Sunday, September 01, 2024

வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ?

 'ஆதவன்' செப்டம்பர் 10, 2024. செவ்வாய்க்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,310


".............அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை". ( தானியேல் 4 : 35 )

வானத்தின் சேனைகள் என்று இங்குக் குறிப்பிடப்படுவது வான்மண்டல கோள்கள் மற்றும் விண்மீன்களைக் குறிக்கின்றது. வானத்துக் கோள்கள் அங்கு சும்மா இருக்கவில்லை, மாறாக ஒன்றையொன்று தங்களது ஈர்ப்புவிசையால் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி நடத்துபவர்தான் நமது தேவனாகிய கர்த்தர். 

பூமி அந்தரத்தில் குறிப்பிட்ட இலக்குக்குள் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமானால் அதற்கென்று ஒரு ஆதாரம் வேண்டும். அது கிரகங்களின் ஈர்ப்புவிசையால் (Magnetic Force) தான் நடைபெறுகின்றது. இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த உண்மையினை ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே பரிசுத்தவான்களுக்குத் தேவன் வெளிப்படுத்தியுள்ளார். எனவேதான் எந்தவித நவீன கருவிகள் இல்லாதகாலத்திலேயே இதனை அவர்கள் கண்டுணர்த்து கூறமுடிந்தது.  

"வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" ( யோபு 38 : 31 -33 ) என்று தேவன் கேட்கின்றார்.  

அதாவது இப்படி இந்தக் கிரகங்கள், ராசிகள்  பூமியை நிலைநிறுத்த உதவுகின்றன. (பூமியிலுள்ள மக்களையல்ல) இவை செய்யும் எந்த காரியத்தையும் மனிதனால் செய்ய முடியாது. இதனையே மேற்படி வசனத்தில் தேவன், "அறிவாயோ? திட்டம்பண்ணுவாயோ? நீ இணைக்கக்கூடுமோ? கட்டுகளை அவிழ்ப்பாயோ?  வரப்பண்ணுவாயோ? வழிநடத்துவாயோ?" என்று கேட்கின்றார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை தேவனால்தான் முடியம்  என்றுதான் இருக்கமுடியும். 
 
இப்படி தேவன்  தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் மக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. இப்படி நாம் வெறும் தூளும் துரும்புமாக இருப்பதால் அவருக்கு அஞ்சி வாழவேண்டியது அவசியம். அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. ஒருவனும் இல்லை என்று கூறும்போது எந்த பரிசுத்தவானும் இல்லை என்றுதான் பொருள். 

எனவேதான் நாம் தேவ கிருபையினைச் சார்ந்துகொள்ளவேண்டியது அவசியம். "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, எனவே நாம் அவரது கிருபையைச் சார்ந்தகொண்டு அவரது சித்தத்தின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments: