இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, September 01, 2024

ஏற்ற கனிகளைக் கொடுங்கள்

 'ஆதவன்' செப்டம்பர் 11, 2024. 💚புதன்கிழமை            வேதாகமத் தியானம் - எண்:- 1,311

"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." ( லுூக்கா 3 : 8 )

தேவன் விரும்புகின்ற வாழ்க்கை இருக்கின்றதோ இல்லையோ பல கிறிஸ்தவர்களுக்குள்ளும் தங்களது சபைகளைக்குறித்த வீண் பெருமைமட்டும் அதிக அளவு உள்ளது.  கிறிஸ்துவுக்கேற்ற கனியுள்ள வாழ்க்கை இல்லாமல் இத்தகைய வீண் பெருமைகள் எதற்கும் உதவாது என்று இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. 

யூதர்களுக்கு ஒரு மத வைராக்கியம் இருந்தது. தங்களை ஆபிரகாமின் சந்ததி என்று கூறிக்கொள்வதில் அவர்கள் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் தேவன்மேல் ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசமோ அவர்களுக்கு இல்லை. அவர்கள் கருத்துப்படி ஆபிரகாம்தான் மேலான தகப்பன்.  எனவேதான் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம், "எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் " ( யோவான் 8 : 53 ) என்றார்கள்.

இன்றும் இப்படி வீண் பெருமைபேசும் மனிதர்கள் உண்டு. மற்ற சபைப் பிரிவினரைவிட தங்களுக்குள் மேன்மையாக இருக்கும் காரியங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர். ஆனால் இப்படிப் பேசும் பலரிடமும் தேவன் விரும்பும் நற்குணங்கள் இருப்பதில்லை. மூன்றாம்தர உலக மனிதர்களைப்போல குடித்து, லஞ்சம் வாங்கி, கெட்டவார்த்தைகள்பேசி, தகாத உறவுகள்கொண்டு, சபைத் தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளைவிடக் கேவலமாக நடந்துகொண்டு  வாழும் இவர்கள் தங்களது சபையைக்குறித்து மேன்மையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். 

இதுபோலவே அன்றைய யூதர்கள் ஆபிரகாமைப்பற்றி பெருமைபேசுபவர்களாக இருந்தனர். இத்தகைய மனிதர்களைப்பார்த்துத்தான் இன்றைய வசனம் கூறுகின்றது,  "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." என்று. 

அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்கின்றார். 

இன்றைய தியான வசனத்தைக் கூறிய யோவான் ஸ்நானகன் தொடர்ந்து கூறுகின்றார், "இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." ( லுூக்கா 3 : 9 ) அதாவது மனம்திரும்பி கனிகொடுக்கின்ற வாழ்க்கை இல்லாமல் இருக்குமேயானால் நல்ல கனி கொடாத மரங்களை வெட்டி வீழ்த்துவதுபோல வெட்டி வீழ்த்தப்படுவாய். கோடரியானது அருகே தான் வைக்கப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, நமது சபை மேன்மையோ, நமது சொந்த பதவி, அதிகார பலமோ நம்மை இறுதி நாட்களில் இரட்சிக்காது. கனியுள்ள வாழ்க்கை வாழும்போது மட்டுமே நாம் தேவனுக்கு உகந்தவர்களாக முடியும்.  அது மட்டுமே நம்மை நித்திய ஜீவனுக்கு நேராகக்  கொண்டுச் செல்ல முடியும்.

"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  
 

No comments: