Monday, September 16, 2024

"என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் ?"

 'ஆதவன்' 💚செப்டம்பர் 20, 2024.வெள்ளிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,320


"அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்." ( மத்தேயு 16 : 15 )

தன்னை ஏற்றுக்கொள்பவர்கள் வெறுமனே தன்னிடம் அன்புகூராமல் தான் யார் என்பதனை அறிந்து அன்புகூரவேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்புகின்றார். இன்று கிறிஸ்துவை அறியாத பிறமத அன்பர்களும் பலர் இயேசுவை அன்புசெய்கின்றனர். ஆனால் அவர்கள் மற்ற தெய்வங்களைப்போல அவரும் ஒருவர் என்று எண்ணிக்கொள்கின்றனர். எனவே தங்களது தொழில் நிறுவனங்களில் பிறமத தெய்வங்களது படங்களுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தையும் வைத்து மாலை அணிவித்து நறுமண தூபம் காட்டுகின்றனர். ஆனால் இவை கிறிஸ்துவைத் திருப்திச் செய்யாது என்பதனை அவர்கள் உணர்வதில்லை. 

இதுபோலவே இயேசு கிறிஸ்து உயிருடன் இருந்த காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பலரும் அவரை மதித்தனர். ஆனால் அவர் யார் என்பதனை அவர்கள் உணர்ந்து மதிக்கவில்லை. மாறாக, முற்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசி உயிர்பெற்று எழுந்து வந்துள்ளதாக எண்ணிக்கொண்டனர். சிலர்  அவரை யோவான் ஸ்நானகன் என்றனர், சிலர் எலியா என்றனர், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று எண்ணிக்கொண்டனர். எனவே, முதலில் தனது சீடர்களிடம் இயேசு, "மக்கள் என்னை யார் என்று கூறுகின்றனர்?" என்று கேட்டபோது சீடர்கள் இந்தப் பதிலையே கூறினர்.

ஆனால் இயேசு கிறிஸ்து, மக்கள் கூறுவது இருக்கட்டும், "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். ஏனெனில் நீங்கள் ஆரம்பம்முதல் என்னோடு இருக்கிறீர்கள், என்னோடு பழகியிருக்கிறீர்கள் எனவே மக்கள் எண்ணத்துக்கும் உங்கள் எண்ணத்துக்கும் வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதனை உணர்த்துவதற்குத்தான் இப்படிக் கேட்டார்.  அப்போது, "சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்." ( மத்தேயு 16 : 16 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாம் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கின்றோம்.? நம்மில் சிலர் அவரை நோய்தீர்க்கும் மருத்துவராக, கடன் தீர்க்க உதவும் நிதிஉதவி செய்பவராக, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது வீட்டைக் காக்கும் காவல்காரராக, அனைத்துவித உலக ஆசீர்வாதங்களையும் வழங்குபவராகவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  இது யூதர்கள் அவரைப் பார்த்ததுபோன்ற பார்வையாகும்.   

அப்போஸ்தலரான சீமோன் பேதுரு கூறியபடி அவரை நாம்  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்ப்போமானால் மட்டுமே நமக்கும் அவருக்கும் உறவு சரியாக இருக்கின்றது என்று பொருள். அப்போதுதான் நமது பாவங்களை அவரால் மன்னிக்கமுடியுமென்ற உறுதி நமக்கு ஏற்படும். இப்படி பாவங்கள் மன்னிக்கப்படும்போது நாம் கிறிஸ்துவோடு நெருங்கிய உறவினர்களாக மாறிவிடுகின்றோம். அப்போது நாம் அவரை ஒரு தகப்பனாக, தாயாக, நண்பனாக, சகோதரனாகப் பார்க்கமுடியும். 

இப்படி நாம் அவரை ஏற்றுக்கொள்வதையே கிறிஸ்து விரும்புகின்றார். எனவே அன்பானவர்களே, இதுவரை அவரை நாம் யூகர்களைப்போல பார்த்திருப்போமானால் அந்தப் பார்வையை மாற்றுவோம். அவரை ஆத்தும இரட்சகராக,  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்க்கப் பழகுவோம். அப்போது நமது ஆவிக்குரிய வாழ்க்கை அடுத்த உயர்ந்த நிலைக்குச் செல்வதை கண்டுகொள்ளலாம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: