ஆதவன் 🖋️ 579 ⛪ ஆகஸ்ட் 29, 2022 திங்கள்கிழமை
"துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்." ( சங்கீதம் 18 : 3 )
நமது தேவன் ஒருவர் மட்டுமே துதிக்கத் தகுந்தவர். நமது தேவன் துதிகளின் மத்தியில் வாசம்செய்யும் தேவன். கர்த்தரைத் துதிக்கும்போது நாம் பெரிய ஆசீர்வாதங்களைப் பெறலாம். ஜெபிக்க முடியாத சூழ்நிலைகள், எந்த வார்த்தையும் வரதா மனம் வெறுமையாக இருக்கும் சூழ்நிலைகள் இப்படிப்பட்ட நேரங்களில் வெறுமனே ஸ்தோத்திரம் செய்தாலே போதும்.
நமக்கு எதிராகச் செயல்படுபவர்களையும் எதிர்த்து நிற்கும் பிரச்சனைகளையும் தேவனை நோக்கி ஸ்தோத்தரித்து நாம் முறையிடும்போது தேவன் மாற்றி நம்மை விடுவிப்பார். "என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்." ( சங்கீதம் 18 : 17 ) என்கின்றார் தாவீது.
நாம் முதல்முதல் நோக்கிப்பார்க்கவேண்டியது கர்த்தரது முகத்தைத்தான். ஆனால், இன்று பெரும்பாலான மக்களும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும்போது முதலில் நோக்கிப் பார்ப்பது தங்களுக்குத் தெரிந்த நல்ல பதவிகளில் உள்ளவர்களைத்தான். நமது பிரச்சனைக்கு இவர்மூலம் தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்பி தங்களுக்குத் தெரிந்த பதவியில் உள்ளவர்களையும் அல்லது தெரிந்தவர்கள் மூலம் அரசியல் தலைவர்களையும் உதவிக்கு நாடுகின்றனர்.
ஆனால் இது எப்போதும் கைகொடுப்பதில்லை. மேலும் பலரும் கொடிய நோய்க்களால் அவதிப்படும்போது கர்த்தரைத் தேடுகின்றனர். அவரது ஊழியர்களைத் தேடி ஓடுகின்றனர். தாங்கள் வெறுத்து ஒதுக்கும் கிறிஸ்தவ சபைப் பிரிவு ஊழியர்களையும் இப்படிப்பட்ட இக்கட்டான வேளைகளில் ஜெபிக்க அழைக்கின்றனர். பல வேளைகளில் விடுதலையும் பெறுகின்றனர்.
அன்பானவர்களே, நமது தேவன் துதிக்குப் பயப்படும் தேவன் என்று வசனம் சொல்கின்றது. அதாவது பரிசுத்த வாழ்க்கை வாழும் ஒருவர் துதிக்கும்போது அது நமக்கு ஏதாவது உதவி செய்துதான் ஆகவேண்டும் என்று தேவனைப் பயமுறுத்துகின்றதாம். "கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?" ( யாத்திராகமம் 15 : 11 )
தேவனுக்கு ஏற்புடைய ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழும்போது நமது துதிகள் நறுமண தூபப் புகையாக எழும்பி தேவனை அடைந்து அவர் நமக்கு உதவிசெய்யத் தூண்டுகின்றது. எனவேதான் சங்கீதக்காரன், "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்று கூறுகின்றார்.
இப்படித் துதிப்பது நம்மைத் துன்பங்களுக்குத் தப்புவித்து மட்டுமல்ல நமது ஆவிக்குரிய மற்றும் உலக காரியங்களிலும் நாம் சிறப்படைய வழியாக இருக்கின்றது. சங்கீதம் 136 துதியின் சங்கீதம் என்று சொல்லப்படுகின்றது. ஜெப தியானத்தோடு அதனை வாசிக்கும்போது நமக்குப் புத்துணர்ச்சியும், தேவன்மேல் மிகப்பெரிய விசுவாசமும் ஏற்படும்.
ஆம், துதித்தலே கர்த்தருக்கு ஏற்புடைய செயல். இப்படிக் கர்த்தரை நோக்கித் துதித்துக் கூப்பிடும்போது நம் சத்துருக்களுக்கு (அதாவது பிரச்சனைகளுக்கு) நீங்கலாகி இரட்சிக்கப்படுவோம். துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
No comments:
Post a Comment