இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, August 30, 2022

அதிக கனிகளைக் கொடுக்கும்படி சுத்தம்பண்ணுகிறார்.

 ஆதவன் 🖋️ 581 ⛪ ஆகஸ்ட் 31,  2022 புதன் கிழமை


"என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15 : 2 )

வாழ்வில் கனி கொடுக்கும் அனுபவமே கிறிஸ்தவ அனுபவம். கனிகளால்தான் மரத்தை அறிய முடியும் என்று இயேசு  கிறிஸ்து கூறினார். கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி," ( பிலிப்பியர் 1 : 10 ) என்று எழுதுகின்றார். 

ஆவியின் கனிகளைப்பற்றி பவுல் அடிகள், "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்."( எபேசியர் 5 : 9 ) என்கின்றார். மேலும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 )

ஆனால், இப்படிக் கனி கொடுக்கும் வாழ்க்கை வலி தரக்கூடியது, சிறு வேதனை தரக்கூடியது. அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்" என்று. மரங்களை கவ்வாத்து செய்வது பற்றி விவசாயிகளுக்குத் தெரியும்.  நன்றாக காய்க்கக்கூடிய பழ மரங்கள் இன்னும் அதிகக்  கனிகள் கொடுக்கும்படி அவற்றின் சிறு சிறு ஊடு கிளைகளை வெட்டி அகற்றி சுத்தம் செய்வார்கள். இப்படிச் சுத்தம் செய்யும்போது அந்த மரங்கள் மேலும் அதிகக் கனிகளைக் கொடுக்கும். இதனைத்தான் இயேசு கிறிஸ்து, "கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." என்று கூறுகின்றார். 

இப்படி மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றும்போது மரங்களுக்கு வலிக்கும். மரங்கள் அந்த  வலியைத் தாங்கித்தான் ஆகவேண்டும். அப்படித் தங்கும்போதுதான் அதிகக் கனிகளை அவை கொடுக்க முடியும். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஏற்ற வாழ்வு வாழ விருப்புபவர்களுக்குத் துன்பங்கள் வருவதற்கு இதுதான் காரணம். ஆனால், இது அதிகக் கனிகொடுக்க உதவியாக இருக்கும்.

இன்றைய வசனம் மேலும் கூறுகின்றது, "என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்"  என்று. அதாவது கனியற்ற வழக்கை வாழ்வோமென்றால் மரத்திலிருந்து வெட்டப்பட்டக் கிளைகளைப்போல நாம் வெட்டி எறியப்படுவோம். அதாவது கிறிஸ்துவுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் அற்றவர்களாக மாறிவிடுவோம். அப்படி வெட்டப்பட்டக் கிளைகள் வெய்யிலில் காய்ந்து உலர்ந்துவிடுவதுபோல நமது வாழ்க்கையும் உலர்ந்த வாழ்க்கையாக மாறிவிடும். வெட்டி எறியப்பட்டு உலர்ந்த கிளைகள் எரிப்பதற்குத்தான் பயன்படும். 

அன்பானவர்களே, நாம் ஆவிக்குரிய கனிகள் உள்ளவர்களாக மாறும்போதுதான் மற்றவர்கள் நம்மூலம்  கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியும்.  எனவே ஆவிக்குரிய வாழ்வில் துன்பங்கள்  வரும்போது நாம் சோர்ந்துபோய்விடக்கூடாது. தேவன் நம்மைச் சுத்திகரிக்கின்றார் என்பதே அதன் பொருள். இந்தச் சுத்திகரிப்பு நம்மில் மேலும் அதிகக் கனிகள் தோன்றிட வகை செய்யும்.

கனியற்றவர்களாக செழிப்புடன் வாழ்ந்து அறுப்புண்டு போவதைவிட வேதனைகளைத் தாங்கி கனிகொடுப்பவர்களாக நிலைத்திருப்பது ஏற்றதல்லவா? கிறிஸ்துவோடு நிலைத்திருக்கும்போதே நாம் கனி கொடுக்க முடியும். 

மேலும், அவரில் நிலைத்திருப்பது மட்டுமல்ல, கிறிஸ்து நம்மைச் சுத்திகரிக்க இடம்கொடுப்போம். அந்தச் சுத்திகரிப்பு வேதனை தருவதாக  இருந்தாலும் தேவன்  வேதனையோடுகூட அதனைத் தாங்கத்தக்க பலத்தையும் தருவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                              

No comments: