'ஆதவன்' 💚செப்டம்பர் 18, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,318
"ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்..." ( நீதிமொழிகள் 17 : 5 )
பரிகாசம் பண்ணுதல் என்பது வெறுமனே கேலி கிண்டல் செய்வதைமட்டுமல்ல, ஏழைகளை அற்பமாக எண்ணுவது, அவர்களைப் புறக்கணிப்பது, அவர்களோடு பேசத் தயங்குவது, மற்றவர்களோடு அவர்களை ஒப்பிட்டு அற்பமாகப் பேசுவது போன்ற அனைத்துக் காரியங்களையும் குறிக்கும்.
ஒருமுறை ஏழைப் பெண் ஒருவர் வழக்கமாக அவர் அணிவதைவிட நல்ல ஆடை அணிந்து ஆலயத்துக்கு வந்தார். அன்று ஆராதனை முடிந்து ஆலய வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த இரு பெண்கள் அந்தப் பெண்ணைக்குறித்துப் பேசும்போது ஒருத்தி, "இன்றைக்கு இன்னாரது மகளைப் பார்த்தாயா?" என்று அந்தப் பெண்ணின் தகப்பன் பெயரைச்சொல்லி ஒருவிதக் கேலியாகக் கேட்க, மற்றவள், " யாராவது தர்மம் செய்திருப்பார்கள்" என்றாள்.
இந்தமாதிரி பேச்சுக்களைச் சம்பந்தப்பட்ட அந்தப்பெண் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவரைப் பரிகாசம் பண்ணுவதுதான். இதுபோல சிலர் தங்கள் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரர்களை எண்ணுவதுண்டு. கெட்டுப்போன உணவுகளை வேலைக்காரர்களுக்குக் கொடுப்பது, அவர்களுக்கான சம்பளத்தை ஏற்ற காலத்தில் கொடுக்காமல் இழுத்தடிப்பது, ஒருநாள் அவர்கள் வேலைக்கு வரவில்லையானால் சம்பளம் கொடுக்கும்போது ஒருநாள் கூலியைக் கணக்குப் பார்த்துக் குறைப்பது இவைபோன்றவை ஏழைகளை பரிகாசம்பண்ணுவதுதான்.
பெரும்பாலும் அரசு வேலைகளில் இருப்போர் இப்படிச் செய்கின்றனர். அரசாங்கம் எத்தனைநாள் தங்களுக்கு விடுமுறை அளிக்கின்றது, இதுதவிர பணி நாட்களில் எத்தனை நாட்கள் எத்தனை வகை விடுமுறை அளிக்கப்படுகின்றது என்பதனை இவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.
கடுமையான வார்த்தைகளால் வேலைக்காரர்களைத் திட்டுவதும் அவர்களைப் பரிகாசம்பண்ணுவதுதான். அவர்கள் ஏன் நம்மிடம் வேலைக்கு வந்திருக்கின்றார்கள்? அவர்களது ஏழ்மை நிலையால்தானே? எனவேதான் வேதம் சொல்கின்றது, "எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்." ( எபேசியர் 6 : 9 )
நான் ஆவிக்குரிய விசுவாசி என்று கூறிக்கொள்வதாலோ, ஆவிக்குரிய ஆராதனையில் கலந்துகொண்டு கூச்சலிடுவதாலோ, வேதாகமத்தை தினமும் வாசிப்பதாலோ, பல மணிநேரம் உபவாச ஜெபம் செய்வதாலோ நாம் தேவனது பார்வையில் நல்லவர்களல்ல. எனவே பெரிய அளவில் ஏழைகளுக்குத் தானதர்மங்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இத்தகைய குறைகள் நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம்.
"தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்." ( நீதிமொழிகள் 14 : 31 )
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment