"நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 )
மனிதர்கள் நாம் எதிலும் அவசரமாகச் செயல்படுகின்றோம். எனவே அதுபோன்ற அவசரத்தை நாம் தேவனிடமும் எதிர்பார்க்கின்றோம். ஆனால் தேவன் நம்மைப்போல எதையும் அவசரகதியில் செய்பவரல்ல. தேவனிடம் நாம் எதையாவது பெறவேண்டுமானால் முதலில் நாம் அவரது சித்தத்தின்படி வாழவேண்டும். இரண்டாவது பொறுமையாக அவர் செயல்படுவதற்குக் காத்திருக்க வேண்டும்.
தேவன் நமக்குச் சில வாக்குறுதிகளைத் தந்திருக்கலாம். ஆனால் அவை நிறைவேறுமளவும் நாம் காத்திருக்கவேண்டும். நாம் ஒரு காரியத்துக்காக ஜெபிக்கும்போது தேவன் அதற்கு பதில் தருவாரேத் தவிர எப்போது நாம் கேட்பதைத் தருவேன் என்று பெரும்பாலும் சொல்வதில்லை. ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயதானபோது தேவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்தார். ஆனால் எப்போது அந்த மகனைத் தருவேன் என்பதை அவர் கூறவில்லை. அந்த வாக்குத்தத்தம் நிறைவேற ஆபிரகாம் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருந்தது.
தேவன் இப்படி நம்மைக் காத்திருக்கச் செய்வது நமது விசுவாசத்தைச் சோதிக்கவும் உறுதிப்படுத்தவுமே. இதனையே இன்றைய தியான வசனம், "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, பொறுமையோடிருந்து நாம் தேவனிடமிருந்து நமது விண்ணப்பங்களைப் பெறவேண்டியதாயிருக்கின்றது.
இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." (யாக்கோபு 5:11) என்று கூறுகின்றார்.
கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கின்ற படியால் இப்படி நம்மைப் பொறுமையாக காத்திருக்கச் செய்து தனது வாக்குத்தத்ததை நமக்கு அருளுகின்றார். காரணம், இப்படித் தேவனுக்காகக் காத்திருந்து அவர் வாக்களித்ததைப் பெறும்போதுதான் மேலான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கின்றது. ஒரு தகப்பனிடம் மகனோ மகளோ ஒரு பொருளை ஆசைபட்டுக் கேட்கும்போது அந்தத் தகப்பன் உடனே அதனை வாங்கிக்கொடுக்காமல் அதனை வாங்குவதற்கான பணத்தைச் சம்பாதித்துத் தாமதமாக அந்தப் பொருளை வாங்கிக்கொடுக்கும்போது அந்தப் பிள்ளைகள் அதிக மகிழ்ச்சியடையும்.
"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 ) என்று வேதம் கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, அவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியதை பெறும்படிக்குப் பொறுமையாகக் காத்திருப்போம். அப்போது அது நிறைவேறும்போது பூரணமான மகிழ்ச்சி நமக்கு ஏற்படும்.
'ஆதவன்' 💚செப்டம்பர் 26, 2024. 💚வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,326
"அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 )
இன்றைய தியான வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்து அவர் கூறியது. இயேசு கிறிஸ்து வருவார் என்பது நிச்சயமேத் தவிர, எப்போது வருவார் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படாத சத்தியம். அதனை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியமில்லை.
தனது வருகைக்கு முன்அடையாளமாக இயேசு பல காரியங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவைகளில் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் வருகை எப்போது என்பது இரகசியமான சத்தியம். அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் என்று இயேசு கிறிஸ்து கூறிவிட்டார்.
ஆனால் இன்று ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் சிலர் தங்கள் மேதாவித்தனத்தைக் காண்பிக்க வேத ஆராய்ச்சி என்று பல்வேறு வேத வசனங்களை எடுத்து கணக்குப்பார்த்து இயேசு எப்போது வருவார் என்று கணித்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களே இத்தகைய மூடத்தனத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர். பிற பாரம்பரிய சபைகளில் இந்தக் கணக்குப்பார்த்தல் இல்லை.
தானியேல் புத்தகத்தின் சில வசனங்களை எடுத்து தங்கள் கணித அறிவைப் பயன்படுத்தி இயேசுவின் வருகைக்கு நாள்குறிக்கின்றனர் இவர்கள். இத்தகைய ஆராய்ச்சி தேவையற்றது என்பதையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 'முகநூல்', 'யூடியூப்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களில் இத்தகைய கணித அறிவு ஊழியர்களின் வீடியோக்களை நாம் அதிகம் பார்க்க முடிகின்றது. ஆனால் இவை அனைத்தும் தேவையற்ற குப்பைகளே. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கே தெரியாத இரகசியத்தை நாம் அறிய முயற்சிப்பது குப்பையைக் கிளறுவதுபோலத்தான்.
கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழ்ந்தாலும் வருகையின்போது அவர் நம்மைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளத் தகுதியாக வாழவேண்டியதே நாம் செய்யவேண்டியது. மக்களை அதற்குத் தகுதிப்படுத்தவேண்டியதே உண்மை ஊழியர்களின் கடமை. ஆனால் இன்று இத்தகைய கணிதமேதை ஊழியர்களின் போதனைகளைக்கேட்டு பல விசுவாசிகள் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதில் பெருமைகொள்கின்றனரேத் தவிர தங்களைத் திருத்திக்கொள்ள முயல்வதில்லை. இவர்களில் சிலர் என்னிடம், "சகோதரரே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குறித்து எழுதுங்கள்" என்கின்றனர்.
அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்றபடி வாழவேண்டிய வழிமுறைகள் வேதத்தில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன. அவற்றின்படி வாழ்வதே கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுதல். அப்படி வாழும்போது அவர் எப்போது வந்தாலும் நாம் அவரை எதிர்கொள்ளமுடியும். எனவே நாம் அவர் எப்போது வருவார் என்று கணக்குப் போடாமல் எச்சரிக்கையோடு வாழ்வோம். "அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்." ( மாற்கு 13 : 33 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
'ஆதவன்' 💚செப்டம்பர் 27, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,327
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை." ( மத்தேயு 7 : 21 )
வாழ்க்கையில் உண்மையில்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டு - தேவ சித்தத்துக்கு முரணான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு - ஒருவர் எவ்வளவு ஜெபித்தாலும் அது அர்த்தமற்றது என்பதனை இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.
இன்று பலரும் "ஜெபமே ஜெயம்" என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் இந்த வார்த்தைகள் வேதத்தில் கூறப்படவில்லை. காரணம் ஜெபம் மட்டுமே ஒருவருக்கு வெற்றி தருவதில்லை. ஆவிக்குரிய வாழ்வில் ஜெபம் முக்கியம் என்றாலும் தேவ ஐக்கியதோடு கூடிய ஜெபம்தான் தேவன் விரும்புவது.
"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்" (ஏசாயா 1:15, 16) என்று ஏசாயா மூலம் தேவன் கூறுவதை நாம் வாசித்திருகின்றோம்.
இதனையே "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" என்று இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது கர்த்தரை நோக்கி ஜெபிப்பது மட்டும் முக்கியமல்ல, நமது வாழ்க்கையும் அவருக்கு ஏற்ற வாழ்க்கையாக இருக்கவேண்டியது அவசியயம்.
ஆனால் இந்தச் சத்தியத்தை பெரும்பாலான ஊழியர்கள் கூறுவதில்லை. என்ன பிரச்சனைக்கு விசுவாசிகள் அவர்களை அணுகினாலும், "ஜெபியுங்கள்....ஜெபியுங்கள்...நானும் ஜெபிக்கிறேன்" என்று கூறி மக்கள் தங்கள் வாழ்க்கையின் செயல்பாடுகளைத் திருத்திக்கொள்ள வழி கூறாமல் தடுக்கின்றனர். மட்டுமல்ல, "ஆசீர்வாத உபவாச ஜெபம், நள்ளிரவு ஜெபம், வெள்ளிக்கிழமை ஜெபம், வாலிபர் ஜெபம், பெண்கள் உபவாச ஜெபம்......" போன்று பல்வேறு ஜெப அறிவிப்புகளை அறிவித்து ஜெபிக்கின்றனர். அந்த ஜெபங்கள் தேவனுக்கு ஏற்றதாக முதலில் நாம் நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதை பெரும்பாலும் கூறுவதில்லை.
ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் ஜெபமும் வாழ்க்கையும் இரு கண்களைபோன்றவை. இரண்டு கண்களும் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம். வாழ்க்கை சரியில்லாத ஜெபம் ஒருவரை ஒற்றைக்கண்ணனாகவே மாற்றும்.
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே" என்று இயேசு கிறிஸ்து கூறுவதன்படி நம் அனைவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு பொதுவான சித்தமுண்டு. இது தவிர நம் ஒவ்வொருவரைக்குறித்தும் பிதாவாகிய தேவனுக்கு ஒரு சித்தமுண்டு. அந்தச் சித்தத்தை நாம் அறிந்து அதன்படி வாழவேண்டும். அப்படி வாழும்போது மட்டுமே நமது ஜெபம் அர்த்தமுள்ள ஜெபமாக இருக்கும். வெறுமனே "கர்த்தாவே! கர்த்தாவே!" கூப்பாடுபோட்டு ஜெபிப்பதில் அர்த்தமில்லை.
நமது ஜெபங்கள் பிதாவுக்கு ஏற்புடையதாக இருக்க முதலில் அவரது சித்தம் அறிந்து அதன்படி வாழ்பவர்களாக மாறுவோம். தேவ சித்தத்துக்கு எதிராக நாம் செய்யும் பாவ காரியங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம்.
'ஆதவன்' 💚செப்டம்பர் 28, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,328
"கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்." ( சங்கீதம் 7 : 8 )
நமது தேவன் நீதியின் தேவனாக இருக்கின்றார். அவர் செய்யும் செயல்கள் பலவும் பலவேளைகளில் நமக்குப் புரியாதவையாக இருந்தாலும் அவர் செயலுக்கு நீதியான ஒரு காரணம் இருக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுகின்றார்.
இப்படி அவர் நீதியுள்ள தேவனாக இருப்பதால் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார் என்றும், எனவே என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும் என்றும் தாவீது கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தாவீது கூறுகின்றார், "துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்." ( சங்கீதம் 7 : 9 ) என்று. நீதியில்லாத வாழ்க்கை வாழும் துன்மார்க்கர்களின் வாழ்க்கை ஒழிந்துபோகின்ற வாழ்க்கையாகவே இருக்கும்.
நீதியைச் செய்பவனே தேவனுக்கு உகந்தவன். அன்று கொர்நேலியு வீட்டில் பிரசங்கிக்கும்போது அப்போஸ்தலரான பேதுரு கூறினார், "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 35 ) என்று. தேவன் மதம், இனம் ஜாதி, நிறம், அழகு பார்த்து ஒருவரைத் தனக்கு உகந்தவனாக தேர்ந்துகொள்வதில்லை. மாறாக ஒருவரது நீதியுள்ள வாழ்க்கையையே பார்க்கின்றார். அப்படி வாழ்ந்த பிற இனத்தானாகிய கொர்நேலியுவுக்கு அவர் தன்னை வெளிப்படுத்தினார்.
ஆனால் இன்று பலருக்கு உண்மை, நீதி, இவர்களைப்பற்றி பேசுவது பிடிப்பதில்லை. பலமணிநேரம் ஜெபிப்பார்கள், வேதம் வாசிப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் உண்மை நேர்மை இருக்கவேண்டுமென்று கூறினால் சலிப்பார்கள்; அல்லது பயப்படுவார்கள். ஒரு ஆலயத்தில் செய்தி கொடுக்கச் சென்றிருந்த எனது நண்பர் சகோதரர் ஒருவர் பேசி முடித்ததும் அங்கிருந்த குருவானவர், "உங்க மெசேஜ் நன்றாக இருந்தது... ஆனால் இவ்வளவு விரிவாக பாவத்தையும் குறித்து நீங்கள் விளக்கியிருக்கவேண்டாம்" என்றாராம். எனது நண்பர் அன்று பேசியது, "பண விஷயத்தில் உண்மை" என்பது குறித்து.
குறிப்பிட்ட குருவானவர் பணவிஷயத்தில் பல்வேறு தில்லுமுல்லு செய்பவர் என்று பிற்பாடுதான் அந்தச் சகோதரருக்குத் தெரிந்ததாம். இப்படியே அப்போஸ்தலரான பவுல் பேசும்போது பேலிக்ஸ் பயமடைந்தான். காரணம் அவனிடம் நீதி, நேர்மை இல்லாமலிருந்தது. இதனை நாம் "அவன் (பவுல்), நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 ) என்று வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, தேவனுக்குப் பயந்த நீதியும் உண்மையுமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அப்போதுதான் நமது ஜெபங்கள் அர்த்தமுள்ளவைகளாக தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபமாக அமையும். அப்போது தாவீதைப்போல நாமும் துணிவுடன் தேவனை நோக்கி, "கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்." என்று தைரியமாக ஜெபிக்கமுடியும்.
'ஆதவன்' 💚செப்டம்பர் 29, 2024. 💚ஞாயிற்றுகிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,329
"ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 : 10 )
இன்றைய தியான வசனம் "ஏனெனில்", எனும் வார்த்தையோடு ஆரம்பிக்கின்றது. அப்படியானால் இதற்குமுன் ஏதோ ஒன்று கூறப்பட்டுள்ளது, அத்தனையும் சேர்த்து வாசித்தால்தான் உண்மை விளங்கும். அது என்ன? இன்றைய வசனத்துக்கு முந்தின வசனங்கள் கூறுகின்றன, "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" ( எபேசியர் 2 : 8, 9 )
அதாவது, கிறிஸ்துவின்மேல் கொண்டிருந்த விசுவாசத்தாலும் கிருபையாலும் நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம். இதுதேவனால் உண்டானது. இப்படி நாம் கிருபையால் இரட்சிக்கப்பட்டது ஏனென்றால், நற்செயல்கள் செய்கிறதற்கு. அப்படி நாம் நற்செயல்கள் செய்து நடக்கும்படி அவர் முன்னதாக இந்த மீட்பு அல்லது இரட்சிப்பை நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.
ஆம் அன்பானவர்களே, எல்லோரும் நற்செயல்கள் செய்யலாம். பலரும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், மீட்பு அனுபவம் பெற்று ஒருவர் நற்செயல் செய்யும்போது அது மற்றவர்கள் செய்வதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இப்படி நாம் வித்தியாசமானவர்களாக இருக்கும்படிக்கே - அவைகளில் நாம் நடக்கும்படிக்கே - அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
கிறிஸ்துவோடு இணைந்த வாழ்க்கை இல்லாமல் நாம் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ முடியாது. நற்செயல்கள் செய்வது என்பது வேறு; கனியுள்ள வாழ்க்கை வாழ்வது என்பது வேறு. கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது மட்டுமே நாம் கனிகளோடு சேர்ந்து நற்செயல்கள் செய்ய முடியும். இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 )
மட்டுமல்ல, தொடர்ந்து அடுத்த வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறினார், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 ) ஆம் அன்பானவர்களே, அவர் நமக்குள் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இப்படி நாம் கனியுடன் கூடிய வாழ்க்கையுடன் நற்செயல்கள் செய்யவே அவர் மீட்பு அல்லது இரட்சிப்பு அனுபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் இன்றைய வசனம் சொல்கின்றது, நாம் படைக்கப்பட்டதே கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து நற்செயல்கள் செய்வதற்காகவே. எனவேதான் எபிரெயர் நிருப ஆசிரியர் கூறுகின்றார், "அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 )
அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம். அப்போதுதான் நாம் கனிகளோடுகூடிய நற்செயல்கள் செய்து தேவனை மகிமைப்படுத்த முடியும்.
'ஆதவன்' 💚செப்டம்பர் 30, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,330
"அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." ( 1 சாமுவேல் 8 : 7 )
இஸ்ரவேல் மக்களை தேவனே வழிநடத்தி வந்தார். பல்வேறு நியாயாதிபதிகள், தீர்க்கத்தரிசிகள் அவர்களை வழிநடத்தினர். காரணம், தேவன் தனது மக்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்களாக, தனது நேரடி பராமரிப்பில் வாழவேண்டுமென்று விரும்பினார். ஆனால் இஸ்ரவேல் மக்களைச் சுற்றிலும் இருந்த பல்வேறு இன மக்களுக்கு அரசர்கள் இருந்தனர். அந்த அரசர்கள் அவர்கள் வழிநடத்தி அவர்களுக்காக யுத்தங்களையும் செய்தனர்.
இவைகளைப் பார்த்த இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. மற்ற மக்களுக்கு இருப்பதுபோல நமக்கும் தனி ராஜா இருக்கவேண்டும், அவர் நம்மை ஆட்சிசெய்யவேண்டும் என்று விரும்பினர். இதற்கு காரணம் சாமுவேலுக்குப்பின் அவர்களை வழிநடத்திய அவரது புதல்வர்கள் நல்லவர்களாக இல்லை.
"இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகலஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்." ( 1 சாமுவேல் 8 : 5 ) என்று கூறப்பட்டுள்ளது. இங்கு நாம் இந்த மூப்பர்கள் செய்த தவறினை கவனிக்கவேண்டியது அவசியம். தேவன் இஸ்ரவேல் மக்களை தானே ஆட்சி செய்யும்படி விரும்பி தீர்க்கதரிசிகளையும் நியாதிபதிகளையும் ஏற்படுத்தினார். அவர்களிடம் தவறு இருக்குமானால் அதனை அவர்கள் தேவனிடம்தான் சொல்லி தீர்வு கண்டிருக்கவேண்டும்.
ஆனால் இஸ்ரவேலின் மூப்பர்கள் தேவனை நோக்கிப் பார்க்காமல் தங்களைச் சுற்றிலுமிருந்த மற்ற மக்கள் இனங்களைப் பார்த்தனர். அவர்களைபோலத் தங்களுக்கும் ஒரு ராஜா இருக்கவேண்டுமென்று விரும்பினர். எனவே அவர்கள் கடைசி நியாயாதிபதியான சாமுவேலிடம் வந்து தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டுமென்று கூறினர். மக்கள் இப்படிக் கூறியது தேவனுக்கும் சாமுவேலுக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே தேவன் சாமுவேலிடம் வேதனையுடன் கூறினார், "அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." என்று.
ஆம் அன்பானவர்களே, இதனையே இன்றும் நம்மில் பலரும் செய்துகொண்டிருக்கின்றோம். தேவன் நம்மை வழிநடத்த அனுமதிக்காமல் நம்மைச் சுற்றிலுமிருக்கும் மக்களைப்போல நாமும் வாழவேண்டுமென்று விரும்பி தேவனுக்குப் பிரியமில்லாத செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றோம்; அவரைப் புறக்கணிக்கின்றோம். இப்படி வாழும் மக்களைப்பார்த்துத் தேவன் அன்று சாமுவேலிடம் கூறியதுபோலவே "நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தள்ளினார்கள்." என்று வேதனையுடன் கூறுகின்றார்.
உலக மக்களின் செழிப்பு, பகட்டு இவைகளைப்பார்த்து நாம் தேவனைவிட்டு விலகிப்போகும்போது தேவன் மனதில் வருத்தமடைகின்றார். காரணம் அப்படி விலகும்போது நாம் அவரது ஆளுகையைவிட்டு விலகிப்போகின்றோம். தேவனை விட்டு விலகிய இஸ்ரவேல் மக்கள் பட்டப்பாடுகளும் பல்வேறு அந்நிய ராஜாக்களுக்கு அடிமைகளாகி அவதிப்பட்டதும் நமக்கு ஒரு எச்சரிப்பு. எனவே அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் தேவனது கரத்தின் ஆட்சிக்கு விலகி நாம் சென்றுவிடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். அவரே நம்மை எப்போதும் ஆளுவாராக. !!
No comments:
Post a Comment