இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, August 03, 2022

ஆவியானவர் நமது நடுவில் நிலைகொண்டிருப்பதால் நாம் பயப்படத் தேவையில்லை.

 ஆதவன் 🖋️ 556 ⛪ ஆகஸ்ட் 06, 2022 சனிக்கிழமை



"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை தேவன் அதிசயிக்கத்தக்கதாக விடுவித்து அற்புதமாக வழிநடத்தி கானான் தேசத்துக்குள் கொண்டுவந்து சேர்த்தார். அவர்கள் வழியில் சந்தித்த எல்லா இக்கட்டுகளினின்றும் விடுவித்தார்; அவர்களது தேவைகளைச் சந்தித்தார்; எதிரிட்டுவந்த ராஜாக்களை முறியடித்தார். ஆம், மேகத்தூணாகவும் அக்கினித் தூணாகவும் இருந்து அவர்களை வழிநடத்தினார். 

இதேபோல இன்று புதிய ஏற்பாட்டுக்கால மக்களான நம்மையும் தேவன் நடத்துகின்றார். பரம கானானுக்குள் நம்மைக்கொண்டு சேர்த்திட நமக்குத் துணையாளரான பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார்.  

"நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்" என்று பழைய ஏற்பாட்டுக்கால மக்களுக்குத் தேவன் கூறியதுபோல இயேசு கிறிஸ்து நமக்கும் வாக்களித்துள்ளனர்: "நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்." ( யோவான் 16 : 7 ) என்று கூறியதுடன் அந்த ஆவியானவர் நமக்கு என்னச் செய்வார் என்றும் இயேசு கூறினார்.

"அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 )

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய பயணத்தில் அன்று இஸ்ரவேல் மக்கள் சந்தித்ததுபோல நாமும் பல எதிரிகளைச் சந்திக்கின்றோம். பாவம், கிறிஸ்துவை விட்டு நம்மைப் பிரிக்க நமக்கு நேரிடும் துன்பங்கள்,  அந்தகார ஆவிகளின் தொல்லைகள் போன்றவை நமது ஆவிக்குரிய வாழ்வை அதன் இலக்கை அடைந்திட தடையாக உள்ளன. இவை அனைத்திலிருந்தும் நம்மை விடுவித்துக் காத்து நாம் நடக்கவேண்டிய வழியைக் காட்டுவதே பரிசுத்த ஆவியானவர்தான். 

தேற்றரவாளரான ஆவியானவர் நமது  நடுவில் நிலைகொண்டிருப்பதால் நாம்  பயப்படத் தேவையில்லை. அவர் உலக முடியுமட்டுமுள்ள எல்லா மனிதர்களையும் வழிகாட்டி நடத்துகின்றார். ஆனால் மக்களது மனக் கண்களும் செவிகளும் அவரைக் கண்டுகொள்ளமுடியாமல் மந்தமாக இருக்கின்றன.

எனவே, ஆவிக்குரிய நாம்; அவரை வாழ்வில் கண்டுகொண்டுள்ள நாம், ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு நேரிடும் துன்பங்களை எண்ணிக் கலங்கிடவேண்டாம். "நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712

No comments: