ஆதவன் 🖋️ 554 ⛪ ஆகஸ்ட் 04, 2022 வியாழக்கிழமை
"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 )
எத்தனை அற்பமானவர்களாக இருந்தாலும் அவர்களை கர்த்தர் பயன்படுத்த முடியும். அதுபோல நாம் எவ்வளவு பலவீனர்களாக இருந்தாலும் கர்த்தர் நம்மைப் பலவான்களாக மாற்றிட முடியும்.
மீதியானியர் கைகள் இஸ்ரவேலர்மேல் பலத்திருந்த காலம் அது. மீடியானியர்கள் இஸ்ரவேலர்களது உடைமைகளையும் அவர்களது விளைச்சல்களையும் கொள்ளையிட்டனர். இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு இரட்சகன் கிடையமாட்டானா என்று ஏங்கிய காலம். அப்போது கிதியோன் தனது கோதுமைப் பயிரை அறுவடைசெய்து அதனைப் போரடித்துக்கொண்டிருந்தான்.
மீதியானியர்கள் வந்து அதனைக் கொள்ளையடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது ஆலையின் அருகிலேயே வைத்து அதனைப் போரடித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான் கர்த்தருடைய தூதன் வந்து நின்று, "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."
அன்பானவர்களே, கிதியோன்போல நாமும் நம்மைப் பலவீனர்கள் என எண்ணி இதுபோல தேவையில்லா காரியங்களுக்காக பயந்துகொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய கரம் நம்மோடு இருப்பதால் நாம் பலசாலிகள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். கர்த்தர் நம்மோடு இருப்பதால், நமக்கு இருக்கின்ற பலமே நமது எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கப் போதுமானது.
எனவேதான் கர்த்தர் கிதியோனைப்பார்த்து, "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்று கூறியுள்ளாரே?
ஆனாலும் கிதியோன் தனது அற்ப நிலைமையை எண்ணியதுபோல நாமும் கர்த்தரிடம் பேசலாம், "ஆண்டவரே, நான் பலவீனமல்லவா? எனது குடும்பம், எனது தொழில், எனது வருமானம், எனது உடல்நிலை எல்லாமே மோசமானதாக அல்லவா இருக்கின்றது? நான் எப்படி இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பேன்?" ஆனால் கர்த்தர் கிதியோனிடம் கூறியது எதனையும் பார்க்காதே. நான் உன்னோடு இருக்கின்றேன் என்பதுதான்.
"அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 )
அன்பானவர்களே, எத்தனைப் பெரிய பிரச்சனைகள், துன்பங்கள் வந்தாலும் நாம் அவற்றை மேற்கொள்ள முடியும். காரணம் கர்த்தர் சொல்கின்றார், " நான் உன்னோடேகூட இருப்பேன்"
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment