Friday, October 18, 2024

ஆகாயத்தில் சிலம்படித்தல்

 'ஆதவன்' அக்டோபர் 22, 2024. செவ்வாய்க்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,353

"ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." ( 1 கொரிந்தியர் 9 : 26 )

ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும்.நமது நோக்கத்தைப்பொறுத்தே நமது ஆவிக்குரிய வாழ்வு அமையும். அதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் விளக்குகின்றார். நமது ஆவிக்குரிய வாழ்வில் ஒரு நிச்சயம் வேண்டும். இந்த வாழ்க்கைக்குப் பின்னர் முடிவில்லாத நித்திய ஜீவன் உள்ளது. அதனைப் பெறுவதே நமது இலக்காக இருக்கவேண்டும். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும் இதுகுறித்து எந்த நிச்சயமும் கிடையாது. ஆவிக்குரிய காரியங்கள் செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு பக்தி முயற்சிகளைச்  செய்கின்றனர். பல்வேறு பக்தி அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் நித்திய ஜீவனைப்பற்றிய எண்ணமோ ஆவிக்குரிய அறிவோ இவர்களுக்கு இருப்பதில்லை.

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்,  "ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." என்று. அதாவது மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறார்.  

ஆவிக்குரிய வாழ்க்கையை அப்போஸ்தலரான பவுல் ஓட்டப்பந்தயத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது முதல் பரிசைப்பெறவேண்டும் எனும் எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். அதுபோலவே சிலம்பம் பண்ணும்போது வெறுமனே ஆகாயத்தில் சிலம்பக்கம்பைச் சுழற்றிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. எதிலும் ஒரு நோக்கம் வேண்டும். 

அந்த நோக்கம் நமக்கு இருக்குமானால் நாம் அதற்காக சில முயற்சிகளும் பயிற்சிகளும் எடுத்திருப்போம். ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் பயிற்சியில்லாமல் திடீரென்று மைதானத்தில் ஓடி பரிசுபெற முடியாது. அதுபோல ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற சில பயிற்சிகள் நமக்குத் தேவை, சில ஒறுத்தல்கள் தேவை.

"பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்." ( 1 கொரிந்தியர் 9 : 25 )

ஆம் அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை ஆராய்ந்து பார்ப்போம். நாம் செய்யும் செயல்கள், நமது எண்ணங்கள் எதனை இலக்காகக் கொண்டு செய்யப்படுகின்றன என்று சிந்திப்போம். நிச்சயமில்லாத, குறிக்கோளற்ற வாழ்க்கை அர்த்தமில்லாததுநான் நிச்சயமில்லாதவனாக இந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழவில்லை. ஆகாயத்தில் சிலம்படிப்பவனாக வாழவில்லை மாறாக, மேலான மறுவுலக வாழ்க்கை எனக்கு உண்டு எனும் நிச்சயத்தோடு ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடருகின்றேன் என்று அப்போஸ்தலரான பவுலைப்போல தெளிவோடு வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

லீதியாள் கற்றுத்தரும் பாடம்

 'ஆதவன்' 💚அக்டோபர் 21, 2024. திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,352


"தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 14 ) 

அப்போஸ்தலரான பவுல் பிலிப்பி நகரில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கச் சென்றபோது நடந்த இந்தச் சம்பவம் நமக்கு ஒரு உண்மையினைப் புரியவைக்கின்றது. அதாவது நற்செய்தியைக் காதால் கேட்பது என்பது வேறு அதனை உள்ளத்தில் ஏற்றுக்கொள்வது என்பது வேறு. நாம் நூற்றுக்கணக்கான பிரசங்கங்களைக் கேட்கலாம், நல்ல ஆவிக்குரிய கட்டுரைகளையும் தியானங்களையும் வாசிக்கலாம். ஆனால் அவை நமது இருதயத்தில் பதிந்து மனமாறுதல் ஏற்படவேண்டுமானால் தேவன் நமது இருதயத்தில் செயல்புரிய இடம்கொடுக்கவேண்டும்.  

இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனம் கூறுகின்றது, "ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்." (அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 13 ) என்று. அதாவது அங்கு பல பெண்கள் பவுலின் பிரசங்கத்தைக் கேட்கக் கூடியிருந்தனர்.  அவர்கள் எல்லோரும் ஏனோதானோ மனப்போக்கில் பிரசங்கத்தைக் கேட்டனர். ஆனால் லீதியாள் உள்ளான ஆர்வத்துடன் பிரசங்கத்தைக் கேட்டாள். எனவே தேவன் அவளது இருதயத்தைத் திறந்தார்.

இன்று பல ஆலயங்களில் விசுவாசிகள் பிரசங்கநேரத்தை ஏதோ பொழுதுபோக்கும் நேரமாக எண்ணுகின்றனர். சிலர் பிரசங்கம் முடிந்தபின்னர் நாம் ஆலயம் சென்றால் போதும் என எண்ணி காலதாமதமாக ஆலயத்துக்கு வருகின்றனர். அதாவது அவர்களுக்கு பிரசங்க நேரத்தைவிட சடங்காச்சார வழிபாடுகள் மட்டுமே மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கின்றன. 

அன்பானவர்களே, தேவ வார்த்தைகள் நமது இருதயத்தில் நுழையாமல் நம்மில் மாற்றம் ஏற்படாது. ஏற்கெனவே யாரோ எழுதி அச்சிடப்பட்ட ஜெபங்களைப்பார்த்து வாசிப்பது  போதும் என பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இவை தேவனை அறிய உதவாது. லீதியாளைப்போல தேவ வார்த்தைகள் நம்முள் இறங்க அனுமதித்தால் மட்டுமே நாம் தேவனை அறிய முடியும். 

"மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." ( ஏசாயா 55 : 10, 11 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

எனவே, ஆன்மீக காரியங்களில் ஈடுபடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத காரியங்களில் ஈடுபட்டு நமது நேரத்தை வீணாக்காமல் நல்ல பிரசங்கங்களை காதுகொடுத்துக் கேட்டு இருதயத்தில் பதிய வைப்போம்; வேதாகமத்தை ஆவியானவரின் துணையோடு கருத்தாக வாசிப்போம்; லீதியாளைப்போல் தேவ வார்த்தைகள் நம்முள் செயல்பட அனுமதிப்போம். அப்போது தேவன் நமது இருதயத்தைத் திறந்து மேலான ஆவிக்குரிய சத்தியங்களைப் புரியவைப்பார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Thursday, October 17, 2024

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக

 'ஆதவன்' அக்டோபர் 20, 2024. ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,351


"நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு......." ( எபேசியர் 3 : 20 )

இன்றைய தியான வசனம் தேவனுடைய வல்லமை நமக்குள் செயல்படும் விதத்தினை விளக்குவதாக உள்ளது. ஆவிக்குரிய வாழ்வில் நாம் எவ்வளவு பரிசுத்தமாய் வாழவேண்டுமென்று நினைக்கின்றோமோ, விரும்புக்கின்றோமோ அதற்கும் மேலாக அவர் நமக்குள் செயல் புரிந்து நமது ஆவிக்குரிய வாழ்வை மேம்படுத்துவார்.  

சில வேளைகளில் நமக்குள் எழும் எரிச்சல்கள், கோபங்கள், போட்டிகள், பொறாமை எண்ணங்கள் போன்ற குணங்களை நாமே விரும்புவதில்லை. ஆனால் உள்ளார்ந்த நிலையில் இவற்றை மாற்றிடவேண்டுமென்று எண்ணுகின்றோம் ஆனால் நம்மால் அது முடிவதில்லை. எனவே மீண்டும் மீண்டும் இந்தத் தவறைச்  செய்கின்றோம். காரணம் இவை மனிதனால் கூடாதவை.

ஆனால் இயேசு கிறிஸ்து, "மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்." ( மத்தேயு 19 : 26 ) அது எப்படிக் கூடும்? அதனையே, இன்றைய தியான வசனத்தில் "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும்மிகவும் அதிகமாய் நமக்குள் கிரியை செய்து" என்று கூறப்பட்டுள்ளது. இந்த  வார்த்தைகளின்படி முதலில் நாம் நமது தகாத குணங்கள் எண்ணங்கள் நம்மைவிட்டு மாறவேண்டுமென்று எண்ணவேண்டியது அவசியம். அப்படி ஒரு உணர்வுள்ள இருதயம் நமக்கு இருக்குமானால் அதற்கு அதிகமாய் அவர் நமக்குள் செயல்புரிந்து நம்மை மாற்றுவார்.  

தாய்ப்பறவையானது தனது குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுக்கொடுக்க வேண்டுமானால் அந்தக் குஞ்சுகள் முதலில் பறப்பதில் ஆர்வம் காட்டவேண்டும். நான் காலமெல்லாம் இப்படியே கூட்டில் இருப்பேன், எனது தாய் உணவுத்தேடி எனக்குக் கொண்டுவரவேண்டுமென்று எண்ணிக்கொண்டே இருக்குமானால் அந்தக் குஞ்சு ஒருநாளும் பறக்கக்  கற்றுக்கொள்ள முடியாது. அதுபோலவே, நீச்சல் கற்றுக்கொள்ள முதலில் தண்ணீரில் இறங்கவேண்டியது அவசியம்.

நமது குணங்கள் மாறவேண்டுமானால் முதலில் நமது தவறான குணங்களை நாம் உணரவேண்டியது அவசியம். இரண்டாவது அப்படித் தவறு என உணர்ந்த குணங்கள் நம்மைவிட்டு நீங்கவேண்டும் எனும் எண்ணம் நமக்கு வேண்டும். அப்படி இருக்குமானால், இன்றைய தியான வசனத்தின்படி நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்து நமது குணங்களை தேவன் மாற்றுவார். இதற்கு மாறாக, நாம் மற்றவர்களை உதாரணமாகக் கொண்டு "அவன் / அவள் அப்படித்தானே செய்கின்றான்/ள் எனவே நானும் அப்படிதான் இருப்பேன்; நான் செய்வது சரிதான்" என்று கூறிக்கொண்டிருப்போமானால் நமது குணங்கள் மாற வாய்ப்பே இல்லை.  

நல்ல குணங்களை விரும்புவோம்; அவற்றை நமதாக்கிக்கொள்ள தேவனிடம் மெய்யான இருதயத்தோடு வேண்டுவோம், தேவன் நம்மை முற்றிலுமாக மாற்றுவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

மீன் வயிற்றிலே யோனா

 'ஆதவன்' 💚அக்டோபர் 19, 2024. 💚சனிக்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,350


"யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக்  கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தார்." ( யோனா 1 : 17 )

ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் சில வேளைகளில் தவறிவிடுகின்றோம். ஆனால் தேவன் நமது பலவீனங்களை அறிந்திருக்கின்றார். எனவே, நம்மைக்குறித்த அவரது சித்தத்தை நிறைவேற்றிட அவர் சில தண்டனைகள் தந்து நம்மை உணர்வடையச் செய்து  சரியான வழிக்குத் திருப்பி நடத்துகின்றார். 

யோனாவின் வாழ்வில் இதுதான் நடந்தது. யோனாவைக்குறித்து தேவனுக்கு ஒரு சித்தம் இருந்தது. அது நினிவே நகருக்குச் சென்று தேவச்செய்தியை எடுத்துரைப்பது. ஆனால் யோனா அந்தத் தேவச்  சித்தத்துக்கு எதிராகச் செயல்படத் துவங்கினார்.  அவரைக் கண்டித்துத் திருத்தவேண்டியிருந்ததால் யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனை கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தார்.

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே நமது வாழ்க்கையிலும் நடைபெறுகின்றது. நாம் தவறும்போது தேவன் நம்மைச் சோதித்துத் திருத்துகின்றார். அவர் நம்மைச் சோதித்தாலும் யோனாவுக்கு ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தி வைத்திருந்ததுபோல நமக்கும் தப்பித்துக்கொள்ளும் ஒரு வழியை ஆயத்தப்படுத்தி வைத்திருப்பார். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 ) என்று கூறுகின்றார். 

யோனாவுக்கு மூன்று நாள் தண்டனை கொடுத்துத் தப்புவித்தார். நமக்கு ஒருவேளை அது மூன்று மாதங்களாகவோ மூன்று ஆண்டுகளாகவோ இருக்கலாம். ஆனால் யோனா அந்த மூன்று நாட்களிலும் மீனின் வயிற்றிலிருந்து தேவனை நோக்கி ஜெபித்துக்கொண்டிருந்தார். "அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி.."( யோனா 2 : 1 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

மூன்று நாட்களுக்குப்பின் "கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது." ( யோனா 2 : 10 ) இதுபோல நம்மை விழுங்கும் உபத்திரவங்களும் கர்த்தர் நியமித்த நாட்களுக்குப்பின் நம்மை விட்டு அகலும். ஆம் அன்பானவர்களே,  யோனாவைப்போல நாமும் வாழவேண்டியது அவசியம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) என்று எழுதுகின்றார். 

யோனாவை விழுங்கிய பெரிய மீனைப்போல நம்மைப் பிரச்சனைகளும் துன்பங்களும் விழுங்கினாலும் அதனுள்ளிருந்து நம்பிக்கையோடு பொறுமையாக ஜெபித்தில் உறுதியாகத் தரித்திருப்போம். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டாதுபோல பிரச்சனைகளுக்கும் கட்டளைக்கொடுப்பார். யோனாவைக் கரையிலே கக்கிவிட்டதுபோல நம்மையும் அது கக்கிவிடும்; அகன்றுவிடும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

Wednesday, October 16, 2024

தேவனுடைய ராஜ்யம்

 'ஆதவன்' அக்டோபர் 18, 2024. 💚வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,349


"தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 4 : 20 )

தேவனுடைய ராஜ்ஜியம் குறித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பல இடங்களில் பேசுவதை நாம் அறிவோம். அப்போஸ்தலரான பவுல் அடிகளும் இதுபற்றி கூறும்போது, "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 ) என்று கூறுகின்றார். இந்த தேவனுடைய ராஜ்ஜியம் பேச்சிலே அல்ல, மாறாக பெலத்தில் இருக்கின்றது என்று இன்றைய தியான வசனத்தில்  வாசிக்கின்றோம்.

அதாவது, தேவனுடைய ராஜ்ஜியம் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதினாலல்ல, பிரசங்கங்களில் அல்ல, உபவாச ஜெபங்களில் அல்ல, மாறாக அது பரிசுத்த ஆவியின் பலத்தில் இருக்கின்றது. ஆம், பவுல் அப்போஸ்தலர் கூறும் நீதி, சமாதானம், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் போன்றவை நம்மால் உருவாக்கக் கூடியவையல்ல, மாறாக பரிசுத்த ஆவியினால் உருவாகக்கூடியவை. 

இந்தத் தேவனுடைய ராஜ்ஜியத்தை நாம் நமக்குள் அனுபவிக்கவேண்டுமானால் முதலில் நமக்குள் இருக்கும் சில வேண்டாத காரியங்களை நாம் நம்மைவிட்டு விலக்கவேண்டும்  அவைகளை அப்போஸ்தலரான பவுல் பின்வருமாறு கூறுகின்றார்:-"விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( கலாத்தியர் 5 : 20, 21 ) என்று கூறுகின்றார்.

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று பவுல் அப்போஸ்தலர் கூறுவதால் இவைகளை விட்டு நாம் நீங்கவேண்டும் என்று பொருள். மேற்படி காரியங்கள் நம்மிடமிருந்து நீங்கவேண்டுமானால் நமக்கு ஆவியானவரின் பலம் தேவையாய் இருக்கின்றது. இதனையே, "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குரியவர்களாக வாழ பரிசுத்த ஆவியானவரை நமதுவாழ்வில் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

தேவனுடைய ராஜ்யத்துக்குரியவர்களாக நாம் வாழும்போது ஆவியின் கனிகள் (கலாத்தியர் 5:22, 23) நம்மிடம் இருக்கும். இந்தக் கனிகள் நம்மிடம் இருக்குமானால் நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குட்பட்டவர்கள். எனவே நாம் வெறுமனே பரலோக ராஜ்ஜியம், தேவனுடைய ராஜ்ஜியம் என்று பேசிக்கொண்டிருக்காமல் ஆவியினால் பலமடைய முயற்சி செய்வோம். மேலான இந்தக் காரியங்களுக்காக வேண்டுதல் செய்வோம். 

"தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." என்று இன்றைய தியான வசனம் கூறுவதற்கிணங்க ஆவியானவரின் பெலனடைந்து மற்றவர்களுக்கு கிறிஸ்துவை நமது அன்றாட வாழ்க்கையால் அறிவிக்கிறவர்களாக வாழ்வோம். 

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

நித்திய வழியிலே என்னை நடத்தும்

 'ஆதவன்' 💚அக்டோபர் 17, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,347


"தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்." ( சங்கீதம் 139 : 23 )

விஞ்ஞான அறிவு வளர்ந்துவிட்ட இந்தக்காலத்தில் பலர் கடவுள் உண்டுமா இல்லையா என்று ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றார்கள்.  உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகள் கடவுள் உண்டு என்று நம்புகின்றார்கள். ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்டப் பொருட்களை பயன்படுத்தும் சாதாரண அறிவே உள்ள மனிதர்கள், "இந்த நவீன காலத்தில் கடவுள் கத்தரிக்காய் என்று போதித்துக்கொண்டு திரிகிறீர்களே" என்கின்றனர். 

ஆனால் இன்றைய தியான வசனத்தில் தாவீது இதற்கு மாறாக, "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்." என்று தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கின்றார். இந்த வசனத்தைத் தொடர்ந்து அவர் கூறுகின்றார், "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்." ( சங்கீதம் 139 : 24 )

சில வேளைகளில் நமது வாழ்வில் வேதனைகள், துன்பங்கள் ஏற்பட நமது வாழ்க்கையில் நாம் செய்யும் தவறான காரியங்கள் காரணமாக அமைந்துவிடக்கூடும். இதனைத் தாவீது அறிந்திருந்தார். எனவேதான், அப்படித் தான் தவறிவிடக்கூடாது என்று தேவனுக்குப் பயந்து  வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் என்று மன்றாடுகின்றார். 

தாவீதின் இந்த ஜெப மன்றாட்டு நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் செய்யவேண்டிய ஒரு மன்றாட்டாகும். இன்று உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே மக்கள் தேவனை நோக்கிப் பார்க்கின்றனர். பெரும்பாலான மக்கள் தங்கள் ஆத்துமாவைக்குறித்தோ இனி வரப்போகும் நியாயத் தீர்ப்பைக்குறித்தோ எண்ணுவதில்லை; தங்கள் வழிகளைத் திருத்த முயல்வதுமில்லை. 

தேவனுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலர் எப்படி அடுத்தவர்களை வஞ்சித்து பணம் பறிக்கலாம் என்று எண்ணுகின்றனரேத் தவிர தாவீதைப்போல இப்படி ஜெபிப்பதில்லை. மக்களுக்கு அப்படி ஜெபிக்கக் கற்றுக்கொடுப்பதுமில்லை. அப்படி ஜெபிப்பார்களென்றால் தேவன்  நித்திய வழியிலே அவர்களை நடத்தியிருப்பார்; அவர்களும் விசுவாசிகளை நேர்வழியில் நடத்தியிருப்பார்கள். 

ஆம் அன்பானவர்களே, நாம் மட்டுமல்ல நமது குழந்தைகளுக்கும் நாம் இப்படி ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும். மேலான இத்தகைய ஜெபத்தைத் தேவன் விரும்புகின்றார். ஆட்டு மந்தையை மேய்தத் தாவீதை தேவன் அரசனாக உயர்த்த அவரது இந்த மன நிலைதான் காரணமாக இருந்தது. அவர் தவறும் பாவமும் செய்திருக்கலாம் ஆனாலும் தாவீதை "எனது இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்" என்றார் தேவன். 

"தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்." ( சங்கீதம் 78 : 70,71 ) காரணம் தாவீது தனது வழிகளை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்தார். பாவம் செய்தாலும் உணர்வடைந்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டார்.

"தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்." என்று நாமும் வேண்டுவோம். அப்போது வேதனை உண்டாக்கும் வழி நம்மிடம் இருந்தாலும் தேவன் நம்மை உணர்த்தி, திருத்தி  நித்திய வழியிலே நம்மை நடத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Tuesday, October 15, 2024

கட்டளைகளைக் கடைபிடிப்பது எப்படி?

 'ஆதவன்' 💚அக்டோபர் 16, 2024. 💚புதன்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,346


"கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்." ( கலாத்தியர் 5 : 6 )

விருத்தசேதனம் என்பது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் யூதர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான ஒரு கட்டளை. யூதர்கள் இதனை நிறைவேற்றுவதில் அதிக ஈடுபாடு காட்டினர். 

ஆனால் புதியஏற்பாட்டு முறைமையின்படி விருத்தசேதன கட்டளை மட்டுமல்ல, எந்தக் கட்டளைகளையையும்  அப்படியே நிறைவேற்றி விடுவதால் மட்டும் நாம்  தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகமுடியாது. காரணம், நியாயப்பிரமாணம் (கட்டளைகள்) எது பாவம் எது பாவமில்லை எனும் அறிவை மட்டுமே நமக்குக் கொடுக்கும். அதனை நாம் எந்த மன நிலையில் நிறைவேற்றுகின்றோம் என்பதே தேவனுக்கு முக்கியம். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை." ( ரோமர் 3 : 20 ) என்று கூறுகின்றார். 

அதாவது, தேவன்மேல் பூரண விசுவாசம் வரும்போது நமது செயல்பாடுகள் மெய்யான அன்பு கலந்த செயல்பாடுகளாக அமையும். அப்படி அன்புடன் செய்யும் செயல்பாடுகளே முக்கியமேத்தவிர வெறுமனே கட்டளைகளைக் கடைபிடிப்பது தேவனுக்குமுன் நம்மை நீதிமானாக்க மாட்டாது. 

இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம் என்று எண்ணுகின்றேன். நான் ஜெர்மனி நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மிகச் சரியாகப் பின்பற்றுவதைக் கண்டு வியப்புற்றேன். நடு இரவில் சாலைகள் வெறுமனே கிடந்தாலும் சிகப்பு சிக்னல் மாறி பச்சை விளக்கு எரிவதுவரை வாகனத்தை இயக்காமல் அமைதியாகக் காத்திருந்து வாகனத்தை ஓட்டுவார்கள். அதனைப் பார்த்து, "இந்த மனிதர்கள் மிக நல்லவர்கள்" என்று எண்ணினேன். 

ஆனால் எனது மருமகன் கூறினார், "அப்படியல்ல, இவர்கள் எல்லோரும் நம்மைபோன்றவர்கள்தான். இங்கு சாலை விதிகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.  விதிகளை மீறினால் கேமராவில் அது பதிவாகி  அடுத்த நொடியே நமது வங்கிக்கணக்கிலிருந்து அபராதம் வசூலிக்கப்படும். மட்டுமல்ல, தொடர்ந்து இப்படி மூன்றுமுறை அபராதம் விதிக்கப்பட்டால் நமது ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்படும். மீண்டும் அதனை புதுப்பிப்பது கடினம். இங்கு சொந்த வாகனம் இல்லாமல் நாம் எதுவும் செய்யமுடியாது. எனவேதான் சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றுகின்றனர்" 

ஆம் அன்பானவர்களே, அன்பில்லாமல் நியாயப்பிரமாண கட்டளைகளைப் பின்பற்றுவது இவர்கள் சாலை விதியை சட்டத்துக்குப் பயந்து மதிப்பது போன்றதுதான். முதலில் நமது உள்ளார்ந்த மனம் மாறுதல் அடையவேண்டும். நமது உள்ளமானது தேவனுக்கு ஏற்ற இதயமாக இருக்குமானால் தேவ அன்பினால் நாம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம்.   இப்படி அன்போடு தேவனுக்கு ஏற்ற செயல்களைச் செய்வதையே தேவன் விரும்புகின்றார். எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்." விருத்த சேதன கட்டளை மட்டுமல்ல; அனைத்துக் கட்டளைகளுக்கும் இதுவே அடிப்படை. 

"நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) எனவே தேவ அன்போடு கட்டளைகளுக்குக் கீழ்படிவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Monday, October 14, 2024

நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு

 'ஆதவன்' அக்டோபர் 15, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,345

"உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." ( ஏசாயா 57 : 15 )

நமது தேவன் உன்னதமான பரலோகத்தில் இருக்கின்றார் என்பதனை நாம் அறிவோம். இந்த தேவன் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசாரிப்புக் கூடாரத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் கேருபீன்கள் மத்தியில் குடியிருந்து மோசேயிடமும் இதர ஆசாரியார்களிடமும் பேசி வழிநடத்தினார். இதே பரிசுத்த தேவன் கூறுகின்றார், "நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." என்று. 

இயேசு கிறிஸ்து கூறினார், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 ) அதாவது நாம் ஆவியில் எளிமையுள்ளவர்களாக, பணித்த இதயம் உள்ளவர்களாக வாழ்ந்தால் அவர் நமது இருதயத்தில் வந்து குடியிருப்பார். அப்போஸ்தலரான பவுல் இதனால்தான், "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" ( 1 கொரிந்தியர் 3 : 16 ) என்று கூறுகின்றார். அதாவது, பணிந்த உள்ளம் தேவனது ஆலயம்.

இப்படி அவர் வந்து மனிதர்கள் இதயத்தில் குடியிருக்கும் காரணத்தையே இன்றைய தியான வசனத்தில் ஏசாயா, "பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்" என்று கூறுகின்றார். பணிந்த இதயமுள்ளவர்கள் பணிந்தவர்களாகவே இருக்கவேண்டுமென்று தேவன் விரும்பவில்லை. அதுபோல நொறுங்கிய இதயம் எப்போதும் நொறுங்கியே இருக்கவேண்டுமென்றும் அவர் விரும்பவில்லை. அவை புத்துயிர் பெறவேண்டுமென்று தேவன் விரும்புவதால் அப்படி வந்து குடியிருக்கிறார். 

"நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்." ( சங்கீதம் 34 : 18 ) என்றும், "இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்." ( சங்கீதம் 147 : 3 ) நாம் வாசிப்பது தேவன் நொறுங்கிய இதயமுள்ளவர்களைப் புறக்கணிப்பதில்லை என்பதனை நமக்கு உணர்த்தும். 

ஆம் அன்பானவர்களே, நாம் எந்தவித புறக்கணிப்புக்கு உள்ளானவர்களாக இருந்தாலும் பணிந்த இதயம் நமக்கு இருக்குமானால் தேவன் நம்மை ஒருபோதும் கைவிட்டுவிடமாட்டார், இப்படி மனதளவில் பெரிய சுமை சுமந்து இதயம் நொறுங்குண்டு சோர்ந்திருப்பவர்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,  "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." ( மத்தேயு 11 : 28 ) என்று அழைக்கிறார். 

உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறார். அத்தகைய உள்ளமுள்ளவர்கள் தேவனது ஆலயமாகவே இருக்கின்றனர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Friday, October 11, 2024

கிறிஸ்துவின் கிருபை

அக்டோபர் 14,  2024 ,  திங்கள்கிழமை.  💚       வேதாகமத் தியானம் - எண்: 1344 


"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே." ( 2 கொரிந்தியர் 8 : 9 )

தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டுமென்பதற்காக தாய் தகப்பன்மார் பல்வேறு உபத்திரவங்களைச் சகிக்கின்றனர்; கடுமையாக உழைக்கின்றனர். ஒருமுறை 80 வயதில் பனையேறும் ஒரு முதியவரைச் சந்தித்தேன். இந்தத் தள்ளாடும்  வயதிலும் அவர் தனது குடும்பத்துக்காக உழைக்கின்றார். இதுவரைத் திருமணமாகாத தனது மகளை நல்ல இடத்தில திருமணம் செய்துகொடுக்க வேண்டுமென்பதே அவரது எண்ணமெல்லாம். இதுபோலவே கிடைக்கும் சிறு வருமானத்திலும் தங்களது ஆசைகளை அடக்கி தங்கள் குழந்தைகளது படிப்புக்காக தியாகம் செய்கின்றனர் பல பெற்றோர்கள்.   

இதுபோலவே நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும்  இருக்கிறார் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. அவர் செல்வந்தன்தான். ஆனால் நாம் செல்வந்தர்கள் ஆகவேண்டும் என்பதற்காக; நாம் மீட்கப்பட்டு பரலோகத்தைச் சுதந்தரிக்கவேண்டும் என்பதற்காக அவர் தந்து செல்வ நிலைமையை விட்டுவிட்டு நமக்காக தரித்திரனானார். எப்படி ஒரு  தாய் தனது பிள்ளைக்காக தியாகம் செய்வாளோ அதுபோல அவர் மிகப்பெரிய தியாகம் செய்தார். 

"அவர் தேவனுடைய* ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர்* சாயலானார்." ( பிலிப்பியர் 2 : 6,7 )

அடிமை என்பவன் எந்த அடிப்படை மனித உரிமையும் இல்லாதவன். இந்த அண்ட சராசரங்களைப் படைத்து ஆளும் தேவன் ஒரு அடிமையைப்போல ஆனார் என்பதை எண்ணிப்பாருங்கள். எதற்காக? நமக்காக. நாம் மீட்பு பெறவேண்டுமென்பதற்காக. நாம் முன்பு பார்த்த உதாரணத்தில் அந்த முதியவர் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உழைத்தார். ஆனால் கிறிஸ்து இயேசுவோ  எல்லாம் இருந்தும் நமக்காகத் தன்னை ஒன்றுமில்லாதவராக மாற்றினார். இந்த விதத்தில் அவரது அன்பு மனிதர்களது அன்பைவிட பல மடங்கு மேலானதல்லவா?  

வறுமையில் பல தியாகங்கள் செய்து சேகரித்தப்  பணத்தில் மகனைப் படிக்கவைக்கும் தாய், அந்த மகன்  வேண்டாத நண்பர்களது சகவாசம்கொண்டு படிக்காமல் தாய் அனுப்பும் பணத்தையும் தாறுமாறாய்ச் செலவழித்தால் எவ்வளவு வேதனைப்படுவாள்? 

அன்பானவர்களே, இன்று பலரும் கிறிஸ்துவின் மீட்பினை அலட்சியம்செய்து உலக ஆசையில் மூழ்கி கிறிஸ்துவை மறுதலித்து வாழும்போது அவர் இதுபோலவே வேதனைப்படுவார்.   நமக்காகத் தரித்திரரான இயேசு கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் அவரது விருப்பப்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

அன்பான இயேசுவே இதனை நாட்களும் உமது மேலான அன்பை உணராமல் அலட்சியமாக வாழ்ந்துவிட்டேன். என்னை மன்னியும். உமக்கு ஏற்ற வாழ்க்கை வாழ இன்றே என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.  என் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமது பரிசுத்த ஆவியானவரை எனக்குத் தந்து உமக்கு ஏற்புடைய வழியில் நான் தொடர்ந்து நடக்க எனக்கு உதவி செய்யும் என வேண்டுதல் செய்வோம். 

நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவர் நமக்காகச் செய்த உயிர் தியாகம் வீணாவதை அவர் விரும்பமாட்டார். தனிமையில் கிறிஸ்துவிடம் மனம் திறந்து பேசுங்கள். மேலான தேவ அனுபவத்தை அளித்து நம்மை மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          

Thursday, October 10, 2024

சுய மகிமை தேடி..

அக்டோபர் 13,  2024 ஞாயிற்றுக்கிழமை💚வேதாகமத் தியானம் எண் - 1343

"அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." ( யோவான் 12 : 43 )

இன்று நாம் ஆலய காரியங்களுக்கென்றும் நாம் வாழும் ஊர் காரியங்களுக்காகவும் பல செயல்கள் செய்யலாம். அதிகமான பணத்தை ஆலயங்களுக்குச் செலவழிக்கலாம்; அல்லது தர்ம காரியங்கள் அதிகம் செய்யலாம். ஆனால் இவை அனைத்தையுமே எதற்காகச் செய்கின்றோம், நமது உள்மன எண்ணம் என்ன என்பதை தேவன் அறிவார். உள்ளான அன்புடன் செய்வது எது, பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று செய்வது எது என்தையும்  தேவன் அறிவார். 

பிறர் அறியவேண்டும் எனும் எண்ணத்துடன் செய்யும் காரியங்கள் உண்மையான அன்புடன் செய்பவையல்ல. அப்படிச் செய்வதால், நம்மை அறியாமலே ஒரு பெருமை நமக்குள் வந்துவிடுகின்றது. இதனை தேவன் விரும்புவதில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது." ( மத்தேயு 6 : 3 ) என்று. தர்மம் செய்யும்போது மட்டுமல்ல, என்ன நல்ல செயலை நாம் செய்தாலும் இப்படியே இருக்கவேண்டியது முக்கியம். 

இதுபோலவே, சிலர் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை அல்லது கிறிஸ்துவை தாங்கள்  நம்புவதை வெளிப்படையாக  வெளியில் சொல்லத் தயங்குவதுண்டு.  வேலை பார்க்கும் இடங்களில் பிற மத நண்பர்கள் அதிகம் பணிசெய்யும்போது அவர்கள் நம்மைத் தவறாகக் கருதுவர் என எண்ணி கிறிஸ்தவ விசுவாசத்துக்கு முரணான காரியங்களைச் செய்து  அவர்களோடு பல காரியங்களில் ஒத்துப்போவது சிலரது பழக்கம். 

யூதர்களில் பலர் இயேசுவை கிறிஸ்து என்று நம்பினாலும் அதனை வெளிப்படையாக அறிக்கையிடத் தயங்கினார்கள்.காரணம், யூதர்கள் தங்களைக் கொலைசெய்துவிடுவார்கள் என்று அவர்கள் பயந்தனர். இத்தகைய மனிதர்களைப் பார்த்துதான் இயேசு கிறிஸ்து, "அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." ( யோவான் 12 : 43 ) என்று குறிப்பிடுகின்றார்.

இன்று சுய மகிமையைத் தேடும் கிறிஸ்தவ ஊழியர்கள் நாட்டில் நிறைந்து ஆடம்பரமும் பகட்டும் கொண்டு அலைகின்றனர். இத்தகைய ஊழியர்களும் தேவனால் வரும் மகிமையைவிட மனிதர்களால் வரும் மகிமையைத் தேடுபவர்களே.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று குறிப்பிடுகின்றார். "உங்களிடத்திலாவது,. மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை." ( 1 தெசலோனிக்கேயர் 2 : 6 ) என்று எழுதுகின்றார் அவர்.

அன்பானவர்களே, நமது செயல்கள் அனைத்தும் தேவனை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டுமேதவிர சுய மகிமைக்கானவைகளாக இருக்கக்கூடாது. இதில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்மையே மறைத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடும்போம்.

தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

❤️ When the Manna Ceases - Video

  Even the smallest verse in the Bible has been written with a purpose and can become a source of blessing in someone’s life.  Let us receiv...