'ஆதவன்' 💚செப்டம்பர் 19, 2024. வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,319
பாபிலோனில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை கோரஸ் ராஜா (King Syrus ) விடுவித்து நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து கைப்பற்றிச்சென்ற பொருட்களையும் திருப்பிக்கொடுத்து ஆலயத்தைத் திரும்பவும் கட்ட அனுமதியளித்தான். அப்போது செருபாபேல் தலைமையில் ஆலயம் கட்டப்பட்டது. ஆலயம் கட்டத் துவங்கியபோது யூதருக்கு எதிரானவர்கள் ஆலயம் கட்டுவதை எதிர்த்தனர்; தடைசெய்தனர். ஆலயப்பணி பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுக் கிடந்தது.
அப்போது சக்கரியா தீர்க்கதரிசிமூலம் கர்த்தரது வார்த்தை வந்தது. அப்போது அவர் கூறியதுதான் இன்றைய தியான வசனம். மட்டுமல்ல, கர்த்தர் தொடர்ந்து கூறுகின்றார், "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்." ( சகரியா 4 : 9 )
ஆம் அன்பானவர்களே, இன்று நாமே தேவனுடைய ஆலயமாய் இருக்கின்றோம். ஒருவேளை நமது உடலாகிய ஆலயம் சந்துருவின் முயற்சியால் இன்று தேவனற்றதாக மாறிப்போயிருக்கலாம். அல்லது நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை நாம் இழந்துபோயிருக்கலாம். பெரிய மலைபோன்ற பிரச்சனைகள் நம்மை நெருக்கலாம். நாம் எப்படி வாழ்வைத தொடருவோம் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கலாம். நம்மைப்பார்த்து தேவன் கூறுகின்றார், "பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்.....". எந்த மலைபோன்ற பிரச்சினை நம்மை நெருக்கினாலும் அது நொறுங்கி சமபூமியாகும்.
ஆனால் செருபாபேலுக்கு இருந்ததுபோன்ற ஆர்வம் நமக்கு இருக்கவேண்டியது அவசியம். சும்மா இருந்துகொண்டு தேவனே எல்லாம் செய்வார் என்று எண்ணிடாமல் நம்மை அவரது பலத்தக் கரத்தினுள் ஒப்புக்கொடுத்து நமது உடலாகிய ஆலயத்தைக் கட்டி எழுப்ப ஒப்புக்கொடுக்கவேண்டும்.
பலமில்லாத நம்மைக்கொண்டே தேவன் இதனை நமது வாழ்வில் செய்துமுடிப்பார். இதனையே, "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். இன்றைய வசனத்தில் செருபாபேல் எனும் பெயர் வருமிடத்தில் உங்கள் பெயரைச் சேர்த்துச் சொல்லி இதனை விசுவாச அறிக்கையாகக் கூறுங்கள். எந்தப் பெரிய பர்வதமானாலும் அது எம்மாத்திரம்? நமக்கு முன்பாக அது சமபூமியாகிடும்.
தேவனது அற்புதமான ஆற்றல்மூலம் எருசலேம் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டதை நாம் எஸ்றா நூலில் வாசிக்கலாம். சகரியா தீர்க்கத்தரிசி மூலம் தேவன் கூறிய வார்த்தைகள் நிறைவேறின. ஆம், "செருபாபேலுக்குச் (நமக்கு) சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 )
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment