'ஆதவன்' செப்டம்பர் 24, 2024. செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,324
".....எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கின்றன." ( 2 நாளாகமம் 20 : 12 )
இன்றைய தியான வசனம் யூதாவின் ராஜாவாகிய யோசபாத் கர்த்தரை நோக்கி ஜெபித்த ஜெபமாகும். மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள். அதனை அறிந்த யோசபாத் நாடெங்கும் உபவாசத்தை அறிவித்தார். எல்லோரும் கர்த்தரை நோக்கி கூக்குரலிட்டார்கள். அப்போது யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவன் மேல் கர்த்தரது ஆவி வந்ததால் அவன் தீர்க்கதரிசனம் சொன்னான்.
"யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; கர்த்தர் உங்களோடே இருக்கிறார்" ( 2 நாளாகமம் 20 : 17 ) என்றான் அவன். அவன் கூறியதுபோல கர்த்தர் யோசபாத்தோடு இருந்து யூதாவுக்கு வெற்றியளித்தார். யோசபாத்துக்கு தேவன் பதிலளிக்க அவன் செய்த மேற்கூறிய ஜெபமே காரணமாக இருந்தது.
இன்றைய தியான வசனமான ஜெப விண்ணப்பத்தில் யோசபாத் மூன்று காரியங்களை தேவனுக்கு முன்பாக அறிக்கையிடுவதை நாம் பார்க்கின்றோம். அவை:-
1. இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை;
2. நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை;
3. எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கின்றன.
பெலவீனத்தில் தேவனது பெலன் விளங்கும் (2 கொரிந்தியர் 12;9) எனும் உண்மையை யோசபாத் அறிந்திருந்தார். எனவே அதனை தேவனிடம் வாயினால் அறிக்கையிட்டார். ஆண்டவரே இந்த ஏராளமான கூட்டத்துக்கு முன்பாக நிற்பதற்கு எங்களுக்குப் பெலனில்லை. எனவே, நீரே எங்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்கிறார்.
இரண்டாவது, நாங்கள் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. என்கின்றார். ஆம், நமது வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் ஏற்படும்போது அதற்கு என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாமலிருக்கும். எப்படி பிரச்சனையிலிருந்து வெளிவருவது? எனவே, அதனை யோசபாத் தேவனது கரத்தில் விட்டுவிடுகின்றார்.
மூன்றாவது, எங்கள் கண்கள் உம்மையே நோக்கிகொண்டடிருக்கின்றன என்கிறார். ஆம், தேவனைவிட்டு தனது பார்வையை அவர் அகற்றவில்லை. பிரச்சனையைப் பார்க்காமல் தேவனை நோக்கிப் பார்த்தார்.
ஆம் அன்பானவர்களே, இதுவே இன்று நாம் பின்பற்றவேண்டிய சரியான வழியாகும். பிரச்சனைகள், துன்பங்கள் வாழ்வில் ஏற்படும்போது யோசபாத் ஜெபித்ததுபோல தேவனிடம் நமது பலவீனத்தை அறிக்கையிடுவோம். பிரச்சனையிலிருந்து வெளிவர என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாததால் அதனை தேவனிடம் விட்டுவிடுவோம். இறுதியாக பிரச்சனையையே எண்ணிக் கலங்காமல் தேவனைநோக்கி நமது கண்களைத் திருப்பி அவரையே நம்பிக்கையோடு நோக்குவோம். கர்த்தர் அதிசயமாக நம்மை விடுவித்து நடத்துவார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment