'ஆதவன்' செப்டம்பர் 13, 2024. வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,313
"உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்."( சங்கீதம் 119 : 92 )
கிறிஸ்துவுக்குள் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போதும் பலவேளைகளில் துன்பங்கள் நம்மை நெருக்கிச் சோர்ந்துபோகச் செய்துவிடும். அத்தகைய வேளைகளில் தேவனுடைய வார்த்தைகளே நமக்கு ஆறுதலும் மனமகிழ்ச்சியும் தர முடியம். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள், கிறிஸ்துவை அறியாத மனிதர்கள் வாழ்விலும் இது உண்மையாகும். ஆம், கிறிஸ்துவை வாழ்வில் அறியாத பலரும்கூட தேவ வார்த்தைகளால் மரணத்துக்குத் தப்பி வாழ்ந்துள்ளனர்.
இதுகுறித்தப் பல சாட்சிகளை நான் கேட்டுள்ளேன். வாழ்வே இருளாகி இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் சூழ்நிலையில் ஏதோ ஒரு வழியில் தேவனது வார்த்தைகள் அவர்களோடு இடைப்பட்டு தற்கொலை முடிவினை கைவிட்டுள்ளதாகப் பலரும் சாட்சி கூறுகின்றனர். ஒருமுறை ஒரு பிராமண நண்பர் என்னிடம், "நான் சுவர்களில் எழுதப்பட்டுள்ள வேத வசனங்களை எங்கு கண்டாலும் வாசித்துப் பார்ப்பேன். காரணம் அவை எனக்குள்ளே புத்துணர்ச்சியைத் தருகின்றன" என்று கூறினார்.
இத்தகைய மகிழ்ச்சி தனக்குள் இருந்ததால்தான் இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர், "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்" என்கின்றார். அதாவது, உமது வேத வார்த்தைகள் இருப்பதால்தான் நான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இல்லையானால் அழிந்துபோயிருப்பேன் என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, வேத வசனங்களில் நாம் காணும் பல வாக்குறுதிகள் நமக்கு எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையினைத் தந்து நம்மை வாழவைக்கின்றன.
"உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்." ( சங்கீதம் 119 : 103 ) என்றும் "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 ) என்றும் இன்றைய தியான சங்கீதத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது கூறப்பட்டுள்ளதை நாம் காணலாம்.
முதலாவது தேவ வார்த்தைகள் நமது வாய்க்கு இனிமையாகவும் தொடர்ந்து நமது வாழ்க்கையினை நாம் சரிபடுத்திக்கொள்ள தீபமாகவும் இருக்கின்றன. எனவேதான் நாம் வேதாகமத்தை வாசிக்கவும் அதிலுள்ள வசனங்களை நமது இருதயத்தில் பதித்து வைக்கவேண்டியதும் அவசியமாய் இருக்கின்றது. அப்படி நாம் இருப்போமானால் அவை நமக்கு எந்தவித துன்ப வேளையிலும் மனம் சோர்ந்துபோகாமல் இருக்க உதவிடும்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவரது வார்த்தைகள் நமக்குள் இருக்கவேண்டும்; அவற்றின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். எனவே வேத வசனங்களை வாசித்து ஏற்றுக்கொள்வோம். அவரது வேதம் நமது மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், இன்றைய தியான வசனத்தின்படி நமது துக்கத்திலே நாம் அழிந்து போய்விடுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment