'ஆதவன்' செப்டம்பர் 14, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,314
"........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." ( யோவான் 17 : 9 )
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை அறிந்த நம் ஒவ்வொருவருக்காகவும் ஏற்கெனவே ஜெபித்துள்ளார். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் பார்க்கின்றோம். இன்று சிலர் ஜெபிப்பதைப்போல மொத்த உலகத்துக்காகவும் அவர் ஜெபிக்கவில்லை. மாறாக, அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களுக்காக மட்டும் அவர் ஜெபித்தார். அதனையே, "........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." என்று கூறுகின்றார்.
அவர் இப்படி ஜெபிக்க என்ன காரணம் என்பதனையும் அவர் கூறுகின்றார். அதாவது, "நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்." ( யோவான் 17 : 8 )
பிதா தனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். அவர்கள் உம்முடையவர்களே என்கின்றார். காரணம், பிதாவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவனே பிதாவுக்குரியவன். அவர்களுக்காக மட்டுமே அவர் ஜெபிக்கமுடியும். அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவன் அவரையும் ஏற்றுக்கொள்ளாதவனாக இருக்கின்றான். அப்படி அவரை ஏற்றுக்கொள்ளாதவனுக்காக அவர் ஜெபிக்கமுடியாது.
ஆனால், தேவன் அனைவரையும் அன்பு செய்வதால் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புகின்றார். ஆனால் அவர் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது நாம் அவருக்குரியவர்கள் ஆகின்றோம்.
தன்னை அறியும் சந்தர்ப்பத்தை அனைவருக்கும் தேவன் அளிக்கின்றார். அதனை பயன்படுத்திக்கொள்பவர்கள் அவரை அறிகின்றார்கள். அல்லது சத்தியத்தை அறியவேண்டுமென்று விரும்புகின்றவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். உண்மையாக தேவனைத் தேடுபவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் அவருடையவர்களாகின்றனர்.
எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தின் முந்தைய வசனத்தில், அவர்கள் உமது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள் என்று கூறுகின்றார். ஆணடவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது பிதாவை ஏற்றுக்கொள்கின்றோம். நாம் அவர்களுடையவர்கள் ஆகின்றோம்.
அன்பானவர்களே, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது வெறும் வாயினால் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவதோ, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதோ, வெறுமனே வேதாகமத்தை வாசிப்பதோ அல்ல, மாறாக அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும் அனுபவம். அந்த அனுபவம் பெற்றவர்களே பிதாவினால் இயேசு கிறிஸ்துவுக்கென்று கொடுக்கப்பட்டவர்கள். அப்படி நாம் இருப்போமானால் நமக்காக இயேசு கிறிஸ்து ஏற்கெனவே ஜெபித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சியும் மன நிறைவும் சமாதானமும் அடைந்தவர்களாக இருப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment