ஆதவன் 🖋️ 566 ⛪ ஆகஸ்ட் 16, 2022 செவ்வாய்க்கிழமை
"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 )
கிறிஸ்து காட்டும் மீட்பின் வழி குறுகிய வழி. அதாவது அது சிலுவை சுமக்கும் வழி. செழிப்பு, பகட்டு, ஆடம்பரம் என இவற்றையே விரும்பி வாழ்ந்துகொண்டே கிறிஸ்துவின் ராஜ்யத்திலும் நுழைய விரும்புகின்றனர் பலர். எனவேதான் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். கிறிஸ்துவின் குறுகிய வழியில் நுழையவேண்டுமானால் நாம் சில ஒறுத்தல்கள், தியாகங்கள் செய்யவேண்டியதும் சிலுவைகள் சுமக்கத் தயாராக இருக்கவேண்டியதும் அவசியம்.
கிறிஸ்துவே வழி என்றும், நமது பாவங்களை நிவர்த்திசெய்யும் கிருபாதார பலி கிறிஸ்துவே என்றும், பிதா ஒருவரே பிதாவுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே, அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் பல வசனங்கள் கிறிஸ்துவே நித்திய ஜீவனுக்கான வழியென்பதை வேதத்தில் உறுதிப்படக் கூறுகின்றன. இதனை விசுவாசித்து எந்த துன்பம் வந்தாலும் அவரையே பற்றிக்கொண்டு வாழ்வதே இடுக்கமான வழியில் பிரவேசிக்க பிரயாசைப்படுதல்.
ஆனால் இன்று பலரும் கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றோம் என்று கூறிக்கொண்டாலும், குறுகிய வாசல் வழியாய் நுழைய விரும்பாமல் வேதம் கூறும் வழியினைவிட்டு வேறு விசாலமான வழியாக நுழைய முயலுகின்றனர். தங்களுக்கு என கிறிஸ்துவைவிட்டு வேறு மத்தியஸ்தர்களை உருவாக்கி அவர்களைத் தேடி ஜெபிக்கின்றனர்; கிறிஸ்துவின் போதனையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி தங்கள் தவறை நியாயப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர்.
எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்." ( யோவான் 10 : 1 ) கிறிஸ்துவை நமது தகப்பனாக எண்ணினோமானால் அவரிடம் நேரடியாக நம்மால் நெருங்கிட முடியும். அவர் கூறும் போதனைகளின்படியும் அவர் காட்டும் வழிகளிலும் வாழ முடியும்.
இன்று மக்களது மனநிலையினை அறிந்த பல ஊழியர்கள் இடுக்கமான வாசலை விசாலமானதாக மாற்றிட முயலுகின்றனர். எனவே, கிறிஸ்து கூறாத உபதேசங்களைக் கூறி மக்களைக் கவருகின்றனர். கவர்ச்சிகர ஆசீர்வாத திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றனர். கிறிஸ்து கூறிய சிலுவை சுமக்கும் வலியைவிட இது எளிதாக இருப்பதால் மக்கள் இந்த ஊழியர்கள் காட்டும் விசாலமான வழியில் நுழைகின்றனர்.
மேலும் சில சபைகள், கிறிஸ்து கூறாத; வேதாகமம் கூறாத, வேறு மத்தியஸ்தர்களை மக்களுக்கு அறிமுகம்செய்து அவர்களிடம் பரிந்துபேசி ஜெபிக்க மக்களை பழக்கியுள்ளனர் ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் என்று இயேசு தெளிவாகக் கூறியிருந்தும் இந்தக் கள்ளவழி பலருக்கும் பிடித்தமானதாகஇருக்கின்றது. ஆனால் அது அழிவுக்கான வழி என்பதனை அறியாதிருக்கின்றனர்.
"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." ( யோவான் 10 : 9 )
அன்பானவர்களே, செழிப்பான மேய்ச்சலைக் கண்டடைய வேண்டுமானால் நாம் கிறிஸ்துவையே பின்பற்றி இடுக்கமான வாயில் வழியாய் நுழைந்திட பிரயாசைப்படவேண்டும்.
புனிதர்கள், பரிசுத்தவான்கள் என நாம் போற்றக்கூடிய அனைவரும் இப்படி இடுக்கமான வழியில் நுழைந்தவர்கள்தான். அவர்களது வாழ்க்கை வரலாறுகள் அவர்கள் எப்படி கிறிஸ்துவை நேசித்தார்கள் என்பதை நமக்கு விளக்கும். அதைப்போல நாம் வாழ அழைக்கப்படுகிறோமேத் தவிர அவர்களை பரிந்துரையாளர்களாக கொள்வதற்கல்ல.
கிறிஸ்துவையே நேசிப்போம்; அவரையே பின்பற்றுவோம்; இடுக்கமான அந்த வழிதான் இரட்சிப்படையவும் நல்ல மேய்ச்சலைக் கண்டடையவும் வழி.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712