகளோ, பலவீனங்களோ, பொருளாதார பாதிப்புகளோ நிரந்தரமல்ல; அவை நமது எதிர்கால நன்மைக்காவே இருக்கலாம்.  மேவிபோசேத்தின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான். விசுவாசமுடன் இழப்புகளைத் தங்கி வாழ்வோம். 

ஆதவன் தியானம்
எண் :- 2049       நாள் :- 18.09.2026

"உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 9 )

அப்போஸ்தலரான யோவானுக்கு பத்மு தீவில் ஆவியானவர் இறுதிநாட்களைக் குறித்து பல தரிசனங்களை அளித்தார். அதில் குறிப்பாக, தேவனது பார்வையில் ஒவ்வொரு சபையும்  எப்படி இருக்கின்றது என்றும் இனி அவைகள் என்ன செய்யவேண்டும்; தங்களை எப்படிச் சீர்திருத்திக்கொள்ளவேண்டும் என்றும் ஆவியானவர் விளக்கினார். 

"நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 11 ) என்று வாசிக்கின்றோம். அதாவது, இந்தப் பெயரில் சபைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இக்காலத்தில் உலகிலுள்ள சபைகளை இவை குறிக்கின்றன என்பதனை நாம் உணர்ந்துக்கொள்ளவேண்டும்.  இங்கு சபை என்பது விசுவாசிகளையும் விசுவாசிகளின் கூட்டத்தையும் குறிக்கின்றது. 

இன்றைய தியான வசனமானது சிமிர்னா சபை தூதனுக்கு என்று கூறப்பட்டுள்ள வார்த்தைகளாகும். இங்கு தேவன் கூறுகின்றார், உன் செயல்களை நான் அறிந்திருக்கின்றேன். நீ படக்கூடிய உபத்திரவங்களை அறிந்திருக்கிறேன். உன்னை நீ ஏழை என்று  எண்ணிக்கொள்கின்றாய் ஆனால் உண்மையில் நீ செல்வந்தன். நாங்கள்தான் உண்மையான ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள், நீ அப்படியல்ல  என்று உன்னைப் பழித்துப் பேசும் மக்களை நான் அறிவேன். கவலைப்படாதே, அப்படி உன்னைப் பழித்துக் கூறுபவர்கள்தான்  சாத்தானின் கூட்டத்தார், எனவே உன்னை அவர்கள் தூஷிக்கின்றார்கள்"  என்கிறார் ஆண்டவர். சுருக்கமாக, உனது ஆவிக்குரிய வாழ்க்கையினைக்  குறைசொல்பவர்களைக் குறித்துக்  கவலைப்படாதே என்கின்றார். 

மட்டுமல்ல, இற்றைய தியானம், கிறிஸ்தவ பாரம்பரிய சபைகளிலிருந்து ஆவிக்குரிய வாழ்க்கை வாழ விரும்புபவர்களுக்கு எதிராக சிலர் கூறும் அவதூறுக்குப்  பதில் தருவதாகவும் உள்ளது.  ஆம் அன்பானவர்களே, பிறர் நம்மைக் குற்றம் சாட்டுவதைக்குறித்து கவலைப்படாமல்  நமது ஆவிக்குரிய நம்பிக்கையில் விசுவாசத்தோடு வாழவேண்டும் என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

உண்மையான ஆவிக்குரிய மக்கள் பிறரால் தூஷிக்கப்படுவார்கள்; இது இயற்கை.  "நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 10 ) எனவே, உன் துன்பங்களைக்குறித்து நீ படுகின்ற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இது பிசாசு கொஞ்சகாலம் உங்களை சோதிக்கும் சோதனைதான். ஆகிலும் நீ மரணபரியந்தம் உன் நம்பிக்கையில் உண்மையாயிரு  என்கிறார் ஆண்டவர். 

அன்பானவர்களே, உங்களது  ஆவிக்குரிய வாழ்க்கையைக் குறித்து, உங்களைக் குற்றம் சாட்டுபவர்களைக் குறித்து கவலைப்படவேண்டாம். இத்தகைய ஆவிக்குரிய துன்பத்தை அனுபவிக்கின்றவர்களாக நீங்கள் இருந்தால் அதனைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டு நீங்கள் கொண்ட நம்பிக்கையில் உறுதியோடு வாழவேண்டும் என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  

இன்றைய வசனத்தைத் தொடர்ந்து பதினொன்றாம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது, "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 11 ) ஆம், இப்படி ஆவிக்குரிய துன்பத்தைச் சகித்து உண்மையாய் வாழும்போதுதான் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற்றவர்களாகின்றோம். இப்படி வெற்றி வாழ்க்கை வாழ்பவர்களை  இரண்டாம் மரணம் எனும் நரக அக்கினி சேதப்படுத்துவதில்லை. ஆமென், அல்லேலூயா.

ஆதவன் தியானம்
எண் :- 2050       நாள் :- 19.09.2026

"அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்." ( மாற்கு 5 : 35 )

எல்லாம் முடிந்துபோனது என மனிதர்கள் நாம் நினைக்கும்போது தேவன் ஆரம்பிக்கின்றார். இனி வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லை என நாம் எண்ணும்போது, உனக்கு ஒரு வாழ்வு உண்டு என்று தேவன் தனது வல்லமையான செயல்மூலம் நம்மை மகிழ்ச்சியூட்டுகின்றார். தேவனது வல்லமையினை புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் நாம் குறுகிய கண்ணோட்டத்துடன் அனைத்தையும் பார்ப்பதுதான் நமது மனவருத்தங்களுக்குக் காரணம்.

இன்று தேவையற்ற பல தற்கொலைகள் நாட்டில் நடைபெறுவதை நாம் பார்க்கின்றோம். மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும்போதே பயத்தில் பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். தேர்வு எழுதியபின்னர் முடிவு வருமுன் பயத்தில் பலர் தங்கள் வாழ்க்கையினை முடித்துக்கொள்கின்றனர். மருத்துவ படிப்பிற்கு இடம்கிடைக்கவில்லை என்று சிலர் தற்கொலை செய்து மடிகின்றனர். ஆம், மருத்துவ படிப்பே மேலான படிப்பு எனும் குறுகிய அறிவற்ற தவறான மனநிலையே இதற்குக் காரணம். மருத்துவப் படிப்பு படித்தால் மட்டுமே வாழ்க்கை நன்றாக அமையும் எனும் குருட்டு எண்ணமே இதற்குக் காரணம்.  

இதுபோல,  காதல் தோல்வியினால், கடன் பாரத்தினாலும், தீராத உடல் நோயினாலும், எதிர்கால வாழ்க்கை குறித்த பயத்தினாலும், மனக்குழப்பதினாலும் பலர் தற்கொலை எனும் விபரீத முடிவினை எடுக்கின்றனர். அத்தகைய மனநிலையிலுள்ளவர்கள் ஒரு நிமிடம் செலவழித்து இந்தத் தியானத்தை வாசிக்க வேண்டுகின்றேன். 

ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் இயேசு கிறிஸ்துவிடம் தனது நோயுற்ற மகளைக் குணமாக்க வருமாறு தனது வீட்டிற்கு அழைக்கின்றான். இயேசு செல்லும்போது இடையிலேயே இரத்தப்போக்கு நோயுற்ற ஒரு பெண் அவருக்கு இடைப்படுகின்றாள். இதனால் அவரது பயணம் தாமதமாகின்றது. அப்போது, "ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்."

அன்பானவர்களே, மரணத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் மனிதர்கள் நாம் எண்ணுவோம். ஆனால் அப்படி முடியவில்லை, உனக்கு நம்பிக்கை உண்டு என்கின்றார் தேவன். நாம் காத்திருக்கவேண்டும். தேவன் செயல்பட தாமதித்தாலும் நம்மை நினைவில் வைத்திருக்கின்றார், அவரை நோக்கிப் பார்க்கும்போது நிச்சயம் நமக்கு என்ற பதில் தருவார்.  மகள் இறந்துபோன கவலையுடன் நின்ற  ஜெபஆலயத்தலைவனை நோக்கி ஆண்டவர் இயேசு, "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" என்று சொல்லி ( மாற்கு 5 : 36 ) அவனது வீட்டிற்குச் சென்று இறந்துபோன அவனது மகளை உயிர்பெறச் செய்தார். 

ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து வந்த மக்கள் கூறியதைப்போல, "இனி உனக்கு நல்ல வாழ்க்கை ஏற்படப்போவதில்லை, எல்லாம் முடிந்துவிட்டது" என்று  இன்று நம்மைப்பார்த்தும் பலர் எண்ணலாம்; கூறலாம். அல்லது நாமே நமது வாழ்வில் எல்லாம் முடிந்துவிட்டது, இனி பிழைக்கமுடியாது என்று எண்ணிக் கலங்கலாம்.  ஆனால் ஆண்டவர் இயேசு அன்புடன் கூறுகின்றார், "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு" என்று. 

நமது பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள் போன்றவை நம்மை அவரிடம் நெருங்க உதவுகின்றன. ஆம், "இந்தப் பிரச்சனைகளும் துன்பங்களும் எனக்கு ஏற்படவில்லையானால் நான் ஆண்டவரை வாழ்வில் அறிந்திருக்கமாட்டேன்" என்று பிற்காலத்தில் நீங்கள் கூறும்படியான ஒரு மிகப்பெரிய அற்புதத்தை ஆண்டவர் இயேசு இன்று உங்கள் வாழ்வில் செய்வதற்கு ஆயத்தமாய் இருக்கின்றார். ஜெப ஆலயத் தலைவனுக்குக் கூறியதுபோல இயேசு உங்களைப்பார்த்து இன்று கூறுகின்றார்,  "பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு."

ஆதவன் தியானம்
எண் :- 2051       நாள் :- 20.09.2026
 
"அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்." ( யோவான் 11 : 37 )

இன்றைய தியான வசனம் நமக்கு இரண்டுவிதப் பார்வைகளைத் தருகின்றது. ஒன்று, மனிதர்கள் தேவனைப் பார்க்கும் பார்வை. இன்னொன்று, அவர்கள் சக மனிதர்களைப் பார்க்கும் பார்வை. 

ஆண்டவர் இயேசு "நன்மை செய்கிறவராகவே உலகில் சுற்றித்திரிந்தார்" என்று நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். ஆனால் அன்றைய சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் இதனை முற்றிலும் உணர்த்துக்கொள்ளவில்லை. இறந்த லாசருவை நான்கு நாட்களுக்குப்பின் கல்லறையிலிருந்து உயிருடன் எழுப்பி தான் தேவ குமாரன் என்பதை மக்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்பது தேவ திட்டம். அதற்கு லாசர் முதலில் மரிக்கவேண்டியது அவசியம். மனிதர்களுக்கு இது தெரியாததால்,  "குருடனுடைய கண்களைத் திறந்த இவர் இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா" என்று குறைகூறினார்கள். 

தேவ நோக்கம், தேவ சித்தம் அறிந்த மனிதர்கள் இப்படி தேவனைக் குறைகூறிக்கொண்டிருக்கமாட்டார்கள். நமது வாழ்விலும் நாம் இதனைப் புரிந்து வாழவேண்டியது அவசியம். தேவன் எதனைச் செய்தாலும் நமது நன்மைக்காகவே செய்வார் எனும் விசுவாசம் நமக்கு அவசியம். 

மேலும், மனிதர்கள் தேவனிடம் பல்வேறு வேண்டுதல்களைச் செய்கின்றனர்.  பலர் தேவன் தங்களது வாழ்வில் இதுவரைச் செய்திருக்கும் நல்ல செயல்களை நினைத்துப்பார்த்து நன்றிகூறுவதில்லை. மாறாக, தங்களது நிறைவேறாத வேண்டுதல்களை மற்றவர்களிடம் பட்டியலிட்டு விளக்கி, "நான் எவ்வளவோ ஜெபம் செய்கிறேன், எத்தனையோ  ஆண்டுகளாக இந்தக் குறிப்பிட்டக் காரியத்துக்காக ஜெபிக்கின்றேன், ஆனால் ஆண்டவர் என் ஜெபத்தைக் கேட்கவில்லை" என முறுமுறுகின்றனர்.  முதலில்  "நன்றியறிதல் உள்ளவர்களாகவும் இருங்கள்." ( கொலோசெயர் 3 : 15 ) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

இன்றைய தியான வசனம் உணர்த்தும் இரண்டாவது உண்மை, மனிதர்கள் நாம் சக மனிதர்களைப் பார்க்கும் பார்வை பற்றியது.  ஒருவர் எவ்வளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அனுபவித்தவர்கள் அதனைப் பெரிதாக எண்ணாமல், "இவ்வளவு உதவி செய்தவர் இதனையும் செய்திருக்கலாம்" என்றுதான் கூறுவார்கள். 

அரசியலிலும் ஒரு அரசாங்கம் நல்ல காரியங்கள் பல செய்திருந்தாலும் எதிர்க்கட்சியினர் அதனைப் பாராட்டாமல், இன்னொரு காரியத்தைச் சுட்டிக்காட்டி, "இதனை ஏன் செய்யவில்லை?" என்றுதான் கேள்வி எழுப்புவார்கள். 

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் இவற்றினை உணர்த்தி, முதலில் தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ அறிவுறுத்துகின்றது. "எனது வாழ்வில் தேவன் எதனைச் செய்தாலும் சரியாகவே செய்வார்" எனும் விசுவாசம் நமக்கு அவசியம். அதற்காக நாம் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். மேலும் தேவன் இதுவரை நமக்குச் செய்துள்ள நன்மைகளை நினைத்து தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக வாழவேண்டும். இதனை ஏன் தேவன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புதல் நல்லதல்ல.  காரணம், அவரது நோக்கம் நமக்குத் தெரியாது.

இறுதியாக, "குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா"  என்று கேட்ட மக்களைப்போல நிறைவற்றவர்களாக இல்லாமல்  மனநிறைவுள்ளவர்களாக,  தேவன் இதுவரை நமது வாழ்வில் செய்த காரியங்களுக்கு நன்றியுணர்வுள்ளவர்களாக வாழவேண்டும். இதனையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

ஆதவன் தியானம்
எண் :- 2052       நாள் :- 21.09.2026

"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." ( ஏசாயா 55 : 6 )

எந்த ஒரு விலைமதிப்பற்ற பொருளும் நமக்குச் சும்மா கிடைக்காது. அவற்றைப் பெற்றிட நாம்  ஆர்வமுள்ளவர்களாகவும் அதனைப் பெற்றுக்கொள்ள முயற்சியெடுப்பவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம்.  இதனையே இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. தேவாதி தேவனை கண்டடைய நாம் முயற்சியெடுக்கவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனம், "கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்" என்று கூறுவது  பலருக்கு, "அது என்ன கண்டடையத்தக்க சமயம்?" என மனதில் ஒரு கேள்வியை எழுப்பலாம். அது வேறு ஒன்றுமல்ல, மனம்திரும்புதலுக்கான நற்செய்தி என்றெல்லாம் நமக்குத் தரப்படுகின்றதோ அந்த நாளெல்லாம் அவரைக் கண்டடையத்தக்கச்  சமயம்தான்; அப்போதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருகின்றார் என்று பொருள்.    

எனவேதான் ஏசாயா இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." ( ஏசாயா 55 : 7 ) என்று கூறுகின்றார். 

மேலும், சில சோதனைகள், துன்பங்கள் நமக்கு ஏற்படுவதும் அவர் நமக்குச் சமீபமாய் இருக்கின்றார் என்பதற்கு அடையாளம். அவற்றை நாம் புரிந்துகொண்டவர்களாக அவரிடம் திரும்பவேண்டியது அவசியம். "நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 19 ) என்று நாம் வாசிக்கின்றோம்.

அன்பானவர்களே, இந்த உலகத்தில்கூட நாம் நமக்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றால் எவ்வளவு சிரமமெடுத்துத் தேடுகின்றோம்; யார் யாரிடமெல்லாமோ சென்று கேட்கின்றோம்; எத்தனை உயர் அதிகாரிகளது வீடுகளை உதவி வேண்டித் தட்டுவதற்கும் துணிகின்றோம். இதனையே ஆண்டவர் இயேசு கூறினார், "ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( மத்தேயு 7 : 8 ) என்று. 

இந்த உலக காரியங்களுக்காக இப்படி சிரமமெடுக்கும் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வுக்காக இப்படி சிரமமெடுத்துத் தேடவேண்டாமா? 

இன்று நமக்குப் பல்வேறு சமயங்களில் பல்வேறு முறைகளில் ஆண்டவரின் வார்த்தைகள் வந்து சேர்கின்றன. அந்த வேளைகளெல்லாம் அவர் சமீபமாயிருக்கிறார்; அந்த நற்செய்திக்கு நாம் செவிகொடுக்கின்றோமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். தேவன் வலுக்கட்டாயமாக எவரது உள்ளத்திலும் நுழைந்துவிடுவதில்லை. அவர் மனிதர்களது தனித்துவத்தை மதிக்கின்றார். நாம் அவரைத் தேடினால் நமக்குள் வருவதற்கு வர ஆவலாக இருக்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் சுவிசேஷத்தைக் கேட்கும்போதெல்லாம் அவர் நமது இருதயத்தின் கதவுகளைத் தட்டுகின்றார் என்று பொருள். நாம் கதவைத் திறந்தால் அவர் உள்ளே வருவார். அவரை உள்ளே அனுமதிப்பதும் வெளியிலேயே நிறுத்திவிடுவதும் நமது கையில்தான் இருக்கின்றது. "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 )

சுவிசேஷ அறிவிப்புகள் நமக்கு எரிச்சல்மூட்டவேண்டாம்; அவற்றுக்குச் செவிகொடுப்போம். துன்பங்கள் நெருக்கும்போது தேவன் நமது அருகில் இருக்கின்றார் என்பதனை உணர்ந்து அவரைத் தேடுவோம். ஆம், "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 )

அவரை உண்மையான உள்ளத்துடன் தேடுவோமானால் அவரை வாழ்வில் நாம் கண்டுகொள்ளலாம். அவர் நமக்குச் செவிகொடுப்பார்; நமக்கு உதவுவார். 

ஆதவன் தியானம்
எண் :- 2053 - நாள் :- 22.09.2026

"தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

மாம்சத்திற்கென்று விதைத்தல் என்பது இந்த உலக ஆசீர்வாதங்களுக்காகவே நாம் உழைத்துக்கொண்டிருப்பதையும் ஜெபித்துக்கொண்டிருப்பதையும் குறிக்கின்றது. ஒருவேளை இப்படி நாம் முயற்சிசெய்வது நமக்குக் கிடைத்தாலும் அவை நமக்கு நிலைத்த மகிழ்ச்சியைத் தராது. மேலும் அவை ஆசீர்வாதம்போல முதலில்தெரிந்தாலும் அவற்றின் முடிவு ஆசீர்வாதமல்ல அழிவே என்பதனை நாம் பிற்பாடு புரிந்துகொள்வோம்.  

ஒருவேளை நமது கடினமான முயற்சிகளால் நாம் இந்த உலகத்து மனிதர்களது பாராட்டுதலையும் அதிகமான பொருட்களையும் சேர்க்கலாம். ஆனால் அப்படி நாம் உலகத்தை ஆதாயப்படுத்துவது நமது ஆத்துமாவுக்கு எந்த பலனையும் கொண்டுவராது. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்று.

ஆனால் நாம் எடுக்கும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான முயற்சிகள் அப்படியல்ல. நமக்கு அவை முதலில் கடினமாகவும் எந்த ஆசீர்வாதமும் இல்லாததுபோலத் தெரிந்தாலும் இறுதியில்  நமக்கு நித்தியஜீவனை பிரதிபலனானத் தரும். இதனையே, "மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 ) என்று இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். 

நமது சிந்தனையே செயலாக மாறுகின்றது. மாம்ச  சிந்தை கொண்டிருந்தோமானால் மாம்ச காரியங்களையே செய்வோம். ஆவிக்குரிய சிந்தை நமக்கு இருக்குமானால் ஆவிக்குரிய செயல்களைச்  செய்து ஆவிக்குரிய மக்களாக வாழ்வோம்.  இதனையே, "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது தமிழ் பழமொழி.   முட்செடியின் விதையினை விதைத்துவிட்டு நல்ல அத்திப்பழங்களை அவை தரும் என்று எதிர்பார்க்க முடியாது. 

ஆவிக்கென்று விதைப்பது என்பது, ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமைகொடுத்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள நாம் செய்யும் செயல்பாடுகளைக் குறிக்கின்றது. பாவத்துக்கு விலகி, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி நடப்பதைக் குறிக்கின்றது. 

இன்று பலரது வாழ்க்கையை வெளியிலிருந்து பார்க்கும்போது நல்ல ஆவிக்குரிய வாழ்க்கைபோலத் தெரிகின்றது. ஆனால் சற்று ஆழமாகக் கவனித்தால் அவர்களது ஆவிக்குரிய முயற்சிகளின் இறுதி இலக்கு உலக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே இருப்பதை கண்டுகொள்ளமுடியும். 

இப்படி முற்றிலுமாக உலக ஆசைகொண்டு அலைந்துவிட்டு நாம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை எதிர்பார்க்க முடியாது. காரணம், மாம்சத்துக்கென்று உழைப்பதால் ஆவிக்குரிய வாழ்வை  அழிவுக்குநேராகவே கொண்டு செல்வோம். ஆனால் மெய்யாகவே ஆவிக்குரிய காரியங்களுக்காக உழைக்கும்போது தேவன் உலக ஆசீர்வாதங்களையும் நமக்குச் சேர்த்துத் தருவார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

அன்பானவர்களே, நமது எண்ணங்களையும் வாழ்கையினையும் செயல்பாடுகளையும் சிந்தித்துப் பார்ப்போம். நாம் உண்மையில் எதற்காக விதைத்துக்கொண்டிருக்கின்றோம் ? 

ஆதவன் தியானம்
எண் :- 2054 - நாள் :- 23.09.2026

"அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்." ( யோசுவா 5 : 12 )

இன்றைய தியான வசனம் தேவனுடைய வாக்குத்தத்தமோ, தீர்க்கத்தரிசனமோ அல்ல. மாறாக, சாதாரணமாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சரித்திர சம்பவம். ஆனால், வேதாகமத்திலுள்ள எந்த ஒரு வார்த்தையும் வீணாக எழுதப்படவில்லை என்பதற்கும் வேத வசனங்களை நாம் விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்வதற்கும் இந்த வசனம் எப்படி ஒரு சகோதரனுடைய வாழ்வில் செயல்பட்டது என்பதனை விளக்கலாம் என்று எண்ணுகின்றேன். 

எனக்குத் தெரிந்த  ஆவிக்குரிய அனுபவங்களுள்ள ஒரு சகோதரன்  இருக்கின்றார். இந்தச் சகோதரன் நல்ல படிப்பு படித்திருந்தும் இவருக்கு ஏற்ற எந்த வேலையும் கிடைக்கவில்லை. திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. இவரது தாயார் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அந்தத் தாய் இவருடன் கூட வசித்துவந்தார். இந்தத் தாய்க்கு மாதம்தோறும் கிடைக்கும் ஓய்வூதியத்தில் இந்தச் சகோதரன் குடும்பம் நடத்திவந்தார். 

தனக்கு ஏற்ற வேலை வேண்டுமென்று இந்தச் சகோதரன் பல ஆண்டுகள் ஜெபித்தபோதிலும் இவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஒருமுறை குடும்பத் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது உறவினர் ஒருவர் இந்தச் சகோதரனைப் பார்த்து, "எத்தனை நாட்கள் உன் அம்மாவின் ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்துவாய்? உன் அம்மா இறந்தபின் உனக்கு வருமானத்துக்கு என்ன செய்வாய்?" என்று கேட்டார். அது இந்தச் சகோதரனுக்கு மிக வேதனையைக் கொடுத்தது. 

அன்று இரவு இவரால் உறங்கமுடியவில்லை. உறவினர் கூறியது உண்மைதானே? அம்மா இறந்தபின் நாம் என்ன செய்வோம் எனக் கலங்கி, இப்படி ஜெபித்தார்: "ஆண்டவரே, நீர் ஏன் என்னை இப்படி மற்றவர்கள் அற்பமாக எண்ணுமளவுக்கு வைத்திருக்கின்றீர்?   எனக்கு வாழ்க்கைக்கு ஒரு வழியைக் காட்டும்" என்று  அழுதார். அப்போது ஆண்டவர் இவருக்கு இன்றைய தியான வசனத்தைக் காண்பித்தார். இந்தச் சகோதரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அது சம்பந்தமில்லாத தேவ பதிலாகத் தெரிந்தது.

ஒருசில ஆண்டுகள் கடந்தன. தேவன் இந்தச் சகோதரனைக் கண்ணோக்கினார். இந்தச் சகோதரனுக்கு அவரது படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைத்தது. ஆனால் அவர் பணியில் சேர்ந்து பத்து நாட்களில் அவரது அம்மா மரித்துப்போனார்கள். அவர்கள் மூலம் கிடைத்துவந்த ஓய்வூதியமும் அரசாங்கத்தால் உடனேயே நிறுத்தப்பட்டது.  அப்போதுதான் ஆண்டவர் காட்டிய இன்றைய வேத வசனம் அவரது வாழ்வில் நிறைவேறியது அவருக்குப் புரிந்தது. 

ஆம்  அன்பானவர்களே, இஸ்ரவேல் மக்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்து   மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனைப் புசித்ததுபோல தேவன் இந்தச் சகோதரனுக்கு அவரது தாய்மூலம் அதுவரை கொடுத்துவந்த மன்னாவை நிறுத்தி அவரது சொந்த உழைப்பின் பயனை அனுபவிக்கச் செய்தார். தாயாரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட உடனேயே இவரது உழைப்பின் பலனை இந்தச் சகோதரன் அனுபவிக்கத் துவங்கினார். இப்போது இவர் நல்ல நிலையில் இருக்கின்றார். வாழ்வின் ஒருவழி அடைக்கப்படும்போது மறுவழி நிச்சயம் திறக்கும். 

ஆம், நம்மைக்குறித்து தேவனுக்கு ஒரு திட்டமுண்டு. மற்றவர்கள் கூறும் அவதூறுக்கும், பரிகாசத்துக்கும் கவலைப்படாமல் தேவனையே சார்ந்து வாழப்பழகுவோம். மட்டுமல்ல, எந்த ஒரு சிறிய வேத வசனமும் இந்த உலகத்தில் யாராவது ஒருவருக்கு வாழ்வில் பலன்தருவதற்காகவே எழுதப்பட்டுள்ளது. தேவ வசனங்களை விசுவாசத்துடன் ஏற்று வாழ்வாக்குவோம். வாழ்வில் அற்புதங்களை தேவன் செய்வதை அனுபவிப்போம். 

ஆதவன் தியானம்
எண் :- 2055 - நாள் :- 24.09.2026

"அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்," (அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 : 41 )

ஆரம்பகால ஊழியங்கள் கிறிஸ்துவை மட்டுமே மையப்படுத்துபவையாக  இருந்தன. எப்படியாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அவரது மீட்பினையும் மக்களுக்கு அறிவிக்கவேண்டுமென்று சீடர்கள் விரும்பிச் செயல்பட்டனர். எனவே தங்களது சுய பெருமை, புகழ்ச்சி இவைகளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

இன்றைய தியான வசனம், சாதாரண விசுவாசிகளாகிய நமக்கும் இத்தகைய அவமானங்கள் ஏற்படலாம்; புறக்கணிப்புகள் நேரலாம் என்பதனையும் நாம் அவற்றைத் தாங்கி விசுவாசத்தில் நிலைத்து நிற்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது என்பதனையும் விளக்குகின்றது. 

இன்று பல அரசாங்கச் சட்டங்கள் சில சலுகைகளை கிறிஸ்தவர்களுக்கு மறுக்கின்றன. ஆனால், அந்தச் சலுகைகளைப் பெறுவதற்குப்  போலி சான்றிதழ் பெற்று  பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என்பதை மறைக்கின்றனர்.  

மட்டுமல்ல, சிறுபான்மையினருக்கு என அரசாங்கம் வழங்கியுள்ள சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி சாதாரண சிறுபான்மை கிறிஸ்தவ மக்களை  சில கிறிஸ்தவ சபை அமைப்புக்களே வஞ்சிக்கின்றன. அதாவது சிறுபான்மையினருக்கான சலுகைகள் - குறிப்பாக கல்வித்துறையில் - கல்வி நிறுவங்களை நடத்தும் கிறிஸ்தவ சபைகளே அனுபவிக்கின்றன. நீதிமன்றங்களில் பல வழக்குகள் சாதாரண கிறிஸ்தவர்களால் கிறிஸ்தவ சபைகளுக்கு எதிராகவே நடைபெற்றுக்கொண்டிருப்பதே இதற்குச் சான்று.  

மட்டுமல்ல, சில வழக்குகளில் பிற மத வழக்கறிஞர்களே கிறிஸ்தவ சபைகளுக்காக வாதாடுகின்றனர். ஒருசில பிறமத நீதிபதிகளே கிறிஸ்தவ சபைகளின் மனிதாபிமானமற்ற செயல்பாடுகளை வேத வசனங்களைச் சுட்டுக்காட்டியே கண்டித்துள்ளனர். இது கிறிஸ்தவர்களுக்கு அவமானமல்லவா?   

ஆம் அன்பானவர்களே, நாம் மெய்யான கிறிஸ்தவர்களாக, கிறிஸ்துவின் சீடர்களாக வாழவேண்டுமானால் இத்தகைய முரண்பாடுகளைவிட்டு நாம் வெளிவரவேண்டியது அவசியம். பிற மக்கள் மத்தியில் உங்களது நடத்தை அவமானப்படத்தக்கதாக அல்லவா இருக்கின்றது? "அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்." ( பிலிப்பியர் 3 : 11 ) எனும் அப்போஸ்தலர் பவுலின் வார்த்தைகளை வாசித்தாலும் பிரசங்கித்தாலும் மட்டும் போதாது. குறைந்தபட்சம் அதில் பாதியளவாவது நாம் கடைபிடிக்கவேண்டியது அவசியம். 

கிறிஸ்துவின் நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், அப்போஸ்தலர்கள் அன்று சந்தோஷப்பட்டார்கள். இன்று அவரது பெயரைப் பயன்படுத்தி சொத்துக்களும் சுகபோக வாழ்க்கை வாழ்வதிலும் ஊழியர்கள் சந்தோஷப்படுகிறார்கள். 

இன்று சாதாரண விசுவாசிகள் நாம்  இத்தகைய ஊழியர்களைப் பார்க்கவேண்டியது அவசியமில்லை. நாம் கிறிஸ்துவையே நோக்கிப்பார்ப்போம். நமக்கு வரும் புறக்கணிப்புகளையும், கிறிஸ்தவர்களாக இருப்பதால் வரும் நஷ்டங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வோம். கிறிஸ்துவின் பெயரால் நமக்கு ஏற்படும் அவமானங்களால் மகிழ்ச்சியடைவோம். 

ஆதவன் தியானம்

எண் :- 2056 - நாள் :- 25.09.2026

"என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்." ( ஏசாயா 49 : 25 ) 

தேவனுக்கு நம்மை அர்ப்பணித்து வாழும்போது நமக்கு பல்வேறு ஆசீர்வாதங்கள் உண்டு. அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 

இதற்குமுன் நாம் வாழ்ந்த தேவனை அறியாத வாழ்க்கை நமக்கு பல்வேறு அடிமைத்தனங்களை வாழ்வில் கொண்டுவந்திருந்தது; சிறை வாழ்க்கைபோல பல சிறையிருப்புக்களை நமக்கு ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு பாவங்கள், நோய்கள், கடன்கள், குடும்பப் பிரச்சனைகள், போன்று பல சிறைகள் நமக்குச் சாத்தானால்  ஏற்பட்டிருந்தன. ஆம், சாத்தானையே இன்றைய தியான வசனம் "பராக்கிரமன்", "பெலவந்தன்"  என்று கூறுகின்றது. தேவனுக்குத் தங்களை  அர்ப்பணித்து வாழும்போது இப்படி, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.  

கடந்த காலங்களில் நாம், பொருளாதார இழப்புக்கள். தொழில் இழப்புகள், நண்பர்கள் மற்றும் நம்பியவர்களால் கைவிடப்பட்ட இழப்புக்கள், உடல் பலவீனமெனும் இழப்புகள், போன்ற பல்வேறு இழப்புகளை வாழ்வில் சந்தித்திருக்கலாம். இவைகளையே கொள்ளையிடப்பட்டவைகள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இப்படி, பெலவந்தனால் நம்மிடமிருந்து கொள்ளையிடப்பட்டவைகளும் விடுதலையாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மட்டுமல்ல, எபேசியர் நிரூபத்தில் நாம் வாசிக்கின்றோம், "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு" ( எபேசியர் 6 : 12 ) என்று. இப்படி உலக வாழ்க்கையிலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் துரைத்தனங்கள், பல்வேறு அதிகாரங்கள், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள்,  வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகள் நமக்கு எதிரிட்டு நிற்கின்றன. அதாவது நம்மோடு வழக்காடுகின்றன.  

இப்படி உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நானே வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.  இதனையே அன்று இஸ்ரவேல் மக்களைப்பார்த்து மோசே கூறினார், "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" ( யாத்திராகமம் 14 : 14 ) என்று.

ஆம் அன்பானவர்களே, கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழும்போது நமக்குக் கிடைக்கும் பலன்கள் இவைகளாகும்.  முதலில் அவர் நமது சிறையிருப்பை மாற்றுகின்றார்; நாம் இழந்துபோனவைகளை மீண்டும் பெறும்படி கிருபை செய்கின்றார்; நமக்காக அவரே போராடுகின்றார்; நம்மை மட்டுமல்ல, நமது பிள்ளைகளையும் பாதுகாத்து நடத்துகின்றார். 

நமது வாழ்க்கையையும், நமது குடும்பத்தையும் கர்த்தரது பாதுகாப்பில் ஒப்புக்கொடுத்து தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம். 

ஆதவன் தியானம்

எண் :- 2057 - நாள் :- 26.09.2026

"யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனை கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தார்." ( யோனா 1 : 17 )

யோனா தீர்க்கத்தரிசியைக்குறித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்" ( மத்தேயு 12 : 40 ) எனக் குறிப்பிட்டுள்ளார். இயேசு கிறிஸ்துவைக் குறித்த பிதாவின் திட்டத்தைப்போல யோனாவை விழுங்கிய மீன் தேவ திட்டத்தால் அனுப்பப்பட்ட மீன். குறிப்பிட்ட இடத்தில் கப்பலிலிருந்து யோனா வீசப்படுவார் நீ அங்கே சென்று காத்திருந்து அவர் தண்ணீரில் விழும்போது அவரை விழுங்கிவிடு என தேவன் மீனுக்குக் கட்டளையிட்டு அனுப்பியிருந்தார்.

இன்று பல போதகர்கள் யோனா தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்று தவறாகப் போதித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வேதாகமம் அப்படிக் குறிப்பிடவில்லை. தேவனுக்கும் யோனாவுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. ஒரு நண்பனுடன் உரையாடுவதுபோல யோனா தேவனோடு உரையாடி வந்தார். நினிவே நகர மக்கள் தனது போதனையினைக் கேட்டு மனம் திரும்புவார்கள் என்றும், அவர்களைத் தேவன் அழிக்கமாட்டார் என்பதும் யோனாவுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. தனது நாட்டில் இருக்கும்போதே யோனா இதுகுறித்து தேவனிடம் பேசியிருக்கிறார். 

எனவேதான் நினிவே நகரை தேவன் அழிக்காமல் காப்பாற்றியபோது அவர், "கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்." ( யோனா 4 : 2 ) என்கின்றார். இப்படி நீர் செய்வீர் என்பதால்தான் நான் நீர் கூறியபடி முன்னமே நினிவேக்குப் போகாமல் தர்ஷீசுக்கு ஓடிப்போனேன் என்று யோனா கூறுவது கவனிக்கத்தக்கது. எவ்வளவு நெருக்கமான உரையாடல் பாருங்கள்!!!

யோனா மிகப்பெரிய தீர்க்கத்தரிசியாக இருந்தார். அவர் நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இதனை நாம் 2 இராஜாக்கள் நூலில் வாசிக்கின்றோம். "காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்." ( 2 இராஜாக்கள் 14 : 25 ) ஆம், யோனாவின் வார்த்தையின்படியே அந்த இராஜா இழந்துபோன இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான்.

இன்று நாமும் யோனாவைப்போல தேவ உறவுடன் வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். யோனா தேவனோடு ஒரு நண்பனிடம் பேசி முடிவெடுத்ததுபோல நாம் இருக்கின்றோமா? தேவனுக்கும் நமக்குமுள்ள உறவு யோனாவுக்கும் தேவனுக்கும் இடையிலிருந்த உறவுபோல இருக்கின்றதா?  அப்படி இருக்குமானால் தேவன் நம்மைக் கைவிடமாட்டார். காரணம், யோனாவின் உள்ளான மனநிலை தேவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வதல்ல. 

யோனாவைப்போல நமது பிரச்சனைகளையும், எண்ணங்களையும் நாம் தேவனோடு பகிர்ந்துகொள்கின்றோமா? அப்படியானால், யோனாவைக் காப்பாற்ற ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்ததைப்போல நம்மைக் காப்பாற்றிடவும் தேவன் வகைசெய்வார்.  மட்டுமல்ல, நாம் தவறி செய்யாமல் விட்டுவிட்ட நம்மைக்குறித்த தேவ திட்டத்தை மீண்டும் நாம் செய்து முடிக்க உதவிடுவார். அப்போது நாம் இதுவரை பயணித்த நமது தர்சீஷின் பயணத்தை மாற்றி தேவன் நமக்குக் குறித்துள்ள நினிவேயைநோக்கிப் பயணம் செய்வோம்.  

ஆதவன் தியானம்

எண் :- 2058 - நாள் :- 27.09.2026

"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 )

இந்த உலகத்தில் பலரும் பல்வேறு காரியங்களைக்குறித்துப் பயப்படுகின்றனர். தங்களது எதிர்காலம், தங்களது பிள்ளைகளின் எதிர்காலம், இந்த உலகினில் தங்களை நெருக்குகின்ற பல்வேறு பிரச்சனைகள், நோய்கள், இவைகளைக்குறித்து மனிதர்கள் பயப்படுகின்றனர். ஆனால் அப்போஸ்தலரான பவுல் இவைகளைக்குறித்து அல்ல; மாறாக, தனது ஆவிக்குரிய பயத்தைக்குறித்து இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார்.

நாம் நன்கு பராமரித்து வளர்த்த பயிரினை தோட்டத்தின் வேலி அகன்று ஆடுமாடுகள் உள்ளே நுழைத்து அழித்துவிட்டால் நமக்கு எவ்வளவு கெடுதல் வரும்! அதுபோல் தான் விசுவாசத்தால் போதித்து ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையச் செய்துள்ள மக்களை யாராவது தந்திரமான மாற்று போதனைகளால் அழித்துவிடுவார்களோ என்று பவுல் பயப்படுகின்றார். 

ஆதியில் பாம்பு இப்படித்தான் நமது ஆதிப்பெற்றோரை வஞ்சித்தது. தேவனுடைய வார்த்தையைத் தள்ளி, தான் கூறுபவையே உண்மை என்று அவர்களை நம்பச் செய்தது. இதனையே அவர், "சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்" என்கின்றார். 

தேவனுடைய வார்த்தைகளுக்கு எதிரான போதனைகள் சாத்தானின் போதனைகளாகும். தேவன் ஆதாம் ஏவாளிடம், "ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்." ( ஆதியாகமம் 2 : 17 )

இதற்கு மாற்றாக, "சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3 : 4, 5 )

நாம் அனைவருமே தன்னைப்போல பாவமில்லாத தேவனைப்போல மாறவேண்டுமென்பதே தேவ சித்தம். ஆனால் சர்ப்பமாகிய சாத்தான், "நீங்கள் இந்தப் பழத்தை உண்டால் நன்மை தீமை அறிந்து தேவனைப்போல மாறிவிடுவீர்கள் என்று தேவன் அறிவார். அப்படி நீங்கள் மாறிவிடக்கூடாது என்றுதான் இதனை உண்ணவேண்டாம் என்று கூறியுள்ளார்" என்று கூறியது  எவ்வளவு பெரிய தந்திரம் பாருங்கள். ஆனால் அவர்கள் சாத்தானின் வார்த்தைகளையே நம்பி ஏற்றுக்கொண்டனர். 

இப்படியே இன்றும் நடக்கின்றது, எனவே கள்ளப்போதனைகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல். கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவமன்னிப்பு, பரிசுத்தம், சிலுவை சுமக்கும் அனுபவம், நியாயத்தீர்ப்பு, நித்தியஜீவன் போன்றவைக்குறித்த போதனைகளே சரியான வேதாகாமப் போதனைகள். 

இதற்கு மாற்றாக, காணிக்கைக் கொடுத்தால் வெற்றி, உலக ஆசீர்வாதங்களுக்கான ஜெபம்,  உலக ஆசீர்வாதம், செழிப்பு, வாழ்வில் தோல்வியே இல்லை எப்போதும் வெற்றிதான் எனப் போதிப்பது,  மேலும், வாழ்க்கை மாற்றத்தைக்குறித்துப் போதிக்காமல், மேலோட்டமான பக்திமுயற்சிகளை மட்டும் மக்களைக் கடைபிடிக்கச் செய்வது  போன்றவை சாத்தானின் போதனைகள். அன்று சாத்தான் காட்டிய பழம் கண்களுக்குக் கவர்ச்சியாகவும் இச்சையைத் தூண்டுவதாகவும் இருந்ததுபோலவே இந்தக் கள்ளப்போதனைகள் இருக்கின்றன. 

இத்தகையப் போதனைகளால் உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன் என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

நமது மனது கெடுக்கப்படாமல் இருக்கவேண்டுமென்றால், நாம் தேவனிடம் உண்மையான அன்புள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஆவியானவரின் துணையுடன் வேதாகம வார்த்தைகளை நிதானித்துப் படித்து  விசுவாசிக்கவேண்டும்; அவற்றை வாழ்வாக்கவேண்டும். உலக ஆசை, இச்சையைத் தூண்டும் மாறுபாடான செழிப்பின் செய்தியையே போதிக்கும் போதனைகளுக்கு விலகி வாழவேண்டும்.  

ஆதவன் தியானம்

எண் :- 2059 - நாள் :- 28.09.2026

"ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று" ( 2 இராஜாக்கள் 18 : 7 )

வாழ்க்கையில் நாம் எடுக்கும் முயற்சிகள், நமது பிரயாசங்கள் நமக்குச் சாதகமாக இருக்கவேண்டுமானால் கர்த்தர் நம்மோடு இருக்கவேண்டியது அவசியம். அவர் நம்மோடு இருப்பாரானால் நமது தேவையற்ற முயற்சிகளை ஆரம்பநிலையிலேயே  நமக்குத் தெரிவித்து அவற்றிலிருந்து நம்மை மாறச்செய்வார்; அவருக்கு ஏற்புடையவைகளை நமக்கு அனுகூலமாகும்படிச் செய்வார். 

ஆம்  அன்பானவர்களே, சில செயல்கள் நமது பார்வைக்கு நல்லவையாகத் தெரியும். நல்ல செயல்களாக இருந்தாலும் சிலவேளைகளில் நாம் மற்றவர்களைப்போல அந்தச் செயல்களைச்  செய்ய தேவன் அனுமதிப்பதில்லை. அல்லது குறிப்பிட்ட காலங்களுக்கு அதனைத் தடைசெய்வார். இது ஆவிக்குரிய வாழ்வின் ஒரு இரகசியம்.  தேவ வார்த்தைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது நல்ல காரியம்தான். ஆனால் சிலவேளைகளில் தேவன் அதனைத் தடைபண்ணுவார். "அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு," ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது அவர் நம்மோடுகூடவே இருப்பார். எசேக்கியா ராஜா கர்த்தருக்கு உகந்த செயல்களை செய்து கர்த்தரையே பற்றிக்கொண்டு வாழ்ந்ததால், கர்த்தர் அவரோடு இருந்தார்.   அவர் போகுமிடமெல்லாம் அவருக்கு வெற்றியாயிற்று.  இந்த எசேக்கியா "ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்" ( 2 இராஜாக்கள் 18 : 2 ) என்று வாசிக்கின்றோம். இருபத்தைந்து வயதிலேயே எசேக்கியா கர்த்தரை அறிந்து அவருக்கு ஏற்புடையவராய் வாழத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார்.  

எசேக்கியாவுக்குமுன் யூதாவை ஆட்சிசெய்த பல ராஜாக்களும் கார்த்தரைவிட்டு பின்மாறிப்போன வாழ்க்கை வாழ்ந்தனர். ஆனால் இருபத்தைந்து வயதில் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட எசேக்கியா கர்த்தருக்கு உண்மையானவராக வாழ்ந்தார். "அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்." ( 2 இராஜாக்கள் 18 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

எனவேதான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று கூறினார். நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருந்ததால் நாம் போகுமிடமெல்லாம் நமது ஆவிக்குரிய வாழ்வு  நமக்கு வெற்றியாகும். ஆவிக்குரிய கனிகள் நிறைந்தவர்களாகவும் இருப்போம். 

நாம் வெறுமனே ஒரு பக்தி வாழ்க்கை வாழ்வதற்கு அழைக்கப்படவில்லை. மாறாக, கனிகொடுக்கக்கூடிய வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். நாம் நட்டு, நீர்பாய்ச்சி உரமிட்டு வளர்க்கும் மரமானது பல ஆண்டுகள் ஆகியும் கனிகொடுக்கவில்லையானால் அதனால் நமக்கு என்ன பலன்? கனியுள்ள வாழ்க்கை இல்லையானால் நாமும் அதுபோல பலனற்றவர்களாக மாறிவிடுவோம்.  

மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது ஜெபங்களையும் அவர் கனிவுடன் கேட்டுப் பதிலளிப்பார்.  எசேக்கியாவோடு கர்த்தர் இருந்ததால் அவரது ஜெபத்தைக்கேட்டு  ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தான் கூறிய வார்த்தைகளையே  கர்த்தர் மாற்றினார். மரித்துப்போவாய் என்று முதலில் கூறியிருந்தும் தனது முடிவினை கர்த்தர் மாற்றி எசேக்கியா மேலும் பதினைந்து ஆண்டுகள் வாழ வாழ்வை நீட்டிக்கொடுத்து மகிழப்பண்ணினார். 

எசேக்கியா ஜெபித்தபோது,  தான் கர்த்தருக்கு உண்மையாக இருந்ததை கர்த்தருக்கு நினைவு படுத்தினார். "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. 

நாம் இப்படி நமது சாட்சியுள்ள வாழ்வை கர்த்தருக்கு எடுத்துக்கூறி ஜெபிக்கக்கூடிய துணிவுள்ளவர்களாக வாழ்வோமானால் கர்த்தர் நம்மோடு இருப்பார்; நாம் கனிகொடுப்பது மட்டுமல்ல, தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.  


ஆதவன் தியானம்

எண் :- 2060 - நாள் :- 29.09.2026

"கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்." ( செப்பனியா 1 : 14 )

இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும், கிறிஸ்தவ அடிப்படை சத்தியத்துக்கு விலகி, தேவனால் நமக்கு என்ன உலக ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதே பலரது வேண்டுதலும் தேடலுமாக இருக்கின்றது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்து நம்மில் பெரும்பாலோனோர் சிந்திப்பதில்லை, அது குறித்து பலரும் போதிப்பதுமில்லை.  வெறுமையான ஜெபங்களும், வேண்டுதல்களும், ஆராதனைகளும்  பெரிதல்ல, நாம் அவரது வருகைக்குத் தயாராக இருக்கின்றோமா என்பதுதான் ஆவிக்குரிய மக்களாகிய நாம் சிந்திக்கவேண்டிய முக்கிய காரியம். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையினையே இன்றைய தியான வசனம், "கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது" என்று நம்மை எச்சரிக்கின்றது. மட்டுமல்ல, இன்று உலகினில் உடல்பலமும், பணபலமும், அதிகாரபலமும் உள்ளவர்கள்கூட அவரது வருகைக்கு ஆயத்தமாய் இல்லாதிருந்தால் அந்தநாளில் நிலை நிற்க முடியாது. ஆம், "கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்" என்று கூறப்பட்டுள்ளது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது வருகையினைக் குறித்துக் கூறும்போது, "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." ( மத்தேயு 24 : 29, 30 ) என்று கூறினார். 

ஆம், "அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்." ( செப்பனியா 1 : 15 ) இன்று கிருபையுள்ள ஆண்டவராகத் தெரியும் அவர் அன்று நீதியுள்ள நியாதிபதியாக வருவார். அப்போது அவரது கிருபையின்படியல்ல, மாறாக  நமது செயல்களின்படியே அவர் நம்மை நியாயந்தீர்ப்பார். 

ஆனால் அவருக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களுக்கு கர்த்தர் அடைக்கலமாக இருப்பார். நாம் அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமானால் அந்த நாளில்  பராக்கிரமசாலிகள் கதறி அழுவதுபோல நாம் அழமாட்டோம். காரணம், கர்த்தர் நமக்கு அடைக்கலமும் அரணான கோட்டையாக இருப்பார். "கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்." ( யோவேல் 3 : 16 ) என்று வாசிக்கின்றோம். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அவருக்கு ஏற்புடையவர்களாக வாழ்பவர்களுக்கு பயப்படும் நாளல்ல; அது மகிழ்ச்சியின் நாள். மணவாளன் மணவாட்டி இணையும் திருமண நாள். ஆம், இதனை தனது சீடனாகிய யோவானுக்குத் தேவன் வெளிப்படுத்திக்கொடுத்தார். "நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 7 ) 

கர்த்தர் வரவிருக்கும் அந்த நாளுக்காகப் பயப்படாமல் இருக்கவேண்டுமானால், "ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்" எனும் வசத்துக்கேற்ப நம்மை ஆயத்தப்படுத்தி வாழவேண்டியது அவசியம். உலக ஆசீர்வாதங்களுக்கு ஜெபிப்பதும் உழைப்பதும் இறுதிநாளுக்கு நமக்கு எந்த பலனையும் கொண்டுவராது.   


ஆதவன் தியானம்

எண் :- 2061 - நாள் :- 30.09.2026

"அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் .." ( எபிரெயர் 10 : 16 )

புதிய ஏற்பாட்டு உடன்படிக்கையினைக் குறித்து இன்றைய தியான வசனம் கூறுகின்றது. மோசே மூலம் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு பல்வேறு கட்டளைகளைக் கொடுத்தார். அந்தக் கட்டளைகளிபோல உலகினில் வேறு எவரும் பெற்றது கிடையாது. "இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?" ( உபாகமம் 4 : 8 ) என்று கூறப்பட்டுள்ளது. 

யாத்திராகமம் முதல் உபாகமம் முடிய கூறப்பட்டுள்ளக் கட்டளைகள் தேவன் அந்த மக்களை நல்வழிப்படுத்தவும் பிற மக்கள் இனத்திலிருந்து தான் தெரிந்துகொண்ட மக்களைச் சிறப்பானவர்களாக மாற்றவும் கொடுத்தவை.   இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் தேவன் வேறு யாருக்கும் கொடுக்கவுமில்லை. இந்தக் கட்டளைகள் மொத்தம் 613 என்று வேத அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். 

ஒரு சிறந்த யூதன் என்பவன் இந்தக் கட்டளைகளைக் கடைபிடிப்பவன்தான் என வேத அறிஞர்களும் பரிசேயர்களும் எண்ணினர். எனவே, அவர்கள் இந்தக் கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தனர்.  ஆனால் அந்த மக்கள் கட்டளைகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அன்புக்கும் மனித நேயத்துக்கும் கொடுக்கவில்லை.

கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதுபோல அன்பையும் நீதியையும் விட்டுவிடாமல் இருக்கவேண்டும் என்று இயேசு கிறிஸ்து வலியுறுத்தினார். "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே." ( மத்தேயு 23 : 23 )

ஆம் அன்பானவர்களே, நியாயப்பிரமாண கட்டளைகள் அவற்றைக் கடைபிடிப்பதால் மட்டும் எவரையும் நீதிமானாக்குவதில்லை. "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) என்று வேதம் கூறுவது இதனால்தான். உள்ளான மனிதனில் மாற்றம் ஏற்படாமல் செய்யும் எந்தச் செயலும் தேவனுக்கு ஏற்றதாக இருக்க முடியாது. 

இத்தனை கட்டளைகளை தேவன் கொடுத்திருந்தும் மனிதனை நீதிப்பாதையில் நடத்த நியாயப்பிரமாணம் பலவீனமாகிவிட்டது. எனவே, அதனை மனிதனுக்காக தேவனே செய்துவிடத் தீர்மானித்தார். அதுவே கிறிஸ்து மூலம் உருவான புதிய கிருபையின் உடன்படிக்கை. 

"அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 ) எனவே, பாவத்துக்கு நாம் மரித்தவர்களாக இருக்கவேண்டுமானால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம்கொண்டு அவரது கிருபைக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டுமே தவிர கட்டளைகளுக்கு அல்ல. 

கட்டளைகளின் எண்ணிக்கையல்ல, மாறாக, கிறிஸ்துவின் நீதியின் பிரமாணம் நமது உள்ளங்களில் எழுதப்படவேண்டும். அப்போது, சத்திய ஆவியானவரே பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும்  உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். (யோவான் 16:8) 

கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, கிறிஸ்துவின் பிரமாணங்களை நம்முடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர் நமது மனதில் எழுதுவேன் என்று கூறுகின்றார். இது கிறிஸ்துவின் கிருபையால் நமக்கு ஏற்படுகின்றது.   "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது." ( ரோமர் 6 : 14 ) ஆம், பாவம் நம்மை மேற்கொள்ளாதபடி புதிய உடன்படிக்கை நமது மனதில் எழுதப்படுகின்றது.   

சுருக்கமாக - கற்பலகைகளில் எழுதப்பட்ட பழைய கட்டளைகள்  அன்பை மறக்கச் செய்தன; இருதயத்தில் எழுதப்பட்ட புதிய உடன்படிக்கை கிருபையினால் அன்பைக் கடைபிடித்து நாம் பரிசுத்தமாக வாழ உதவுகின்றது. 

✒ சகோ. எம். ஜியோ பிரகாஷ் ✒️


சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🏫 Bible Meditation - September 2026

  Meditation  – 2032                                                                                                                        ...