Friday, August 12, 2022

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

 ஆதவன் 🖋️ 565 ⛪ ஆகஸ்ட் 15, 2022 திங்கள்கிழமை


"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )

இன்று நாம் நமது நாட்டின் விடுதலை நாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். விடுதலை என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் ஒருவர் விடுதலை அடைந்திட வேண்டுமானால் முதலில் தான் ஒரு அடிமை என்பதனையும் விடுதலை கிடைக்கும்போது என்னென்ன உரிமைகள் கிடைக்கும் என்பதனையும் உணர்ந்திருக்கவேண்டும். இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தபோது மகாத்மா காந்தியும் இதரத் தலைவர்களும் இந்த விழிப்புணர்வைதான் மக்களுக்கு அளித்து அவர்களைப் போராடத் தூண்டினர்.  

இப்படியே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருந்தது. பாவ இருளின் பிடியில்,  நித்திய ஜீவன் ஒன்று உண்டு எனும் உணர்வில்லாமல் அடிமைப்பட்டிருந்த மக்களை பாவத்திலிருந்து விடுவித்து விடுதலை அளிக்கக் கிறிஸ்து வந்தார். ஆனால் அதனை கிறிஸ்து அறிவித்தபோது யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. "நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர்?" ( யோவான் 8 : 33 ) என்று இயேசுவிடம் வாதிட்டனர்.  

"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று தெளிவாகக் கூறினார். பாவ அடிமை நிலையிலிருந்து விடுதலை அடைந்திட நாம் பாவத்துக்கு அடிமை என்பதனையும் அதிலிருந்து விடுதலை அடைந்திடவேண்டுமெனும் எண்ணமும் நமக்கு இருக்கவேண்டும். நமது பாவங்கள் நம்மை அடிமைப்படுத்தியிருப்பதனை உள்ளன ஆன்மாவோடு உணரவேண்டும். 

".............எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே." ( 2 பேதுரு 2 : 19 ) என எழுதுகின்றார் தலைமை அப்போஸ்தலர் பேதுரு. பாவம் நம்மை ஜெயித்துள்ளதானால் நாம் பாவத்துக்கு அடிமைகள்தான். 

அன்பானவர்களே, எந்த பாவம் நம்மை மேற்கொண்டுள்ளது என்பதனை நிதானமாக எண்ணிப்பார்ப்போம். பண வெறியாக இருக்கலாம், விபச்சார பாவங்கள், எண்ணங்கள், பிறரை அற்பமாக எண்ணி அவமதித்தல், பொய், கோள் சொல்லுதல், மாய்மால பேச்சுக்கள்.....என வொவொன்றாய் எண்ணிப்பார்ப்போம். நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள பாவத்தை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிடுவோம். 

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."( 1 யோவான்  1 : 9 )

".......இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 )

மெய்யான விடுதலையினை இயேசு கிறிஸ்துவின்மூலம் பெற்று விடுதலை வாழ்வை அனுபவிப்போம். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்."

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                           

No comments: