'ஆதவன்' செப்டம்பர் 28, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,328
"கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்." ( சங்கீதம் 7 : 8 )
நமது தேவன் நீதியின் தேவனாக இருக்கின்றார். அவர் செய்யும் செயல்கள் பலவும் பலவேளைகளில் நமக்குப் புரியாதவையாக இருந்தாலும் அவர் செயலுக்கு நீதியான ஒரு காரணம் இருக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுகின்றார்.
இப்படி அவர் நீதியுள்ள தேவனாக இருப்பதால் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார் என்றும், எனவே என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும் என்றும் தாவீது கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தாவீது கூறுகின்றார், "துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்." ( சங்கீதம் 7 : 9 ) என்று. நீதியில்லாத வாழ்க்கை வாழும் துன்மார்க்கர்களின் வாழ்க்கை ஒழிந்துபோகின்ற வாழ்க்கையாகவே இருக்கும்.
நீதியைச் செய்பவனே தேவனுக்கு உகந்தவன். அன்று கொர்நேலியு வீட்டில் பிரசங்கிக்கும்போது அப்போஸ்தலரான பேதுரு கூறினார், "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 35 ) என்று. தேவன் மதம், இனம் ஜாதி, நிறம், அழகு பார்த்து ஒருவரைத் தனக்கு உகந்தவனாக தேர்ந்துகொள்வதில்லை. மாறாக ஒருவரது நீதியுள்ள வாழ்க்கையையே பார்க்கின்றார். அப்படி வாழ்ந்த பிற இனத்தானாகிய கொர்நேலியுவுக்கு அவர் தன்னை வெளிப்படுத்தினார்.
ஆனால் இன்று பலருக்கு உண்மை, நீதி, இவர்களைப்பற்றி பேசுவது பிடிப்பதில்லை. பலமணிநேரம் ஜெபிப்பார்கள், வேதம் வாசிப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் உண்மை நேர்மை இருக்கவேண்டுமென்று கூறினால் சலிப்பார்கள்; அல்லது பயப்படுவார்கள். ஒரு ஆலயத்தில் செய்தி கொடுக்கச் சென்றிருந்த எனது நண்பர் சகோதரர் ஒருவர் பேசி முடித்ததும் அங்கிருந்த குருவானவர், "உங்க மெசேஜ் நன்றாக இருந்தது... ஆனால் இவ்வளவு விரிவாக பாவத்தையும் குறித்து நீங்கள் விளக்கியிருக்கவேண்டாம்" என்றாராம். எனது நண்பர் அன்று பேசியது, "பண விஷயத்தில் உண்மை" என்பது குறித்து.
குறிப்பிட்ட குருவானவர் பணவிஷயத்தில் பல்வேறு தில்லுமுல்லு செய்பவர் என்று பிற்பாடுதான் அந்தச் சகோதரருக்குத் தெரிந்ததாம். இப்படியே அப்போஸ்தலரான பவுல் பேசும்போது பேலிக்ஸ் பயமடைந்தான். காரணம் அவனிடம் நீதி, நேர்மை இல்லாமலிருந்தது. இதனை நாம் "அவன் (பவுல்), நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 ) என்று வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, தேவனுக்குப் பயந்த நீதியும் உண்மையுமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அப்போதுதான் நமது ஜெபங்கள் அர்த்தமுள்ளவைகளாக தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபமாக அமையும். அப்போது தாவீதைப்போல நாமும் துணிவுடன் தேவனை நோக்கி, "கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்." என்று தைரியமாக ஜெபிக்கமுடியும்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment